ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கட்டுரை

Read Time:16 Minute, 15 Second

article_1480574728-castro-2அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித உரிமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன; நவம்பர் 26ஆம் திகதி, வாழ்வில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

இவையெல்லாம், நவம்பர் 26ஆம் திகதி பிறந்தநாளைக் கொண்டுள்ள, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய வர்ணனைகள் கிடையாது. இவை, அவருக்கும் பொருந்துகின்றன. ஆனால், மேற்கூறப்பட்ட வர்ணனைகள், ஃபிடல் காஸ்ட்ரோ பற்றியன ஆகும்.

தனது நாட்டில் சர்வாதிகாரம் புரிந்த ஜனாதிபதிக்கெதிராகப் போராட்டத்தை ஆரம்பித்த ஃபிடல் காஸ்ட்ரோ, 1959இன் பின்னர், கியூபாவின் நாயகன் ஆனார்.

புரட்சியின் பின்னர் கியூபாவின் பிரதமர், அமைச்சர்கள் சபையின் தலைவர், ஜனாதிபதி உள்ளிட்ட பல பதவிகளை வகித்த ஃபிடல் காஸ்ட்ரோ, உலகில் தோன்றிய அல்லது உலகிலுள்ள சில தலைவர்களுக்கு மாத்திரம் உள்ள சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கிறார். ஆதரவாளர்களால் கடவுள் போன்று துதிக்கப்படுவதும், விமர்சகர்களால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்படுவதும் தான், அந்தச் சிறப்பம்சம்.

ஃபிடல் காஸ்ட்ரோ தவிர, ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்கள் தான் இந்தச் சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறார்கள். கருத்துகளையும் கலந்துரையாடல்களையும் பிளவுபடுத்துபவர்களாகவும் அவர்கள் உள்ளனர். ஆகவே தான், ஃபிடல் காஸ்ட்ரோவின் இந்த மறைவின் பின்னணியில், காஸ்ட்ரோ பற்றிய விமர்சனங்கள், புகழ்ச்சிகளை ஆராய்வது பொருத்தமானது.

400 பேரைப் பணிக்கமர்த்திய கரும்புத் தொழிற்சாலையொன்றைக் கொண்டிருந்த செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ, மிகவும் தகுதிவாய்ந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார். ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் போது, இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்ட காஸ்ட்ரோ, டொமினிக்கன் குடியரசிலும் கொலம்பியாவிலும் பதவியிலிருந்த வலதுசாரி அரசாங்கங்களுக்கெதிரான புரட்சிகளில் பங்குபற்றினார். பின்னர், தனது நாட்டில், ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன், சர்வாதிகாரம் புரிந்து வந்த ஜனாதிபதியான ஃபுல்கென்சியோ பட்டிஸ்டாவுக்கு எதிராகத் தனது கவனத்தைத் திருப்பினார்.

1953இல் மேற்கொள்ளப்பட்ட புரட்சி தோல்வியடைய, பின்னர் 1959இல், ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அனுப்பிய ஃபிடல், 17 ஆண்டுகள் பிரதமராகவும் 31 ஆண்டுகள் ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார்.
சமூகவுடைமையின் (சோசலிஷம்) நாயகனாகப் போற்றப்படும் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது நாட்டில் கல்வியையும் சுகாதாரத் துறையையும் அடிப்படை உரிமைகளாக வரையறுத்தார். இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை, இலவச வீடமைப்பு ஆகியவற்றோடு, ஓய்வூதியத் திட்டம் ஆகியன, அந்நாட்டைப் பற்றி, பல்வேறு மட்டங்களிலும் புகழப்படக்கூடிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்நாட்டைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் அயல் நாடான ஐக்கிய அமெரிக்காவில், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடன்களைப் பெற்று, அவற்றை மீளச்செலுத்த முடியாமல், மாணவர்கள் தடுமாறும் நிலைமை காணப்படுகிறது. முதியவர்களும் நோய்வாய்ப்படுபவர்களும், உரிய சுகாதார சேவையைக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது, இன்னமுமே எட்டாக்கனியாகவே உள்ளது. “ஒபாமா கெயார்” என அழைக்கப்படும் சுகாதாரச் சட்டம் மூலமாக, சுகாதார சேவையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் குறைபாடுகள் உள்ளதை, அதைக் கொண்டு வந்த ஜனாதிபதி பராக் ஒபாமாவே ஏற்றுக் கொள்கிறார்.

இந்தப் பின்னணியில் தான், கியூபாவின் சுகாதார அடைவுகளையும் கல்வி அடைவுகளையும் நோக்க வேண்டியுள்ளது.
ஆனாலும், இவற்றைப் பற்றிய விடயங்களை, காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் முன்வைப்பது போன்று, அவரது விமர்சகர்கள் முன்வைக்கும் விடயங்களும் முக்கியமானவையே.

2015/2016ஆம் காலப்பகுதிக்கான, சர்வதேச மன்னிப்புச் சபையின் நாடுகள் தொடர்பான அறிக்கையில், கியூபா தொடர்பான அறிக்கை, “திறக்கப்பட்டுவரும் இராஜதந்திர உறவுகளுக்கு மத்தியிலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடல், பயணம் ஆகியவற்றுக்கான பாரிய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அரசாங்க விமர்சகர்கள் மீதான துன்புறுத்தல்கள், மிலேச்சத்தனமான கைதுகள், தடுத்து வைத்தல்கள் ஆகியன, ஆயிரக்கணக்கான அளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன” என்று ஆரம்பிக்கிறது.
இது, காஸ்ட்ரோ தனது பதவியிலிருந்து விலகிய பின்னர் வெளியான அறிக்கை எனச் சுட்டிக்காட்ட முயலக்கூடும். ஆனால், இந்த அறிக்கைகள், காஸ்ட்ரோவின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்றன. முன்னைய காலத்தில், மோசமான அளவில் அவை அறிக்கையிடப்பட்டனவே தவிர, குறைவாக அன்று.

காஸ்ட்ரோவின் பதவிக் காலத்தில், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாகவே எழுப்பப்பட்டு வந்தன. அத்தோடு, சுமார் 1.5 மில்லியன் பேர், கியூபாவை விட்டு வெளியேறிய நிலையில், அதுவும் காஸ்ட்ரோவின் ஆட்சி மீதான கறுப்புப் புள்ளியாகவே காணப்படுகிறது.

அதுவும் குறிப்பாக, அவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில், அவர் மீதான விமர்சனங்களை முன்வைத்த பலர், போதிய அல்லது ஏற்றுக் கொள்ளத்தக்க விசாரணைகளின்றி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பது, இப்போதும் அவர் மீது காணப்படும் விசாரணையாகும். அத்தோடு, ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளை, காஸ்ட்ரோ நியாயப்படுத்தியிருந்தார். வேலைக்கான உரிமை, கல்வி, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மீதான பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டதாக, அவர் குறிப்பிட்டார்.

“எதிரி ஒருவன் இருக்கிறான், அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, உங்களின் சில உரிமைகளை நான் எடுக்கிறேன்” என்பது, அண்மைக்காலத்தில் உருவான சர்வாதிகார அரசாங்கங்கள் தெரிவிக்கும் கருத்துமாகும்.
மனித உரிமைகள் விடயத்தில் இவ்வாறிருந்தால், கியூபாவின் பிரதான அடைவுகளாகக் காணப்படும் சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியன பற்றி ஆராய்ந்தால், அவற்றிலும் சந்தேகங்கள் காணப்படுகின்றன.
கல்வி, சுகாதாரம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டாலும், அந்நாட்டில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது சந்தேகமே. அந்நாட்டின் ஆசிரியர்களுக்குப் போதுமான ஊதியமோ அல்லது வசதிகளோ வழங்கப்படுவதில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் பி.பி.சி வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், ‘கடந்தாண்டு மட்டும் 14,000 ஆசிரியர்கள், அவர்களது பணிகளிலிருந்து மருத்துவ சான்றிதழ்களோடு அல்லது சுயதொழில் சான்றிதழ்களோடு வெளியேறியுள்ளனர். அத்தோடு, கற்பித்தல் தொடர்பான கற்றல் நிகழ்ச்சித் திட்டங்களில் 80 சதவீதமான வாய்ப்புகள், யாரும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் கூட ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. அங்குள்ள நோயாளர்கள், தலையணைகள், போர்வைகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவர வேண்டியிருப்பதாக, விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1959ஆம் ஆண்டில், இலத்தீன் அமெரிக்க நாடுகளை விட கியூபாவின் சராசரி வாழ்க்கை எதிர்பார்ப்பு, அதிகமாக இருந்தது. ஆனால் 2012இல் கியூபர்களை விட சிலி (1960இல், கியூபாவை விட சராசரியாக 7 ஆண்டுகள் குறைவு) , கொஸ்டா றிக்கா (கியூபாவை விட 2 ஆண்டுகள் குறைவு) ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள், தற்போது அதிக ஆயுளுடன் வாழ்கின்றனர்.
அதேபோல், தனது நாட்டின் சுகாதாரத் துறையையும் கல்வித் துறையையும் வளர்த்து, உலகில் மிகச்சிறந்த கட்டமைப்பை காஸ்ட்ரோ கொண்டிருக்கிறார் எனப் பலரும் தெரிவித்து வந்தாலும், 2006ஆம் ஆண்டில் அவரது உடல்நிலை மோசமடைந்த போது, ஸ்பெய்னிலிருந்து வைத்தியரொருவர் அழைக்கப்பட்டார். சமூகவுடைமையைப் பரப்பிய தலைவனுக்காக, தனி விமானத்தில் வந்த அந்த வைத்தியர், கியூபாவில் காணப்படாத நவீன மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வந்தார் என, அப்போது செய்தி வெளியிடப்பட்டது.

இதில், தன்னை ஒரு சமூகவுடைமைவாதி என காஸ்ட்ரோ காட்டிக் கொண்டாலும், பகட்டான வாழ்க்கையையே வாழ்ந்தார். ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, 2006ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், காஸ்ட்ரோவிடம் 900 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் சொத்துக் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டது. அவர் இறந்த 2016இல் – ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் – அவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஃபோர்ப்ஸின் இந்த அறிக்கையை, காஸ்ட்ரோ மறுத்திருந்தாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என போர்ப்ஸ் தெரிவிக்கிறது.

கியூபாவுடன், இலங்கைக்கும் முக்கியமானதொரு தொடர்பு அண்மைக்காலத்தில் ஏற்பட்டது. 2012ஆம் ஆண்டு, இலங்கைக்கெதிராக ஐக்கிய அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த கியூபா, இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
ஃபிடல் காஸ்ட்ரோ, 2008ஆம் ஆண்டே பதவியிலிருந்து விலகியிருந்தார் என்ற போதிலும், அவரது சகோதரரே ஜனாதிபதியாக இருக்கிறார் என்பதோடு, ஃபிடலின் கொள்கைகளிலிருந்து அந்நாடு விலகிச் செல்லவில்லை. மாறாக, அவரின் கொள்கைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றன. அத்தோடு, அமெரிக்கா, நயவஞ்சக நோக்கோடு கொண்டு வந்த தீர்மானம் என்பதாலேயே அதை கியூபா எதிர்த்தது என்றும் சொல்வர். ஆனால், அமெரிக்காவின் நோக்கம் தவறானதாயின், தீர்மானம் மீதான வாக்களிப்பிலிருந்து, ஒதுங்கியிருக்க முடியும். மாறாக, தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த கியூபா, இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவையும் வழங்கியிருந்தது.

இவ்வாறு, கியூபா மீதும் அதன் முன்னாள் புரட்சித் தலைவர் மீதும் முன்வைக்கப்படுகின்ற புகழ்ச்சிகளும் பாராட்டுகளும், சிறிது ஆராய்ந்து பார்க்கப்படும் போது, அவர் உண்மையில் கதாநாயகனா அல்லது வில்லனா என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஒன்று மாத்திரம் தெளிவாக இருக்கிறது, அவரால் சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களுக்காக, மனித உரிமைகள் விடயத்தில் அவர் மேற்கொண்ட ஏற்றுக் கொள்ளாத முடிவுகளை, வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. அவரது வார்த்தைகளில் சொல்வதனால், “வரலாறு ஒரு போதும் அவரை விடுவிக்காது”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்த்திபன் தனது குருநாதர் பாக்யராஜுக்கு பாராட்டு விழா எடுத்து, தனது அடுத்த படத்துக்கு புக் செய்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…!!
Next post சல்மான் கானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பேன்: ஷாருக் கான்…!!