பிரியாவிடை பெற்றார் ஜெயலலிதா: 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்…!!

Read Time:4 Minute, 55 Second

201612061810072960_jayalalithaas-body-laid-to-rest-with-full-state-honour_secvpfசென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதேசமயம், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான பொதுமக்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் உடல் அருகே சோகமாக நின்றிருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்.

மாலை 4 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடலை இந்திய ராணுவ முப்படை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். ராஜாஜி மண்டபத்தின் வாசலில் தயார்நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டது.

மாலை 4.25 மணியளவில் ராணுவ வாகனம் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் நோக்கி புறப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். ராணுவ வாகனத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். ஊர்வலத்தில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலப் பாதையில் சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி அரங்கில் தொடங்கிய இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடைந்தது. அங்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திற்கு ஊர்வலம் சென்றடைந்தது.

ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அடக்கம் செய்யப்படும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் இறுதி மரியாதை செலுத்தினார். முப்படை வீரர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். மத்திய அரசு சார்பில் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் கவர்னர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்குப்பிற்கு அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி எடுக்கப்பட்டு சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உடலுக்கு சசிகலா இறுதிச்சடங்கு செய்தார். அதன்பின்னர் 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் மாலை 6.07 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!
Next post முட்டை ஓட்டில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இனிமேல் தூக்கி வீசிடாதீங்க…!!