இராணுவத்தின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம்…!! கட்டுரை

Read Time:20 Minute, 46 Second

article_1481177449-arrest-newபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியதன் நோக்கம், வடக்கில் தமிழ் இளைஞர்களிடையே உருவாகியுள்ள ஆயுதக்குழுக்களை எவ்வகையிலேனும் வேரறுத்துவிட வேண்டும் என்பதே. இதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கையோடு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சகலவிதமான பயங்கரவாதங்களையும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் பொறுப்பை இலங்கை இராணுவத்தின் ஆளணிப் பிரதானியாகவிருந்த பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவிடம் ஒப்படைத்தார்.

இதற்காக, யாழ்ப்பாணம் முழுவதற்குமான இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டதுடன், அரச வளங்கள் யாவும் அவருக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது. அத்தோடு பயங்கரவாதத்தை வேரறுக்கும் இப்பணியானது 1979 டிசெம்பர் 31 க்குள் முடிக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

சுருங்கக் கூறின் இலங்கை அரசாங்கம் ‘பயங்கரவாதிகள்’ என்று அடையாளம் கண்டுகொள்ளும் எவரையும் அடக்கி, ஒடுக்கத் திறந்த அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தப் பொறுப்பை அன்று இராணுவத் தளபதியாகவிருந்த மேஜர் ஜென்ரல் டெனிஸ் பெரேராவைத் தவிர்த்து, நேரடியாகத் தன் நம்பிக்கைக்குரிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவிடம் ஒப்படைத்ததாக ‘1979 ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் கலாநிதி ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை களமிறக்கி, தமிழ் இளைஞர் குழுக்களை அடக்குவது என்பது ஓர் இராணுவத்தைக் கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட முடிவு என ஓர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டதையும் கலாநிதி ஹூல் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
வடமாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வந்தமை உண்மை. ஆங்காங்கே ‘துரோகிகள்’ படுகொலை செய்யப்படுவதும், வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுவதும் இந்த ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளாக அமைந்தன.
ஆனால், 1979 காலப்பகுதியில் இது கட்டுமீறிய நிலையில் இருக்கவில்லை. வழமையான முறையின்படி ஜனாதிபதியானவர், யாழ்ப்பாணத்தின் நிலைபற்றிய அறிக்கையை இராணுவத்தளபதியிடம் கோரியிருக்க வேண்டும்.
அவ்வாறு கோரும் பட்சத்தில் இராணுவத்தளபதி, உரிய கட்டளைத் தளபதிகளோடும், இராணுவ அதிகாரிகளோடும் கலந்தாலோசித்து ஓர் அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்.

குறித்த அறிக்கையில் குறித்த நிலை பற்றி இராணுவத்தின் மதிப்பீடும் இராணுவத்தால் செய்யக்கூடியவை, செய்யமுடியாதவை பற்றிய பரிந்துரைகளும் காணப்படும். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை கட்டளையாக இராணுவத்தளபதிக்கு வழங்குவார். இராணுவம் அக்கட்டளையை நிறைவேற்றும். ஆனால் ‘1979 ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்’ விடயத்தில் இந்த வழமையான நடைமுறை பின்பற்றப்படவில்லை. மாறாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தற்துணிபின்படி இராணுவத்தளபதியை மீறிஇ நேரடியாக இராணுவத்தின் ஆளணிப் பிரதானியாகவிருந்த பிரிகேடியர்.திஸ்ஸ வீரதுங்கவிடம் இப்பொறுப்பிளை ஒப்படைத்தார் என்று ஓர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டதை தன்னுடைய கட்டுரையில் கலாநிதி. ஹூல் கோடி காட்டுகிறார்.

ஆகவே இரண்டு தசாப்த காலத்துக்கும் மேற்பட்ட இனமுறுகல் நிலையால் விளைந்த தமிழ் இளைஞர்களின் வன்முறைப் பாதையை எதிர்கொள்ள அதைவிஞ்சியதொரு வன்முறைப் பாதையை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்ந்தெடுத்தார். அவரிடம் சமரசம் வேண்டி எதிர்பார்த்திருந்த தமிழ்த் தலைமைகளுக்கான தன்னுடைய இந்த நடவடிக்கையின் மூலம் சொல்லமால் சொல்லிவிட்டார் ஜே.ஆர்.
‘தர்மிஷ்ட’ அரசை ஸ்தாபிப்பேன் என்று சொல்லி ஆட்சிப்படி ஏறிய ஜே.ஆர், தமிழ் மக்களுக்கு வழங்கியதோ ‘வன்முறை’ ஆட்சியைத்தான்.

பூப்பறிக்க கோடரியெடுத்த அரசாங்கம்

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை நோக்க வேண்டும். அன்று, யாழில் செயற்பட்ட இந்த ஆயுதக் குழுக்களில் இயங்கிய இளைஞர்களின் தொகை மிகச் சொற்பமே. இதனை அடக்குவதற்கு இராணுவத்தையும் முற்றுமுழுதான அரச வளங்களையும் யாழ்ப்பாணத்தில் களமிறக்கியதனூடாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தார். இந்த குழுக்களின் தோற்றத்தின்போது, அவை வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெறவில்லை. மாறாக, மக்கள் கூட இக்குழுக்களை அச்சத்துடன் அணுகிய சந்தர்ப்பங்களே அதிகம்.

இந்த இளைஞர் குழுக்களின் உருவாக்கம் கூட, அரசாங்கம் தமிழர்கள் வேண்டிய அரசியல் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்டதே! ஆகவே அரசாங்கமானது நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்க முன்வந்திருக்குமாயின், இந்த ஆயுதக்குழுக்கள் தம்மை நிலைநாட்டிக்கொள்ள ஒரு காரணம் இருந்திருக்காது என்பதுடன், தமிழ் மக்களும் இந்த ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபம் கொள்ளவும், ஆதரவு வழங்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. அரசியல் சமரசங்களுக்குத் தமிழ்த் தலைமைகள் அன்று மட்டுமல்ல, இன்றும் கூடத் தயாராகவே இருக்கின்றன.

இன்று பேசப்படும் ‘மென்வலு’ என்பது இன்றையதொரு புத்துருவாக்கமல்ல; தமிழ்த் தலைமைகளிடம் எப்போதுமே இருந்து வந்துள்ள சமரச அரசியலின் இன்னொரு வகைதான் இது. ஆனால், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ்த் தலைமைகளின் இந்தச் சமரச முயற்சிகளை உதாசீனம் செய்ததன் விளைவுதான் மூன்று தசாப்த பேரழிவுக்குக் காரணம். தனது நடவடிக்கையின் நீண்டகால விளைவுகள் பற்றி ஜே.ஆர் சிந்திக்காது நடந்துகொண்டார் என்பதுதான் நிதர்சனம்.

அவசரகால நிலைப் பிரகடனமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் நிர்வாகத்துறைக்குத் தந்த கட்டற்ற அதிகாரங்கள் வடக்கில் இலங்கைப் படைகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட வழிசமைத்தது. யாழ். நகரம் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவின் தலைமையில் இராணுவத்தின் முழுமையான பிடிக்குள் சிக்கவைக்கப்பட்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இளைஞர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டார்கள். இதிலே பலரது உயிரற்ற உடல்களே திரும்பக்கிடைத்தன.

சிலர், ‘காணாமல்போனவர்கள்’ ஆனார்கள். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள், எந்தக் குற்றச்சாட்டுமின்றி காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க சட்டத்தில் இடமிருக்கவில்லை, இராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும் அந்தச் சட்டப் ‘பாதுகாப்பை’ அவசர கால நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் வழங்கியது. இராணுவத்தின் இந்த அதிபயங்கர நடவடிக்கை தமிழ் மக்கள் மனதில் அச்சத்தை மட்டுமல்ல, அந்நியத்தன்மையையும் விதைத்தது. இலங்கை அரசாங்கத்தை ‘சிங்கள அரசாங்கமாக’ தமிழ் மக்கள் முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருந்தார்கள். அந்தச் சிங்கள அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள்.

ஒரு மக்கட்கூட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்குவதன் மூலம் அம்மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஒரு போதும் வெல்ல முடியாது. மாறாக அம்மக்களின் வெறுப்பையும் எதிர்ப்புணர்வையுமே சம்பாதிக்க முடியும். வடக்கில் இராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்ததுடன், பிரிவினைதான் தீர்வு, வேறு வழியில்லை என்பதைத் தமிழ் மக்கள் உணரக்கூடிய நிலைக்கு அவர்களைத் தள்ளியது.

சொல் ஒன்று; செயல் வேறு

வடக்கில் தொடங்கிய இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கியது. இந்தப் பதற்ற நிலையைக் குறைக்கும் வகையில் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வௌியிட்டனர். அந்த அறிக்கையில் மக்களை அமைதிகொள்ளுமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சில சமூக விரோத சக்திகள் இன்றைய நிலையைத் தமக்கு சாதகமாக்கத் துடிப்பதாகவும் இதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், நாம் இனநல்லுறவைப் பாதுகாக்கவும் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பளிக்கவும் உறுதிபூண்டுள்ளோம் எனவும் இலங்கையைப் பீடித்துள்ள பிரச்சினையை அமைதி வழியில் இணக்கப்பாட்டுடன் தீர்க்க முடியும் எனத் தாம் கருதுவதாகவும் ஆகவே, எவரையும் வன்முறை வழியை நாட வேண்டாம் என்றும் நாகரிகமுள்ள மனிதர் என்ற வகையில் எம்முடைய மதங்கள் காட்டும் வழியில் அமைதியான முறையில் பிரச்சினை நாம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இராஜதந்திரத்தில் ஜே.ஆர் வல்லவர் என்பதாலோ என்னவோ அவர் ‘ஆசியாவின் நரி’ என்று அறியப்படுகிறார். இருநூறு இளைஞர்கள் கூட இயங்காத, மிகச் சிறிய ஆயுதக்குழுக்களை அடக்க, கட்டற்ற சுதந்திரத்துடன் இராணுவத்தைக் களத்தில் இறக்கிவிட்டு, மறுபுறத்திலே அமைதிவழியில் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனத் தன்னுடைய பிரதமரை, எதிர்க்கட்சித் தலைவரோடு இணைந்து அறிக்கைவிடச் செய்யும் ஜே.ஆரின் ‘நரித்தனம்’ வியப்புக்குரியது.

இராணுவமயமாக்கம்

‘தர்மிஷ்ட’ அரசை ஸ்தாபிக்கும் நோக்கம் உண்மையாக இருந்திருந்தால், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் எண்ணம் உண்மையிலேயே இருந்திருந்தால், தான் தேர்தலுக்கு முன் வாக்குறுதியளித்திருந்ததன்படி ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை நேர்மையாக, நல்லெண்ணத்துடன் உருவாக்கி அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, தன்னுடைய வரலாறுகாணாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கலாம்.

ஜே.ஆர் அதனைச் செய்யவில்லை. இராணுவ வழியை அவர் நாடினார். யாழ்ப்பாணம் இராணுவ மயமானது. பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க யாழ். மாவட்டமேகியதும் சிவில் நிர்வாகத்தின் அடையாளமாக விளங்கிய ஜே.ஆர் நியமித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமியை அவரது அரச இல்லத்திலிருந்து வௌியேற்றியதுடன், அவ்வில்லம் பின்னர் சித்ரவதைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டதாக கலாநிதி ஹூல் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

கைதுகள், தடுத்து வைப்புக்கள், சித்ரவதைகள், உயிர்க்கொலைகள் என யாழில் ஆறு மாத இராணுவ வன்கொடுமையை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டி வந்தது. ஆறு மாத முடிவில் பிரிகேடியர்.
திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதிக்கு ‘வடக்கில் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுவிட்டது’ என்று கருத்துப்பட 70 பக்க அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். ஆனால், அந்த அறிக்கையோ, அதன் உள்ளடக்கமோ வௌியிடப்படவில்லை. திஸ்ஸ வீரதுங்கவின் ‘ஒப்பரேஷன்’ முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்கள் இராணுவத்தினதும் அரச இயந்திரத்தினதும் கையால் அனுபவிக்கப் போகும் சித்ரவதைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் இது ஓர் ஆரம்பமாக மட்டுமே இருந்தது.

ஓர் இருண்ட யுகத்தின் ஆரம்பம்

பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவின் ‘யாழ். ஒப்பரேஷன்’ பற்றி பின்னொருநாளில் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்துரைத்த மேஜர் ஜென்ரல் எச்.வீ. அதுக்கோரல, ‘அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படும் சூழலை யாழ்ப்பாணம் இந்தக் காலப்பகுதியில் எதிர்கொண்டது. இந்த ‘ஒப்பரேஷன்’ மூலம் நிறைய விடயங்கள் அடையப்பெறப்பட்டன. இராணுவம் அரசியல் மயமாக்கப்பட்டது. அரசியல் தளபதிகள் உருவானார்கள். இராணுவத் தளபதியின் அதிகாரங்கள் அரசியல் தளபதிகளால் கைக்கொள்ளப்பட்டு, அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதமும் சித்ரவதையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.

திஸ்ஸ வீரதுங்கவின் ‘ஒப்பரேஷன்’ நிறைவுற்றதும், இராணுவத்தளபதியினால் யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் அத்துக்கோரல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவ பலத்தைக் கொண்டு அச்சத்தை விளைவித்தால் தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்கிவிடலாம் என்று ஜே.ஆர் எண்ணியிருக்கலாம். ஆனால், வடக்கின் இராணுவ மயமாக்கல் அதற்கு நேர்மாறான விளைவுகளையே தோற்றுவித்தது. இந்த இராணுவ மயமாக்கத்தின் விளைவாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெரும் மக்கள் ஆதரவோ, அரசியல் ஆதரவோ இல்லாதிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழ்த் தலைமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆயுதக் குழுக்களின் பக்கம் சாயத் தொடங்கினார்கள்.

உண்மையில் அரசாங்கத்தின் இந்த இராணுவ நடவடிக்கை அரசாங்கத்தின் மீதும், அமைதி வழி மீதுமான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தது என்பதுடன், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் மீது, தமிழ் மக்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் உருவாக்கியது.

எதிர்ப்புத் தெரிவித்த இடதுசாரிகள்

வடக்கில் அரசாங்கம் நிகழ்த்திய மேஜர் ஜெனரல் அத்துக்கோரல குறிப்பிடுவது போல, ‘அரச பயங்கரவாதத்துக்ற்கு’ தெற்கில்
ஜே.வீ.பி (மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் அதனுடன் இணைந்து ஏனைய நான்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் முன்வைத்தன.

1979 செப்டெம்பர் 24 அன்று அவை இணைந்து வௌியிட்ட அறிக்கையொன்றில், கட்டாய பொதுச் சேவை சட்டமூலம் மீளப் பெறப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவசரகால நிலைப் பிரகடனமும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றும் வடக்கின் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் ஜே.வீ.பி சார்பில் உபதிஸ்ஸ கமனநாயக்கவும் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் பேனார்ட் சொய்ஸாவும் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் டி.டபிள்யூ.சுபசிங்ஹவும் நவ சமசமாஜக் கட்சி சார்பில் வாசுதேவ நாணயக்காரவும் புரட்சிகர மாக்ஸிஸ்ட் கட்சி சார்பில் பாலா தம்புவும் கையொப்பமிட்டிருந்தனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து 1979 ஒக்டோபர் இரண்டாம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சியொன்றையும் நடத்தியிருந்தனர். ஆனால், இவையெல்லாம் ஜே.ஆரை அசைத்துக்கூடப் பார்க்கவில்லை.

( அடுத்த வாரமும் தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானையின் அபாரமான செயல்: இதைவிட வளர்ப்பவருக்கு என்ன வேண்டும்? வீடியோ
Next post தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம், ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-25) – வி. சிவலிங்கம்…!!