By 10 December 2016 0 Comments

தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம், ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-25) – வி. சிவலிங்கம்…!!

timthumbவாசகர்களே,

இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும்.

மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வார்த்தையில் கூறுவதானால் அது இலங்கையின் இரண்டாவது சுதந்திரப் போராட்ட காலமாகும்.

சிங்கள மக்கள் தமிழ் மக்கள் தரப்பினரால் நடத்தப்பட்ட ஆயுதப் பேராட்டத்தினை வெற்றி கொள்வது என்பது தமது இழந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதாக கருதுவார்களாயின் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் நடத்திய மிகக் கடினமான போராட்டம் அது என்றே நாம் கொள்ளவேண்டும்.

இக் கடின போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து ஆராய்வதற்கு தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், பணக் கொடுக்கல் வாங்கல்கள், பொய்ப் பிரச்சாரங்கள் என்பன பிரதான சாட்சியமாக அமைகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? என்பது குறித்து காணப்பட்ட சந்தேகங்களும், அதில் விடுதலைப் புலிகளும், தமிழர் தேசியக் கூட்டமைப்பும் நடந்துகொண்ட விதம் உங்கள் கவனத்திற்குரியது.

சிங்கள அரசியல் தலைமைகள் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்பதை சிறு குழந்தையும் அறியும்.

ஆனால் தமது அதிகார இருப்பைப் பாதுகாக்க தமிழ் மக்களை விலை கொடுக்க தமிழ்த் தலைமைகள் எவ்வாறு தயாரானார்கள்?

மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள்? தமிழ் மக்கள் மத்தியிலே காணப்பட்ட அறிவு ஜீவிகள் மௌனமாக்கப்பட்டார்களா? அல்லது அவர்களும் விலைபோனார்களா? இன்று தமிழ் மக்களைக் காப்பாற்ற மேலும் பல அரசியல்வாதிகள் முன்வந்துள்ளார்கள்.

இவர்கள் போராட்ட காலத்தில் எங்கு ஒழிந்துகொண்டார்கள்? தமிழ் மக்கள் பட்ட அவலங்களில் அவர்கள் தம்மை எந்த அளவிற்கு இணைத்திருந்தார்கள்? என்பன குறித்து இவ் வாரம் நாம் பார்க்கலாம்.

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது குறித்து வெவ்வேறு பெயரில் சுவரொட்டிகள் வழிகாட்டிக்கொண்டிருந்த வேளை தமிழர் தேசிக் கூட்டமைப்பினர் புலிகளைச் சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் கூடிப் பேசினர்.

பலத்த விவாதங்களுக்குப் பின்னர் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவை எதிர்ப்பது என தீர்மானித்தனர்.

இம் முடிவு சர்வதேச அளவில் புலிகளுக்குப் பாதிப்பைத் தரலாம் எனக் கருதி அதனை லண்டனில் பாலசிங்கத்திற்குத் தெரிவித்தனர். ஏனெனில் அவரே அச் செய்தியை பிரபாகரனுக்குத் தெரிவிக்கும் நிலையில் இருந்தார்.

அதே வேளை புலிகளின் தலைமையை கிளிநொச்சியில் 2005ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கூட்டமைப்பினர் சந்தித்தனர்.

இச் சந்திப்பின் பின்னர் தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையை உணர்த்தியது.

விடுதலைப்புலிகள் பகிஷ்கரிப்பைத் தாம் கோரவில்லை எனவும், அத்துடன் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் கூட்டமைப்பின் பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினை புலிகள் பிரதிபலித்ததாக ஒரு செய்தி விளக்கம் அளித்திருந்தது.

புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய ஆங்கில இணையத்தளமாகிய தமிழ் நெற் இரு தரப்பினரில் எவரை ஆதரித்தும் பயனில்லை, தமிழ் மக்களுக்குத் தேர்தலில் ஆர்வமும் இல்லை என தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாக எழுதியிருந்தது.

இக் குழப்ப அரசியல் நிலை குறித்து பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ் தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தார்.

புலிகளும், கூட்டமைப்பினரும் தேர்தலைப் பகிஷ்கரிப்தை ஆதரிப்பதாகவும், தமிழ் மக்களும் இதர சிறுபான்மை இன, மத சக்திகள் ஒன்றாக இணைந்து சிங்கள பௌத்த சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமெனவும் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இவ் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு இழைத்த பெரும் காட்டிக்கொடுப்பு என அவர் எழுதியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் சமீபகால அரசியல் நிலமைகளைக் கவனத்தில் கொண்டும், அனுபவங்களின் அடிப்படையிலும் மீண்டும் மீண்டும் உணர்த்தும் சங்கதி என்னவெனில் ரணிலில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அவர் ஜனாதிபதியானால் போருக்கான சாத்தியங்கள் ராஜபக்ஸவை விட குறைவானதே என்பதுதான்.

போரின் அவலங்களுக்கு முகம் கொடுப்பவர்கள் தமிழ் மக்களே. தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் அவர்களே போரை தம்மீது சுமத்த விழைகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் திணைக்களம் அறிவித்த அதேவேளை, அம் மக்கள் தேர்தலில் கலந்து கொள்ளமலிருக்க நீதிமன்ற தீர்ப்பு இன்னொரு தடையாக மாறியது.

அதாவது உத்தியோகபூர்வ வாக்களிப்பு நிலையங்களுக்கு வருபவர்களின் அடையாள அட்டைகள் குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்கள் பொலீசாரால் விசாரிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் செய்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த சுமார் 250,000 மக்களின் வாக்களிப்பை நிச்சயமற்றதாக மாற்றியது.

யாழ் குடா நாட்டிற்குள் சுமார் 700,000 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

புலிகள் அவர்களையும் தடுத்தால் அவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். எனவே நீதிமன்றத் தீர்ப்பும் தேர்தலில் வாக்களிப்பதைக் கணிசமான விதத்தில் தடுத்திருந்தது.

புலிகள், கூட்டமைப்பினர் தேர்தலைப் பகிஷ்கரித்தபோது ஐ தே கட்சியிலிருந்த சில முக்கியஸ்தர்களின் அணுகுமுறை மேலும் நிலமைகளை உக்கிரப்படுத்தியது.

முன்னாள் அமைச்சர் காமினி திஸநாயகா இன் மகன் நளீன் செனநாயக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபாகரன் போரைத் தெரிவு செய்தால் அமெரிக்க- இந்திய படைகள் அதற்கு எதிராக போரிடுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கருணாவின் பிளவின்போது அதன் பின்னால் ரணிலின் ஆதரவு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இச் செய்தியைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

மிலிந்த மொறகொட

இதே காலப் பகுதியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மிலிந்த மொறகொட கருணாவின் விலகல் என்பது சமாதான முயற்சிகளின் ஒரு விளைவு எனவும், அதன் பின்னால் ஐ தே கட்சி செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இவைகள் அரசாங்கத்தின் போக்குக் குறித்துச் சந்தேகத்திலிருந்த புலிகளை மேலும் சந்தேகத்திற்குள் தள்ளியது.

புலிகள் மத்தியில் இரண்டு விதமான வாதங்கள் எழுந்தன.

தென்னிலங்கை அரசியல் பிரதான கட்சிகள் தற்போது சமஷ்டி வழிமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை மேலும் பலப்படுத்தவேண்டுமென ஒரு சாராரும், இன்னொரு சாரார் ராஜபக்ஸ இன் வெற்றி ஆயுதப் போரின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும், அது தமிழீழத்தை அடைவதற்கான போரைத் தொடர மேலும் வாய்ப்பாக அமையும் எனவும் வாதங்கள் எழுந்தன.

தேர்தல் முடிவுகள்

2005ம் ஆண்டு நவம்பர் 17த் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

நாட்டின் ஒட்டுமொத்த 13.5 மில்லியன் வாக்காளர்களில் சுமார் 75 சதவீமானோர் வாக்களித்தனர்.

யாழ். மாவட்டத்தில் ஒரு சதவீதத்திகுச் சற்று அதிகமானோரே வாக்களித்திருந்தனர். வாக்களிப்பைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் சுயமாக மேற்கொண்டனர் என புலிகளின் விளக்கம் காணப்பட்டது.

ஆனால் தேர்தலில் 50.2 சதவீத வாக்குகளை ராஜபக்ஸ பெற்றார். ரணில் 48.3 சதவீத வாக்குளைப் பெற்றார்.

வாக்குத் தொகையில் 180,000 வாக்குகளே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தன.

நாட்டின் எதிர்காலத்தின் போக்கை பிரபாகரனே தீர்மானித்ததாக பத்திரிகைகள் எழுதின. அதுமட்டுமல்ல நாட்டின் வரலாற்றில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவில்லாமலேயே ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும் என்பதையும் அத் தேர்தல் உணர்த்தியது.

தேர்தலுக்கு முதல்நாள் இரவு வடக்கிலும், கிழக்கிலும் வெடிகுண்டுகள் வெடித்திருந்தன. இக் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்ன? எச் செய்தியை இவை மக்களுக்கு வழங்கின?

தமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள்?மிகவும் பலவீமான ஒருவர் பதவிக்கு வந்தால் ராஜபக்ஸ அரசியல் தீர்வா?அல்லது போரா? எனத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்.

போரைத் தேர்ந்தெடுத்தால் சர்வதேச ஆதரவுடன் ஈழத்தை அடைவது சுலபமாகும்.

ரணில் பதவிக்கு வந்தால் சமாதானம் என்பதைப் பொறியாக பயன்படுத்துகிறார். அவர் நடத்தை சந்தேகத்திற்குரியது.

இவ்வாறு ரணிலா? ராஜபக்ஸவா? என்ற கேள்விகளுக்குப் பின்னணியில் வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்கும் முடிவு வெறுமனே அரசியல் காரணங்களுக்காக அதாவது தமிழீழத்தினை அடைவதற்கு வாய்ப்பான அரசியல் தலைவர் யார்? ஏன்ற முடிவில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு பின்னணிகள் இருந்ததா? என்ற கேள்விக்கான பதில்கள் தேர்தலின் பின்னர் வெளிவரத் தொடங்கின.

ராஜபக்ஸ புலிகளுடன் பின் கதவு வழியாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.

அமெரிக்க தூதுவர் அனுப்பிய செய்திகளின்படி உள்ளுர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று பிரதமருக்கும், புலிகளுக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பிரகாரம் மாகாணசபை நிர்வாகத்தினை 5 வருடங்களுக்கு வழங்கவும், பொலீஸ், காணி அதிகாரங்களுடன் நீதித்துறை அதிகாரங்கள் பலவற்றை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் முடிவு இன்னமும் தெரியவில்லை எனவும், ஆனால் ராஜபக்ஸ இன் அணுகுமுறை நடைமுறையானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிரான் அலஸ்

ஏரிக் சோல்கெய்ம் இன் கருத்துப்படி தமிழ் மக்கள் மத்தியில் ரணிலுக்கு உள்ள செல்வாக்கைக் குறைக்க மகிந்த முயற்சித்திருந்தார் எனவும், மகிந்த இன் வார்த்தைகள் வார்த்தைகளாக இருந்ததில்லை எனவும் கூறுகிறார்.

ஆனால் தேர்தலின் பின்னர் வெளிவந்த செய்திகளில் தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் விசேட பிரதிநிதிக்குமிடையே தேர்தலுக்கு முன்பதாகவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாகவும், இந்த விசேட பிரதிநிதியான டிரான் அலஸ் செயற்பட்டார் எனவும் இவர் மகிந்தவின் பிரச்சாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த தற்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் நெருங்கிய நண்பராகும்.

டிரான் அலஸ் புலிகளின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், தமிழ்ச்செல்வன், நடேசன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

வாசகர்களே!

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் என்ற பெயரால் தமிழ் மக்கள் விலைபேசப்படுவது இன்னமும் தொடர்கிறது.

தமிழ்த் தேசியவாதம் என்ற முகத்திரையைப் போர்த்தி இந் நாடகம் அரங்கேறுகிறது.

மக்களின் ஜனநாயக உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டு இடைத்தரகர்களின் மூலம் பணம் பட்டுவாடாச் செய்யப்பட்டுள்ளது.

இதில் எமில்காந்தன் என்ற வர்த்தகர் எவ்வாறு பங்கெடுத்தார்?

(அடுத்த வாரம் தொடரும்)Post a Comment

Protected by WP Anti Spam