By 12 December 2016 0 Comments

சென்னை 600 028 II..!! விமர்சனம்

201612092127526290_chennai-600-028-ii-movie-review_tmbvpfநடிகர் ஜெய்
நடிகை விஜயலட்சுமி
இயக்குனர் வெங்கட் பிரபு
இசை யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு ராஜேஷ் யாதவ்

‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் மட்டும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகிறார்கள். இதில், ஜெய், பிரேம்ஜிக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், ஜெய்யும் நாயகன் சானா அல்தாப்பும் காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டவே, நாயகியின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேனிக்கு தனது நண்பர்களுடன் செல்கிறார் ஜெய்.

அந்த ஊரில் இவர்களை பிரிந்து சென்ற நண்பன் அரவிந்த் ஆகாஷை ஒரு அடிதடியில் சந்திக்கிறார்கள். அப்போதுதான், அவருக்கும் அந்த ஊரில் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆளாக இருக்கும் வைபவ்-க்கும் பிரச்சினை என்று தெரிகிறது. தனது நண்பனுக்காக வைபவ்வை எதிர்க்க முடிவு செய்கிறார்கள்.

அரை இறுதி போட்டியில் இவர்களை எதிர்த்து விளையாடிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வைபவ் அணியை எதிர்க்க தயாராகிறார்கள். இவர்களின் விளையாட்டை பார்த்து அதிர்ந்துபோன வைபவ் அவர்களை அந்த போட்டியில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று திட்டம் போடுகிறார்.

அதன்படி, போட்டிக்கு முந்தைய நாள் பார்ட்டியில் நண்பர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து ஜெய்யை மட்டும் மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று மிரட்டுகிறார். இதனால், அவர்களும் வேறு வழியின்றி போட்டியில் தோற்று போகிறார்கள்.

ஆனால், வைபவ்வின் நண்பன் ஒருவன் ஜெய், மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு விடுகிறான். இது ஜெய்யின் காதலிக்கும், அவளுடைய அப்பாவான சிவாவுக்கும் தெரியவர, இவர்களது திருமணம் நின்று போகிறது. இறுதியில், ஜெய் இந்த பிரச்சினைகளை சமாளித்து நண்பர்களுடன் சேர்த்து எப்படி தீர்வு கண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

‘சென்னை 600 028’ முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் ரொம்பவும் ஜாலியாகவும், ரகளையாகவும் கொண்டு சென்றிருக்கிறார் வெங்கட் பிரபு. கிரிக்கெட், அதைச்சுற்றி நடக்கும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்தும் இந்த பாகத்திலும் தொடர்ந்திருக்கிறது.

பிரேம்ஜியைத் தவிர இப்படத்தில் நடித்திருக்கிற நாயகர்கள் அனைவருக்கும் ஜோடி உண்டு. அதேபோல், முந்தைய பாகத்தைவிட இந்த படத்தில் அதிக கதாபாத்திரங்களையும் சேர்த்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணிக்கு எதிராக வரும் ராக்கர்ஸ் அணியை இந்த பாகத்தில் இணைத்த விதம் சிறப்பு. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மூன்று கிரிக்கெட் போட்டிகள் விரிவாக வருகிறது. ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் ஆடும் அழகை அவர்களது மனைவிகளே கலாய்ப்பது, ஆலோசனை சொல்வது கலகலப்பு.

படத்தில் ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச்சரியான ரீ-என்ட்ரி படமாக இருக்கும் என்று சொல்லலாம். தனது பாணியிலான காமெடி வசனங்களில் அசத்தியிருக்கிறார். இணையதள விமர்சகர்களை இவர் கலாய்த்திருக்கும் விதம் சிறப்பு.

வில்லனைப் போல் வரும், வைபவ் தேனி வட்டார வழக்கு பேச்சில் மட்டுமல்ல, நடை, உடை பாணியிலும் திமிர் கலந்த அடாவடி இளைஞனாக நம் மனதில் பதிந்திருக்கிறார். பிரேம்ஜி தனது வழக்கமான பாணியிலேயே காமெடி செய்தாலும் எங்கும் அலுப்பு ஏற்படவில்லை. நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ், அரவிந்த் ஆகாஷ், மஹத், கார்த்திக், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி டி.சிவா என அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியை கடைசியில் தோற்கடிக்கும் அணியின் சிறுவனாக வந்த ஹரி பிரஷாந்த் இந்தப் படத்தில் இளைஞனாக வந்து தனி முத்திரை பதிக்கிறார். சிவாவின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நிதின் சத்யாவின் மனைவியாக வரும் கிருத்திகா, அஜய்ராஜின் மனைவியாக வரும் மகேஷ்வரி, ஜெய்யின் காதலி சானா அல்தாஃப், விஜய் வசந்தின் மனைவியாக வரும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள். ‘சொப்பன சுந்தரி’ பாடலுக்கு வந்து கவர்ச்சியை அள்ளித் தெளித்து இளைஞர்களை கிறங்கடிக்கிறார் மனிஷா யாதவ். படவா கோபியின் கமெண்டரி ரசிக்கும்படி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பிரமாதம். ‘சொப்பன சுந்தரி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘வர்றோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடல் ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது.

மொத்தத்தில் ‘சென்னை 600 028 இரண்டாம் இன்னிங்ஸ்’ கோப்பையை வெல்லும்.Post a Comment

Protected by WP Anti Spam