By 14 December 2016 0 Comments

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்…!! விமர்சனம்

201611301816482767_virumandikkum-sivanandikkum-movie-review_medvpfநடிகர் சஞ்சய்
நடிகை அருந்ததி நாயர்
இயக்குனர் வின்சென்ட் செல்வா
இசை தேவராஜன் ஆர்
ஓளிப்பதிவு மிச்சேல் எஸ் கே

சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஹீரோ சஞ்சய், தனது நண்பன் முருகதாஸ் மூலமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் சங்கிலியிடம் சென்று ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்குகிறார். விரைவில், வங்கியில் கேட்டிருக்கும் லோன் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், ஐந்து லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துவிடுகிறார்.

வங்கியிலிருந்து லோன் பணம் வரும் என்று பார்த்தால், லோன் அப்ளிகேஷனை அவரது அப்பா கிழித்துவிடுகிறார். இதனால், வங்கியிலிருந்து பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே வாங்கிய பணத்துக்கு வட்டி கேட்டு வரும் சங்கிலி, நாயகனுக்கு கியாரண்டி கொடுத்த முருகதாஸை அடித்து துவம்சம் செய்கிறார்.

பணப்பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று நாயகன் சஞ்சய் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில், சினிமா எடுக்கவரும் தம்பி ராமையா ரூபத்தில் அவருக்கு உதவி வருகிறது. தன் படத்தில் சஞ்சய் ஆறு நாள் நடித்துக் கொடுத்தால் ஆறு லட்சம் தருவதாக கூறும் தம்பிராமையாவின் பேச்சை கேட்டு அதில் நடித்தும் கொடுக்கிறார். அப்போது, வழியில் பார்க்கும் அருந்ததி நாயரை இவர்கள் ஹீரோயினாக முடிவு செய்து, அவருக்கு தெரியாமலேயே அவரை வைத்து படம் எடுத்து முடிக்கிறார்கள்.

படம் முடிந்ததும் தம்பிராமையா நாயகனுக்கு 6 லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்று விடுகிறார். அந்த காசோலையை சங்கிலியிடம் கொடுத்துவிட்டு வரும் சஞ்சய்க்கு வீட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அருந்ததி நாயரின் குடும்பம், சஞ்சய்யை தேடி அவரது வீட்டுக்கு வந்து நிற்கிறது.

அருந்ததி நாயரும், சஞ்சய்யும் காதலிப்பதுபோல் தம்பிராமையா எடுத்த படம் யூடியூப்பில் வெளியானதால் அதைப்பார்த்து அருந்ததி நாயரை காணவில்லை என்று கூறி, அவரை எங்கு வைத்திருக்கிறாய் என்று சஞ்சயிடம் கேட்கிறார்கள். சஞ்சய் நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார். ஆனால், அவர்களோ நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில், தம்பி ராமையா கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வருகிறது.

இறுதியில், அருந்ததி நாயர் எங்கு சென்றார்? அவள் தன்னுடைய காதலி இல்லை என்பதை சஞ்சய் எப்படி நிரூபித்தார்? சங்கிலியிடமிருந்து நாயகன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் ஹீரோவான சஞ்சய் மிகவும் கஷ்டப்பட்டு, ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார். புதுமுகம் என்பதால் அவரிடம் இருந்து பெரிதாக நடிப்பு வரவில்லை. அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

பிச்சைக்காரர் முதற்கொண்டு பஸ் டிக்கெட் வரை எல்லாவற்றுக்கும் செக் எழுதிக் கொடுக்கும் மோசடிக்காரர் வேடத்தில் தம்பி ராமையா அழகாக பளிச்சிடுகிறார். வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சங்கிலியின் கையாளாக வரும் யோகி பாபு கொடுக்கும் சின்ன சின்ன கவுண்டர் வசனங்கள்கூட பலமாக சிரிக்க வைக்கிறது.

நாயகனின் நண்பனாக வரும் முருகதாஸ், மயில்சாமி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஜய் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் இந்த படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை. படத்தின் நிறைய காமெடியன்களை இறக்கிவிட்டால் போதும், கதையில் எதுவும் வேண்டாம் என்று இருந்துவிட்டார் போலும். படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சம்பந்தப்படுத்துவதற்காக ஒரு காட்சியை வைத்து முடித்திருக்கிறார்கள். நிறைய காட்சிகள் திணிக்கப்பட்டதுபோன்றே தெரிகிறது

எஸ்.கே.மைக்கேல் தனது ஒளிப்பதிவில் படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். . தேவராஜனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில நேரம் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

மொத்தத்தில் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ சோகம்.Post a Comment

Protected by WP Anti Spam