பெரியார் ஆற்றில் குளித்தபோது டெல்லி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பென்னி ஆபிரகாம் (வயது 50). இவர் பெரியார் ஆற்றங்கரையில் உள்ள பாரியாழி என்ற இடத்தில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
பாரியாழி சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
இந்நிலையில் வயநாட்டை சேர்ந்தவர் ஜோஸ் (20). இவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பர்கள் அபிநாவ் (20) மற்றும் பட்டேல் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். பெரும் பாவூரில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளுக்கு தனது நண்பர்களை ஜோஸ் அழைத்துச்சென்றார்.
சம்பவத்தன்று பாரியாழி சுற்றுலா தலத்திற்கு டெல்லி நண்பர்களுடன் உள்ளூர் நண்பர்கள் 7 பேரையும் அழைத்துக் கொண்டு பாரி யாழி சுற்றுலா மையத்திற்கு சென்றார். அங்கு பென்னி ஆபிரகாம் நடத்தி வரும் தங்கும் விடுதியில் தங்கினர். நண்பர்கள் அந்த பகுதிகளை கண்டு ரசித்தனர். நேற்று மாலை நண்பர்கள் 10 பேரும் பெரியார் ஆற்றில் குளித்தனர்.
அப்போது ஜோஸ், அபிநவ் மற்றும் பட்டேல் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றனர். பின்னர் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் அலறி சத்தம்போட்டனர்.
அதிர்ச்சியடைந்த விடுதி உரிமையாளர் பென்னி ஆபிரகாம் அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் சிக்கிக்கொண்டார். 4 பேரும் உயிருக்கு போராடினர். மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது குறித்து பெரும்பாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த 4 பேரையும் மீட்டனர். அவர்களை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 4 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.