By 21 December 2016 0 Comments

கூட்டமைப்பின் திரிசங்கு நிலை…!! கட்டுரை

article_1481809532-tna-1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாகச் சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறி வந்த விடயங்கள் தொடர்பில், தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருக்கின்றது.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் மூலமான அரசியல் தீர்வு என்கிற விடயத்தினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கடந்த காலங்களில் தமிழ் மக்களிடம் முன்வைத்து ஆணையைப் பெற்று வந்திருக்கின்றது. ஆனாலும், பொதுத் தேர்தலுக்குப் பின்னரான கடந்த 15 மாதங்களில் ‘ஒருங்கிணைந்த நாட்டுக்குள் சமஷ்டி’ என்கிற விடயத்திலிருந்து இரா.சம்பந்தன் பெருமளவு விலகி வந்திருந்தார்.

அவர் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்றெல்லாம் பேசியிருக்கின்றார்.ஆயினும், சொல்லும்படியான தீர்வினைப் பெற்றுவிடுவோம் என்று கூறுவதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. விடயங்கள் தன்னுடைய கையை மீறிப் போய்விட்டதாக உணர்ந்து அல்லாடிக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையிலும், அவர் தமிழ் மக்களை நோக்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்களில் உண்மைத் தன்மை தொடர்பில் பேசுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில், அவர் பேசும் உண்மைகள் தமிழ் மக்களிடத்தில் பெரும் எரிச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும்.

கூட்டமைப்பு கிட்டத்தட்ட எல்லாப் பிடிகளையும் தென்னிலங்கையிடம் இழந்துவிட்டு நிற்கின்றது என்று அரசியலமைப்புப் பேரவை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் ஒருவர் உரையாடல் ஒன்றின் போது மிகவும் ஆதங்கத்தோடு கூறினார். இரா.சம்பந்தனுக்கு தென்னிலங்கையைப் பற்றிய தெளிவான அறிவு இருக்கின்றது.
அவர் ஜே.ஆர் காலத்திலிருந்து மிகவும் சிக்கலான தென்னிலங்கையின் தலைவர்களைக் கண்டு வந்திருக்கின்றார். அதுபோல, தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் நிலைப்பாடு மாற்றங்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனும் அறியாமல் இல்லை. ஆனாலும், அவர்கள் இருவரும் ஒரு வகையில் முரட்டுத்தனமான நம்பிக்கைகளுடன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்புப் பற்றிய நம்பிக்கைகளை விதைப்பதில் ஆர்வத்தோடு இருந்தார்கள்.அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்கள்.

ஆனால், அவர்களினால் அந்த நம்பிக்கைகளைக் காப்பாற்றுவதற்கான அடைவுகளைத் தென்னிலங்கையுடனான பேச்சுக்களில் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பில் தற்போது உள்ளபடியே பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இணங்கி விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், அதனை எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக மறுத்துரைத்தார். ஆனால், தற்போதுள்ள நிலவரங்களில்படி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை எனும் விடயத்தினை அதன் போக்கிலேயே விட்டுக் கொடுப்பதற்கு கூட்டமைப்பு உடன்பட்டிருக்கின்றது. அத்தோடு, வடக்கு- கிழக்கு இணைப்பு என்கிற விடயத்தை மறந்து விட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்பினை நிர்வாகக் கட்டமைப்பினூடு இணைப்பதன் மூலமே நியாயபூர்வமான அதிகாரப் பரவலாக்கம் பற்றிய உரையாடல்கள் உண்மையான பக்கத்துக்கு நகர முடியும். ஆனால், வடக்கு- கிழக்கு இணைப்பு என்கிற விடயத்தினை மறந்து விட்டு சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் என்றெல்லாம் பேசுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். அது கிட்டத்தட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் என்கிற சொற்தொடர் ஒன்று, தென்னிலங்கை அரசியல்வாதிகளினால் உச்சரிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு என்பது யாழ்ப்பாணமாகச் சுருக்கப்படும் ஏற்பாடுகளின் ஆரம்பம் இது. வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் என்பதை வடக்குக்குள் சுருக்கிவிட முடியும் என்பதன் ஏற்பாடுகளின் போக்கில், வடக்கு- கிழக்கு இணைப்பினை மறுதலிக்கும் புள்ளியும் சேர்கின்றது. அதனை, கூட்டமைப்பு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் கடப்பது என்பது உண்மையில் ஏமாற்றமானது.

அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்கள் இன்னமும் அரசியலமைப்புப் பேரவை வழிநடத்தல் குழுவுக்குள் எழவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் கூறினாலும் அரசியலமைப்பின் இறுதி வடிவம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. அப்படித்தான் அரசியலமைப்புபேரவை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் கூறினார். அந்த இறுதி வடிவம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நம்பிக்கைகளிலிருந்து வெகுதூரத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஏனெனில், ஒற்றையாட்சிக்குள் பௌத்தம் முதன்மை வகிக்கும் சமஷ்டியற்ற புதிய அரசியலமைப்பே இறுதி செய்யப்பட இருக்கின்றது.ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற வார்த்தைகளை அல்லது லேபிள்களை அகற்றி விட்டு உரையாடுவது அரசியல் ரீதியான முன்னோக்கிய பயணத்துக்கு அவசியம் என்கிற வாதம் சிலரினால் வைக்கப்படுகின்றது.

உளச்சுத்தியுடனான அரசியல் உரையாடல் வெளியொன்று திறந்தால் அப்படியான நிலைப்பாட்டில் செல்வது பிரச்சினையில்லை. ஆனால், எழுபது ஆண்டுகால அரசியல் பிணக்கினைக் கொண்டிருக்கின்ற இலங்கையில், அதற்கான உளச் சுத்தியை தென்னிலங்கை எந்தவொரு தருணத்திலும் வெளிப்படுத்தி வந்திருக்கவில்லை. அப்படியான நிலையில், லேபிள்கள் அற்ற உரையாடல்கள் உண்மையான பாதைகளைத் திறந்துவிடும் என்கிற நம்பிக்கைகள் அச்சமூட்டுவனாகவே காணப்படுகின்றன.

ஒற்றையாட்சியின் கீழ் அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்புடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம் மூலம், நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உகந்த அரசியலமைப்பினை வரைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனையே கடந்த வாரம் இடம்பெற்ற அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியிருக்கின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, புதிய அரசியலமைப்பு விடயத்தில் கொஞ்சம் விலகி நின்று, பொறுப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலையில் சுமத்திவிட்டு, குற்றச்சாட்டுக்களை வீசுபவர்களாக கிட்டத்தட்ட எதிர்க்கட்சியின் வேலையொன்றைச் செய்ய எத்தனித்திருக்கின்ற தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மேற்கண்ட தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கின்றது. இதன்மூலம், தென்னிலங்கையில் எழும் அதிர்வுகளை வெற்றி கொள்ளலாம் என்றும் ரணில் விக்ரமசிங்க நினைக்கின்றார்.

சமஷ்டி என்கிற பேச்சுக்கு இடமில்லை; பௌத்தத்திற்கு முன்னுரிமை; ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிற விடயங்களை தென்னிலங்கை மக்களிடம் தொடர்ச்சியாக கூறி, அதற்குத் தயாராக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினையே தற்போது முன்னெடுத்து வருகின்றது. அதற்காக ஏற்பாடுகளை மிகவும் தீவிரமான முன்னெடுத்துள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது.

தற்போதுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஒப்பான விடயத்தினை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று இறுதியாகவும் சர்வதேச அங்கிகாரத்துடனும் எழுதி, அதனைப் பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் வெற்றி கொள்ள வேண்டும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு. மைத்திரிபால சிறிசேனவும் அதன் போக்கில் குறிப்பிட்டளவு காய்களை நகர்த்தி வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவசர அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில், ஒற்றையாட்சி என்கிற விடயத்தினைப் புதிய அரசியலமைப்பிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்கள். ஏனெனில், வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை; என்றாகிவிட்ட நிலையில், ஒற்றையாட்சி என்கிற வார்த்தையை அகற்றுவதன் மூலம் சொல்லிக் கொள்ளும்படியான அடைவினைப் பெற்றுவிட்டதாகத் தமிழ்மக்களிடம் கூறி மன்னிப்பைக் கோர முடியும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

ஆனால், ஒற்றையாட்சி என்கிற வார்த்தையைஅரசியலமைப்பில் இருந்து அகற்றுவதற்கு தென்னிலங்கை தயாராக இருக்காது. அப்படி அதற்கு இசைந்தாலும் ஒற்றையாட்சி என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு கிட்டத்தட்ட ஒற்றையாட்சிக்கு உண்டான அனைத்துச் சரத்துகளையும் வைத்துக் கொள்ளும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் கிட்டத்தட்ட அகற்றப்பட்டதான சூழ்நிலையே ஏற்பட்டிருக்கின்றது என்று தென்னிலங்கை செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகின்றார். அது, உண்மையில் கூட்டமைப்பின் மீதான பாரிய அழுத்தமாக மாறும். அப்போது, கூட்டமைப்பு கட்டமைத்து வளர்க்க நினைத்த அரசியல் அதிகார ஸ்தானத்தினை மெல்ல இழந்து செல்லும் வாய்ப்பும் உருவாக்கும் என்றார்.

இந்த இடத்தில் மிகவும் அசதியான மனநிலையோடு கூட்டமைப்பின் தலைவர்கள், குறிப்பாக இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் இருக்கின்றார்கள் என்பது உண்மை. அது, அவர்கள் வழங்கிய நம்பிக்கைகளை நிறைவேற்றியாக வேண்டிய பொறுப்புக்களின் சார்பிலும் தென்னிலங்கையுடனான சதிராட்டத்தினாலும் வந்திருப்பது. ஆனால், அவர்கள் அந்தக் கட்டத்தினைக் கடந்து வெற்றிகரமான பக்கத்தில் நகர்ந்தால் மட்டுமே, சில தீர்க்கமான அடைவுகளையாவது கொண்டு வந்து சேர்க்கும். அதற்காகத் தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam