By 22 December 2016 0 Comments

சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –24)

timthumbகாரணமற்ற தாமதங்கள்

ரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை.

எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த வித அபாயகரமான கட்டத்திலும் துணிந்து பாய்ந்து சென்று போரிட வல்லவர்கள்.

புலிகளிடம் சயனைட் இருக்கிறது என்பது நன்கு தெரிந்த பிறகு, வீட்டை முற்றுகையிட்டு, தக்க தருணத்துக்காகக் காத்திருப்பது என்பது எப்பேர்ப்பட்ட அபத்தம்!

இது ஏற்கெனவே பல சமயம் நிரூபணமாகியும் இருக்கிறது.

கோயமுத்தூரில் டிக்சன் சயனைட் சாப்பிட்டு இறந்தபோதே உஷாராகியிருக்கவேண்டும்.

அதன்பிறகு இந்திரா நகர் வீட்டில் இரண்டு பேர்.

திரும்பவும் மாண்டியாவில் பன்னிரண்டு பேர்.

சிவராசா, சுபா

இத்தனைக்குப் பிறகும் கோனனகுண்டேவில் சிவராசனையும் சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் மெத்தனமும் தயக்கமுமே அடிப்படையான காரணம்.

ஆயிரம் நியாயங்கள் சொல்லி உண்மையை மூடி மறைக்கலாம்.

ஆனால், எதையும் சாதிக்கவல்ல பயிற்சி பெற்ற கமாண்டோக்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு உத்தரவு கொடுக்காமல் சும்மா வீட்டுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வைத்ததை மன்னிக்கவே முடியாது!

சிவராசனின் மரணம் மட்டும் நிகழாதிருந்திருந்தால் ராஜிவ் படுகொலை பற்றி மட்டுமல்ல.

தமிழகத்தில் எல்.டி.டி.ஈயின் முழுமையான நெட் ஒர்க் குறித்து சி.பி.ஐக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கும்.

ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவிப் போனது என்கிற வருத்தம் என்னைப் போன்ற புலனாய்வாளர்கள் அத்தனை பேருக்குமே அன்று இருந்தது!

ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்கள். மேலதிகாரிகள் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்.

அவர்கள் பேசுவதை அப்படியே கேட்டுக்கொள்ளவேண்டும்.

ராஜிவ் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் மரணம் வரை சுமார் மூன்று மாத காலம் வீடு, குடும்பம், உறக்கம், ஓய்வு, உணவு என்று எதுவுமில்லாமல் இரவு பகலாகத் தேடுதலும் புலன் விசாரணையும் மட்டுமே வாழ்க்கையாக இருந்தவர்கள் நாங்கள்.

சிவராசன் உயிருடன் அகப்பட்டிருந்தால், அதுதான் எங்கள் பணிக்கு மாபெரும் பரிசாக இருந்திருக்க முடியும். பேசிப் பயனில்லை. நடந்தது என்னவென்று உலகுக்குத் தெரியும்!

சிவராசன் குழுவினர் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியானதும் சி.பி.ஐயும் கறுப்புப் பூனைப் படையினரும் கோனனகுண்டேவுக்கு விரைந்தனர்.

டெல்லி மேலிடங்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது.

இதுதான் இடம். இதுதான் இறுதிநாள்.

இன்று, அல்லது என்றுமில்லை! நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.

முந்தைய தவறுகள் ஏதும் இந்த முயற்சியில் திரும்ப ஏற்படக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, உள்ளே இருப்பவர்களைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்.

சிவராசனிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர் ஏகே 47 வைத்திருந்தார். ஒரு பிஸ்டலும் வைத்திருந்தார்.

தவிரவும் உடனிருக்கும் மற்றவர்களிடம் வேறு ஆயுதங்கள் இருக்கக்கூடும்.

என்னவென்று நமக்கு முழுமையாகத் தெரியாத போது, மாண்டியாவில் நடந்தது போல அதிரடி நிகழ்த்தி, அவர்கள் சயனைடு சாப்பிடுவார்கள், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்லலாம் என்று மட்டுமே எண்ணிக்கொண்டு போகமுடியாது.

சயனைட் அருந்துவதற்குமுன்னால் அவர்களைப் பிடிக்க வேண்டும். போலீஸ் தரப்பிலும் அவர்கள் தரப்பிலும் சேதாரங்களையும் தவிர்க்க வேண்டும்!

காத்திருந்தோம். எந்தக் கணமும் அதிரடியாக உள்ளே நுழைவதற்கு கறுப்புப் பூனைகளும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் அப்படியான அதிரடி முயற்சிகள் ஏதும் வேண்டாம் என்று டெல்லியிலிருந்து தகவல் வந்தது!

எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

The LTTE suicide bombre Dhanu who killed Rajive Gandhi

வேறென்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்?

அன்பாகப் பேசி வெளியே வரச் சொல்லவா? அல்லது சாகும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு உள்ளே புகுந்து பிணத்தை எடுத்து வரவா? மிருதுளாவை உள்ளே அனுப்பி முதலில் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று ஓரெண்ணம் தோன்றியது.

ஆனால் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

ஒருவேளை போலீஸ் வந்திருக்கும் விஷயம் சிவராசனுக்குத் தெரிந்திருக்குமானால், மிருதுளாவை அவர் பிணைக்கைதியாகப் பிடித்துவிடக் கூடும்.

வேறேதேனும் வகையில் உயிர்ச்சேதம் இல்லாமல் அவர்களை மயக்கமடைய வைத்து, பிறகு பிடிக்க முடியுமா என்றெல்லாம் ஆலோசித்தார்களே தவிர, அதிரடிப்படையை உடனே உபயோகிக்கும் எண்ணமே மேலதிகாரிகளுக்கு இல்லை.

இது மிகவும் பொறுமையைச் சோதிப்பதாக இருந்தது. இரவு முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி வெறுமனே நின்றுகொண்டிருந்தோம். உள்ளே துளி சத்தமும் இல்லை.

ஆள்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் அவர்கள் மிகவும் கவனமாகவே இருந்தார்கள். வெளியே கேட்கிற ஒவ்வொரு சத்தத்தையும் அசைவையும் அவர்கள் கவனிக்கக்கூடும் என்று நினைத்தோம்.

ஏற்கெனவே, சின்ன சாந்தன் கைதாகி, அளித்த வாக்குமூலத்தில், யாராவது ஒருவர் காவலுக்கு நில்லாமல் சிவராசன் தூங்கமாட்டார் என்று சொல்லியிருந்தார்.

எனவே அசம்பாவிதங்கள் இன்றி இந்த ஆப்பரேஷன் முடியவேண்டுமே என்று கவலையாக இருந்தது.

மாலை நேரம் அந்தச் சாலை வழியே சென்ற ஒரு டிரக் வண்டி பழுதாகி நின்றது. உள்ளே இருந்த ஆள்கள் கீழே இறங்கினார்கள்.

அதனால் ஏற்பட்ட சிறு சலசலப்பில், அந்த வீட்டுக்குள் இருந்த சிவராசன் குழுவினர் விழித்துக்கொண்டார்கள்.

உடனே சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள். சுமார் அரைமணிநேரம் இந்தத் துப்பாக்கிச் சூடு நீடித்தது.

கறுப்புப் பூனைப் படைகளும் திரும்பச் சுட்டார்கள்.

இதற்குள் டெல்லியில் இருந்து இன்னும் கொஞ்சம் சிறப்பு அதிரடிப்படை வீரர்களை அனுப்பிவைத்திருப்பதாகச் செய்தி வந்தது!

எதற்கு? புரியவில்லை.

தாக்குதல் வேண்டாம் என்று உத்தரவிட்டுவிட்டு வீரர்களை அனுப்பும் லாஜிக் சுத்தமாகப் புரியவில்லை.

ஆனால் தாக்கவேண்டியது எங்களுக்குக் கட்டாயமாகிப் போனது.

தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அந்த எதிர்த்தாக்குதலில் இரண்டு அதிரடிப் படை வீரர்களுக்கு குண்டடி பட்டது.

டாக்டர், சயனைட் முறியடிப்பு மருந்து, ஆம்புலன்ஸ் என்று சகல ஏற்பாடுகளும் அந்தப் பத்தொன்பதாம் தேதி காலை வேளையில் அந்த வீட்டு வாசலுக்கு வந்துவிட்டன.

அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த குண்டுச்சத்தம் அப்போது அடங்கிவிட்டது.

இதற்குமேல் காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்து அதிரடிப் படையினரை உள்ளே போகக் கேட்டுக்கொண்டோம். டெல்லியிலிருந்து வந்திருந்த என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் அவர்கள்.

யாருக்கும் நம்பிக்கை இல்லை. இது பிழை. பெரும்பிழை. ஒரு முழு இரவு அவர்களூக்கு அவகாசம் கொடுத்து, காலை விடிகிற நேரம் கதவைத் தட்டுவதை என்னவென்று சொல்ல?

உடன் இருந்த கமாண்டோக்களை, அவர்களது திறமையை எங்கள் அதிகாரிகளே நம்பாத அபத்தம் அது.

வேறு வழியில்லாமல் இறுதிக்கட்ட நடவடிக்கையை அன்று காலை எடுக்க, வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது பிணங்களே எங்களை வரவேற்றன.

(Sivarasan, the mastermind in the assassination plot, shot himself dead at a hideout in Konankunte, Bengaluru on August 20, 1991.)

சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், டிரைவர், அம்மன் மற்றும் ஜமுனா என்கிற ஏழு பேரின் உடல்கள் அங்கே கிடந்தன.

ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்!

அதிர்ச்சி என்று சொல்லமாட்டேன்.

அந்த இரவு முழுவதும் நாங்கள் வெறுமனே அந்த வீதியில் காத்திருக்க நேர்ந்தபோதே இதுதான் நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது.

என்ன காரணம் என்று தெரியாமலேயே நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகட்டி நின்றிருந்த அவலத்தை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் ஒரு திருப்தி இருந்தது.

‘இந்திய போலீஸ் முடிந்தால் கொலையைச் செய்தது யாரென்று கண்டுபிடிக்கட்டும்’ என்று லண்டனில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை விட்டாரே கிட்டு! அதை நாங்கள் செய்தோம்.

வெற்றுப் பலகை போல் இருந்த வழக்கில் ஆரம்பமே எதுவென்று தெரியாமல் தேடத் தொடங்கி, மூன்று மாத காலத்துக்குள் கொலைக் குற்றத்தில் சம்பந்தமுள்ள அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் (சிவராசன் மரணத்துக்குப் பிறகு ரங்கன், சுசீந்திரன், அறிவு, இரும்பொறை, என்று பலபேரை அடுத்தடுத்துப் பிடித்துவிட முடிந்தது.

ஏற்கெனவே பிடிபட்டு விசாரணையில் இருந்தவர்கள், ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்த தகவல்களையும் அதன்பின் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

திருச்சி சாந்தனின் இருப்பிடத்தை ஒருவழியாக ரங்கன் மூலம் பிடித்து, அவரைப் பிடிக்கச் சென்று முடியாமல் அவர் சயனைட் அருந்தி உயிர் விட்டார்) சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம்.

அதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போய்விட்டது.

ஒரு மாபெரும் தலைவரின் படுகொலை வழக்கை விசாரிக்கச் சென்று, நமது அரசு இயந்திரம் செயல்படும் விதத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள அது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது என்னைப் பொருத்தவரை முக்கியமான விஷயம்தான்!

காவல் துறை என்கிறோம், உளவுத்துறை என்கிறோம், அதிரடிப் படை என்கிறோம். சர்வ வல்லமை பொருந்திய சட்டம் என்கிறோம். நீதி, நேர்மை, வாய்மை என்று என்னென்னவோ சொல்கிறோம்.

ஆனால் அனைத்துத் தளங்களிலும் சீராக்கப்படவேண்டிய அம்சங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளன என்னும் பேருண்மை எனக்கு இந்த வழக்கின்மூலம் தெரியவந்தது.

நமது நாட்டுக்கு அந்நிய சக்திகள் மூலம் உள்ள அபாயங்களைக் காட்டிலும் நம்மிடத்திலேயே உள்ள அபாயங்கள் அதிகம்.

இந்த ஒரு வழக்கை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எத்தனை எத்தனை சிடுக்குகள்!

புலன் விசாரணையின்போதும் சரி, பின்னால் வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோதும் சரி. ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில் எனக்கு வழக்கு சுத்தமாக முடிந்த திருப்தியைக் காட்டிலும், முடிந்தபின் மனத்தில் மேலோங்கிய கசப்புகளே அதிகம்.

விவரித்துத் தீராதவை அவை.

தொடரும்..Post a Comment

Protected by WP Anti Spam