லெபனானில் “கொத்து குண்டு’களை இஸ்ரேல் பயன்படுத்தியதா? அமெரிக்கா விசாரணை

Read Time:3 Minute, 39 Second

usa.flag.2.jpgலெபனான் மீதான தாக்குதலில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட “கொத்து குண்டு’களை இஸ்ரேல் பயன்படுத்தியதா என்பது குறித்தும், இது தொடர்பான ஒப்பந்தங்களை இதன் மூலம் அது மீறியதா என்பது குறித்தும் அமெரிக்கா விசாரித்து வருகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மூன்று வகையான “கொத்து குண்டு’கள், தெற்கு லெபனானில் பல பகுதிகளில் காணப்பட்டதாகவும், அப்பாவி மக்கள் உயிரிழக்க இவை முக்கிய காரணம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

லெபனானில் லிடானி நதிக்கு தெற்கே 249 இடங்களில் வெடிக்காத “கொத்து குண்டு’கள் கிடந்ததாக, கண்ணிவெடி தடுப்பு நடவடிக்கைக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு மைய அறிக்கை கூறியிருந்தது.

இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டு அலுவலகம், இந்த வாரம் இது குறித்த விசாரணையைத் துவக்கி உள்ளதாக “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் விளைவாக, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பது சந்தேகமே என்றாலும், அரபு நாடுகளின் கடும் விமர்சனங்களை சமாளிக்க புஷ் நிர்வாகத்துக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.

விசாரண நடப்பதாக பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அமெரிக்க வெளியுறவுத் துறை இதை உறுதிப்படுத்தி இருப்பதாக “நியூயார்க் டைம்ஸ்’ கூறியுள்ளது.

1970-களில்தான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு “கொத்து குண்டு’களை முதன் முதலில் விற்பனை செய்தது. அதைப் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து 1976-லும், 1978-லும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இரு ஒப்பந்தங்கள் செய்து கொண்டது. ஆனால் அந்த ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.

அரபு நாடுகளின் ராணுவங்களுக்கு எதிராகவும், ராணுவ இலக்குகளுக்கு எதிராகவும் மட்டுமே “கொத்து குண்டு’களைப் பயன்படுத்த வேண்டும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தக் கூடாது என்பது அந்த ஒப்பந்தங்களில் உள்ள முக்கிய நிபந்தனையாகக் கருதப்படுகிறது.

கடந்த 1982-ல் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்தபோது, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அது “கொத்து குண்டு’களை வீசித் தாக்கியது, அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இஸ்ரேலுக்கு அமெரிக்க “கொத்து குண்டு’களை விற்பனை செய்ய 6 ஆண்டுகளுக்குத் தடை விதித்து ரீகன் நிர்வாகம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி தென்னாப்பிரிக்கா அரசு தீர்மானம்
Next post செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்