நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்..!! (கட்டுரை)

Read Time:27 Minute, 14 Second

youth1-800x550எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள்.

கடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள். எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எப்போது வருவார்கள் என்று எதையுமே அறிய முடிவதில்லை. ஊரிலே அட்டகாசம், அடாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிற வாள் வெட்டுக் குறூப்புகளின்ர தொடுப்புகள் கிடைச்சால்… வீட்டில நிம்மதியாக இருக்கேலாத நிலைமை வந்திடும். அல்லது இணையங்களிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

யார் யாரெல்லாமோ வருகிறார்கள்; போகிறார்கள். இப்படி வாறவன், போறவனோட சேர்ந்து, தேவையில்லாத தொடர்புகளால் போதைப்பழக்கத்துக்கும் அடிமைப்படுவர்களோ…!!!??? இப்பிடியெல்லாம் இருந்தால் நாளைக்கு இவர்களுடைய எதிர்காலம் எப்பிடியிருக்கப்போகுது” என்று பெருந்துக்கத்தை அவிழ்த்துப் போடுகிறார்கள் பெரியவர்கள். இந்த மாதிரியான கவலைகள் பெரும்பாலான பெற்றோரை ஆட்டிப்படைக்கின்றன. பெற்றோருடைய இந்தக் கவலைகளில் நியாயமுள்ளதைப் போலவே பலருக்குத் தெரியும்.

ஏனென்றால், பிள்ளைகள் பாதிக்கப்பட்டால், அல்லது சட்டரீதியான பிரச்சினைகளில் சிக்கினால், அவர்களை மீட்டெடுப்பது பெற்றோர்தானே. அதற்காக அவர்கள் பெரிய விலைகளைக் கூடக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அவர்களுடைய கவலைகள் நியாயமானவை என்றே படும். ஆனால், இது சரியானதா என்று உளவியலாளர்களையும் இளைஞர்களையும் சமூகவியல் துறையினரையும் கேட்டால் பதில் வேறு விதமாகவே இருக்கும். அவர்கள் இளைய தலைமுறையின் நோக்கு நிலையிலிலும் உடற்கூற்றியலின் அடிப்படையிலும் இதைப்பற்றி வேறு விதமாக விளக்கமளிப்பார்கள். குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தவர்கள், இளமைப்பருவத்தினராக விருத்தியடையும்போது உடல், உள ரீதியான மாற்றங்கள் நிகழும். இது இயற்கை. இந்த நேரத்தில் அவர்களிடம் கூடிய உடல் வளர்ச்சி ஏற்படும். சக்தி அதிகரிப்பு நிகழும். அகச்சுரப்புகள் இரசாயன விளைவாக உண்டாகும். பாலியல் விருத்தியும் சிந்தனை விரிவாக்கமும் அறிவுப் பரப்பின் விசாலிப்பும் ஏற்படும்.

இதெல்லாம் இளைஞர்களிடம் மாற்றங்களையும் புதிய எண்ணங்களையும் உண்டாக்கும். மாற்றங்களுக்கான ஆவலைத் தூண்டும். சிறுவர்களாக இருந்தபோதிருந்த நிலை மாறி, சுயாதீனத்தன்மையோடு முடிவுகளை எடுக்கவும், சுயமாகச் செயற்படவும் முனைவர். எதையும் பரீட்சித்துப் பார்க்கவும் செய்து பார்க்கவும் முயற்சிப்பர். விளைவுகளைப் பற்றிய அனுபவம் இல்லை என்பது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், துணிச்சலாக அந்தக் காரியங்களில் ஈடுபடுவர். புதிய எண்ணங்களின் வழியாகப் பழைய கருத்து நிலைகளோடும் வழமைகளோடும் மோதுவதற்கு முனைவர். என்னதான் சிந்திக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருப்பர். பல முனைகளிலும் கேள்விகளை எழுப்புவர். மறுப்புகளைச் செய்வர். இதெல்லாம் கூர்ப்பின் வெளிப்பாடு. பரிணாம விதியின் தொழிற்பாடு. இதைப் பெரும்பாலான பெற்றோரும் மூத்தோரும் புரிந்து கொள்வதில்லை.

தாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, தமக்கு முன்னிருந்த தலைமுறையுடன் – பெற்றோருடன் நடத்திய மோதல்களையும் விலகல்களையும் இலகுவாக மறந்து விட்டு, இப்போது புதிய சட்ட அதிகாரிகளாக எழுந்து நிற்கிறார்கள். இதனால் மோதல்களும் விலகல்களும் இடைவெளிகளும் ஏற்படுகின்றன. இளைஞர்கள் பெற்றோரையும் சமூகத்தையும் விட்டு, மறுதலையாக இயங்க முற்படுகிறார்கள். கட்டுப்பாடுகளின் இறுக்கத்தை மறுதலிக்கும் சுயாதீனப்பருவம் அது என்பதைப் புரிந்து கொள்ளாதன் விளைவே இது. அதுவரையும் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் பெற்றோரில் தங்கி வாழ்ந்த நிலை மாறுதலடையும் இளைமைப்பருவத்தில் இருக்காது. கூடவே துணையாக தம்மைப்போல இருக்கும் ஏனைய இளைஞர்களும் ஒன்று சேரும்போது, அவர்களுக்கு அணிசார்ந்த, சகபாடிகள் கிடைத்த உற்சாகமும் பலமும் கிடைத்து விடுகிறது. இது அவர்களை மேலும் தனியாக விலகிச் செல்ல வைக்கிறது.

கூடவே இதைப் புரிந்து கொண்டு, அரவணைப்பதற்குப் பதிலாகக் கண்டனங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கங்களையும் விதிக்கும்போது இளைஞர்கள் மேலும் விலகிச் செல்கிறார்கள். அல்லது மீறுகிறார்கள். மீறல்கள் அதிகரிக்க சட்டங்களையும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சமூகம் முன்வைக்கிறது. நாடும் நீதித்துறையும் கூட இவ்வாறான மதிப்பீட்டுக்கே வருகிறது. இது இளைஞர்களை மேலும் விரக்திக்கும் ஆத்திரத்துக்கும் இட்டுச் செல்கிறது. இப்படியே முடிவில்லாத அளவில் இந்த மோதல் பெற்றோருக்கும் அல்லது மூத்தோருக்கும் இளைஞர்களுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விளைவாக, இளைஞர்கள் குற்றச்செயல்களிலும் தனித்து இயங்கும் நிலையிலும் புதிய ஒரு உலகத்தை உருவாக்குகிறார்கள். அந்த உலகம் சமூகத்துக்கு நெருக்கடியாகவும் சிலவேளை அமைந்து விடுகிறது.

ஆனால், விதிவிலக்காகச் சில பெற்றோரும் மூத்தோரும் இளைஞர்களை, அவர்களுடைய பருவத்தின் மாறுதல்களோடும் உணர்வுகளோடும் புரிந்து கொள்கிறார்கள். அப்படிப் புரிந்து கொள்ளும்போது இளைஞர்களுக்கும் அவர்களுக்குமிடையில் மிகுந்த நெருக்கமும் அந்நியோன்யமும் புரிந்துணர்வும் ஏற்படுகிறது. அங்கே நட்பும் தோழமையும் அன்பிணைப்பும் நிகழ்கிறது. அப்படியான நிலையில், மோதல்களும் விலகல்களும் தணிந்து விடுகின்றன. வழிப்படுத்தலும் இணைந்து பயணித்தலும் கலந்து பேசுதலும் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வுகளும் நடக்கின்றன. இது போன்ற எண்ணற்ற நற் சாத்தியங்கள் நிகழ்கின்றன. ஆனால், இது ரொம்பக் குறைவு. அநேகமான இடங்களிலும் விடுபடல்களும் விலகல்களுமே அதிகம். இதனால்தான் இளைய தலைமுறை தடுமாறி, தளம்பிச் செல்கிறது. இதற்கான பெரும் பெறுப்பு மூத்தோர்களிடமும் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும்தான் உள்ளது.

ஆனால், இதை, தங்களுடைய தவறையும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பதிலாக தங்கள் தவறுகளை மூடி மறைத்துக் கொண்டு, இளைய தலைமுறையையே குற்றம் சாட்டுகின்றனர். இதுவே இன்றைய பெரும் பிரச்சினையும் பொதுப் பிரச்சினையுமாகும். இளைய தலைமுறை என்பது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் வளம். உழைப்புத்திறன், மூளைத்திறன் ஆகியவற்றைக் கொண்ட நிகழ்கால, எதிர்காலச் சக்தி. வீடும் சமூகமும் நாடும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் இளைய தலைமுறையின் ஆற்றலே பதிலீடும் வெல்லும் மார்க்கமுமாகும். இதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வளம் இழக்கப்படும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இழக்கப்பட்ட இந்த வளம் கொஞ்சமல்ல. ஜே.வி.பி கிளர்ச்சிகளிலும் ஈழப்போராட்டத்திலும் இழக்கப்பட்ட இளைய தலைமுறையின் எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று இலட்சத்துக்கும் அதிகம். இது உயிரிழப்பு மட்டும். இதை விட உடல் உறுப்பு இழப்பும் உளச் சிதைவினால் ஏற்பட்ட இழப்பும் இன்னொரு வகையானது. ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வளர்ச்சியில் இந்த இழப்புகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. இழக்கப்பட்ட இந்த இளைய தலைமுறையின் வளம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், இன்றைய இலங்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். இலங்கையின் வளர்ச்சியானது, தன்னுடைய எல்லைக்கோட்டை மாற்றியமைத்திருக்கும். ஆனால், அதற்கான இடத்தை அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் வழிகாட்டிகளும் கல்வியாளர்களும் வழங்கவில்லை.

இன்னும் இதே நிலைமையே காணப்படுகிறது என்பதால்தான் நாட்டில் குற்றச் செயல்களும் வறுமையும் வளர்ச்சிக்குறைபாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதை மாற்றியமைப்பதற்கு யாரும் தயாருமில்லை; முன்வருவதுமில்லை. ஒரு சிறிய உதாரணம். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரியது. இலட்சக்கணக்கானவர்கள் வேலையற்றிருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர். அதேவேளை நாடு கடனில் மூழ்க்கிக் கிடக்கிறது. மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலையற்றிருப்போருக்கு வேலைகளை வழங்கி, அவர்களை உழைப்புச் சக்திகளாக மாற்றக்கூடிய திராணியும் திட்டமும் நாட்டிடம் இல்லை. அப்படி அனைவரையும் உழைப்புச் சக்திகளாக மாற்றினால், நாடு உற்பத்தியில் மேம்படும். அதனால் வளர்ச்சி ஏற்படும்; கடன் சுமை குறையும். இதை, இந்த எளிய உண்மையை, நம்முடைய தலைவர்கள் உணர்ந்து கொள்ளத் தயாரில்லை.

இளைய தலைமுறையினரைக் குறித்து, அங்கங்கே மின்மினிகளைப் போல சிறிய அளவிலான வெளிச்சங்களாக சில நம்பிக்கையுட்டும் அக்கறைகள் சிலரால் வெளிப்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அதிகாரத்தரப்பிடம் அதற்கான அங்கிகாரமும் வெளியும் கிடைப்பதில்லை. அதிகம் ஏன், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் இளைஞர்களுக்கான இடம் மிகக் குறைவாகவே உள்ளது. அண்மைய சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அமைப்புகள், நிர்வாகங்கள், மன்றுகள் போன்றவற்றில் இளையதலைமுறையினரும் பெண்களும் குறிப்பிட்டளவு வீதத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாய விதியொன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நல்ல விசயம். ஓரளவுக்குப் பரவாயில்லை என்று சொல்லக்கூடியது. ஆனால் “இளைய தலைமுறையே இந்த நாட்டின் நாளைய சொத்து“, “இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்றெல்லாம் உரத்த குரலில் சொல்வோர், இளைய தலைமுறைக்குரிய இடத்தை வழங்குவதில்லை. தங்களால் எழுந்து நடமாட முடியாத நிலையிலும் தாம் வைத்திருக்கும் அதிகாரத்தையும் வகிக்கின்ற பதவியையும் இளையோரிடத்தில் கைமாற்றுவதற்கு இவர்கள் முன்வருவதில்லை. குறைந்த பட்சம் இளைய தலைமுறையின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்வது கூட இல்லை. இது சமூகத்தின் பொதுக்குணமாகவே உள்ளது. இதனால்தான் “இளங்கன்று பயமறியாது”, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “பிஞ்சிலே பழுத்தது”, “ஏரிமுதிரா இளநாம்பன்கள்”, “வாலிப மிடுக்கு நாலு நாளில் படுக்கும்“ என்ற மாதிரியான சொல்லடைகள் சமூகத்தில் வலுவாக உள்ளன.

இந்தச் சொல்லடைகளுக்குப் பின்னிருக்கும் மனநிலைகள் என்னவென்று விளங்கிக்கொள்வதற்கு அதிக சிரமப்படத்தேவையில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதுடன், அவர்களைக் குறித்த அவநம்பிக்கையும் வெளிப்படுத்துவதாகும். கூடவே, அவர்களுக்குரிய அங்கிகாரத்தை வழங்க மறுப்பதுமாகும். ஆனால், இது தவறானது மட்டுமல்ல, இந்தச் சொல்லடைகளுக்கும் “நாளைய எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளிலே” “இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்று சொல்வதற்குமிடையில் நேர் முரண்பாடுகள் உள்ளதையும் நாம் கவனிக்கலாம். இரண்டும் இளைஞர்களுக்கு எதிரானது. ஒன்று நேரடியாகவே அவர்களை அவநம்பிக்கைப்படுத்திப் பார்ப்பது. மற்றது, அவர்களைப் பொய்யாகப் போற்றிப் புகழ்ந்துரைப்பது. இரண்டினாலும் இளைய தலைமுறைக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

பதிலாக, இளைய தலைமுறைக்கு முன்னுள்ள புதிய உலகச் சவால்களை எதிர்கொள்ளத்தக்க விதத்தில் அறிவு, ஆற்றல், வாய்ப்பு போன்றவற்றையே வழங்க வேண்டும். அதுவே பயனுடையது. குறிப்பாக தொழிற்கல்வி, தொடர்கல்வி, வேலைவாய்ப்பு, உற்பத்தி சார்ந்த அறிவையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் என ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டமும் செயற்பாடுகளும் தேவை. ஆனால், இதை அரசியல் தரப்புகளோ, உயர் சிந்தனைக் குழாமோ சிந்திப்பதில்லை. பதிலாக கட்டுப்பாடுகளையும் விதிகளையுமே குடும்பத்திலிருந்து, சமூகம், அரசு, நாடு எனச் சகல தரப்பும் விதிக்க முனைகின்றன. இதுவே பிரச்சினைகளுக்கான காரணமாகும். ஒருவரை வழிப்படுத்துவதும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் அளிப்பதும் வேறு; விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பது வேறு. ஆனால், அரசும் அதிகாரத்தரப்பினரும் பெற்றோரும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.

அதில்தான் அவர்களுக்கு நம்பிக்கையும் அதிகம். இரண்டாவது முறைமையை யாரும் பின்பற்றத் தயாரில்லை. அப்படிச் செய்தால், அது தமது பிடியை விட்டுச் சென்று விடும் என்ற கவலையும் இளைய தலைமுறை எதையும் சீராகச் செய்யக்கூடியதல்ல என்ற அவநம்பிக்கையும் அவர்களிடமுள்ளது. இது முற்றிலும் தவறானது. இது மிக மோசமான நம்பிக்கை இழப்பையும் அதனால் மன உடைவையும் இளைய தலைமுறையிடம் உண்டாக்கும் என்பதை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலிலும் அறிவிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது பழகிய பதவிச் சுகத்தின் வெளிப்பாடா? ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை.

தாங்களும் ஒரு போது, இதேபோல அங்கிகாரம் மறுக்கப்பட்ட, வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு தலைமுறையாக, ஒரு தரப்பாக இருந்திருக்கிறோம் என்பதை. அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய மன உடைவுகளும் உணர்வுகளும் ஏற்பட்டன என்பதை. அப்போது இதேபோல பொறுப்பில்லாமல் திரியும் தலைமுறை என்றும் சொல்வழி கேளாதவர்கள் எனவும் சொல்லப்பட்ட அவச் சொற்களைக் கடந்து வந்தவர்கள் என்பதையும் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறார்கள். உண்மையில் இளைய தலைமுறையின் விடயங்களைக் கவனிப்பதும் கையாள்வதும் முக்கியமான ஒன்று. அது அவசியமானது. ஏனென்றால் இந்த நாட்டின் வளமும் எதிர்காலமும் அவர்கள் என்பதால்.

இதற்கு நாம் இளைய தலைமுறையைப்பற்றிய சில அடிப்படையான விசயங்களைப் புரிந்து கொள்வது அவசியம். “பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளிலும் கொந்தளிப்புமிக்கதாய் இருக்கலாம். இளசுகள் பருவமெய்தும்போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் மற்ற இளைஞர்களாலும்கூட தினமும் அவர்கள் தொல்லைகளை எதிர்ப்படுகிறார்கள். தொலைக்காட்சி, சினிமா, இசை, இன்டர்நெட் ஆகியவற்றின் செல்வாக்குக்கு எந்நேரமும் ஆளாகிறார்கள். பருவ வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும் கவலையும் நிறைந்த காலம்” என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. “இளைஞர்களால் பெரும்பாலும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை; அதற்குத் தேவையான அனுபவம் அவர்களிடம் கொஞ்சம்கூட இல்லை.

சரியான வழிநடத்துதல் இல்லாவிட்டால், அவர்கள் சுலபமாக தீங்கான பாதையில் சென்றுவிடுவார்கள்” என்கிறது ஆய்வொன்று. “பெரும்பாலும் பருவ வயதில் அல்லது அக்காலத்தை தாண்டும் வயதில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆரம்பமாவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. வன்முறை, தறிகெட்ட பாலுறவு போன்ற மற்றக் கெட்ட நடத்தைகளும் அந்த வயதில்தான் ஆரம்பமாகின்றன“ என்கிறது ஐ.நாவின் அறிக்கை. இது நமக்கும் தெரியும். இளைய வயதினர் தவறிழைப்பதற்கு குடும்பச்சூழல், பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் காரணமாகின்றன. முறையான கல்வி, சிறப்பான வழிப்படுத்தல்கள், அதிக வாய்ப்புகளை அளித்தல் என்றெல்லாம் இருக்குமானால் பெருமளவு இளைஞர்கள் சீரான வாழ்க்கையும் தொழில்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அநேக குடும்பங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது பிள்ளைகள் தனித்து விடப்படுகிறார்கள். இதனால், கோடிக்கணக்கான பிள்ளைகள் பாடசாலையிலிருந்து திரும்பும்போது வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அப்படியே பெற்றோர் வந்தாலும், அவர்கள் பெரும்பாலும் களைப்படைந்திருக்கிறார்கள். அதோடு வேலையில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிய சிந்தையில் மூழ்கியிருக்கிறார்கள். இதன் விளைவு? அநேக இளவயதினருக்குப் பெற்றோரின் கவனிப்பு கிடைப்பதில்லை. “நாங்கள் குடும்பமாக நேரம் செலவிடுவதே இல்லை” எனச் சொல்கிறார் ஓர் இளைஞர் என்கிறது இன்னொரு வாக்குமூலம்.

இந்தமாதிரியான நிலைமை நீடிப்பது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. “கடந்த 30 ஆண்டுகளாகப் படிப்படியாக தோன்றியிருக்கும் பிள்ளை வளர்ப்புப் பாணிகள், ஒட்டுதலில்லாத, மௌனமான, படிப்புக் கோளாறுள்ள, கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே உருவாக்கி வருகின்றன” என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார். “பொருள் வளங்களுக்கும் சாதனைகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் சிக்கிக்கொள்ளும் பெற்றோர்கள், தங்கள் நேரத்தையெல்லாம் வேலைக்காகவே அர்ப்பணிக்கவும் பணத்தை தண்ணீராய் செலவழிக்கவும் வேண்டியிருக்கிறது.

ஆகவே, பிள்ளைகளோடு பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை” என்றும் அவர் கூறுகிறார். இளைய தலைமுறையினரின் நலனை அச்சுறுத்தும் மற்றொரு விசயம், வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள். பெரியவர்களின் கவனிப்பில்லாமல்தான் எக்கச்சக்கமான நேரத்தை செலவழிக்கிறார்கள். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் பிள்ளைகள் நேரத்தை செலவிடும்போது, அவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தவிர, மீடியாக்களின் தாக்கமும் இணையத்தளங்களும் இளைய தலைமுறையைத் தடுமாற வைக்கிறது. புதிய உலகம் ஏராளமான நெருக்கடிகளை பெற்றோருக்கும் அரசுக்கும் இளைய தலைமுறைக்குமிடையில் உண்டாக்கியுள்ளது. இதை வெற்றிகொள்வதே இன்றைய சவால்.

ஏனென்றால், நாளைய எதிர்காலமும் இன்றைய வாழ்க்கையும் நாட்டின் வளமும் இளைய தலைமுறை என்பதால். கவலைகளும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் சட்டங்களும் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதற்கோ, வளப்படுத்துவதற்கோ உதவப்போவதில்லை. பதிலாக வாய்ப்பளித்தலும் அரவணைத்தலும் நம்பிக்கையூட்டலுமே அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களைப் புதிய தளத்தில் இயங்க வைக்கும். அதுவே நம் கவலைகளையும் போக்கும். அரசியலில் கூட நரையும் திரையுமானவர்கள் விலகி, நாளைய தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதுவே புதிய உலகைச் சமைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்பி மோகத்தால் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்..!!
Next post மீண்டும் உயிர் பெற்றதா டைனோசர்? – உலகையே அதிரவைத்துள்ள காணொளி..!!