நிர்ணயிக்கப்படும் எல்லைகள்..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 7 Second

sri-lanka-mapநீண்டகாலம் இழுபறியாக இருந்துவந்த, எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அறிக்கை, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இம்மாதம் 17ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலுக்காக அரசியல் கட்சிகளும் பொது மக்களும் காத்திருக்கின்றனர்.

ஏனெனில், இவ்வறிவித்தல் வெளியான குறிப்பிட்ட சில நாட்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்பதே அதற்குக் காரணமாகும். எல்லை நிர்ணயம் என்பது வெறுமனே பிரதேசங்களின் அன்றேல் நிலப்பரப்புகளின் எல்லைக்கோடுகளை வரையறை செய்வது மட்டுமல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற, வட்டார எல்லைகள்தானே மீள நிர்ணயம் செய்யப்படுகின்றன என்று, சிறுபான்மைச் சமூகங்கள் அசட்டையாக இருந்து விட முடியாது.

ஏனென்றால், ‘எல்லைகளே’ ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுகின்றன. எல்லைகளே ஒரு பிரதேசத்தின் ஆட்புலத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. எல்லைகளே அங்கு அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபையின் அதிகாரம் எந்தத் தூரம் வரைக்கும் செல்லுபடியாகும் என்பதை வரையறை செய்கின்றன. எல்லைகள்தான் ஒரு வட்டாரத்துக்கு அல்லது உள்ளூராட்சி சபைக்குரிய நிலம் மற்றும் வளங்களின் பௌதீக அளவீட்டை வெளிப்படுத்துகின்றன.

மிக முக்கியமாக, ஒரு பிரதேசத்தின் எல்லைகளே அப்பிரதேசத்தில் இருந்தும் அதனுள் உள்ளடங்கும் வட்டாரங்களில் இருந்தும் தெரிவாகக் கூடிய மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் எந்த இனத்தில் அல்லது சமூகப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான நிகழ்தகவையும் தீர்மானிக்கின்றன. எனவே, இதனை சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அற்ப விடயமாகக் கருதவே முடியாது. உள்ளூராட்சி மன்றங்களுக்குள் உள்ளடங்கும் வட்டாரங்களின் எல்லைகளை மீள நிர்ணயித்து, வட்டார முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான திட்டத்தை முன்னைய அரசாங்கமே கொண்டிருந்தது. அதற்கான சில நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை.

பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கம், எல்லை மீள்நிர்ணயத்தை மேற்கொள்வதற்கான குழுவை 14 மாதங்களுக்கு முன்னர் நியமித்திருந்தது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இவ்வாறான குழு ஒன்றை நியமிப்பதாக 2015 ஒக்டோபர் 22 ஆம் திகதி பொது அறிவிப்புச் செய்தார். இந்தக் குழுவுக்கு தலைவராக அசோக பீரிஸ் நியமிக்கப்பட்டதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சாலிய மெத்தியூ, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.எஸ்.எம். மிஸ்பார், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உபுல் குமரபெரும, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் பி.சுந்தரம்பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லிம்களின், அவர்களது அரசியல் கட்சிகளின் சார்பிலோ அல்லது மலையகத் தமிழர்களின் சார்பிலோ நேரடியாக எந்தவொரு பிரதிநிதியும் இக்குழுவுக்கு நியமிக்கப்படவில்லை என்பது நினைவுகொள்ளத் தக்கது. இவ்வாறு, நியமிக்கப்பட்டிருந்த எல்லை மீள் நிர்ணயக்குழுவின் அறிக்கையை ஆரம்பத்தில் திட்டமிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியாத வகையில் பல்வேறு நடைமுறைத் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. அரசியல் அரங்கில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ‘உள்ளூராட்சி தேர்தல் ஒன்றுக்கு பயந்துகொண்டு, அரசாங்கம் எல்லை மீள் நிர்ணயப் பணிகளைப் பூர்த்தி செய்து வர்த்தமானியை வெளியிடவில்லை’ என்று குறிப்பாகக் கூட்டு எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

அதுமட்டுமன்றி, முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நேரடியாகச் சந்தித்து, இதற்கான அழுத்தத்தையும் கூட்டு எதிரணி கொடுத்திருந்தது. இந்த நிலையில், இம்மாத ஆரம்பத்தில் மேற்படி குழுவின் அறிக்கை அமைச்சர் பைசரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இரு கட்சிகளின் உறுப்பினர்கள் அதில் ஒப்பமிட்டிருக்காததன் காரணமாக அவர் அதனைப் பொறுப்பேற்கவில்லை. பின்னர், எல்லோரினது ஒப்பத்தையும் பெற்று, கடந்த 17ஆம் திகதி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

அறிக்கை கிடைத்தவுடன் காலதாமதமின்றி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று சொல்லியிருந்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஏதோ காரணங்களின் அடிப்படையில் வர்த்தமானியில் இன்னும் அதனை பிரசுரிக்கவில்லை என்பதால், உள்ளூராட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பும் வெளியாகவில்லை. எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது என்பது மிக முக்கியமான ஒரு காரியமாகும். இது, அந்த வட்டாரத்தில் வசிக்கின்ற மக்களின் உள்ளூட்சி மன்றத்துக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அரசியல் உரிமைகளை மட்டுமன்றி அதனூடான எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களையும் தீர்மானிக்கும் நடவடிக்கை என்றால் மிகையாகாது.

எனவே, இது மிகவும் உணர்வுத்தூண்டுதல் மிக்க (Sensitive) விடயமாக காணப்படுகின்றது. அந்த வகையில், நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவானது, ஒரு குறிப்பிட்ட வட்டார நிலப்பரப்பில் வாழ்கின்ற சனத்தொகை, நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் புள்ளிவிபரத் தரவு, வாக்காளர் இடாப்பு, பௌதீக எல்லை போன்ற பல்வேறு விடயங்களை கவனத்தில் எடுத்து, எல்லை அளவீடுகளை மேற்கொண்டு, அவற்றுக்கான பெயர் மற்றும் இலக்கங்களின் அடிப்படையில் மீள்நிர்ணய அறிக்கையைத் தயாரித்திருக்கின்றது.

அரசியல் அதிகார ஆளுகைக் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கின்ற வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்கின்ற பணி மிகவும் சிக்கலானதும் சவால் மிக்கதுமாக இருந்து வந்தது. முன்னைய அரசாங்கமே எல்லை மீள் வரையறைக்கான அடிப்படைகளை வகுத்திருந்தது. அத்தோடு உடனடியாக அறிக்கையிடும் பணியை பூர்த்திசெய்து, வர்த்தமானி வெளியிட்டு, தேர்தலை நடாத்துமாறு முன்னைய ஆளும் கட்சியான, இன்றைய கூட்டு எதிரணி தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

இதற்கு காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறெனில், சுதந்திரக் கட்சியின் (ஐ.ம.சு.மு) வெற்றியை அடிப்படையாகக் கொண்டே நாட்டில் உள்ள அதிக எண்ணிக்கையிலான வட்டாரங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் சூத்திரம் வகுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதேநேரத்தில், கடந்த இரு தேர்தல்களிலும் அளிக்கப்பட்ட வாக்குகளைத் தொகுதிவாரியாக நோக்கினால் அவற்றில் மஹிந்த தரப்பினரே (ஐ.மு.சு.மு) பலம்பெற்றிருந்ததாக அப்போது அவதானிகள் கணிப்பிட்டுச் சொல்லியிருந்தனர்.

எனவே, இப்போது அரசாங்க ஆளுகையின் ஆணிவேர்களை ஆட்டிப் பார்ப்பதற்காகவும், ஐ.ம.சு,முவின் பலத்தைப் பரீட்சிப்பதற்காகவுமே கூட்டு எதிரணியானது அவசரமாக தேர்தலை நடாத்துவதற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது எனலாம். அரசாங்கம் பயப்படுகின்றது என்று கூட்டு எதிரணி சொல்லி வருகின்ற குற்றச்சாட்டில் மறைந்துள்ள விடயமும் இதுவேயாகும். எனவே, எல்லை மீள்நிர்ணயமும் அதன்படி தேர்தலை நடாத்துவதும் நாட்டின் பிரதான பெருந்தேசியக் கட்சிகளின் அதிகாரப்போட்டிக்கான கருவியாக மாறியிருக்கின்றது என்றும் சொல்ல முடியும். யாரும் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுவே யதார்த்தமானதுமாகும்.

அதைவிடுத்து, உத்தேச தேர்தல் முறைமையினால் அல்லது எல்லை மீள் நிர்ணயத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படப் போகின்ற பாதிப்புக்கள், அவர்களுடைய அரசியல் பிரதிநித்துவம் குறைவடைவதற்கான சாத்தியம் குறித்து பெருந்தேசியக் கட்சிகள் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. பெருந்தேசிய கட்சிகள் இருக்கட்டும், முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளாவது வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இவ்விடத்தில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு பற்றியும் பேச வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் சட்டத்தில் 50இற்கும் மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருக்கின்றார். இந்நிலையில் புதிய தேர்தல் முறைமை ஒன்றை உட்புகுத்துவதற்கான எல்லாத் திட்டங்களையும் அரசாங்கம் வகுத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

கடந்த அரசாங்கமும் இதேபோன்றதொரு திட்டத்தை கொண்டுவந்த போது, கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதாயின் தொகுதிவாரித் தெரிவுக்கும் விகிதாசாரத் தெரிவுக்கும் இடையிலான விகிதம் 60 க்கு 40 ஆக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முஸ்லிம் தரப்பில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி போன்ற அரசியல்வாதிகளால் விடுக்கப்பட்டன. இப்போது, மீண்டும் அவ்வாறான ஒரு திட்டத்தை நல்லாட்சி அரசாங்கமும் தயாரித்திருக்கின்றது. இதற்கமைய இந்த விகிதம் 70 இற்கு 30 ஆக அமையும் என்று அனுமானிக்கப்படுகின்றது. அவ்வாறு நடந்தால், விகிதாசார தேர்தல் முறைமையின் வரப்பிரசாதத்தை முஸ்லிம்கள் இழக்க நேரிடும். இந்த அபாயம் ஏற்கெனவே இருக்கத்தக்கதாகவே எல்லை மீள்நிர்ணயத்திலும் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடாத்தும் முறை, 1981 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் அதிகார சபை சட்டத்தின் மூலம் தற்போதைய முறைமை கொண்டுவரப்பட்டிருந்தது. அப்போது இருந்த அரசியல்வாதிகளின் மனநிலை, மக்களின் பரம்பலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மற்றும் வட்டார எல்லைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. இதனைத் தாமும் அடையாளம் கண்டுகொண்டதாக எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவும் தெரிவித்திருக்கின்றது.

ஆனால், அவ்வாறான பிணக்குகளுக்கு தீர்வு காணாமல், புதிதாக எல்லைகள் வரையறை செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி அவை வர்த்தமானி ஊடாக பிரகடனம் செய்யப்படவும் இருக்கின்றது. இவ்விடயம் முஸ்லிம் மக்களிடைய கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வட்டாரங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் பெரும்பாலும் பெருந்தேசிய கட்சிகளின் நலன்களை பாதிக்காத விதத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். இதன் மறுபக்கம் என்னவென்றால், சிறு தமிழ்க்கட்சிகளும் சிறிய முஸ்லிம் கட்சிகளும் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பதாகும்.

எவ்வாறென்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விடயத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தியிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் கட்சிகள் போன பஸ்ஸுக்கு கைகாட்டுவதையே இவ்விடயத்திலும் காண முடிகின்றது. முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் இன்னும் சில முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பிடிக்கின்றனர். இவர்கள், புதிய முறையில் தேர்தலை நடாத்த அமைச்சரவை அங்கிகரித்த போது, பொங்கி எழுந்து, அதைத் தடுத்து நிறுத்த முடியாமல், இப்போது கருத்து வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

ஆனால், காலம்பிந்திய இதுபோன்ற செயற்பாடுகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் இதிலுள்ள பாரதூரத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லைகளை நிர்ணயிப்பது என்பது, உங்களது பிரதிநிதித்துவம், அரசியல் அதிகாரம், ஆட்புலப்பரப்பு என எல்லாவற்றுக்கும் ‘எல்லைபோடுவதற்கு’ சமமானது என்பதை மறந்து விடக்கூடாது. வட்டார எல்லை பிரிப்புக்களில் உள்ள முரண்பாடுகளைக் களையாமல், புதிய தேர்தல் முறைமையில், வாக்கெடுப்பு இடம்பெற்றால் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பது வெறும் கற்பனைக் கதையல்ல.

வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டாலும், வடக்கு, கிழக்குக்கு வெளியே, முஸ்லிம்கள் சொற்பமாக வாழும் உள்ளூராட்சி, வட்டார எல்லைகளுக்குத் தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லைகள், அபாய சமிக்கையாகத் தெரிகின்றன. இப்போது வரையறை செய்திருக்கிற எல்லைகளின் அடிப்படையிலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாமலும் தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின், கந்தளாய், மூதூர், கற்பிட்டி, ஆராய்ச்சிக்கட்டு, வண்ணாத்திவில்லு, அக்குறணை, பாததும்பறை, பாதஹேவாஹெட்ட எனப் பல உள்ளூராட்சிப் பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.

இப் பிரதேசங்கள் பாதிக்கப்படாவிட்டால் கூட தேசிய ரீதியாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும். எனவே, அரசாங்கம் சிறுபான்மை முஸ்லிம்களின் விடயத்தில் விசேட அக்கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைப் பார்த்து விட்டு, ‘முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை’ என்று நினைத்துவிடக் கூடாது. அரசியல் காரணங்களுக்காகவோ, வேறு தேவைகளுக்காகவோ வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அவதிப்படாமல், முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு மறுத்த மணமகன் வீட்டின் முன் புதுப்பெண் போராட்டம்..!!
Next post உலகின் விசித்திரமான சில விலங்குகள்..!! (வீடியோ)