இராக் போர்க்களத்தில் இணைந்த காதல் ஜோடிகள்..!!

Read Time:18 Minute, 48 Second

93867518_3132b2e8-7e0a-4c13-8fdb-77cc2ffcab37இராக் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க படையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நயீஃப் ஹரிபிட்டும் இராக்கிய சிப்பாயான படோ அலாமியும் காதல் வயப்பட்டனர். அதுமுதல் இராக்கியரான அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான ஆபத்துக்கள் நிறைந்த 12 ஆண்டுகால போராட்டம் தொடங்கியது.

2003 ஆம் ஆண்டு இராக் போர்க்களத்தில் நயீஃப் ஹரிபிட் பணியாற்ற தொடங்கினார்.

நுண்கலை பட்டதரியான நயீஃப் ஹரிபிட் வேறு பணி எதுவும் கிடைக்காததால், அமெரிக்க படையில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்ற தொடங்கினார்.

“அந்த நேரத்தில் மிகவும் மோசமான போர்க் களமாக இருந்த ரமாடியில் பணியாற்றினேன். நாங்கள் ரோந்து பணிக்கு செல்கிறபோது, புதைக்கப்பட்டிருக்கும் சாலையோர குண்டுகளாலும், மறைந்திருந்து தாக்கப்படும் துப்பாக்கி குண்டுகளாலும் பலர் கொல்லப்படுவர்”.

”நான் ஏன் இங்கிருக்கிறேன்? இதை ஏன் செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்போது எனக்கு நானே கேட்டுக் கொள்வதுண்டு” என்று நயீஃப் ஹரிபிட் தெரிவிக்கிறார்.

மாறிய வாழ்க்கை

இருப்பினும், இராக் படையிலுள்ள ஒரு சிப்பாயைப் பார்க்க நேர்ந்தது ஹரிபிட்டின் வாழ்க்கை அனைத்தையும் மாற்றியமைத்தது.

“ஒரு நாள் நான் வெளியே உட்கார்ந்திருந்தேன். குளியலறையை விட்டு இந்த சிப்பாய் வெளியே வந்தார். அவருடைய முடி அழகாகவும், கறுப்பாகவும் இருந்தது. “ஓ! இந்த சிப்பாய் மிகவும் அழகாக இருக்கிறான்” என்று என்னுள்ளே எண்ணிக்கொண்டேன்”, என்கிறார் நயீஃப் ஹரிபிட்

மேலும், “அந்த மோசமான இடத்தில் மிகவும் அழகான ஒன்று நடந்துவிட்டது என்ற உணர்வு எனக்கு தென்பட்டது” என்கிறார்.

நயீஃப் ஹரிபிட் ரகசியமான ஆண் ஒரு பாலுறவினர். ஓரினச்சேர்க்கை என்பது இராக்கில் தவறானது; ஒரு பாலுறவினர்கள் வன்முறை தாக்குதலை சந்திக்கும் ஆபத்தில் இருந்தனர். எனவே, நயீஃப் ஹரிபிட் இது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஒரு பாலுறவினருக்கு எதிரான இராக்

“இராக்கில் தவறாக பார்க்கப்படும் ஒரு பாலுறவு , அந்த நபரின் குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டு வரும். அதனால், அந்த நபர் கொலை கூட செய்யப்படலாம். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவிக்கிறார்.

அந்த இராக் சிப்பாய் படோ அலாமியும் தன்னிடம் ஈர்ப்பு கொண்டுள்ளார் என்பதை நயீஃப் ஹரிபிட் உணரவில்லை.

“நான் அவரையே தேடுவது போன்ற வினோதமான உணர்வை கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல செல்ல என்னுடைய இந்த உணர்வு அதிகரித்தது. அவருடன் பேசுவதற்கு நான் விரும்பினேன்” என்று அலாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையின் மொழிப்பெயர்ப்பாளராக நயீஃப் ஹரிபிட் பணியாற்றினார்

அந்த நகரத்தின் பொது மருத்துவமனையில் இருந்து கிளர்ச்சியாளர்களை கலைக்கின்ற ஒரு படை நடவடிக்கையில் கலந்து கொண்டபோது இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகமாகி கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

“ரோந்து பணிகளுக்கு பிறகு, நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வந்துவிடுவோம். ஒருநாள் என்னை படோ அலாமி சாப்பிட அழைத்தார். அதற்கு சென்ற நான் அவரோடும், பிற சிப்பாய்களோடும் பேசி மகிழ்ந்தேன்” என்று நயீஃப் ஹரிபிட் தெரிவிக்கிறார்.

காதல் மலர்ந்தது

நாங்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் பேசினோம். அவரை பற்றிய என்னுடைய உணர்வுகளும் வளர தொடங்கின” என்கிறார் நயீஃப் ஹரிபிட்.

இரவு உணவுக்கு பின்னர் மூன்று நாட்கள், நயீஃப் ஹரிபிட்டும், அலாமியும் தனியாக சென்று பேசிக்கொள்வதற்கு சாக்குபோக்குகளை சொல்லி வெளியே சென்றனர்.

அமெரிக்க ஹாம்வீ ராணுவ வாகனங்களால் நிறைந்திருந்த வாகன நிறுத்துமிடத்தில் இருளாக இருந்த ஓரிடத்தில் அவர்கள் அமர்ந்தனர்.

“நயீஃப் ஹரிபிட்யிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தேன். ஏதாவது சொல்ல வேண்டிய நேரம் அது என்று நான் உணர்ந்தேன்” என்கிறார் அலாமி.

“எனவே, நான் அவரை காதலிப்பதாக கூறி என்னுடைய உணர்வுகளை தெரிவித்தேன். அது மிகவும் சிறந்ததொரு இரவாக அமைந்தது. அதற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு நான் சாப்பிடவில்லை” என்கிறார் அல்லாமி.

இவர்கள் இடையிலான உறவு மெதுவாக வளர்ந்தது. அந்த முகாமில் பல மணிநேரங்களை அவர்கள் சேர்ந்து கழிக்க தொடங்கினர்.

“படை நடவடிக்கைகளின்போது, அமெரிக்கர்களோடு இருக்க வேண்டிய போதெல்லாம், அவரோடு நெருங்கி இருக்க நான் முயல்வேன். நாங்கள் சேர்ந்தே நடப்போம். சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளோம்” என்று நயீஃப் ஹரிபிட் கூறியுள்ளார்.

சக படையினரோடு பகைமை

இதனை அவர்களின் அமெரிக்க மற்றும் இராக் சக படையினர் கவனிக்க தொடங்கினர்.

“நான் அமெரிக்க படை தளபதியிடம் படோ அலாமியை பற்றி சொல்லி கொண்டிருந்தேன். சில இரவுகளில் அமெரிக்க முகாமில் படோ என்னுடன் தங்குவதற்கு அவர் உதவினார்” என்று ஹரிபிட் விவரித்தார்.

இராக் படையில் சிப்பாயாக படோ அலாமி

“நான் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிய வந்தவுடன் பிற சிப்பாய்கள் என்னுடன் பேசுவதை நிறுத்தி கொண்டனர். என்னுடைய சொந்த ஊரை சேர்ந்த சிப்பாய் ஒருவர், கம்பால் என்னை அடித்ததில், எனது கை முறிந்துவிட்டது” என்று ஹரிபிட் கூறினார்.

2007 ஆம் ஆண்டு நயீஃப் ஹரிபிட்டும், அலாமியும் இராக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள திவானியாவில் பணிபுரிய தொடங்கினர்.

அவர்கள் ஒரே நகரத்தில் இருந்து பணிபுரிவதில் மகிழ்ச்சியடைந்தாலும், இருவரும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை ரகசியமாகவே வைத்துகொள்ள வேண்டியிருந்தது.

அமெரிக்காவில் தஞ்சம்

ஆனால், அமெரிக்க படையுடன் நயீஃப் ஹரிபிட் மேற்கொண்ட நீண்டகால ஈடுபாட்டால் மிகவும் ஆபத்தாகிவிட தொடங்கியதும் 2009 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவில் தஞ்சம்கோரி விண்ணப்பித்தார்.

“நான் அமெரிக்கா சென்ற பின்னர், படோ அலாமிக்கு விண்ணப்பம் செய்து, அவரை அழைப்பது எளிது என்று எண்ணினேன்” என்கிறார் ஹரிபிட்

இராக்கில் வாழ்ந்தால் எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஏதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கை முழுவதும், எங்கள் இயல்பை மறைத்து வழ வேண்டியிருக்கும் என்பதை அறிவோம்.

ஆனால், “குயர் அஸ் ஃபோக்” (Queer As Folk ) என்ற தொலைக்காட்சி தொடரை நான் பார்த்திருந்ததால், உலகின் அடுத்த பக்கத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் உள்ளது என்பதை நான் அறிந்திருந்தேன் என்கிறார் நயீஃப் ஹரிபிட்.

அமெரிக்காவில் தஞ்சம் அளிக்கப்பட்ட நயீஃப் ஹரிபிட், சியாட்டலில் குடியேறினார். இருப்பினும் அலாமிக்கு விசா பெற்று சேர்ந்து வாழ்வதற்கான அவருடைய முயற்சிகள் வெற்றிகரமானதாக அமையவில்லை.

குடும்பத்தில் இருந்து தப்பிய அலாமி

அந்நேரத்தில் அலாமி ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிய வந்த அவருடைய குடும்பத்தினர், பெண்ணொருவரை திருமணம் செய்துகொள்ள அவர் மீது அழுத்தங்களை திணிக்க தொடங்கினர்.

நயீஃப் ஹரிபிட்வின் நண்பரான மைக்கேல் ஃபெய்லாவின் உதவியோடு, அலாமி பெய்ரூட்க்கு தப்பி சென்றார்.

“25 ஆண்டுகள் படையினரோடு கொண்டிருந்த உறவை விட்டுவிட்டு செல்கின்ற தீர்மானத்தை எடுப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை” என்று அலாமி தெரிவித்துள்ளார்.

“மேலும் நான் தான் என்னுடைய குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி கொண்டிருந்தேன். ஆனால், நயீஃப் ஹரிபிட்டோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்” என்று அலாமி கூறிக்கொண்டார்.

காதலுக்காக தொடர் போராட்டம்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உயர் ஆணையரிடம் மீள்குடியேற்றத்திற்காக அலாமி முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டுக்கு தீர்வு காண்பதற்கு முன்னர், அலாமியின் சுற்றுலா விசா முடிந்துவிட்டது.

ஆண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடியாக இராக்கில் வெளிப்படையாக வாழ முடியாது என்று அலாமியும், ஹரிபிட்டும் தெரிந்து வைத்திருந்தனர்

சட்டப்பூர்வமற்ற குடியேறியாக வாழ்ந்து, பிடிபட்டு இராக்கிற்கு திருப்பி அனுப்பப்படாமல் இருக்க, அந்நாட்டு படையினரையும், சோதனை நிலையங்களையும் அலாமி தப்பி செல்ல வேண்டியிருந்தது.

“அவ்வாறு காத்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார் அலாமி

“நான் நகர முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால், நயீஃப் ஹரிபிடம் பேசுவேன். அதுவே எனக்கு மிகுந்த வலிமைய வழங்கி வந்தது”

ஒவ்வாரு நாளும் அவர்கள் ஸ்கைபில் பேசி உரையாடினர்.

“நான் காலை உணவு செய்வதை அவர் காணொளியில் பார்ப்பார். அவர் இரவு சமைப்பதை நான் காணொளியில் பார்த்து ரசிப்பேன். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது போலவே நாங்கள் பேசி வந்தோம்” என்று நயீஃப் ஹரிபிட் தெரிவித்தார்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உயர் ஆணையரால் அலாமி பலமுறை நேர்காணல் செய்யப்பட்டார். ஆனால். அவருடைய விண்ணப்பம் பிரச்சனைகளாலும், தாமதங்களாலும் சூழ்ந்திருந்தது.

அலாமிக்கு சார்பாக வாதிடுவதற்காக இரண்டு முறை பெய்ரூட்க்கு விமானத்தில் வந்து மைக்கேல் ஃபெய்லா மீண்டும் உதவினார்.

“அவரை எனது ஞானத்தந்தை என்று அழைக்கிறேன்” என்கிறார் அலாமி.

நம்பிக்கை அளித்த கனடா

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உயர் ஆணையரின் முடிவுக்காக காத்திருந்தபோது, லெபனானிலுள்ள கனடா தூதரகத்தில் இருந்து அலாமி நேர்முகத்திற்கு அழைப்பு பெற்றார்.

ஃபெய்லாவின் உதவியால் 2013 ஆம் ஆண்டு அலாமி வான்கூவருக்கு செல்ல முடிந்தது.

இந்த ஜோடி அமெரிக்க-கனடா இரு நாட்டு எல்லையில் 140 மைல் (225 கி.மீ) தொலைவில் தான் பிரிந்து வாழ்ந்து வந்தது.

“எனது எல்லா வார விடுமுறைக்கும் அலாமியை காண எல்லை கடந்து பயணம் செய்து வந்தேன்” என்று நயீஃப் ஹரிபிட் கூறுகிறார்.

இந்த ஜோடி 2014 ஆம் ஆண்டு காதலர் தினம் அன்று கனடாவில் திருமணம் செய்து கொண்டது.

அதன் பிறகு நயீஃப் ஹரிபிட் அலாமியின் கணவராக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பம் செய்தார்.

2015 ஆம் ஆண்டு மோன்டிரியாலிலுள்ள அமெரிக்க குடியேற்ற அலுவலகத்தில் இருந்து அலாமிக்கு நேர்முகத்திற்கான அழைப்பு வந்தது.

6 அல்லது 7 மணிநேரம் நீண்டதொரு போராட்டமாக இருந்தது. பூஜியத்திற்கு கீழ் 27 டிகிரி குளிர் போல, உறைய வைப்பதுபோல. அது இருந்தது” என்று ஹரிபிட் வர்ணிக்கிறார்.

அமெரிக்காவில் ஜோடியாக

“அந்த பெண் அதிகாரி மூன்று அல்லது நான்கு கேள்விகளை கேட்டார். 10 நிமிடங்கள் கழித்து அந்த அதிகாரி அலாமியை பார்த்து, “ஒரு குடியேறியாக அமெரிக்காவில் வாழ நீ அனுமதிக்கப்படுகிறாய்” என்று கூறினார்”.

“நான் அவரிடம் அதனை மீண்டும் சொல்ல கேட்டுகொண்டேன். கூச்சலிடக் கூடாது என்று என்னுடைய வாயை பொத்திக்கொண்டேன். நாங்கள் வெளியே சென்றோம். நான் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தேன். இறுதியில் நாங்கள் விரும்பியது நிறைவேறியதை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் வாழ விரும்பிய இடத்தில் வாழ போகிறோம்” என்ற சிந்தனையே எங்களிடம் மேலோங்கி இருந்தாக ஹரிபிட் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வான்கூவரில் இருந்து சியேட்டலுக்கு ஹரிபிட்டும், அலாமியும் பேருந்தில் சென்றனர். அமெரிக்காவில் இன்னொரு முறை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர்கள், வாஷிங்டன் மாகாணத்தில் திருமணம் செய்தனர்.

“முதலில் திருமணம் செய்து கொண்டதை நாங்கள் கொண்டாடவில்லை. நாங்கள் கனவு கண்ட திருமணத்தை செய்துகொள்ள எண்ணினோம்” என்று ஹரிபிட் தெரிவித்தார்.

“என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சந்தோசமான நாள் அது” என்கிறார் ஹரிபிட்.

திரை காவியமான உண்மை கதை

இப்போது, சியேட்டலிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வீட்டு அலங்கார துறை மேலாளராக பணிபுரிகின்ற ஹரிபிட் இப்போது ஓர் அமெரிக்க குடிமகன். அலாமி அந்நாட்டின் பச்சை அட்டை (கீரீன் கார்டு) பெற்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்க குடிமகனான மாறவுள்ளார். அவர் கட்டட மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.

இந்த உண்மை கதை”அவுட் ஆப் இராக்” என்ற ஆவண திரைப்படமாக மாறி, கடந்த ஆண்டு தென் அமெரிக்க திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

“நாங்கள் ஒளிந்து, மறைந்து வாழ தேவையில்லை. தெருக்களில் நடந்து செல்கின்றபோது, நான் அலாமியின் கைகளை பற்றி கொண்டு நடந்து செல்ல முடியும்” என்று ஹரிபிட் குறிப்பிடுகிறார்.

இதனை ஒப்புகொண்ட அலாமி, “இப்போது அனைத்தும் எங்களுக்கு வேறுபட்டதாக இருக்கிறது” என்கிறார்.

“முன்பெல்லாம் நம்பிக்கை இழந்து காணப்பட்டோம். ஆனால் இப்போது ஒரு குடும்பமாக உணர்கிறோம். இது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை மனிதாபிமானத்தோடு நடத்தும் நகரம். நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன். சுதந்திரமாகவும் இருக்கிறேன்” என்று அலாமி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை..!!
Next post வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் உடல் பெறும் அற்புத நன்மைகள்..!!