By 11 February 2017 0 Comments

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்..!!

201702100926318519_Information-sweet-Information-sweet-sugarsugar_SECVPFகுழந்தைகளே… சர்க்கரைக் கிண்ணம் உங்கள் கைகளில் கிடைத்தால், வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொள்வீர்கள்தானே? அனைவருக்கும் ஆவலைத் தூண்டும் சர்க்கரைதான் அகிலம் முழுவதும் பண்டங்களுக்கு சுவையூட்டுகிறது. உணவுப் பொருட்களில் மட்டுமல்லாது வேடிக்கையாகவும் சில விஷயங்களுக்கு சர்க்கரையை பயன்படுத்தும் வழக்கம் உலகம் முழுக்க உள்ளது. அவற்றில் சுவையானதும், வித்தியாசமானதுமான சில சர்க்கரை பயன்பாடுகளை அறிந்து ரசிப்போம்…

உதட்டுச்சாயமாக சர்க்கரை :

பெண்களின் உதடுகளையும் சர்க்கரை அலங்கரிக்கிறது என்றால் நம்புவீர்களா? உதட்டுச்சாயங் கள் (லிப்ஸ்டிக்) பூசிய சில மணி நேரங்களிலேயே மங்கிவிடும். இதனால் அவர்கள் அடிக்கடி மீண்டும் உதட்டுச்சாயம் பூசுவார்கள். இந்த பிரச்சினைக்கு சர்க்கரையை தீர்வாக பயன்படுத்துகிறார்கள் சில புத்திசாலிப் பெண்கள். உதட்டுச்சாயம் பூசிய பின்பு அதன் மீது சர்க்கரையை தூவினால் நீண்ட நேரம் சாயம் நிற்கிறதாம். அப்போ உதடுகளை எறும்பு மொய்க்காதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இப்படி பயன்படுத்தினால் தூங்கும் முன்பு முகத்தை நன்கு கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…

சர்க்கரை சோப்பு…

சோப்பு போல உடல் முழுவதம் சர்க்கரையை தேய்த்துக் குளிக்கிறார்கள் சில அறிவு ஜீவிகள். சிறிது சர்க்கரை, உப்பு, எண்ணெய், சிறிதாக உடைத்த பாதாம் விதைகள், தேவைப்பட்டால் மஞ்சள் ஆகியவற்றை கலந்து கரகர கலவையாக தயாரித்துக் கொள்கிறார்கள். இதை குளிக்கும்போது சோப்பு- சீயக்காய் போல உடலில் பூசி தேய்த்துக் குளிக்கலாம் என்கிறார்கள் அவர்கள். சர்க்கரைக் கலவை அழுக்குகளை நன்றாக அகற்றக்கூடியது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் நன்கு குளிக்காமல் வந்துவிட்டால் கண்ட இடங்களில் எல்லாம் எறும்பு ஊர்வதை தவிர்க்க முடியாதே…!

பூக்களின் புத்துணர்ச்சிக்கு…

அழகிய பூக்கள் சில மணி நேரங்களிலேயே வாடிப் போகும். அதற்காகவே வீடுகளில் செயற்கைப்பூக்களை வாங்கி அழகுபடுத்துகிறார்கள். பூக்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஒரு ‘கப்’ தண்ணீரில் 2 கரண்டி வினிகர், 3 கரண்டி சர்க்கரை கலந்து புதிதாக பறித்த மலர்களை அதில் போட்டு வைத்தால் வாடாத இயற்கை பூ ஜாடி ரெடி. வினிகர் பூக்களை கிருமிகளின் தாக்குதலில் இருந்து தடுக்கும், சர்க்கரை அதன் தண்டுகளுக்கு உணவாக பயன்படும். இதனால் பூக்கள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கிறார்கள் ஐடியா மன்னர்கள்.

சர்க்கரை பூச்சிக்கொல்லி :

சர்க்கரை கொட்டிக் கிடந்தால் எறும்புகளும், ஈக்களும் மொய்ப்பதைத்தான் பார்த்திருப்போம். பூச்சிக்கொல்லியாக சர்க்கரையைப் பயன்படுத்த முடியும் என்று அசத்தல் ‘ஐடியா’ (யோசனை) தருகிறார்கள் சிலர். வீட்டுத் தோட்டத்தில் 50 அடிக்கு அரை கிலோ சர்க்கரையைத் தூவினால் அது நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு உணவாக அமையும். அவை, தீமை செய்யும் பூச்சிகள், ஒட்டுண்ணிகளை தோட்டங்களில் பெருகாமல் தடுத்துவிடும்.

உடனடி பூச்சிப்பொறி :

சாதாரணமாக பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் உத்திதான் சர்க்கரை பூச்சிப்பொறி. ஈக்கள், பூச்சிகள், தேனீக்கள் போன்றவை வீட்டை மொய்க்கும்போது அவற்றை விரட்ட சர்க்கரையைப் பயன்படுத்துவது வாடிக்கை. தண்ணீரில் சர்க்கரையை கொதிக்க வைத்து கரையச்செய்து வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துவிட்டால் பூச்சிப்பொறி ரெடி. இனிப்பால் ஈர்க்கப்படும் ஈக்கள், பூச்சிகள் அதில் விழுந்து இறந்துபோகும்.

கரப்பான்பூச்சிகளை விரட்டவும் இதே யுத்தியைப் பயன்படுத்தலாம். கரப்பான்பூச்சிகள் உலவும் சமையலறை மற்றும் ‘சிங்க்’ பகுதியில் சரிபாதியளவு சர்க்கரையும், பேக்கிங் பவுடரும் கலந்து தூவுங்கள். சர்க்கரையை சாப்பிட வரும் கரப்பான்பூச்சிகளை அதில் கலந்திருக்கும் பேக்கிங்பவுடர் அழித்துவிடும். கரப்பான்பூச்சி மட்டுமல்லாது வேறுபல தீமை செய்யும் பூச்சிகளும் இதனால் கட்டுப்படுத்தப்படும்.

சுத்தமாக்கியாக சர்க்கரை…

மிக்சி, கிரைண்டர் போன்றவற்றில் தேங்காய், மிளகாய் என உணவுக்குத் தேவையான பல பொருட்களை அரைப்போம். அதன்பிறகு மிக்சி-கிரைண்டரை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். கறைகள், உணவுத் துணுக்குகள் எளிதில் அகலுவதில்லை அப்போது சிறிது சர்க்கரையை உள்ளே போட்டு வழக்கம்போல கழுவினால் எளிதில் கறைகள் அகலுகின்றன.

பேக்கரி பொருட்களின் பாதுகாப்புக்கு…

உங்களுக்கு கப் கேக்குகளும், பிஸ்கட் பண்டமும் ரொம்ப பிடிக்கும்தானே. வீட்டில் வாங்கி வைக்கும் கேக்குகள் எளிதில் கெட்டுப்போகிறதா? அதை தடுக்கவும் சர்க்கரையை பயன்படுத்தலாம். காற்றுப்புகாத டப்பாக்களில் கேக், கொறிக்கும் பண்டங்களைப் போட்டு அதனுடன் ஓரிரு சர்க்கரை கட்டிகளையும் போட்டு வையுங்கள். இதனால் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் கேக்குகள் கூட சுமார் 3 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். புதிய கேக் போன்ற அதே சுவையில் ருசிக்கலாம். சீஸ்களை பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பயன்படுத்தவும் அதனுடன் சில சர்க்கரைத் துண்டு களைப் போட்டு வைக்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam