‘சுச்சி லீக்ஸ்’ சொல்லிச் சென்றவை என்ன?..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 7 Second

article_1489648790-new1சமூக ஊடக வலையமைப்புகளில், தமிழர்களை உங்கள் நட்பு வட்டாரங்களில் கொண்டிருந்தீர்கள் என்றால் அல்லது கிசு கிசு செய்திகளை வழங்கும் இணையத்தளங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால், “சுச்சி லீக்ஸ்” என்ற சொற்றொடர், பழக்கமானதான ஒன்றாக இருக்கும். அதை அறியாதவர்களுக்காக ஓர் அறிமுகம்: தென்னிந்தியாவைச் சேர்ந்த பாடகியும் அறிவிப்பாளரும் நடிகையுமான சுச்சித்ரா கார்த்திக்கின் டுவிட்டர் கணக்கில், தமிழகத்தைச் சேர்ந்த நடிக, நடிகையர் சிலரின், அந்தரங்கப் புகைப்படங்கள், காணொளிகள் வெளியாகியிருந்தன. விக்கி லீக்ஸ் என்ற பெயரை ஒத்ததாக, அவை “சுச்சி லீக்‌ஸ்” என்று அழைக்கப்பட்டன.

இந்த சுச்சி லீக்ஸ், தமிழக சினிமா பிரபலங்களை ஆட்டிவைத்திருந்தது. அதைவிட, சினிமா இரசிகர்களில் கணிசமானோரை, சுவாரசியப்படுத்தியிருந்தது. என்றாலும், அதன் விளைவுகள் பற்றியும் அதற்கான எதிர்வினைகள் பற்றியும், போதுமானளவு பேசப்படவில்லை என்பது தான் உண்மையானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகரொருவரும் அவருக்கு நெருக்கமான பிரபல இசையமைப்பாளரொருவரும், தன்னைத் தாக்கினர் எனத் தெரிவித்தே, சுசித்ராவின் டுவிட்டர் கணக்கிலிருந்து, இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், வெளியிடப்பட்டு சில நிமிடங்களில், அப்புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிடும் எனவும் “என்னுடைய கணக்கு, ஹக் செய்யப்பட்டு விட்டது” என்று பதியப்படும் என்று, அந்த டுவீட்களைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். எனவே, சுசித்ராவே அந்தப் புகைப்படங்களை வெளியிட்டாரா அல்லது அவர் சொல்வது போல, அவரது டுவிட்டர் கணக்கு, உண்மையாகவே ஹக் செய்யப்பட்டதா என்பது, இதுவரை உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே அமைந்துள்ளது. ஆனால், சுசித்ராவின் கணவனின் கருத்துப்படி, மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மன அழுத்தத்துக்கான சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிவித்ததோடு, அவர் தான் இப்புகைப்படங்களை வெளியிடக்கூடும் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியிருந்தார். இவை தான், இதன் பின்புலத் தகவல்களாக உள்ளன.

அதில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் உண்மையானவை என்ற ஆய்வு, தேவையற்றது. அதன் உண்மைத்தன்மையை அறிந்து, எதையும் நிரூபிக்கப் போவதில்லை. மாறாக, வேறு சில விடயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, இந்த வெளியீடுகளுக்குக் கிடைத்த வரவேற்றை, சற்றுக் கவனத்துடன் நோக்க வேண்டியிருக்கிறது. சுசித்ராவின் கணக்கிலிருந்து புகைப்படங்கள் வெளியாகின்றன என்று தகவல்கள் கசிந்தவுடன், அந்தக் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக அதிகரித்தது. அவரது கணக்கில் புகைப்படமோ அல்லது காணொளியோ வெளியாகி, உடனேயே நீக்கப்படுகிறது என்பதால்,

“கண்ணில் எண்ணெய் ஊற்றி”, ஒரு சிலர் விழிப்பாக இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக் கணக்கில் வெளியாகும் புகைப்படங்கள் அல்லது காணொளிகள், தாங்களாக விரும்பி, சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ தான் அமைந்தன. ஆகவே, அந்தப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதில், எந்தவிதக் குற்றமும் இருக்கவில்லை. அப்படியான புகைப்படங்களை, பொதுவெளியில் பகிர்வதற்கு இவ்வளவு ஆர்வம் இருக்கின்றமை, வருந்தத்தக்கதாக இருந்தது.

நடிக, நடிகையராக இருந்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்ற போதிலும், அவர்களது தனியுரிமையைப் பற்றிச் சிந்திப்பதற்கு, அநேகமானோர் தயாராக இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. அதேபோன்று இவ்வெளியீடுகள், மாபெரும் இடையூறாகவும் அமைந்திருந்தன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நெடுவாசலில் அமைக்கக்கூடாது என்று, பெருமளவில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தப் போராட்டங்கள் பற்றிய பேச்சு, திடீரென வந்த “சுச்சி லீக்ஸ்” மூலமாகத் திசைதிருப்பப்பட்டன.

இதைத் திசைதிருப்புவதற்காகத் தான், இப்புகைப்படங்களை அவர் வெளியிட்டார் என்ற சதிக்கோட்பாட்டை முன்வைக்காவிட்டாலும், ஜெயலலிதாவின் மரணம், சல்லிக்கட்டு, தமிழக அதிகாரப் போட்டி, ஹைட்ரோ கார்பன், இவ்வெளியீடுகள் என, ஒவ்வொரு பிரச்சினையின் பின்னர் எழுகின்ற மற்றைய பிரச்சினைகள் காரணமாக, முன்னைய பிரச்சினைகள் மறக்கப்பட்டிருக்கின்றன என்பது தான், வருந்த வேண்டிய யதார்த்தமாக இருக்கிறது. அதேபோல், புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகின்றன என்ற தகவல்கள் வெளியாகியவுடன், பேஸ்புக்கிலும் ஏனைய சமூக ஊடக வலையமைப்புகளிலும், அது தொடர்பான தகவல்கள் பரவியிருந்தன. அதில், அந்த வெளியீடுகளைப் பார்த்ததாகவும் இன்னும் நிறைய எதிர்பார்ப்பதாகவும் கூறப்படும் பதிவுகளை, பலர் பகிர்ந்திருந்தனர். இது, அடுத்தகட்டத்தில் இருந்தது.

தனியாரின் அந்தரங்கப் புகைப்படங்களை, அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவதை எதிர்பார்ப்புடன் காணப்படுவது ஒன்று என்றால், “அவற்றை நான் பார்த்தேன், இன்னும் எதிர்பார்க்கிறேன்” என்று சொல்வது, அடுத்த கட்டமே. அந்தப் புகைப்படங்களை யார் வெளியிட்டிருந்தாலும், அப்புகைப்படங்களை வெளியிட்டமை, சட்டத்துக்குப் புறம்பானதே, அத்தோடு, விழுமியங்களுக்கு முற்றிலும் புறம்பானது. அப்படியிருக்க, அந்தப் புகைப்படங்களை அல்லது காணொளிகளைப் பார்த்ததை ஒத்துக் கொண்டதோடு, மேலும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிப்பது, தனியாரின் உரிமைகளை, இச்சமூகம், எவ்வளவு தூரத்துக்கு மதிக்கத் தயாராக இருக்கிறது என்பதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

அவர்கள் என்னதான் நடிக, நடிகையராக இருந்தாலும், அவர்கள் என்னதான், பொதுவெளியில் பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான தனியுரிமையை மதிக்க வேண்டியது கடமையாகும். அவர்களது தனியுரிமை ஒருபக்கமிருக்க, பொறுப்புமிக்க பிரஜைகளாக, இவ்வாறான வெளியீடுகளை எதிர்க்க வேண்டிய கடப்பாடு, எம்மனைவருக்கும் உண்டு. இன்று, நடிக, நடிகையரின் புகைப்படங்கள் வெளியாகலாம். ஆனால் நாளை, எமது தனிப்பட்ட இரகசியங்கள் வெளியாகக்கூடும். எம்மனைவரிடமும், மற்றையவர் பார்க்க விரும்பாத இரகசியங்கள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை, ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது.

அடுத்ததாக, மன அழுத்தத்தின் காரணமாகத் தான், அப்புகைப்படங்களை, காணொளிகளை, சுசித்ரா வெளியிட்டார் என்ற செய்தி உண்மையானால், அந்த விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் (அது இலங்கையாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி), மன அழுத்தம் என்பதை, முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் கூட, அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது, அரிதிலும் அரிது. மன அழுத்தத்துக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டால், “அவருக்கு ‘மென்டல்’, ‘லூஸ்’, ‘பைத்தியம்’” என்று அழைக்கும் நிலைமை, இன்னமும் காணப்படுகிறது என்பது தான் யதார்த்தமானது. இந்த நிலை, மாற்றப்பட வேண்டும்.

மன அழுத்தம் அல்லது மனம் சார்ந்த ஏனைய நோய்கள், அனைவருக்கும் ஏற்படக்கூடியது என்பதையும் அவற்றுக்குச் சிகிச்சை பெற்றுக் கொள்வது என்பது, எந்த விதத்திலும் தவறாகிப் போய்விடாது என்பதையும், எங்களது சமூகங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, அனைவரிடமும் காணப்படுகிறது. அடுத்த மிக முக்கியமான விடயமாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் எமது சமூகத்தில் காணப்படும் இரட்டை நியமங்களை, இந்த வௌியீடுகள் வெளிக்காட்டின. அந்த வெளியீடுகளில் பிரபலமான ஆண்களும் பெண்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதில் ஆண்கள் பற்றிய கருத்து “அவன் கெட்டிக்காரன். கமுக்கமா எல்லாத்தையும் முடிச்சிட்டான்” என்பதாக இருக்க, பெண்கள் பற்றிய கருத்துகள், அவர்களது நடத்தைகளைக் கேள்விக்குட்படுத்துவனவாக இருந்தன. இது, காலங்காலமாக, எமது சமூகத்தில் காணப்படும் நிலையாகும். பாலியல் விடயங்களில், பழைமைவாதத்தைக் கடைப்பிடிக்கும் எமது சமூகம், ஆண்களுக்கு மட்டும், அவ்வப்போது அதிலிருந்து விலக்களித்துவிடுகிறது. பெண்களின் சுதந்திரமான பாலியல் தெரிவுகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு, இங்கு காணப்படவில்லை. அதையும், இந்த வெளியீடுகள் காட்டிச் சென்றன.

இந்த வெளியீடுகள், சர்வதேச பெண்கள் தினத்துக்குச் சில நாட்கள் முன்னரேயே வெளியாகியிருந்தன. இல்லாவிடில், “பெண்கள் நாட்டின் கண்கள்” என்று கூறிக் கொண்டே, இந்த இரட்டை நியமத்தைப் பெண்கள் மீது திணிப்பதைக் கண்டிருக்க முடியும். ஆணாதிக்கமுள்ள சமூகத்திலேயே, பெண்களின் பாலியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தமிழ்ச் சமூகமும், அவ்வாறான சமூகம் என்ற அடிப்படையில், அதன் போக்குக் காணப்படுகிறது. எனவே, இதுபற்றிய கலந்துரையாடல்களை ஆரம்பித்து, முன்னேற்றங்களைக் காண்பது பற்றி ஆராய வேண்டும். உடனடியாகவே முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் கூட, “சங்கடமான கலந்துரையாடல்களே, மாற்றங்களைக் கொண்டுவரும்” என்பதை மனதில் நிறுத்திச் செயற்பட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்மார்ட் வாட்ச் மூலம் காப்பியடித்தது கண்டு பிடிப்பு: பிளஸ்-1 மாணவர் தற்கொலை..!!
Next post மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை..!! (வீடியோ)