முஸ்லிம் அரசியலில் உலமாக்கள், சிவில் சமூகத்தினரின் பொறுப்பு..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 22 Second

51மனிதன் இயல்பாகவே ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க தத்துவமேதை அரிஸ்டோடில் சொன்னார்.

அரசியல் என்பது அந்தளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துப் போயிருக்கின்றது. அரசியலில் மக்களுக்கு விருப்பமிருந்தாலும் விருப்பமில்லாவிட்டாலும் அவர்களது வாழ்வியல் போக்குகளில் அரசியல் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது.

ஏனெனில், அரசியல்தான் ஒரு பொறிமுறையின் ஊடாக அரசாங்கத்தையும் அதன் ஆட்சியாளர்களையும் தீர்மானிக்கின்றது.
1980 களின் பின்அரைப் பகுதியில், தனித்துவ அரசியலாக உருவெடுத்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல், இப்போது தனது தனித்துவ அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்றது.

எல்லா அரசியல்வாதிகளுக்கும் தலைமைத்துவ மோகமும் பதவியும் பட்டமும் பணமும் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற தெரிவுகளாக இருக்கின்றது.

இதனால், முன்பிருந்த ‘சோனக’ அரசியலால் செய்த சில காரியங்களைக் கூட, சிலவேளைகளில் இப்போதிருக்கின்ற பெயரளவிலான தனித்துவ அரசியலால் செய்ய முடியாது போயிருக்கின்றது.

முஸ்லிம் பிரதேசங்களில், வெளித்தோற்றத்தின் அடிப்படையிலான, அன்றேல் பௌதீக அடிப்படையிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்து செய்ததை, அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர், ஆளும் தரப்பில் கூடாரமடித்துக் குடியிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் செய்ய முடியாது போயிருக்கின்றது. பதவிகளால் நக்குண்டதால் நாவிழக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதைச் சர்வதேச சமூகத்துக்கு முன்னிலைப்படுத்தவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் வழங்கப்படுகின்றபோது, முஸ்லிம்கள் அதிலிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன தேவை என்பதை இதுவரைக்கும் ஒழுங்குமுறைப்படி கோரவில்லை.

சரி அதைவிடுங்கள், தம்புள்ளை தொடக்கம் கிராண்ட்பாஸ் வரை, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் இடஅமைவு பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவதற்கான புயல், சுழிகொண்ட இடமாகத் தம்புள்ளை பள்ளிவாசல் குறிப்பிடப்பட்ட போதிலும், முஸ்லிம், தமிழ் மக்கள் மனங்களில் இனவாதம் பற்றிய பயமும் மஹிந்த ஆட்சி மீதான வெறுப்பும் உருவாகுவதற்குக் காரணமான சம்பவமாக பேருவளை, அழுத்கமை கலவரத்தையே சொல்ல முடியும்.

இதனைப் பேசுபொருளாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் மிகையில்லை. அதுமட்டுமன்றி, தம்புள்ளையையும் அளுத்கமையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய முதலீடாக பயன்படுத்தியது.

மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதையே செய்தனர். இதன் பயனாக நல்லாட்சி வந்தது.

இப்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் அளுத்கமையில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.

எத்தனையோ பழைய ‘பைல்’களை எல்லாம் தூசுதட்டி எடுத்து, விசாரணை செய்கின்ற ஒரு முன்மாதிரிப் போக்கை வெளிப்படுத்தும் இன்றைய அரசாங்கம், உலகமே அதிர்வுக்குள்ளான அளுத்கமை கலவரம் குறித்த நீதி விசாரணையை மேற்கொள்ளவில்லை.

அதனுடன் சம்பந்தப்பட்ட இனவாத சக்திகள், சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. ஆக, முஸ்லிம்கள் எதனால் மனமுடைந்து, இந்த ஆட்சியைக் கொண்டுவர வாக்களித்தார்களோ, அந்தப் பிரதான எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

அதுமட்டுமல்ல, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறவில்லை. இதேவேளை, இவை எல்லாவற்றையும் விஞ்சும் விதத்தில் மன்னார், முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வரையறை செய்து, வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

ஏற்கெனவே, வரையறுக்கப்பட்டிருந்த வில்பத்து எல்லைகளுக்குள்ளே முஸ்லிம்கள் காடழிப்புச் செய்து குடியேறிவிட்டதாக இனவாதிகளால் பெருங்கதைகள் உலவ விடப்பட்டு, சர்ச்சைகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, அதற்கு இன்னுமொருபடி மேலேசென்று, மேலும் நிலப்பரப்புகளை உள்ளடக்கும் வகையில், புதிய வர்த்தமானி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது எல்லோரும் அறிக்கை விடுகின்றனர். ஆரம்பத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் சொந்தப் பிரச்சினைபோல, இதைப் பார்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்போது இதில் இருக்கின்ற பாரதூரத்தை அறிந்துகொண்டு குதிக்கின்றனர்.

ஆனால், அரசாங்கப் பக்கத்தில் இருந்து எந்தப் பிரதிபலிப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய ஆட்சி உருவாக வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் என்று எடுத்துக் கொண்டாலும் புலிகளால், இராணுவத்தால், இந்திய அமைதிகாக்கும் படையினரால், சிங்கள இனவாதிகளால், முன்னைய ஆட்சியாளர்களால் முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு பாரபட்சத்துக்கு எதிராகவும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடியவில்லை.

20 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள், மூன்று தேசியத் தலைமைகள், பல அமைச்சர்கள், பிரதியமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் யாராலும், இந்த நிமிடம் வரைக்கும் தனித்துவ அடையாள அரசியலை முன்னிறுத்தியோ அல்லது வேறு ஜனநாயக ரீதியான அழுத்தங்களின் ஊடாகவோ இதனைச் செய்வதற்கு முடியாமல் போயிருக்கின்றது என்பதே நிதர்சனம்.

இதற்குப் பிரதான காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை இல்லாமை ஆகும். பெரிய முஸ்லிம் கட்சி முதற்கொண்டு சிறிய பிரதேச சபை உறுப்பினர் வரை, எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகள் வரை அனைவரும் போட்டாபோட்டி வியாபாரத்தையே செய்து கொண்டிருக்கின்றனர்.

கட்சிகளுக்கு உள்ளேயும் இந்நிலைமை மேலோங்கியிருக்கின்றது. அவர் ஒன்றைச் செய்தால், அதற்கெதிராக எதையாவது இவர் செய்வது. இவர் ஒன்றைச் செய்தால், அதை அவர் தடுப்பது என்று அற்பத்தனமான அரசியல் கலாசாரம் ஒன்று வளர்ந்திருக்கின்றது.

இதனை அரசாங்கமும் பேரின கட்சிகளும் நன்றாக அறியும். யார் யாருக்கு இடையே பகைமையை வளர்க்கலாம் என்பதை முதலாளித்துவ சிந்தனாவாதிகள் அறியாதவர்கள் அல்லர்.

அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ‘எதற்கு’ ஆசைப்படுகின்றார்கள், எதற்குப் பின்னால் பித்துப் பிடித்து அலைகின்றார்கள், எதைக் கொடுத்தால் காலடியில் கிடப்பார்கள் என்பதை அரசாங்கம் விலாவாரியாக அறிந்து வைத்திருக்கின்றது.

அவை ஒன்றுமில்லை என்றால், எந்த ‘பைலை’க் காட்டி, குறித்த அரசியல்வாதியை அச்சம்காட்டலாம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

முஸ்லிம்களுக்கு விடிவு வேண்டுமென்றால் இந்தநிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படியென்றால் இரண்டு அடிப்படை மாறுதல்களை உண்டுபண்ண வேண்டும். ஒன்று – முஸ்லிம் அரசியல் கலாசார விழுமியங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இரண்டாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை முஸ்லிம் பொதுமக்களிடையே இப்போது கடுமையாக ஏற்பட்டிருக்கின்றது.

தனித்தனியே ஆளுக்கொரு வழியில் சென்று, முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை அவர்கள் இப்போது உணர்கின்றார்கள். ஒன்றுபடுவதன் மூலம் கிடைக்கும் பலம், இலங்கை முஸ்லிம்களின் அரசியலிலும் வாழ்க்கையிலும் எவ்வாறான சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்த வகையில், மேற்குறிப்பிட்ட இரு பணிகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு உலமாக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் மீது தார்மீகமாகச் சுமத்தப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம்களின் அரசியல் என்பது, இஸ்லாமிய அரசியலாக இருப்பது சாத்தியமற்றது. இது இஸ்லாமிய நாடும் அல்ல. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போன்ற அதியுன்னத அரசியல்வாதிகளும் முஸ்லிம் செயற்பாட்டு அரசியலில் இல்லை.

தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்ட மனிதன் என்ற அடிப்படையில், சாதாரண மனிதனுக்குரிய விருப்பு வெறுப்புகள், பண்புகள் கொண்ட அரசியல்வாதிகளே நம்மிடையே இருக்கின்றனர்.

எனவே, இது நூறுவீதம் இஸ்லாமிய அரசியலாக இல்லை என்றாலும் ஒழுக்க விழுமியங்கள் உள்ள, நாகரிகமான, ஒப்பீட்டளவில் தூய்மையான அரசியலாக இருக்க வேண்டும்.

ஏனைய சமூகங்களின் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியினைப் போலவோ சுதந்திரக் கட்சியைப் போலவோ முஸ்லிம் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் செயற்பட முடியாது. இந்த விடயத்தில் உலமாக்களுக்கு பொறுப்பிருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களின் தற்கால அரசியலில், இஸ்லாமிய விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பல செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சிற்சில பெரிய அரசியல்வாதிகள் முதல் சிறிய அரசியல்வாதிகள் வரை, சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய அளவில் பகிரங்கமாகவே பேசப்படுகின்றது.

முஸ்லிம் அரசியலில் அங்கம் வகிப்போரில் சிலர் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளில் மாத்திரமன்றி, மானக்கேடான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக இப்போதெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. இது தொடர்பில், உண்மையைக் கண்டறியும் ஆய்வு ஒன்றை உலமாக்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதில் உண்மை இருந்தால், அதற்கான பரிகாரம் என்னவென்று சொல்ல வேண்டும். இவ்வாறான குற்றச்சாட்டுகள் பொய்யெனக் கண்டால், அதனை முன்வைத்த நயவஞ்சகர்களை, இந்தச் சமூகத்தின் முன்னால் நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்கவும் பின்னிற்கக் கூடாது.

ஏனெனில், ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதுபோல, நாம் பெரிதும் அரசியலைச் சார்ந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் நமது அன்றாட வாழ்வில் கடும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

இந்நிலையில் எந்த அரசியல்வாதியாவது நெறிபிறழ்வாக நடக்கின்ற போது, பிற சமூகத்தவர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மீதான மதிப்பைக் குறைத்துக் கொள்ள எத்தனிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை, அரசியல்வாதி என்பவர் ஒருவகையில் தனிப்பட்டவர் என்பதையும் இங்கு மறந்து விடக்கூடாது. அவரது இரகசியங்களைப் பற்றி ஆராய வேண்டிய தேவை பிறருக்கு இல்லை.

ஆயினும், பொதுவான முஸ்லிம் அரசியலும் அரசியல்வாதிகளும் நாகரிகம், ஒழுக்கம் உள்ளவர்களாக, கொஞ்சமாவது இஸ்லாமிய உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியின் நடத்தை குறித்தும், உலமாக்கள் நேர்மையான முறையில் ஆய்வு செய்து, அவர்களைத் திருத்துவதற்கு முன்னிற்க வேண்டும். சிவில் சமூகம் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

அதேவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒன்றுபடுத்தும் விடயத்தில் முஸ்லிம்களிடையே காணப்படும் சிவில் அமைப்புகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் முக்கிய பங்கினை வகிக்க வேண்டியுள்ளது. இதில், உலமாக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

நாம், ஏற்கெனவே பல தடவை இப்பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளில் குறிப்பிட்டவாறு, ஒன்றுதிரண்ட பலம் என்பது அபார சக்தி வாய்ந்தது. இதற்கு கண்முன்னே இருக்கும் அத்தாட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சொல்லலாம்.

தமிழ்க் கூட்டமைப்பு என்ன பெரிதாக சாதித்திருக்கின்றது என்று கேட்பவர்களும் இருக்கின்றார்கள்தான். ஆனால், சிந்தித்துப் பாருங்கள், ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த இயக்கங்களும் தமிழரசுக் கட்சியும் சேர்ந்து இவ்வாறான ஒரு கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்றால் தமிழர்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்?

ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் இயக்கமும் தமக்கிடையே அடித்துக் கொண்டு, சீரழிந்து போயிருப்பார்கள். அதுதான் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் நடந்து கொண்டிருக்கின்றது. எதிர்ப்பு அரசியல் என்பது, ஒரு தீராத வேட்கையாக உருவாகியிருக்கின்றது. எந்தநேரத்திலும் இது வெறியாகிவிடும் அபாயமும் இருக்கின்றது.

முன்னொரு காலத்தில், ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்டிருந்த சில தமிழ் அரசியல்வாதிகளே இன்று ஒன்றுபட்டு தமது மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள நிலையில், அநேகமாக அஷ்ரப் என்ற ஆசானிடம் அரிச்சுவடி கற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், இன்று பல கூறுகளாகப் பிளவுபட்டிருப்பது மிக மோசமான நிலைமையாகும். இதற்குக் காரணம் நாம் மேலே குறிப்பிட்டவாறு பதவியும் பட்டமும் பணமும்தான்.

எனவே, இந்நிலைமையையும் மாற்ற வேண்டியிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸில் இருந்தும் ஏனைய கட்சிகளில் இருந்தும் முரண்பட்டுள்ள அணியினர் எல்லோரும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக உருவாக வேண்டும்.

இதில் விரும்பியவர்கள் இணைவார்கள். இணையாதவர்கள் அதன் விளைவை அனுபவிப்பார்கள். முதலில் வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் தரப்பினர் இதனை உருவாக்கிக் கொண்டு, வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவையும் ஆலோசனையையும் பெறமுடியும்.

முஸ்லிம் கூட்டமைப்பு என்பது யாருடைய தனிப்பட்ட நலனுக்கான உத்தியாகவும் இருக்க முடியாது. அங்கு தலைவர் என்று ஒரு தனிநபர் தொடர்ந்து இருக்காமல் தலைமைத்துவ சபையோ அல்லது சுழற்சி முறைத் தலைமைத்துவமோ உருவாக்கப்படுவதே சாலச் சிறந்தது.

இந்தக் கூட்டமைப்பு என்பது தனியொரு அரசியல்வாதிக்கு எதிரானதாகவோ, தேர்தல்க் கூட்டாகவோ அமையக் கூடாது என்பது அடிப்படை நிபந்தனையாகும்.

மாறாக மக்களுக்கான ஒரு ஒன்றுபடுதலாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு கூட்டமைப்பு உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதற்கான அழுத்தத்தை சிவில் அமைப்புகள் கொடுக்க வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றிணையுங்கள் என்ற கோரிக்கையை சிவில் சமூகமும் உலமாக்களும் பகிரங்கமாக முன்வைத்தால், மக்களின் வாழ்வு வளம்பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 3 பேர் பலி..!! (வீடியோ)
Next post முன்னணி நடிகருடன் 65 வயது மூதாட்டியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!