தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் போட்டி..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 5 Second

article_1491803766-article_1480303869-kasinathஅனல் பறக்கும் பிரசாரம் ஆர்.கே. நகர் தொகுதியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“நேர்மையான தேர்தலை” நடத்துவதற்கான நடவடிக்கை என்பதையும் மிஞ்சி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இல்லாத கெடுபிடிகளைச் செய்து வருவது அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம், தேர்தல் அதிகாரி மாற்றம், சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் மாற்றம் எனத் தொடர்ந்து, இறுதியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் நாற்காலியிலும் வேறு ஒரு “சிறப்பு தேர்தல் பார்வையாளர்” அமர்த்தப்பட்டு, வரலாறு காணாத நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

வாக்காளர்களுக்குப் பணம் வழங்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்திருந்தாலும், இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் எத்தனையோ முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியும் ஆர்.கே.நகர் போன்ற அதிரடிகளைச் செய்யவில்லை தேர்தல் ஆணையம் என்ற மனக்குறை அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து இப்படியொரு முணுமுணுப்பு இருக்க, ஆர்.கே. நகர் தேர்தலில் அரசியல் கட்சிகள் கடுமையான பிரசாரத்தில் இறங்கி விட்டன.

தி.மு.கவை எடுத்துக் கொண்டால் முதலில் பிரசாரக் கூட்டம், பிறகு “நமக்கு நாமே” பாணியில் வியாபாரிகள், மாணவர்கள், மீனவர்கள், மகளிர் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.

ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை முச்சக்கரவண்டிப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்.

அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணி, மதுசூதனனுக்காக “ஜெயலலிதாவின் மரணம், அந்த மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு, சசிகலா குடும்பத்திடமிருந்து அ.தி.மு.கவைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து வாக்காளர் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றது.

அ.தி.மு.க அம்மா அணியைப் பொறுத்தமட்டில் (டி.டி.வி தினகரன் அணி) “இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியவர் ஓ. பன்னீர்செல்வம். தி.மு.கவும் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்து சதி செய்கிறார்கள்” என்று பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.

பிரசாரங்கள் எந்த அடிப்படையில் இருந்தாலும், ஆர்.கே.நகர்த் தொகுதி மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி. இரு முறை வெற்றி பெற்ற தொகுதி. 2015 இல் அவர் அங்கே வெற்றி பெற்றபோது, தி.மு.கவே வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆகவே, அந்தத் தொகுதியில் உள்ள மக்கள், கட்சி சார்பின்றி செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்கள்.

இந்நிலையில் ஆர்.கே நகர் வாக்காளர் மனதில் இருக்கும் ஒரே எண்ணம் “ஜெயலலிதா மரணத்துக்கு என்ன காரணம்? அவருக்கு சிகிச்சை அளித்ததில் யார் தவறு செய்தார்கள்” என்ற கேள்விகள்தான். இந்தக் கேள்விக்குப் பதிலாக அவர்கள் இன்றைக்குப் பார்ப்பது சசிகலா அணியைத்தான்.

ஆகவே, சசிகலா அணியின் சார்பில் நிற்கும் தொப்பி சின்ன வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று ஆர்.கே. நகர் மக்கள் நினைக்கிறார்கள். தினகரனுக்கு வாக்களிக்க கூடாது என்றால் யாருக்கு வாக்களிப்பது? அந்த இடத்தில்தான் ஓ. பன்னீர்செல்வம் வந்து நிற்கிறார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்றபொழுதோ அல்லது அவர் மரணம் அடைந்த பிறகோ, அது குறித்து சர்ச்சை எழுப்பாத ஓ. பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு அதையே பிரசாரமாக மேற்கொண்டார்.

“அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை கமிஷன்” என்று முன் வைத்தார். அதனால் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள், குறிப்பாக ஜெயலலிதாவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை ஓ. பன்னீர்செல்வம் நிறுத்தியிருக்கும் மதுசூதனனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணவோட்டம்
தி.மு.கவுக்கு சிக்கலாக இருக்கிறது.

தேர்தல் போட்டிகள் முதல் முறையாக அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் என்று இல்லாமல், அ.தி.மு.கவுக்குள் உள்ள ஓர் அணிக்கும், தி.மு.கவுக்கும் என்று மாறியுள்ளது. 1989 இல் அ.தி.மு.க பிளவுபட்டபோது, ஜெயலலிதா அணி அதிக வாக்குகள் வாங்கியது போல், இப்போது அ.தி.மு.க வாக்கு வங்கிக்குள் ஓ.பன்னீர்செல்வம் அணி அதிக வாக்குகளை வாங்கும் சூழல் இருக்கிறது.

அன்றைக்கு ஜெயலலிதா அணிக்கு பொதுமக்கள் வாக்கு பெரிதாக கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு பொதுமக்கள் வாக்கு அதிகம் கிடைக்கும் போல் கள நிலவரம் இருக்கிறது. குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள். அதிலும் பெண்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றே அனுதாபப்படுகிறார்கள்.

ஆகவே, இன்றைக்கு ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் மக்கள் மனதில் நிற்பது அ.தி.மு.க அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமோ, தமிழகத்தில் நிலவும் ஊழல் புகார்களோ அல்ல. ஜெயலலிதாவின் மரணம் மட்டுமே! அந்த மரணம் இப்போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுதாபமாக மாறியிருக்கிறது.

அதனால், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கூட, வெற்றி பெறக்கூடும் என்பதே இப்போதைய நிலவரமாக இருக்கிறது. இந்த வெற்றியை உறுதி செய்யும் விதமாக ஜெயலலிதாவின் சவப்பெட்டியை ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களின் உணர்வுகளைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமல்ல, ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு “நெகட்டீவ் இமேஜை” திடீரென்று ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சவப்பெட்டி பிரசாரம் ஓ. பன்னீர்செல்வம் ஏறிய ஏணியைப் பறித்து விடுமோ என்ற அச்சம் அக்கட்சியில் உள்ளவர்களுக்கே ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கள நிலவரத்தை அறிந்துள்ள அ.தி.மு.க அம்மா அணி பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நடிகர் சரத்குமார் போன்றோரை பிரசாரத்துக்கு அழைத்திருக்கிறது. வாக்குக்கு நான்காயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

“ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்துப் பிரசாரம் செய்வது ஜெயலலிதாவை அவமதிக்கும் செயல்” என்று டிடிவி தினகரன் அறிக்கை விட்டு, சவப்பெட்டி ஊர்வலம் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அணியினர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் முன்பு மறியலே செய்திருக்கிறார்கள்.

இதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பிரசாரம் அதி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. சவப்பெட்டி ஊர்வலத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஸ்டாலின், “தன் சுய நலத்துக்காக ஓ. பன்னீர்செல்வம் எந்த எல்லைக்கும் போவார்” என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.

இது தவிர தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷ் தொகுதியில் உள்ள கட்சிக்காரர் என்றாலும், மக்களிடத்தில் அவருக்கு பெரிய அறிமுகம் இல்லாதது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனால் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினே முச்சக்கரவண்டிப் பிரசாரம் செய்து வாக்குக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. களத்தில் போட்டி தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தான் இருக்கிறது என்ற உண்மை நிலவரம் தி.மு.க தலைமைக்கு தெரிந்ததால்தான் இப்படியொரு பிரசார வியூக மாற்றம் நடந்திருக்கிறது.

இந்த மூன்று போட்டியாளர்களைத் தவிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லோகநாதன், பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கை அமரன் போன்றோரும் களத்தில் நிற்கிறார்கள். இருவருமே தி.மு.க,
அ.தி.மு.க இரு கட்சிகளையும் விமர்சிக்கிறார்கள். அதிலும் முக்கியமாக பா.ஜ.க, அ.தி.மு.கவின் தினகரன் அணியை அதிகமாக விமர்சிக்கிறது. இந்த விமர்சனத்தால் பா.ஜ.கவுக்கு விழும் வாக்குகள் ஓ. பன்னீர்செல்வத்துக்குப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

தினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ.க வாக்காளர்கள் கங்கை அமரனுக்கு வாக்களிப்பதற்குப் பதில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் களம் பிளவு பட்ட அ.தி.மு.கவில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் தி.மு.க அணிக்கும் என்ற ரீதியில் மாறியிருப்பது நிச்சயம் தமிழகத்தில் ஒரு “மாற்று அரசியலுக்கு” வித்திடும் என்றே தோன்றுகிறது.

அதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால் இன்றைக்கு “ஜெயலலிதா மரணத்தை மட்டுமே” முன் வைத்து ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். ஆனால் ஓ. பன்னீர்செல்வமும் இருந்த அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த தேர்தலாக இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் பலன் கிட்டுமா என்பது கேள்விக்குறிதான்.

அதேநேரத்தில் இன்றைய திகதியில் தி.மு.க வெற்றி பெற்றால் அந்தக் கட்சிக்கு மாற்று, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க என்றும், ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால் அந்த அ.தி.மு.கவுக்கு தி.மு.க மாற்று என்பதும் மட்டுமே நிரந்தர சுற்று வட்டமாக இருக்கும். அந்தத் திசையை நோக்கித்தான்
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த வாலிபர் கைது..!!
Next post திண்டுக்கல் அருகே திருமணத்துக்கு மைனர் பெண் கடத்தல்..!!