By 1 May 2017 0 Comments

கெட்ட சகுனம்..!! (கட்டுரை)

Ampara-Buddha-statueகட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும் – வெளியே செல்லும் தந்தை முன்னே ஏக்கத்தோடு நிற்கும் ஒரு குழந்தைபோல – முன்னே வந்து நிற்கின்றது.

ஆனாலும், சின்னச் சின்ன சம்பவங்கள்தான் வரலாறுகளாகின்றது. உலகப் போர்களின் வெற்றி என்பது ஆயுதங்களுக்குத்தான் வெற்றியே தவிர, அங்கு ‘மனிதம்’ சொற்ப அளவேனும் வெற்றி பெறவில்லை. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது, நிலப்பரப்பின் மீது மேற்கொள்ளப்படும் மேலாதிக்கங்கள் வரலாற்றினூடு எத்தனை பெரிய இழப்புகளை விட்டுச் செல்கின்றன என்பதை இலங்கை மக்கள் நேரடியாகவே பட்டறிந்திருக்கின்றார்கள்.

ஆனால், நாம் இன்னும் செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கின்றோம். மிகக் குறிப்பாக, சிங்களக் கடும்போக்கு சக்திகள் மேற்கொண்டு வருகின்ற இன, மத நெருக்குதல்கள் அதையே காட்டி நிற்கின்றன.
தற்போது இவ்வாறான நடவடிக்கை ஒன்று அம்பாறை மாவட்டம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே, அதுபற்றி எழுதாமலிருக்க முடியாது. இங்கே அழுத்தமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், இனவாதிகள், கடும்போக்கு சக்திகள் என்று சொல்லும் போது, அது நியாயங்களை ஏற்றுக் கொள்கின்ற, பக்குவமுள்ள சாதாரண சிங்கள மக்களைக் குறிக்காது என்பதாகும்.

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற பழம்பெரும் தமிழ்க் கிராமமே மாணிக்கமடு ஆகும். இறக்காமம் பிரதேச செயலகத்தின் 7ஆவது கிராம சேவகர் பிரிவின் கீழ்வரும் மூன்று குக்கிராமங்களில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதும், மாணிக்கமடுவில் முற்றுமுழுதாக தமிழர்களும் வேறு சில குக்கிராமங்களில் சிறிதளவு சிங்கள மக்களும் வசிக்கின்றனர்.

மாணிக்கமடுவில் சுமார் 100 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மாயக்கல்லி மலைக்கு கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று திடீரென வந்த சில பிக்குகளும் வேறுசிலரும் அங்கிருந்த எல்லோரும் பார்த்திருக்கத்தக்கதாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி விட்டுச் சென்றனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை மற்றும் மாணிக்கமடு பிரதேசங்களுக்கு அருகில் ஒரு புத்தர் சிலையை கொண்டுவந்து வைத்தமை, அப்போது பாரிய எதிர்ப்பலையையும் வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்விவகாரம் பொலிஸாரின் தலையீட்டுடன் நீதிமன்றம் வரை சென்றது. அதன்பிறகு பல உயர்மட்டக் கூட்டங்கள் நடைபெற்றன. பிறகு எல்லா சலசலப்புகளும் அடங்கிப் போயின.

நிலைமை இவ்வாறு அமைதியாக இருக்கின்ற வேளையிலேயே, கடந்த ஒருசில நாட்களுக்கு முன், அங்கு வந்த பெரும்பான்மையினக் குழுவினர், அவ்விடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான வேலைகளை திடுதிடுப்பென ஆரம்பித்துள்ளனர்.

இதன்பிறகு, அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்கள் அங்கு கூடினர். இங்குள்ள மாயக்கல்லி மலையையும் மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 15 – 20 அடி சுற்றுவட்டாரத்தையும் அடையாளப்படுத்தியுள்ள தொல்பொருள் திணைக்களம், அதனை தொல்பொருள் வலயமாகப் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அந்த மலையின் உச்சியிலேயே புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மாயக்கல்லி மலையின் மேற்குப் பகுதி காணி, முஸ்லிம்களுக்கும் கிழக்குப் பக்கமாக உள்ள காணிகள் தமிழர்களுக்கும் சொந்தம் என்றும் ஓர் ஏக்கர் காணி கூட சிங்களவர்களுக்கு இங்கில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் முஸ்லிம்கள் இருவரின் காணிகளுக்குள் விகாரை அமைக்கவே மேற்படி குழுவினர் அங்கு வந்திருந்தனர். ஆனால், மக்கள் அங்கே குழுமியதும் ஒருவித முறுகல்நிலை ஏற்பட்ட நிலையில், இவ்விடயம் பொலிஸார் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு, உயர்மட்டக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. அதுமட்டுமன்றி,இவ்விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, சர்ச்சைக்குரிய வலயத்துக்குள் தற்போது நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே, எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் தன்னுடைய மதத்தைப் பின்பற்றுவதற்கும் அதனைப் பரப்புவதற்கும் உரித்து இருக்கின்றது. இதனைப் பிறிதொரு சமூகம் மறுதலிக்க முடியாது.

சிங்களவர்களே இல்லாத ஓர் ஊரில், தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் பிரதேசத்தில், அது அவசியமா என்பதுதான் இன்று எழுந்திருக்கின்ற கேள்வியாகும்.

தர்மத்தையும் மற்றைய உயிரினங்கள் மீது அன்பையும் போதித்தவரே புத்தர். அவருடைய சிலை ஒன்று தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான மலையின் மீது இருப்பதில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஆட்சேபமில்லை.

அத்துடன் புத்தர் சிலை இருப்பதால் சிறுபான்மைச் சமூகங்களின் புனிதம் கெட்டுவிடும் என்று கூறுமளவுக்கு சிறுபான்மை மக்கள் குறுகிய மனம் கொண்டவர்களுமல்லர்.

ஆனால், மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற சூழலிலும், முஸ்லிம்களின் காணியை அபகரித்து அதில் ஒரு விகாரையைக் கட்ட முனைவதும், இதற்காக அடாத்துகளும் அதிகாரங்களும் பிரயோகிக்கப்படுவதும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் புதிய ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் மிகையில்லை.

போருக்குப் பிந்திய இனவாதம் எவ்வாறு உருப்பெற்று வளர்ந்தது என்பதைப் பொதுமக்கள் எல்லோருமே அறிவார்கள். விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அடக்கி வாசிக்கப்பட்ட இனவாதக் குரல்கள், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கோரத்தாண்டவம் ஒன்றை ஆடியது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், மஹிந்த ஆட்சி பெரிதாக இனவாத செயற்பாட்டாளர்களைக் கண்டு கொள்ளவில்லை. ஹலால் சான்றிதழில் தொடங்கி கலவரம் வரை இடம்பெற்ற எல்லாவிதமான வேண்டத்தகாத சம்பவங்களையும் ஆட்சியாளர்கள் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சக்திகளையெல்லாம் மஹிந்தவும் அவருடைய குடும்பமுமே ஊட்டி வளர்க்கின்றது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதனை அவர்கள் மறுத்தபோதும் அந்த மறுப்பறிக்கைகளை நம்ப முடியாத விதத்தில் நாட்டில் இனவெறுப்பு, சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருந்தன. இதன் உச்சக்கட்டமே அளுத்கம கலவரம் எனலாம்.

சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்தவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்பட்டதற்கு அளுத்கமை கலவரங்கள் வரையான வேண்டத்தகாத சம்பவங்களே காரணம் என்பதை உலகறியும்.

ஆயினும், இதற்குப் பின்னால் ஆட்சிமாற்ற வேலைத்திட்ட நோக்கம் ஒன்று இருந்ததாகவும் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் இருந்தே அது நகர்த்தப்பட்டதாகவும் பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எப்படிப்பார்த்தாலும், ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக் கூடிய வல்லமையை இனவாதமும் முஸ்லிம்கள் மீதான மத நெருக்குவாரங்களும் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியின் பிரசாரங்களில் இந்த இனவாதம் முக்கிய இடம்பிடித்திருந்தது.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் இனவாதத்தை முதலீடாக்கி இருந்தனர்.

ஆனால், புதிய ஆட்சி நிறுவப்பட்ட பிறகும் மெல்ல மெல்லக் கடும்போக்கு செயற்பாடுகள் தலைதூக்கத் தொடங்கி, இப்போது பகிரங்கமாகவே களமிறங்கும் தைரியத்தைப் பெற்றிருக்கின்றன. இந்தச் சங்கிலித் தொடரின் கடைசி நிகழ்வாகவே மாயக்கல்லி மலை விவகாரத்தையும் பார்க்க முடிகின்றது.

இலங்கையில் தற்கால கடும்போக்கு செயற்பாடுகளின் முன்னோடியாக பார்க்கப்படுகின்ற பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர், இரு தினங்களுக்கு முன் மேற்படி மாயக்கல்லி மலைக்கு வந்து போயிருக்கின்றமை, மாயக்கல்லி மலையில் சிலை வைப்பதற்கும் அதைச்சுற்றி விகாரை அமைப்பதற்கும் பின்னால், பௌத்த சிந்தனைகளை விட, இனவாத நிகழ்ச்சித் திட்டங்கள் அதிக இடம்பிடிக்கின்றதா என்ற ஒரு நியாயமான சந்தேகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு பௌத்த தரப்பில் எத்தனையோ மார்க்கப் போதகர்கள் இருக்கத் தக்கதாக, சிறுபான்மை மக்கள் மனங்களில் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியவரான ஞானசார தேரர் இதில் தலையிட்டிருக்கின்றமையும் அவர் அங்கு நடந்து கொண்ட விதமும் சொல்லாத செய்தி ஒன்றைச் சொல்வதாகவே தோன்றுகின்றது.

புத்தரின் சிலையை வைப்பதும் விகாரை அமைப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமே அல்ல. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கின்றது. தமிழர்கள் வாழும் ஊரில் முஸ்லிம்களுக்கு உரிமையான காணிகளுக்குள் வந்து அடாத்தாக அதைச் செய்வது, உண்மையான பௌத்த தர்மத்துக்கு உரிய பண்பல்ல.

அதைவிட முக்கியமான விடயம், சிறுபான்மை மக்களால் நிறுவப்பட்ட இந்த அரசாங்கம், இனவெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் பாதகமான ஒரு மனப்பதிவை தமிழர்கள், முஸ்லிம்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கின்றது.

கிட்டத்தட்ட இந்த இனவாதத்துக்கு எதிராகத்தான் இந்த நல்லாட்சியே நிறுவப்பட்டது என்றிருக்கையில், அந்த அரசாங்கமே மெத்தனமாக செயற்படுவது கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தக் கடும்போக்கு இயக்கங்களை மஹிந்தவும் கோத்தபாயவும் இயக்குகின்றார்கள். எனவே அதைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது’ என்று முன்னர் கூறிய, இன்றைய நல்லாட்சியும் அதன் பங்காளிகளும், தற்போது தம்மிடம் இருக்கின்ற அதிகாரத்தையும் சட்டத்தையும் பயன்படுத்தியாவது இனவெறுப்பு பிரசாரங்களை கட்டுப்படுத்தவில்லை என்பது கவலைக்குரியது.

சர்வதேச காணிச் சட்டங்களுக்கு அமைவாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் காணிகள் உரித்தாக இல்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நீண்டகாலமாக கூறிவருவதற்கு சமாந்திரமாக வடக்கு, கிழக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தமிழர்களும், முஸ்லிம்களும் இழந்திருக்கின்றார்கள்.

தற்போதிருக்கின்ற காணி அவர்களது சந்ததியினர் குடியேறி வாழ்வதற்கு போதுமானதல்ல என்றும் கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறிருக்கையில் ‘பொத்துவில் தொடக்கம் அம்பாறை வரையில் எங்கு தோண்டினாலும் பௌத்த சின்னங்கள், தொல்பொருட்கள் வெளியில் வரும்’ என்றும் ‘அவ்வாறான பல இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது’ என்ற தொனியிலும் அம்பாறையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் மாயக்கல்லி விவகாரம் சூடுபிடித்திருந்த வேளையில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கெனவே, இவ்வாறான பெரும்பான்மை இனம் சார்ந்த செயற்பாடுகளால் தமிழர்களும் முஸ்லிம்களும் கணிசமான நிலத்தை இழந்துள்ள நிலையில், நாட்டின் கடும்போக்கு சக்திகள் தீவிரமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில்,மேற்படி அமைச்சரின் கருத்தை வைத்துப் பார்க்கின்றபோது, மாயக்கல்லி மலையில் மேற்கொள்ளப்படுவது வெறும் விகாரை நிர்மாணிப்பு என்று அவர்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் மலையில் சிலையை வைத்தவர்கள் இப்போது விகாரை கட்டுவதற்கு இடம் கேட்கின்றார்கள். அவர்களுக்கு இரண்டு ஏக்கர் காணியை முஸ்லிம்களிடமிருந்து சுவீகரித்து வழங்கவும் அரச உயரதிகாரிகள் சித்தமாய் இருக்கின்றார்கள்.

இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் இதனைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதே இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாகும். அது தவிர அவர்கள் பௌத்த மதத்துக்கோ, புத்தரின் கொள்கைகளுக்கோ விரோதமானவர்கள் அல்லர்.

இவ்வாறிருக்கையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் அறிக்கை மன்னர்களாக இருப்பதைக் காண்கின்றோம். ஒருவேளை, இதற்குப் பின்னால் இருக்கின்ற சக்திகளின் பலத்தை அறிந்தவர்களாகவும் அந்தப் பலம் பொருந்தியவர்களுடனான தத்தமது உறவு பாதிக்கப்பட்டு விடும் என்றும் சிங்கள மக்கள் தம்மை இனவாதியாகப் பார்த்து விடுவார்களோ என்று எண்ணியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், இவ்வாறு செயற்படுகின்றார்களோ தெரியாது.

ஆனால், மக்கள் இதனை அவர்களது கையாலாகாத்தனத்தின் அத்தாட்சியாகவே பார்க்கின்றனர். இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் மாணிக்கமடு விவகாரத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என்ற கருத்தும் இங்கு முக்கியமானது.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்க, இவை யாவற்றையும் அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருக்கின்றமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே கடுமையான விசனத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.

இது இனவாத்தை விட மற்றெல்லா சிந்தனைகளுக்கும் நல்ல சகுனமல்ல. வலிந்து கொண்டு வந்து சிலை வைக்கப்படுகின்றது; முஸ்லிம்களின் காணிக்குள் விகாரை கட்டப் பார்க்கின்றார்கள்; நல்லாட்சியின் பங்காளிகளால் முன்னைய ஆட்சிக்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கடும்போக்கு செயற்பாட்டாளர்கள் இதற்கு தலைமை தாங்குகின்றார்கள்.

பொதுபலசேனாவின் அத்தே ஞானசார தேரர் மாயக்கல்லி மலைக்கு போய் கடுந்தொனியில் கதைக்கின்றார். அரச அதிபரை விடக் குரலை உயர்த்திப் பேசுகின்றார்….. ஆனால், சட்டமும் அதிகாரமும் வாய்பொத்தி மௌனம் காக்கின்றன. இது நிலைமைகளை இன்னும் மோசமாகக்குவதாகவே அமையும்.

இலங்கையில் தமிழர்களுக்காகவும் முஸ்லிம்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும் குரல் எழுப்புகின்ற எத்தனையோ பௌத்த தேரர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் தேசியத் தலைவராகவோ பிராந்தியத் தளபதியாகவோ இல்லாமல் இருந்துகொண்டு முஸ்லிம்களுக்காகவும் பகிரங்கமாகப் பேசுகின்ற தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களின் கஷ்டங்களை உணர்ந்த இலட்சோப இலட்ச சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறான ஒரு சூழலில் நாட்டில் இருக்கின்ற அமைதியைக் கெடுக்கும் வகையில் ஒருசிலர் செயற்படுவார்கள் என்றால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிறுகுழுவாக இருக்கலாம்; வெளிநாட்டு சக்திகளாக இருக்கலாம்; இனவாத இயக்கங்களாக இருக்கலாம்; அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனைபவர்களாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் நீண்டகாலத்தில், மஹிந்தவின் ஆட்சிக்கெதிராக எவ்வாறு இனவாதம் சூடேற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறு இன்னுமொரு தடவை இடம்பெறமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.Post a Comment

Protected by WP Anti Spam