இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 29 Second

download (1)உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றம் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் மே மாதம் மூன்றாம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கக் கோரும் பிரகடனத்தை 1993 டிசெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே மூன்றாம் திகதி வரை நமீபியாவின் வின்டோக் நகரில் ‘சுதந்திரமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகை உலகை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் வருடாந்த தினமாகவும் மே மூன்றாம் திகதி அமைந்திருக்கிறது.

இந்தப் பிரகடனம், பின்னர் யூனெஸ்கோ பொதுமாநாட்டினால் அங்கிகரிக்கப்பட்டது. தேசங்கள் மத்தியில் செம்மையானதும் சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும் உலகின் சகல பாகங்களிலும் இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும் நேர்மையையும் அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.

சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சுதந்திரமாக அடைவதற்கும் உலகுக்கு வாய்க்கப்பெற்ற ஓர் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்களையும் நினைவுகூருவதற்கான சிறந்த ஒரு தருணமாகவும் இன்றைய தினம் அமைகிறது.

அரசாங்கம் உகந்தமுறையில் செயற்படுவதற்குச் சுதந்திரமானதும் நெறிமுறை வழுவாததுமான பத்திரிகைகள் அத்தியாவசியமானவை ஆகும். மக்களுக்கு அறிவூட்டுவதில் பத்திரிகைகளின் பங்கு அலட்சியம் செய்யப்பட முடியாதவையாகும். தற்போதைய நிலைவரங்களையும் நிகழ்வுப்போக்குகளையும் மக்களுக்கு அறியத்தந்து கொண்டிருப்பதில் பத்திரிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கின்றன.

பத்திரிகைச் சுதந்திரம் என்பது அதற்கான வரையறைகளையும் கொண்ட ஓர் அடிப்படை உரிமையாகும். பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் உண்மைகளை மாத்திரமே பரப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான பத்திரிகைத்துறையின் பெயரில் துணிச்சலுடன் செயற்பட்டுத் தங்களை அர்ப்பணம் செய்தவர்களின் வரலாற்றின் மூலமாக, எம்மால் தெளிவாக உணரக்கூடியது ஒரேயொரு உண்மையேயாகும்.

ஒடுக்குமுறையாளர்கள் முதலில் ஒழித்துக்கட்டுவது உண்மையைக் கூறுகின்ற பத்திரிகைகளையேயாகும்.
பத்திரிகைச் சுதந்திரமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் உண்மையான ஜனநாயக சமுதாயங்களில் வாழுகின்ற ஊடகவியலாளர்களையும் பத்திரிகைச் சுதந்திரம் என்பது இன்னமும் ஒரு கனவாகவே இருக்கின்ற சமுதாயங்களில் வாழுகின்றவர்களையும் இணைக்கின்ற ஓர் உயிர்ப்பாதையாகும்.

அதன் காரணத்தினால்தான் இன்று உலகின் எந்தவொரு மூலையிலும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியதாக, ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக, சர்வதேச ரீதியில் குரல்கள் பலமாக ஒலித்து, ஒருமைப் பாட்டுணர்வு வெளிப்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பத்திரிகை நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துகளை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகைச் சுதந்திரம் என்று நாம் வரைவிலக்கணப்படுத்த முடியும்.

அதாவது, உலகில் இடம்பெறும் அரசியல், பொருளாதார மாற்றங்கள், குற்றச்செயல்கள், சமூக விடயங்கள், பாதுகாப்பு விவகாரங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய சுதந்திரமே இந்தச் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் எமது நாட்டு நிலைமைகளை ஆராயவேண்டியது இங்கு அவசியமானதாகும்.

ஒரு நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும், தசாப்தகால உள்நாட்டுப் போரை எதிர்கொண்ட இலங்கைத் தீவு, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பினால் பட்டியலிடப்பட்ட பட்டியலில், அடியில் இருக்கும் இறுதி இருபது நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இலங்கையின் தொடர்புசாதன ஊழியர்கள், அச்சுறுத்தல்களை, கடத்தல்களை, கொலைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்த நாட்டில் ஏழு அல்லது எட்டு தினசரி செய்தித்தாள்களும் பல வாரப் பத்திரிகைகளும் இருக்கின்றன. இவற்றில் சில ஆக்ரோசமாக அரசாங்கத்தை எதிர்க்கின்றன. சில சமயங்களில் அவர்கள் அரசாங்கத் தலைவர்களைப் பல காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். ஆனால், பதில் நடவடிக்கைகளுக்குப் பயந்து, செய்தியாளர்கள் தாமாகவே சுயதணிக்கை செய்து கொள்வதாக, உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

ஊடக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், இலங்கை பத்திரிகை சபை ஒரு கருத்தரங்கை நடத்தியுள்ளது. அங்கு பலவிதமான கருத்துகள் பரிமாறப்பட்டன. இப்படியான நடவடிக்கைகள் கூட இலங்கையில் ஆபத்தானவைதான். மூன்று வருடங்களுக்கு முன்னதாக இப்படியான ஒரு கருத்தரங்கில் பேசிய போத்தல ஜயந்த என்பவர் சில வாரங்களின் பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

அவரும், அவருடன் அன்று உரையாற்றிய ஒருவரும், தற்போது நாடு கடந்து வாழ்கிறார்கள். ஓர் ஊடகவிலயாளன் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் துன்ப துயரங்களையும் எதிர்கொண்ட வண்ணமே, சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஊடகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், அவ்வாறு பாரிய சவால்களுக்கு மத்தியில் சமூகத்துக்காகச் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் விசேடமாக யுத்தகாலகட்டத்தில் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் ஏராளமானவையாகும்.

அதுமட்டுமன்றி, பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு துன்பகரமான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இலங்கையில் பதிவாகியிருக்கின்றன.

எமது நாட்டில் கடந்த 17 வருடகாலத்தில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவுகள் கூறுகின்றன.
விசேடமாகத் தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில், தராக்கி எனப் பிரபலமாக அறியப்பட்ட சிவராம், ஐயாத்துரை நடேசன், செல்வராஜா ரஜிவர்மன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், நிமலராஜன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமன்றி, 2008 ஆம் ஆண்டு முழு உலகையே அதிர்ச்சிக்குட்படுத்திய வகையில் ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1990 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ரிச்சட் டீ சொய்சா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
அத்துடன், பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயினர். ஒரு சில ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, பின்னர் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

கருத்துப்பட ஓவியராகக் கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, 2010 ஆம் ஆண்டு காணாமல்போன நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கின்றது.

ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, ஊடகப் பணியாளர்களும் ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்த உத்தியோகத்தர்களும் இனந்தெரியாதோரின் தாக்குதல்களுக்கு பலியாகிய மற்றும் காயமடைந்த சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இனந்தெரியாதவர்களினால் பல ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களும் பதிவாகியிருந்தன. பல ஊடக நிறுவனங்களும் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு கடந்த காலங்களில் உட்பட்டன.
குறிப்பாக, கொழும்பில் இலத்திரனியல் ஊடகமொன்று, 2008 ஆம் ஆண்டு தீ வைத்து கொழுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் பிராந்திய பத்திரிகையொன்று 13 தடவைகள் இனந்தெரியாதோரின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வருடம், மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் பல கிலோமீற்றர் தூரம் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டனர். அதன் விசாரணைகளும் தற்போது இடம் பெற்று வருகின்றன.

இவ்வாறு, இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடகவியலாளர் பணி என்பது பாரிய சவாலுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, முப்பது வருட யுத்தகாலத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட துன்ப, துயரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் என்பன வார்த்தைகளினால் விவரிக்க முடியாதவையாகும்.

அந்தளவுக்கு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட வண்ணமே ஊடகவியலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களையும் அச்சுறுத்தல்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு சவால்மிக்கதாகவே ஊடகவியலாளர்களின் பணி காணப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் தாக்குதல்களுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் எதுவும் இதுவரை முழுமைபெற்றதாகத் தெரியவில்லை.

குறிப்பாக லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த குற்றவாளிகள் மற்றும் சிவராம், நடேசன், சுகிர்தராஜன் உள்ளிட்டோரைக் கொலை செய்தவர்கள் இதுவரை சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை.

விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறிவந்தாலும், அவற்றில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது பேச்சளவிலேயே காணப்பட்டு வந்தது. சமூகப் பிரச்சினைகள், மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாண்ட ஊடகவியலாளர்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலைமைகளே கடந்த காலங்களில் காணப்பட்டன.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் ஊடக சுதந்திர விடயத்தில் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அரசியலமைப்பின் அடிப்படை விடயமாக நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஊடகச் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க அளவு திருப்தியடையும் நிலையில் நாம் இருக்கின்றோம். இதற்கு உதாரணமாக தற்போது நடைமுறையில் உள்ள தகவலறியும் உரிமைச் சட்டத்தினைக் குறிப்பிடலாம்.

ஆனால், இன்னும் இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.

சமூகப் பிரச்சினைகள் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக சில ஊடகவியலாளர்கள் சமூகவிரோதிகளின் ஆயுதங்களுக்கு இரையாகியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு எந்தவொரு வகையிலும் இடமளிக்கக் கூடாது.

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுக்கவேண்டியதும் அவசியமாகும்.

அது மட்டுமன்றி, கடந்த காலங்களில் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

புதிய அரசாங்கமானது, எக்காரணம் கொண்டும் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் வகையிலான சூழல்களை ஏற்படுத்தக்கூடாது. ஊடகவியலாளர்கள் தமது பணியைச் சுதந்திரத்துடனும் அச்சுறுத்தல்கள், தடைகள் இன்றியும் முன்னெடுப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்களும் தமது தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் சுயதணிக்கையுடனும் பக்கச்சார்பின்றியும் தமது தொழில்சார் தன்மையைப் பேணும் வகையில் செயற்படவேண்டும். எந்தவொரு கட்டத்திலும் தமது தொழில் கௌரவம் பாதிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கக்கூடாது.

எனவே, தற்போது நாட்டில் ஓர் ஆக்கபூர்வமான அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், ஊடகவியலாளர்களும் தமது பணிகளைத் தடைகள் இன்றி, முன்னெடுக்கும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.

இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான துன்பகரமான நிகழ்வுகள் இதன்பின்னர் இடம்பெறக்கூடாது.

ஊடக சுதந்திரத்தில் இலங்கையானது உலகநாடுகள் வரிசையில் மிகவும் உயர்ந்த மட்டத்துக்கு வரவேண்டியது அவசியமாகும். அவ்வாறானதொரு சிறந்த வகையிலான ஊடக சுதந்திரத்தை நோக்கி எமது நாடு பயணிக்கவேண்டும். அதற்கு ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை உரிய முறையில் வழங்கவேண்டும் என்பதுடன் அதற்கேற்ற சூழலை உருவாக்குவதில் அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம்…!!
Next post நரகாசூரனுக்கு வில்லியாகிய ஸ்ரேயா..!!