இலங்கை கடற்படையுடன் கடும் போர் 80 விடுதலைப்புலிகள் பலி

Read Time:5 Minute, 8 Second

LTTE.sea_tiger_boats_.gifஇலங்கை கடற்படையுடன் நடந்த கடுமையான சண்டையில் 80 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வடக்கே காங்கேசன் துறை துறைமுகம் உள்ளது. அதன்வழியாகத்தான், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை இலங்கை அரசு சப்ளை செய்து வருகிறது. அதை சீர்குலைப்பதற்காக, காங்கேசன்துறை துறைமுகத்தை தாக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர்.

அதன்படி, நேற்று அதிகாலை சுமார் 20 படகுகளில் விடுதலைப்புலிகள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விரைந்தனர். அப்போது கடலில் ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், விடுதலைப்புலிகளின் படகுகளை வழிமறித்தனர்.

6 மணி நேரம் சண்டை

அதை அடுத்து கடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. 6 மணி நேரம் சண்டை நீடித்தது. இதில் விடுதலைப்புலிகளின் 12 படகுகளை கடற்படையினர் தாக்கி கடலுக்குள் மூழ்கடித்தனர். இவற்றில் 5 தற்கொலைப்படை படகுகளும் அடங்கும். மற்ற படகுகள் தப்பி ஓடி விட்டன.

80 பேர் சாவு

இந்த சண்டையில் 80 விடுதலைப்புலிகள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இத்தகவல்களை இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சண்டையில் கடற்படை வீரர்கள் 30 பேர் காணாமல் போய்விட்டதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கூறியுள்ளது. 2 கடற்படை பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், ஒரு பீரங்கி படகு சேதப்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் கூறினர். சண்டையை தொடர்ந்து பின்வாங்கிய கடற்கரையோர காவல் நிலைய போலீசார், சண்டை முடிந்த பின்னர் தத்தமது இடங்களுக்கு திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் புகார்

இந்நிலையில் இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக நார்வே மூலமாக விடுதலைப்புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழர் கிராமங்களில் குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி விமானங்கள் தாக்குவதாகவும், பின்னர் ராணுவ துருப்புகள் புகுந்து கால்நடைகளையும், விளைநிலங்களையும் அழிப்பதாகவும் விடுதலைப்புலிகளின் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஐ.இளந்திரையன் கூறினார்.

2-வது தடவையாக கப்பலில் சப்ளை

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் அமைதி திரும்பி வருகிறது. கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

யாழ்ப்பாணத்துக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை 2-வது தடவையாக இலங்கை அரசு அனுப்ப உள்ளது. இந்த பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று புறப்படும் என்று தெரிகிறது. ஆனால் மருந்து பொருட்களை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு செல்ல விடாமல் இலங்கை அரசு தடுப்பதாக நிவாரண குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாடிகன் வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க பேராயர் ஜிம் பிரவுன் கடந்த மாதம் 20-ந் தேதி காணாமல் போனார். அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வாடிகன் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியுள்ளது.

டி.வி. ஊழியர் விடுதலை

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கடத்தி செல்லப்பட்ட மகாராஜா டி.வி. பெண் ஊழியரும், ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. டி.மகேஸ்வரனின் உறவினருமான தவராஜா தவமணி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பூலித்தேவன் பிறந்தநாள்: கார்த்திக் பங்கேற்ற விழாவில் கல்வீச்சு-தடியடி
Next post புலிகளுடன் ஜெ கூட்டு, திமுக அரசை கவிழ்க்க சதி -காங். தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு