புதுப்பெண்ணும்.. புது உறவும்.. தயக்கமும்….தடுமாற்றமும்…!!

Read Time:9 Minute, 20 Second

hot-350x236புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

* கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும்போது அமைதி காப்பதே நல்லது.

* கணவர் வீட்டினர் தன்னை ‘என்ன நினைப்பார்களோ’ என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப் படியே மாற்ற முயற்சித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்காது. அவள் அவளாகவே இருப்பதுதான் அவளை பற்றி கணவர் குடும்பத்தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். தனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கக்கூடாது. அவள் வெளிப்படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

* திருமணமான புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், நேசத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கணவரே தனது குடும்பத்தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப்பெண்ணை பற்றி தவறான அபிப்பிராயத்தை விதைத்துவிடும்.

* கணவரின் உடன் பிறந்தவர்களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம்தான். அவர்களும் புதுப்பெண்ணிடம் பழக தயங்கத்தான் செய்வார்கள். அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே வளர்த்து கொள்ளாவிட்டால் இருவருக்குமிடையே தவறான புரிதல் உருவாகிவிடும். தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப்படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.

* கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடும்போது அது வீட்டில் உள்ளவர்களுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.

* புகுந்தவீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசமமாக பேண வேண்டும். ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல்பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது. புகுந்த வீட்டினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப்படுத்துவதும் கூடாது. இரு குடும்பத்தினரும் உறவை வளர்த்துக்கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.

* புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார்-மருமகள் இடையேயான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பதுதான் பிரச்சினையின் தொடக்கமாக அமையும். ஆரம்பத்திலேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்றுவதற்கு இடம் கொடுக்காது. அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதையுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.

* புதுப்பெண் கணவருடனான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அது கணவன்-மனைவி இடையேயான உறவில் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க்கொண்டிருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக கணவரின் நடவடிக்கைகளை கண்டும், காணாமல் இருந்துவிடவும் கூடாது. அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக்கூறலாம்.

* குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளுக்குள் புகைச்சலையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது. அவர்களுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவுகளில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவுகளையே ஏற்படுத்தும். குடும்ப வரவு-செலவுகளில் கணவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை மற்றவர்களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.

* கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதையெல்லாம் அப்படியே கொட்டிவிடக்கூடாது. அது பிரச்சினையில் தானாகவே மாட்டிக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. பிரச்சினையை உண்டாக்குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷயங்கள் எவை, பேசக்கூடாத விஷயங்கள் எவை என மனத்திரையில் அசைபோட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லறமாக அமைய வித்திடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழனி அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!
Next post கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்..!!