தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 17 Second

image_cdf409e9f3“யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன், அந்த நடவடிக்கைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில், நாம் முன்னெடுத்திருந்த அந்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் படிப்படியாகச் சீர்குலைத்து வருகின்றது.

நாட்டுத் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடனேயே இருக்கின்றன. அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புரிதல் இல்லாவிடின், அது பாரிய பிரச்சினையாகும்” என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான ‘லங்காதீப’வுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: யுத்தவெற்றியின் கொண்டாட்டம், அண்மையில் இடம்பெற்றது. யுத்தத்தை நடத்தியவர் என்ற ரீதியில், என்ன நினைக்கிறீர்கள்?

ப: உண்மையிலேயே, மிகப்பெரிய சந்தோஷம் உள்ளது. எந்தவொரு உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ இன்றி, எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டுத் தலைவர்கள் கூட, சில இடங்களுக்குப் போய்வர முடியாத நிலைமை இருந்தது. அந்தப் பிரதேசங்கள், சிறியவையும் அல்ல.

வவுனியாவுக்கு அப்பால், எவராலும் செல்லமுடியாதிருந்தது. கிழக்கின் பல பகுதிகளுக்கும் செல்ல முடியாதிருந்தது. நாட்டின் வேறு பிரதேசங்களுக்குக் கூட, அச்சத்துடனேயே செல்லவேண்டிய நிலைமை இருந்தது. அவ்வாறான நிலைமை இல்லாதொழிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதென்றால், அது சந்தோஷமான விடயம் தானே.

கே: அப்படியாயின், தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதெனும் குற்றச்சாட்டு பொய்யானதா?

ப: நாட்டின் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்கவேண்டும். இன்று உலக நாடுகளில் பாரிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.

சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடனேயே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் தொடர்பில் புரிதல் இல்லாவிடின், அது பாரிய பிரச்சினையாகும்.

யுத்தத்துக்குப் பின்னரான ஐந்து வருடங்களிலும், நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக நானே இருந்தேன். அக்காலப்பகுதியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்காத வகையிலான விசேட அறிவுறுத்தல்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது, பொதுமக்களின் சாதாரண வாழ்க்கை முறையைப் பாதிக்கும் வகையில் அமையப்பெறவில்லை. எவருக்கும் விளங்காத வகையில் முன்னெடுத்திருந்தோம்.

அன்று நாம் அந்த நடைமுறைகளைக் கையாண்டதால் தான், இன்றுள்ள தலைவர்கள், வடக்குக்குச் சென்றுவரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை, படிப்படியாக அழிக்கிறார்கள் என்றால், அது எமது பிரச்சினை அல்ல. ஆனால் இதுவரையிலான நிலைமைகள் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும்.

கே: இவ்வாறான சூழலில், இன்றைய அரசியல் தொடர்பிலான உங்களது கருத்து என்ன?

ப: தனிப்பட்ட ரீதியில், ஒவ்வொருத்தருக்கும் ஏசிக்கொண்டு, தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அரசியலே இன்று காணப்படுகின்றது. இதனால், நாட்டுக்கு எந்தவொரு பயனும் இல்லை. எல்லாத் தரப்பினரும் இன்று விரக்திக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கு வாக்களித்தவர்களே இன்று, மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று இவர்கள் செல்லும் பயணம் தவறு என்பதை, இந்த மனமாற்றங்களே தெளிவுபடுத்துகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றெண்ணி கதைத்துக்கொண்டு இருப்பதில் பயனில்லை.

என்ன பிரச்சினை? மக்கள் ஏன் விரக்தியடைந்துள்ளனர்? என்பது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, பொதுமக்களின் வாழ்க்கை முறை, வேலையற்ற நிலைமை எங்கு காணப்படுகிறது என்பவை தொடர்பில் விளங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, இருந்தவர்களை ஏசிக்கொண்டும் எதிர்ப்பவர்களுக்குக் குறைகூறிக்கொண்டும், தங்களுடைய சந்தோசத்துக்காகப் பேசிக்கொண்டும் இருப்பதில் பயனில்லை.

2005ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்தவுடன், என்ன பிரச்சினை என்பது தொடர்பில் நாம் விளங்கிக்கொண்டோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். பல வருடங்களாகச் செய்யமுடியாமல் போனதை நாம் செய்தோம். நாங்கள் தான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம் என்று கூறுகிறார்கள். சரத் பொன்சேகா கூட, நாங்கள் அதிகாரத்துக்கு வரமுதலே பதவியில் இருந்தார். நாம் வந்தபின்னர் செய்தவற்றில் ஒரு சொற்பத்தையேனும் ஏன் அவர் அதற்கு முன்னர் செய்திருக்கவில்லை.

யாழ். கட்டளைத் தளபதியாக இருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து பின்னடைவோம் என்று அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். முல்லைத்தீவு பறிபோனதும் அவருடைய காலத்தில் தான். ஆணையிறவு பின்வாங்கப்பட்டதும் அவருடைய காலத்தில் தான். அனைத்து அதிகாரிகளும் இருந்தும், அவரால் ஏன் அப்போது சாதிக்க முடியாமல் போனது? நாம் அந்தப் பிரச்சினைகள், தவறுகள் அனைத்தையும் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுத்தோம்.

இன்று அவர் பெரிதாகக் கதைக்கிறார். ஆனால், இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரால் முடியாமல் போனது. அதனாலேயே, அங்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படியாயின், 38 வருடங்களாக அவர் என்ன செய்தார்? எவராயினும், ஏனையவர்களின் பங்களிப்பைத் தாழ்த்திப் பேசுவதோ அல்லது தங்களுடைய பங்களிப்பை உயர்த்திப் பேசுவதோ தவறு. இவை தொடர்பில், அவரவருக்குப் புரிதல் இருக்கவேண்டும்.

கே: மக்கள் விரக்தியடைந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். ஆனால், நாட்டில் நல்லாட்சி மலர்ந்து புதிய பயணமொன்று தொடங்கியுள்ளது. அந்த உண்மையைக் காண நீங்கள் விரும்பவில்லையா?

ப: நல்லாட்சி என்ற ஒற்றை வார்த்தையால் எதையும் கூறிவிட முடியாது. ஊழல் மோசடி என்ற போர்வையில், நாட்டில் தற்போது அரசியல் ரீதியிலான கொள்ளை இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அரசியலில் தங்களுக்கு எதிரானவர்களைப் பழிதீர்க்கும் செயற்பாடொன்றே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனக்கெதிராக வழக்குத் தொடர்ந்தார்கள். என்னிடம் பழிதீர்க்கவே அவ்வாறு செய்தார்கள். இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும், அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படுபவையாகும்.

மோசடிக்காரர்களைப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, அரசியல்வாதிகளைப் பிடிப்பதா நல்லாட்சி? ஆணைக்குழுக்களை நியமிப்பதா நல்லாட்சி? பொலிஸ் ஆணைக்குழுவை நியமித்தது யார்? அரசியல்வாதிகள் சிலர் ஒன்றிணைந்து, இனி யாரை வேட்டையாடுவதெனத் தீர்மானிக்கிறார்கள். இதுதானா நல்லாட்சி?

கே: ஆனால், தற்போதைய அரசாங்கம், தற்காலத்திலுள்ள தவறுகளையும் தேடிக்கொண்டுதானே இருக்கிறது? அதற்கு, மத்திய வங்கிப் பிரச்சினையே சிறந்த உதாரணம். அப்படியாயின், எதிராளிகளிடம் மாத்திரம் பழிதீர்க்கிறது என, நீங்கள் எவ்வாறு கூற முடியும்?

ப: ஆம், மத்திய வங்கிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுகிறார்கள் தான். ஆனால், குற்றவாளிகளை குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிக்க நினைப்பது, எவ்வாறு நல்லாட்சியாகும்? ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவை நாங்கள் தான் நியமித்தோம்.

கே: பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகள், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகள் காரணமாகவே எழுந்துள்ளன. உங்களுடைய அரசாங்கம் எடுத்த கடனைத் தானே, இந்த அரசாங்கம் செலுத்தி வருகிறது?

ப: அவை, சும்மா சாக்குபோக்குகள். முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து அபிவிருத்திகளையும் இவர்கள் நிறுத்திவிட்டார்கள். அதனால், பொருளாதாரம் உடைந்துவிழுந்தது. விமான நிலையமொன்றில் நெற்களைக் களஞ்சியப்படுத்தியதில், இந்த அரசாங்கத்தின் இலட்சனம் தெரிந்துவிட்டது.

துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தினார்கள். சீனாவின் உதவிகள் மற்றும் கடன்களின் கீழ் நடத்தப்பட்டு வந்த வேலைத்திட்டங்களை நிறுத்தினார்கள். அதுமாத்திரமன்றி, இந்நாட்டு முதலீட்டைக்கொண்டு நடத்திய அபிவிருத்திகளையும் நிறுத்திவிட்டார்கள்.

உலக வங்கியின் உதவியுடன், கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை, நானே ஆரம்பித்தேன். முதல் மூன்று வருடங்களில், செய்யக்கூடிய அனைத்தையும் நான் செய்தேன். ஆனால், அதற்குப் பின்னரான இரண்டு வருடங்களில், அந்த வேலைத்திட்டத்தின் கீழ் எவ்வித அபிவிருத்திப் பணியும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், அந்த வேலைத்திட்டங்களுக்கு சில அரசியல்வாதிகளின் பெயர்களையிட்டு, ஆரம்பம் 2016 என்று மாத்திரம் போர்ட் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

இப்படியான ஏமாற்று வேலைகளை யார் செய்கிறார்கள்? வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தாமல் விடுவது யார்? திட்டமிடப்பட்ட முறையிலேயே, வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை, என்னுடைய தனிப்பட்ட தேவைக்கானவை அல்ல.

உள்ளூராட்சிமன்றத் தலைவர்களே, இவ்வாறான வேலைத்திட்டங்களைத் தெரிவு செய்தார்கள். சிறிய மழைக்குக்கூட வீதிகள் வெள்ளக்காடாகின. அவை தொடர்பில் அவதானித்து, கங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்தேன். அதற்கு, இலங்கையின் பணமே செலவு செய்யப்பட்டது. திட்டங்களை வகுத்தவர்கள், இலங்கைப் பொறியியலாளர்கள். அந்த வேலைத்திட்டமும் நிறுத்தப்பட்டது.

இவ்வாறான வேலைத்திட்டங்களை நிறுத்தியதால் தான், இன்று கொழும்பும் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. தவிர, கடனால் அல்ல.

இவ்வாறாக, இந்த அரசாங்கம் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தியது. அதனால், வெளிநாட்டு முதலீடுகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில், கொழும்புக்கு நான் கொண்டுவந்த ஹோட்டல் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களைத் தவிர, இந்த அரசாங்கம் கொண்டுவந்த வெளிநாட்டு முதலீடுகளுடனான வேலைத்திட்டம் என்று எது உள்ளது? காட்டுங்கள் பார்க்கலாம்.

சங்கிரிலா, ஐ.டி.சி, கொம்பனித்தெருவிலுள்ள டாட்டா, அதற்கு அருகிலுள்ள கீள்ஸ், நவலோக்காவுக்கு முன்னால் உள்ள மூன்று அபிவிருத்தித் திட்டங்கள், கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகிலான பாரிய வேலைத்திட்டம் போன்ற அனைத்தையும் நானே கொண்டுவந்தேன்.

கே: உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது அல்லவா?

ப: அப்படி எதுவுமில்லை. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், ஜனாதிபதியைச் சந்தித்தேன். ஆனால், அரசியல் பற்றிப் பேசவில்லை. பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அப்போதைய நிலைமைகள் பற்றிப் பேசினோம். அதன் பின்னர், நாம் சந்திக்கவுமில்லை.

கே: ஆனால், உங்களை நடுநிலையாகக்கொண்டு, இரு தரப்புப் பேச்சுவார்த்தையொன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாமே?

ப: எனக்கு அதுபற்றித் தெரியாது. அப்படி ஒரு விடயம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி என்னுடன் எவரும் கதைக்கவில்லை. அரசியலுடன் தொடர்புறாதவர்கள்தான், அதுபற்றி என்னிடம் கூறினார்கள். ஒன்றிணைந்த எதிரணியோ அல்லது ஏனைய தரப்பினரோ, என்னிடம் எதுவும் கதைக்கவில்லை; அது தான் உண்மை.

நான், அரசியலுக்குப் பிரவேசிக்கப்போவதில்லை. ஆனால், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று, பலர் என்னிடம் கூறுகிறார்கள். இப்போதுள்ள அரசியல்வாதிகளைப் பார்த்தால், வாழ்க்கையில் ஒருபோதும் அரசியலுக்குள் வரக்கூடாது என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது. இருந்த தலைவரைத் தூக்கிட்டுக் கொலை செய்யவேண்டும் என்று கூறும் அரசியலுக்குள் நானும் வரவேண்டுமா? அவ்வாறான அரசியலுக்குள், நான் ஒருபோதும் வரமாட்டேன்.

கே: ஆனால், உங்களது குடும்பம் சென்ற பாதையில், நீங்கள் பயணிக்கப் போவதில்லையா?

ப: இல்லை. ‘டெக்நொக்ரசி இன் அமெரிக்கா’ என்ற புத்தகமொன்று, அண்மையில் வெளியிடப்பட்டது. அமெரிக்க அரச நிர்வாகத்தில், தொழிற்றுறையாளர்கள் பங்குகொள்வது குறைவாகவே காணப்படுகின்றது என, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகள், அதற்கு உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளன. சீனா எவ்வாறு மிக வேகமான அபிவிருத்தியைக் கண்டதெனவும், அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்றுறையினரின் நிர்வாகத் தந்திரம் அதில் அடங்கியுள்ளமையும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும், தொழிற்றுறையினரை இணைத்துக்கொண்டால் மாத்திரமே, அரசாங்கமொன்று அபிவிருத்தியை நோக்கி வெற்றிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்பதையே நானும் இங்கு விளக்க விரும்புகிறேன். தொழிற்றுறையினரை தூரத்தில் வைத்துவிட்டு, அரசியல்வாதிகள் மாத்திரம் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால், எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது.

அரச நிர்வாகத்தில், தொழிற்றுறையினரின் பங்களிப்பு அதிகபட்சம் இருக்கவேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும். தொழிற்றுறையினருடன் கலந்துரையாடி, எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதற்கான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படல் வேண்டும். தேவையேற்படின், அந்த முறையைக் கையாள வேண்டும். தற்போதைய அரசாங்கம் கூட, தொழிற்றுறையினரைப் பயன்படுத்திக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர முடியும்.

இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு உருவாக்கும் அரசாங்கமொன்று, இந்த முறையைப் பின்பற்றுவதால் பயன் கிட்டப்போவதில்லை. அடுத்த அடியை, இப்போதே எடுத்துவைப்பது தான் சிறந்தது. அந்த அடிக்காகத்தான் நான் நடவடிக்கை எடுக்கிறேன். அடுத்து வரப்போகும் தலைவர் யார் என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்குப் பிரச்சினையும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி..!!
Next post மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்..!!