By 13 June 2017 0 Comments

வடக்குக்கு ஏற்பட்ட கறை..!! (கட்டுரை)

image_b7b6043affவடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் மிகப்பெரிய சோதனை ஒன்றைச் சந்தித்திருக்கிறது.

இன்னமும் சுமார், 15 மாதங்கள் மாத்திரமே ஆயுள்காலத்தைக் கொண்ட மாகாணசபையின் தற்போதைய அரசாங்கம், இதுபோன்றதொரு சூழலை எதிர்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

தமிழ் மக்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, இந்த நான்கு ஆண்டுகளிலும் சாதித்தவற்றை விட, இப்போது அதற்கு ஏற்பட்டுள்ள கறையே பெரிதாகத் தெரிகிறது.

வடக்கு மாகாணசபையில் அமைச்சர்களுக்கு எதிராக் குற்றச்சாட்டுகளை ஆளும்தரப்பினரே முன்வைத்ததும், அதுகுறித்து விசாரிக்க முதலமைச்சரே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரைணைக் குழுவொன்றை அமைத்தது, அந்த விசாரணைக் குழு இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற பரிந்துரையுடன் அறிக்கையை சமர்ப்பித்ததும், இலங்கையின் வேறெந்த மாகாணசபையிலும் இதற்கு முன் நடந்திராத விடயங்களாகும்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களைக் கொண்ட இலங்கையின் மாகாணசபை முறைமை வரலாற்றில், இதுவரை இல்லாத- மோசமான சில முன்னுதாரணங்களை, வெறும் நான்கு ஆண்டுகளிலேயே வடக்கு மாகாணசபை படைத்திருக்கிறது.

வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் இருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

நீண்ட போருக்குப் பின்னர், வடக்கில் புனர்வாழ்வு. புனரமைப்பு, அபிவிருத்தி என்று ஏகப்பட்ட தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு வடக்கு மாகாணசபைக்கு இருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துவ ஆட்சிக்காலக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழ் மக்கள் வடக்கு மாகாணசபைக்கு ஓர் உறுதியான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

38 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 ஆசனங்கள் கிடைத்திருந்தன.

இதன் மூலம், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன் மாத்திரமன்றி, ஒரு பலமான அரசாங்கமாக இருந்து, தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இந்த நான்கு ஆண்டுகளிலும் வடக்கு மாகாணசபை மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து விட்டதாகக் கூற முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், குறைகூற முடியாத ஓர் ஆட்சியாகவேனும் இது அமைந்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த அமைச்சர்கள் மீதும் ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதும், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதும், வடக்கு மாகாணசபைக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, வடக்கு மாகாணசபை தனித்துவமான ஒரு சபையாக இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால், ஏனைய மாகாணசபைகளை விட, இதுபோன்ற பல்வேறு விடயங்களில் வடக்கு மாகாணசபை வேறொரு விதமான தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குழு உறுதிப்படுத்தியிருப்பதுடன், அவர்கள் இருவரையும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

அமைச்சர்கள் இரண்டு பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் கல்வி அமைச்சர் மீது அதிகார துஷ்பிரயோகம், குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முனைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளில் அதிகார முறைகேடு, நிதி மோசடி மற்றும் அதிகார வரம்புமீறல் என்பன மிக முக்கியமானவை.

போரினால் பெரும் சீரழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தின் முதல் நிர்வாக அலகாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபைக்கு, மிகப்பெரிய பொறுப்புகள் இருந்தன. அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கே இருந்தது.

இப்படியானதொரு நிலையில், நிதிமோசடி போன்ற செயல்கள் மிகமோசமானவை. வடக்கு மாகாணசபைக்கே மிகக் குறைந்தளவு நிதிதான் மத்திய அரசினால் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி, தேவையானதை விட மிகமிகக் குறைந்த அளவே என்பது யாவரும் அறிந்த விடயம்.

அவ்வாறு தேவைக்குக் குறைவாகக் கிடைக்கும் நிதியிலேயே மோசடிகள் இடம்பெற்றிருக்குமாயின் அது, வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி என்பதை விடத் துரோகம் என்றே குறிப்பிடலாம்.

அதிகார முறைகேடுகள் ஓர் அரசின் எல்லா மட்டங்களிலும் இடம்பெறுவதுதான். அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகளையோ ஏனையவர்களையோ பழிவாங்குதல் அல்லது வேறு நலன்களைப் பெறுதல் இந்த வகைப்படும்.

வடக்கு மாகாணசபையில் இதுபோன்ற அதிகார முறைகேடுகள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமானது. ஏனென்றால், முன்னர் “ஆளுநரே எல்லா அதிகாரிகளையும் கையாள்கிறார்; எம்மை எதையும் செய்ய அனுமதிக்கிறார் இல்லை” என்று குற்றம்சாட்டிய அமைச்சர்களே, இப்போது அதிகாரிகளைப் பந்தாடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி, பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்கவும் நியமனங்கள், இடமாற்றங்களின்போது, கடைப்பிடிக்கப்படும் ஒழுங்குமுறைகளை உடைத்தெறிவதற்கும் கூட, பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது வெட்கக்கேடானது.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகுவதற்கு இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் முன்வரவில்லை.

தம் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். இவ்வாறான நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சருக்கே உள்ளது.

அதாவது, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அல்லது அவர்களாகவே பதவியில் இருந்து விலகுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

கடந்த புதன்கிழமை வடக்கு மாகாண அவையில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போது, “குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட அமைச்சர்களைப் பதவி நீக்குவது குறித்து, தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

சபை உறுப்பினர்களின் கருத்தை அறிந்த பின்னரும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி விட்டும் முடிவை எடுக்கவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

பொதுவாகவே இதுபோன்ற தருணங்களில் பதவிகளை விட்டு விலகுவதுதான் ஜனநாயக மாண்பு. குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பவர்கள் கூட, பதவியை விட்டு விலகி அதனைச் செய்வதுதான் முறை.

அத்தகையதொரு ஜனநாயகப் பண்பை, வடக்கு மாகாணசபையின் இரண்டு அமைச்சர்களும் பின்பற்ற முன்வராதமை கவலைக்குரிய விடயம்.

இந்தநிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற முழுக் கடப்பாடும் இருக்கிறது. அமைச்சர்கள் நியமன விடயத்தில், விக்னேஸ்வரன் வேறு எவருடைய தலையீட்டுக்கும் இடம் கொடுக்கவில்லை. அனைவரும் அவரே தெரிவு செய்து நியமித்த அமைச்சர்கள்தான்.

அவர்கள் மீது சரியான நடவடிக்கையை அவர் எடுக்கத் தவறினால், அது ஒட்டுமொத்த வடக்கு மாகாண அரசின் மீதான களங்கமாகவும், முதலமைச்சரின் மீதான களங்கமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான களங்கமாகவுமே அமைந்து விடும்.

வடக்கு மாகாணசபை முழு வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பது உண்மையானாலும், ஒரு சில அமைச்சர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்த மாகாணசபையுமே பலிக்கடா ஆக முடியாது. அந்த வகையில் அமைச்சர்களுக்கு எதிராக, பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுப்பதுதான் முறை. இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் காலம் தாழ்த்துவதற்கான காரணம் தெரியவில்லை.

இன்னொரு பக்கத்தில், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை நம்பிக்கையைக் கொடுக்கிறது. அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு வரும்போது, அதனை மூடி மறைப்பதற்கே, பெரும்பாலான மேல் நிலை அரசியல் தலைவர்கள் முற்படுவர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு நீதியரசராக இருந்தவர் என்பதால் அவ்வாறு செயற்பட முடியவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைக் குழுவை அமைத்தது மாத்திரமன்றி, அதன் அறிக்கையையும் அவையில் சமர்ப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையை, அவர் பகிரங்கப்படுத்த தயாராக இல்லை. இதன் மீதான விவாதத்தை ஊடகங்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்று அவர் வடக்கு மாகாண அவையில் கடந்த புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை. பொறுப்புக்கூறல் மற்றும், வெளிப்படைத்தன்மை விடயங்களில் அவர் எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பவும் தவறவில்லை.

வரும் 14ஆம் திகதி வடக்கு மாகாணசபையில் இந்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்படும் போது, காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்படும். ஏற்கெனவே ஆளும் கட்சியில் காணப்பட்ட உள்முரண்பாடுகள்தான், இந்த விவகாரத்தை இந்தளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் இருந்த இரண்டுபட்ட நிலையானது, முதலமைச்சருக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் பெரும் தலைவலியாக இருந்தது உண்மை.

அதுவே, அமைச்சர்களின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்துவதற்குக் காரணமாகியிருந்தது என்பது சாதகமான விடயம்தான். எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபையின் எஞ்சியுள்ள 15 மாத ஆட்சிக்காலம் முதலமைச்சருக்கும் கூட்டமைப்புக்கும் மிக முக்கியமானது.

கடந்த நான்கு ஆண்டு காலக் கறைகளைக் கழுவிக்கொள்ளும் வாய்ப்பை இந்தக் காலத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமானதாக இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam