முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள்..!! (கட்டுரை)

Read Time:19 Minute, 47 Second

image_522a6563f8‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது. ஆனால், குறிப்பாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் எந்தளவுக்கு அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது.

தம்முடைய மார்க்கம் சொல்கின்றது என்பதற்காகவோ அல்லது சமூகவியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டோ, இலங்கை முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதைக் காண்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது.

மாற்றுக்கருத்தியல் என்பது காத்திரமான வாதங்களுக்கும் ஆரோக்கியமான இறுதித் தீர்மானங்களுக்கும் வித்திடும் என்ற நிலை மாறி, அது கருத்து வேற்றுமையாக, இனத்துக்கு இடையிலான உள்ளக முரண்பாடாக எல்லா விடயங்களிலும் வியாபித்திருப்பதைக் காண முடிகின்றது.

இனம், மதம், அரசியல், சமூகம் என்று எல்லா விடயங்களிலும் ஒற்றுமை எனும் கயிறு, நழுவவிடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம்களை மதக் கொள்கைகளின் அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ ஒற்றுமைப்படுத்தி, ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவது என்பது, இப்போதெல்லாம் சாத்தியப்படாத காரியமாகப் போய்க் கொண்டிருக்கின்றது.

ஏகத்துவ கொள்கையின்படி, இறைவனை வழிபடுவதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்துகள் எதுவுமில்லை. என்றாலும், அந்த வழிபாட்டுச் செயன்முறைகளிலும் நடைமுறைகளிலும் சிறியசிறிய மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கும் மத இயக்கங்கள், இன்று பல்கிப் பெருகியிருக்கின்றன.

இதனால், ஒருசில மத அனுஷ்டான செயன்முறை சார்ந்த அடிப்படையில், முஸ்லிம் சமூகம் இன்று கூறு போடப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை.

அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள், அரசியல் ரீதியாகவும் துண்டங்களாகியுள்ளனர் என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். முன்னொரு காலத்தில், பெருந்தேசியக் கட்சிகளின் கீழ், அணி திரண்டிருந்த சிறுபான்மை மக்கள், இன்று தமக்கெனத் தனித்தனி அரசியல் கட்சிகளை உருவாக்கியிருக்கின்றார்கள்.

தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியிலும் இவ்வாறு ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் தோன்றியிருக்கின்றன. இலங்கை மக்களிடையே முன்னொரு காலத்தில் காணப்பட்ட அரசியல் ஒற்றுமை, இவ்வாறு கட்சிகளை உருவாக்கி, அரசியல் செய்யும் காரணத்துக்காகப் பிழையாக வழிநடாத்தப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்டுச் சொல்வது என்றால், முஸ்லிம்களிடையே அரசியல் சார்ந்த முரண்பாடுகள் வலுப்பெற்றிருக்கின்றன. தென்பகுதி முஸ்லிம்கள், மலையக முஸ்லிம்கள், கொழும்பு முஸ்லிம்கள், வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் என்றும் அவர்களுடைய அரசியல் என்றும் இங்கு வேலிகள் போடப்பட்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு விட்டால், என்ன நடக்கும் என்பதை, மேற்குலகின் முஸ்லிம் விரோத சக்திகள், வேத நூல்களில் இருந்து நன்றாக அறிந்து வைத்துள்ளன.
எனவேதான், முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம் மக்களுக்கு மத்தியிலும் பிரிவினையை உண்டுபண்ணும் கைங்கரியத்தை யூத, சியோனிச சக்திகள் மேற்கொள்கின்றன.

பிராந்தியத்தில் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக, அட்டூழியங்களைப் புரியும் ஓரிரு கடும்போக்கு அமைப்புகளும் மேற்படி சக்திகளுடன் திரைமறைவில் கைகோர்த்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

அந்த அடிப்படையில், உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடையேயும் முஸ்லிம்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலும் புதுப்புது முரண்பாடுகள் உருவேற்றி விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் கடைசி அத்தியாயமே கட்டார் நாட்டின் மீதான தடை எனலாம்.

எவ்வாறு சர்வதேச அரங்கில், முஸ்லிம்களைப் பிரித்து ஆள்வதற்கும் அவர்களை முரண்பாட்டு நிலையில் வைத்திருப்பதற்கும் மேற்குலக சக்திகள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனவோ, அதே உத்தியை நகலெடுத்து, இலங்கையின் ஆட்சியாளர்களும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகப் பல கூறுகளாக வைத்திருப்பதற்கான நகர்வுகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது பொய்யல்ல.

முஸ்லிம் தலைவர்களை, அரசியல்வாதிகளை வேறுவேறு அரசியல் முகாம்களுக்குள் வைத்திருப்பதன் மூலம், ஒருவருக்கு எதிராக மற்றவரைப் பயம்காட்டி அரசியல் செய்கின்ற தந்திரம், ஆளும் கட்சிகளுக்கு வாய்க்கப் பெற்றிருக்கின்றது. இதை அறிந்து கொண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அகப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, இதே வடிவில் முஸ்லிம் மக்களையும் தங்களது அரசியல் நலன்களுக்காகக் கட்சி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் ஊர்வாரியாகவும் துருவப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

மேற்குலகம், உலக முஸ்லிம்கள் மீது எவ்வாறு பிரித்தாளும் உத்தியை பிரயோகிக்கின்றதோ, பெருந்தேசியவாதம் முஸ்லிம் அரசியலை எவ்வாறு பிரித்தாளுகின்றதோ, அது மாதிரியே முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களை வேறுபட்ட அரசியல் கருத்துநிலை பற்றிய சிறைகளுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர் என்பது மிகவும் மனவருத்தத்துக்குரியது. எனவே, இந்நிலைமை மாற வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றி, எத்தனையோ வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம் மக்கள் இது விடயத்தில் நிறைவேறாத கனவுகளுடனேயே இன்னும் இருக்கின்றனர். இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகத் தலைவிரித்தாடுகின்ற இனவாதமும் கடும்போக்கு சிந்தனைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை மீளவும் வலியுறுத்தி நிற்கின்றன.

ஆனால், ஒற்றுமை என்னும் கயிற்றை இவர்கள் பற்றிப் பிடிக்காததன் காரணமாக, இன்று எத்தனையோ வாய்ப்புகள் நழுவிப் போய்க் கொண்டிருக்கின்றன. இனவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை நாம் நழுவவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இன்று நாடாளுமன்றத்தில் இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தும், முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கின்றமைக்கு பிரதான காரணம், ஒன்றுதிரண்ட பலம் இன்மையேயாகும்.

இந்த நாட்டில் தமிழர்கள், தங்களது இனத்துக்கான அடையாளத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்துவதற்காக சுமார் 50 வருடங்களாக ஏதோ ஓர் அடிப்படையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 30 வருட ஆயுதப் போராட்டமும் உள்ளடங்குகின்றது.

இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது,ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமோ தனித்தனியாகப் பிரிந்து நின்று அரசியல் செய்வதன் மூலமோ தமிழ் மக்களின் உரிமைகளை, அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆயுதக் குழுக்களாகவும் இயக்கங்களாகவும் மாற்றுக் கருத்துள்ள அரசியல் கட்சிகளாகவும் இயங்கிய தமிழ்த் தரப்பினர், தமது ஒன்றுதிரண்ட பலத்தின் மூலம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் கூட்டமைப்பாகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்டனர்.

தனித்தனியாகச் செயற்பட்டு, மக்களின் உரிமைகள், அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத நிலையிலேயே ஒரு கூட்டமைப்பை உருவாக்க முனைந்ததாக த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு ஒரு கூட்டமைப்பு உருவான காரணத்தினாலேயே, தனிப்பெரும் அரசியல் அடையாளமும் அதன்மூலம் பலவற்றைச் சாதிக்கக் கூடிய பலமும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றது என்றால் மிகையில்லை.

எனவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றபோது, அதற்காக ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றபோது,அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படலாம்.

இவ்வாறு, தமிழ்க் கூட்டமைப்பை முன்மாதிரியாக எடுக்க விளைகையில், தமிழ்க் கூட்டமைப்பில் இருக்கின்ற தவறுகள், முரண்பாடுகளைப் பார்த்த பின்புமா முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க முனைகின்றீர்கள்? என்று விதண்டாவாதக் கருத்துகள் முன்வைக்கப்படுவதுண்டு. அது தவறு.

ஏனெனில், த.தே.கூட்டமைப்பின் சில சிறப்பம்சங்களை முஸ்லிம் கூட்டமைப்பு உள்வாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு கூட்டமைப்பின் மிகச் சிறந்த நியம வடிவம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் கருதவில்லை.

எனவே, அதில் இருக்கின்ற நல்ல விடயங்களை மட்டும் உள்வாங்கியதாக முஸ்லிம் கூட்டமைப்பு அமையப் பெற வேண்டும். அத்துடன், தனித்தலைமை அன்றி, இணைத்தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபையே அதற்குப் பொருத்தமானதாகவும் அமையும்.

முஸ்லிம் கூட்டமைப்பு என்று பேசுகின்றபோது, வடக்கு, கிழக்குக்கு வெளியிலான பிரதேசங்களை மையமாகக் கொண்டு, அவ்வாறான ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். அங்கு, முஸ்லிம் மக்கள் சிதறுண்டு வாழ்வதுடன்,பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் சிறு குழுவினராகவும் வசிக்கின்றனர். அதுமட்டுமன்றி,அவர்கள் இன்னும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களாகவும் அதிலிருந்து அனுகூலங்களைப் பெறுபவர்களாகவும் இருக்கின்றனர்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாக வைத்தே, முஸ்லிம் கூட்டமைப்பைக் கட்டமைப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாக அமையும். அதுவும் கிழக்கில் இருந்து அதைக் கருக்கொள்ளச் செய்து, வடக்குக்கு விஸ்தரிப்பது இன்னும் காரிய சாத்தியமானதாக அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்று, உத்தேச முஸ்லிம் கூட்டமைப்பும் ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கில் அதிகாரத்தைப் பலப்படுத்த முனைவதுடன், அதன் பின்னர், தென்பகுதிக்கு அதை விஸ்தரிப்பது பற்றிச் சிந்திக்கலாம்.

ஆனால், வடக்கு, கிழக்கில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவானாலும் அது தேசிய ரீதியான முஸ்லிம்களின் விடயங்களில் அக்கறை செலுத்தும் பலம்பொருந்திய அமைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

அந்தவகையில், வடக்கு, கிழக்கில் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான களம் இப்போது சாதகமானதாக மாற்றமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் நெருங்கும்போது, இந்தச் சாத்தியத்தன்மை இன்னும் அதிகரிக்கலாம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. கிழக்கு முஸ்லிம்கள் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, பிரதானமாகக் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களும் அதற்கு அடுத்ததாக வடக்கில் வாழும் முஸ்லிம்களும் தனித்துவ அடையாள அரசியலை விரும்புகின்றனர்.

ஆனாலும், குறிப்பாக இப்போது கிழக்கில் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான, சாதக நிலையாக இதைக் கருதமுடியும். இந்த வெற்றிடம் ஏற்படப் பிரதான காரணம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஆகும்.

எவ்வாறிருப்பினும், கிழக்கில் அரசியல் செய்கின்ற பிரதான கட்சிகளாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளையும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் கூட்டமைப்பாக ஒருமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்ற நிலைப்பாடே இதுகாலவரைக்கும் இருந்து வந்தது.

அதுபோல, மு.கா எனும் பிரதான முஸ்லிம் கட்சியை, இதற்குள் உள்வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக சிந்தனையாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இருந்தாலும் அப்படியான ஓர் எண்ணம், அக்கட்சியின் தலைமைக்கு இருப்பதாக இதுவரை வெளித்தெரியவில்லை.

ஆனால், மு.கா இல்லாவிட்டால், முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியமில்லை என்ற களநிலைமைகளில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு உள்வாங்கப்படக் கூடிய தரப்பினரில் பலர், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் இப்போது இருக்கின்றனர். ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத் அணியினரும் வெளியில் இருந்து ஆதரவளிக்கக் கூடிய ஹிஸ்புல்லா போன்ற அரசியல்வாதிகளும் எனப் பல தரப்பினர் உள்ளனர்.

இவர்களில் ஒரு சில தரப்பினரிடையே இப்போது இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி, பரகசியமாகவும் அவர்கள் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொள்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

இறக்காமத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதாவுல்லா, அமீர்அலி, ஹசன்அலி, பஷீர் எனத் துருவப்பட்டிருந்த பலர் கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி அக்கரைப்பற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக அமைப்பு ஒன்றின் இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வில், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தலைமைகளுடன் பஷீர் சேகுதாவூதும் ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்துள்ளனர்.

இது நல்லதொரு ஆரம்பமாகும். இதை அடிப்படையாக வைத்து, மேற்படி தரப்பினர் மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் அக்கட்சியையும் உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை கிழக்கில் இருந்து உருவாக்க வேண்டியுள்ளது.

அது தேர்தலுக்கான கூட்டாக இல்லாமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட, நீண்டகால ஒன்றிணைவாக அமைய வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவி இயக்குனரை திகைக்க வைத்த ரஜினி..!!
Next post பிரகாஷ்ராஜ் பற்றி குறை கூற முடியவில்லை: ஸ்ரேயா..!!