By 27 June 2017 0 Comments

நுண் நிதியும் வாடகை கொள்வனவும்..!! (கட்டுரை)

image_af3a4e422eவடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பெரும் கடன் பொறியில் சிக்கியுள்ளனர் என யுத்தம் முடிந்த காலந்தொட்டு எங்களில் சிலர் சுட்டிக்காட்டியதை கவனத்தில் எடுக்க, மத்திய வங்கிக்கு பல வருடங்கள் எடுத்துள்ளன.

நான், ஐந்து வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கிராமிய வருமானங்களை ஆய்வு செய்யத் தொடங்கியபோது, கடன், பொருளாதாரத்தின் மையப்பொருளாக ஆகிவிட்டிருந்ததைக் கண்டுகொண்டேன்.

இந்தக் கடன் பிரச்சினைகள் குறித்து, அரசாங்கம் பல வருடகாலமாகக் காண்பித்துவந்த அலட்சியப்போக்கு மற்றும் மறுப்பின் பின்னர், இப்பொழுது மத்திய வங்கி, யுத்தத்தால் சீரழிந்த மாவட்டங்களில் இந்தப் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

யுத்ததின் பின்னரான வடக்கு, கிழக்கு மாகாணங்களில், விவசாயத்தை மீண்டும் தொடங்குவது, அடகு மீட்டல், சுய வேலை வாய்ப்பு திட்டங்கள், வீடமைப்பு எனப் பல தேவைகளின் பொருட்டு கடன் வழங்கப்பட்டது.

இதன் விளைவானது, வாழ்வாதாரத்தை குழப்புதல், வேலை வாய்ப்பு மூலங்களைக் கெடுத்தல் என்பதோடு நின்றுவிடாது, இருந்த சொத்துகளையும் இழக்க வைப்பதாக அமைந்தது.

தற்போது யுத்தத்தால் சீரழிந்த பிராந்தியங்களில், மோசமாக மக்களைச் சுரண்டும் திட்டங்களாக வாடகை மற்றும் குத்தகை கொள்வனவு திட்டமும் நுண்நிதி திட்டங்களும் உள்ளன. மிக உயர் அளவிலான வட்டி வீதத்தை அறவிடுவதுடன் மக்களின் சொத்துகளைப் பறித்தெடுக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் உள்ளன.

துன்புறுத்தி, பலவந்தமாகக் கட்டுப்பணத்தை வசூலிக்கும் இத்தகைய நிதிநிறுவனங்களின் முகவர்கள், சமுதாய மற்றும் குடும்ப வாழ்வை சீரழிப்பவர்களாக உள்ளனர். இதனால் சில மாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சில பெண்கள் சங்க சமாசங்கள், இவ்வாறான திட்டங்களைத் தடை செய்யும்படி, அரசாங்க அதிபர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

அந்தளவுக்கு இவர்களது கடன் அறவிடும் நடவடிக்கை கொடூரமானதாக உள்ளது. இத்தகைய கடன் தொடர்பில் அதிகரித்துவரும் தற்கொலைகள், மற்றும் தற்கொலை முயற்சிகள் இந்தப் பிரச்சினையின் ஆழத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன.

கடனும் சொத்து இழப்பும்

கடன் கொடுப்போர் கிராமிய மக்களை சுரண்டுவதாலும் அடிமையாக்கி உள்ளதாலும் கடன் என்பது எப்போதும் கிராமிய மக்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

உண்மை யாதெனில், கிராமிய மக்களின் விவசாய உற்பத்தியை நலிவடையச் செய்யும் காரணியாக கடன்படு நிலை காணப்பட்டது. சில நூறு வருடங்களுக்கு முன்னர், கொலனித்துவ ஆட்சிக்காலத்தின்போது, அவர்கள் கண்ட தீர்வாக கூட்டுறவின் வரலாறு ஆரம்பமாகின்றது.

1910களில் கிராமியக் கூட்டுறவு கடன் சங்கங்கள் உருவாக்கியிருந்தன. 1960களில் மக்கள் வங்கி ஆரம்பிக்கப்படும் வரையில், இந்த முறைசார்ந்த, நிதி நிறுவனங்கள் சூறையாடல் கடன் வழங்குவோரின் பிடியிலிருந்து கிராமிய மக்களை விடுவிக்க, அரசாங்கத்தால் தொடக்கப்பட்டவையாகும்.

முரண்பாடான விடயம் யாதெனில், கடன் வழங்கும் முதலைகளாக உள்ளவை, முறைசார் நிதி நிறுவனங்களில் சிலவாகும். இந்த நிலைமை, இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியதால் ஏற்பட்டதாகும். இது நிதித் துறைக்கு, அரசால் வழங்கப்பட்ட ஒட்டு மொத்த சிறப்புரிமையாகக் கொள்ளப்படலாம்.

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் வைப்புகளை ஏற்கும் நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அக்கறை செலுத்துகின்றன.

இந்த நிறுவனங்கள், முறிவடையுமாயின் அது நிதித் துறையில் நம்பிக்கையை நலிவடையச் செய்யும் எனும் பயமே இதற்கான காரணமாகும். நிதி முறைமையின் ஒட்டு மொத்த ஸ்திரத் தன்மையை பாதிக்காத வரையில் கடன் வழங்குதலில் முகம் கொடுக்க வேண்டிய ஆபத்துகள், கடன் வழங்கும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம் என கட்டுப்படுத்துவோர் (மத்திய வங்கி) கருதுகின்றனர்.

ஆனால் இது, கடன் திட்டங்களினால் கவரப்படும் வறிய மக்கள் மீது, சூறையாடல் நடைபெறுகின்றது என்பதையும் கடன்களின் பாரிய தீங்கான தாக்கத்தையும் கவனத்தில் எடுப்பதில்லை.

பொருளாதார உற்பத்திக்கு கடன் எப்போதுமே முக்கியமானதாக இருக்கின்ற போதும், நிதி மயப்படுத்திய திரட்டலை நோக்கிய பெயர்ச்சி காரணமாக, கடனின் வகிபாகம் சிக்கலாக்கப்பட்டுள்ளது.

அண்மைய தசாப்தங்களில் திரும்பத் திரும்ப நடக்கும் பங்குச் சந்தை மற்றும் நிதிமயப்படுத்திய திரட்சி மற்றும் அதனோடு சேர்ந்து வரும் நெருக்கடிகளை பிரதிபலிப்பாகும். மேலும் இவ்வாறான நெருக்கடிகளில் வரும் துன்பங்களுக்கு முகங்கொடுப்பவர்கள் வறிய மக்களாகவே உள்ளனர்.

சூறையாடல்க் கடன்கள்

பல தசாப்தங்களாகப் பொருளாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு, யுத்தம் முடிந்தும் சுரண்டலுக்கான பிரதான தளமாயிற்று.

வாடகை கொள்வனவு அல்லது கட்டுப் பணத்துக்கு பெறக் கூடியதாக இருந்த நுகர்வுப் பொருட்களும் வாகனங்களும் யுத்தத்தால் சீரழிந்திருந்த மக்களைக் கவர்ந்தன.

கொள்வனவு செய்பவர் முதலில் ஒரு தொகையை கட்ட வேண்டும். பின்னர் தவணை கட்டுப் பணம் செலுத்த வேண்டும். போதிய வருமானமின்றிக் கட்டணங்களாகச் செலுத்தும் கடன்கள் பெறப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அவர்களால் தவணைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் போகும். அவர்கள் வாடகை கொள்வனவு முறையில் வாங்கிய பொருள்கள் பறிக்கப்படுகின்றன.

ஆனால், ஒப்பந்தத்தில் உள்ளபடி பொருளின் தொடக்க பெறுமதியை கடனாளி செலுத்திய பணம் பறிக்கப்பட்ட பொருளின் பெறுமதி ​என்பவற்றிலிருந்து கழிக்கும் போது வரும் மேலதிக தொகையை கொள்வனவு செய்தவருக்கு லீஸிங் கம்பனிகள் கொடுப்பதில்லை.

இவ்வாறு லீஸிங் கம்பனி எதிர்பாராத இலாபத்தைப் பெற கொள்வனவாளர், தான் வாங்கிய பொருளையும் கொடுத்து தனது கடனையும் அதிகரித்துக் கொள்கின்றனர்.

அடுத்து, யுத்தத்தால் சீ​ரழிந்த பகுதிகளில் கிராமிய பெண்கள் தமது குடும்பத்தை நடத்தப் பணம் தேவையான இக்கட்டான நிலையில் உள்ளனர். இதனால் நுண்நிதி திட்டங்கள் அதிகம் உருவாகியுள்ளன.

நுண்நிதி கடன்கள் வறுமை ஒழிப்புக்கான ஒருவழி எனும் தவறான எண்ணத்துடன் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச நிறுவனங்களும் கூட நுண்நிதி நிறுவனங்களை நிறுவது சூறையாடல் கடன்களுக்கு வழி வகுத்துள்ளன.

வடக்கு, கி​ழக்கில் பல கிராமங்களில் பெண்கள் ​வாராந்தம் கட்ட வேண்டிய, ஒன்றுக்கு மேற்பட்ட நுண்நிதி கடன்களைப் பெற்றுள்ளனர். சாதாரணமாக ஒரு நுண்நிதி கம்பனி தனது முகவர் ஒருவரைக் கிராமத்துக்கு அனுப்பும்.

இவர் தனது செயற்பாடுகளை நடத்திச் செல்ல ஒரு பெண்ணை இனம் காண்பார். இந்தப் பெண் மூன்று தொடக்கம் ஆறு வரையாக பெண்கள் கொண்ட குழுக்களை உருவாக்குவார். இந்த குழுவிலுள்ள பெண் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு வாராந்த தவணைக் கட்டணத்துக்கான பிணையாளி ஆவார்.

இந்த குழுக்கள் மற்றவர் மீது ஒழுங்காக கடனைக் கட்டும்படி பலத்த அழுத்தத்தை பிரயோகிக்கும். தவணைக் கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு தொல்லை கொடுக்கும்.

கம்பனிக் கடன் அறவிடும் முகவரின் அத்துமீறல் காரணமாக, பல குடும்பங்கள் பிரியவும் கூட்டாக கடன் எடுத்தவர்களான அயலவர்கள் மற்றும் உறவினர்களிடையே மோதல் ஏற்படவும் வழிவகுத்துள்ளது. மேலும், பெண்கள் துஷ்பிர​யோகத்துக்கு உள்ளாகக் கூடிய ஆபத்துக்கும் முகம் கொடுக்கின்றனர்.

சில கடன் பத்திரங்களில் வட்டி வீதம் 26%, 28% ஆக இருப்பினும் அநேகமாக கடன்பட்ட பெண்கள் தமது கடனுக்காக வட்டி வீதத்தை அறியாது உள்ளனர். 5% – 8% வழங்கப்படும்.

ஆனால், பல சந்தர்ப்பங்களில் உண்மையான வட்டிவீதம் மிக அதிகமாக இருந்ததை நான் அவதானித்தேன். உதாரணமாக 28% வட்டியில் வருட முடிவில் 100,000 ரூபாய் கடனுக்கான வட்டியும் முதலுமாக 128,000 ரூபாய் ஆகும்.

ஆனால், இந்த நுண்நிதி நிறுவனங்கள் இரண்டாம் வாரத்திலிருந்து வாராந்தம் 2,560 ரூபாய் என்ற முறையில் ஐம்பது வாரங்களுக்கு கட்டச் சொல்கின்றன. இதில் வட்டி வீதத்தைக் கணித்தபோது அது 69%ஆக இருந்தது. இதனால் நுண்நிதி திட்டம் மிகவும் இலாபகரமானது. கடன்களில் மூன்றில் ஒரு பகுதி மீளப்பெற முடியாது போயினும் கம்பனியினால் இலாபம் ஈட்ட முடியும்.

இப்போது வெற்றிகரமான கம்பனிகள் கூட 30% இலாபம் ஈட்டுவது அருமை. அப்படியாயின் சுய வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் எவ்வாறு 80% மேற்பட்ட இலாபத்தை ஈட்ட முடியும். 69% வட்டி கொடுத்த பின்னர், குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட வேண்டுமாயின் 80% இலாபம் ஈட்ட வேண்டும். இதை எவ்வாறு ஒரு கிராமிய பெண்ணால் செய்ய முடியும்?

சூறையாடும் நுண்நிதி திட்டங்களில் மாட்டிக்கொள்ளும் சமூகமாக கிராமிய பெண்கள் உள்ளனர். இவர்கள் பல கடன்களைப் பெற்றுள்ளனர். அவற்றுக்குத் ‘திங்கள் கடன்’, ‘செவ்வாய் கடன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

நுண்நிதி நிறுவனங்கள், தாம் வழங்கிய கடன்களில் அதிகமானதை மீளப்பெறுவதாக கூறுகின்றனர். கடன்கள் மீளப் பெறப்படுவதால் மத்திய வங்கியை விசனப்படுத்தும் செயற்படா சொத்து நெருக்கடி ஏற்படவில்லை.

அநேகமாக பலவந்தம் மற்றும் துஷ்பிரயோகம் எனும் வழிகளில் கடன் அறவிடப்படுகின்றது. இந்த கடன்கள் உற்பத்தி மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமானவை அல்ல. இந்தப் பின்புலத்தில் நுண்நிதி சார்ந்த பிரசாரகர்கள் மட்டுமன்றி, நவதாராளவாத ஆலோசகர்கள் மற்றும் பொருளியலாளர்களும் கூட நுண்நிதி திட்டங்களை கட்டுப்படுத்துவதை எதிர்க்கின்றன.

உண்மையான வட்டி வீதம் 20 சதவீதத்திலும் கூடுதலாக வட்டி அறவிடும் கடன் திட்டங்களை நிறுத்தும் கடுமையான கொள்கை ​அமுலாக்கப்பட்டால் அது சூறையாடல் கடன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் கிராமியக் கடனும் அவசியமானது என்ற வகையில் அரசாங்கம் இதைப் பொறுப்பு எடுக்க வேண்டும். ஆனால், நிதி மயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிக்கும் கொள்கையை கடைப்பிடிப்பதால் இதற்கான தீர்வு அண்மையில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

இந்த கடன் முதலைகளுக்கு எதிராக உருவாகும் போராட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி மூலதனத்தை அரவணைக்கும் அரசாங்கத்தின் ஆபத்தான போக்கையும் சவாலுக்கு உட்படுத்துவதாக அது அமையும்.Post a Comment

Protected by WP Anti Spam