By 10 July 2017 0 Comments

டொனால்ட் ட்ரம்ப்பின் ஊடக மோதல்கள்..!! (கட்டுரை)

image_e846d74dd6ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி, வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் பல இருந்திருந்தாலும், அவரது முழுமையான இயல்பு பற்றிய முழுமையானறிவு இருந்திருக்காவிட்டாலும், வழக்கமான ஜனாதிபதிகளைப் போல் அவர் இருப்பார் என, எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரை எதிர்த்தவர்களும் ஆதரித்தவர்களும், இந்த விடயத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

வெற்றிபெறுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து, நாட்டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்று, 6 மாதங்கள் தாண்டியிருக்கின்றன. அவரது பதவிக்காலத்தில் இதுவரை அவர் ஆற்றியுள்ள பணிகள் தொடர்பாக, முரண்பாடான கருத்தே நிலவுகிறது.

ஜனாதிபதியாக அவர் ஆற்றிவரும் பணிகளை, ஐ.அமெரிக்காவிலுள்ள வெறுமனே 39 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிக்கின்றனர். ஆனால், அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் 85 சதவீதமானோர், அவர் ஆற்றிவரும் பணியை ஆதரிக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களில் இந்த ஆதரவு, வெறுமனே 8 சதவீதமாக இருக்கிறது. சுயாதீனமான அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்களில் இந்த நிலைமை, 36 சதவீதமாக இருக்கிறது. இந்த வேறுபாடுகள், எந்தளவு தூரத்துக்கு ஐ.அமெரிக்கா பிளவுபட்டுக் காணப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இவையெல்லாம் ஒருபக்கமிருக்க, வேட்பாளராக ட்ரம்ப் இருந்த காலத்திலேயே, அவர் மீது முன்வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனமாக, அவர் அடிக்கடி பொய் சொல்கிறார் என்பது காணப்பட்டது. ஜனாதிபதி ஆகிய பின்னரும் கூட அவர், அந்தப் பழக்கத்தை விடவில்லை என்பது, விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அந்தப் பழக்கம், அவரது ஊழியர்களிடமும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வுக்கு, மிகக் குறைவானோரே வந்தனரெனக் கூறப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்புக்கு வந்திருந்தவர்களுடன் ஒப்பிடும் போது, அந்த எண்ணிக்கை, மிகக்குறைவாகக் காணப்பட்டது. இது தொடர்பான ஒப்பீடுகள் வெளியிடப்பட, ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதில் உச்சக் கட்டமாக, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஷோன் ஸ்பைஸர், ஐ.அமெரிக்க வரலாற்றில், பதவியேற்பு விழாவொன்றுக்கு அதிகமானவர்கள் பங்குபற்றிய சந்தர்ப்பம் இது என, எதுவித ஆதாரங்களுமின்றிய கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில்தான், ஊடகங்களின் பொறுப்பு என்பது, முக்கியமானதாக மாறியிருக்கிறது. வெறுமனே, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூறுவதை அறிக்கையிடுவதை விடுத்து, மக்களுக்கு அவசியமான விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் காணப்பட்ட போதிலும் கூட, தேர்தலுக்குப் பின்னர், தகவல்களை முடக்குவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், ஊடகங்களின் செயற்பாடுகள், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கல் ஃபிளின், தனக்குக் காணப்பட்ட ரஷ்யத் தொடர்புகள் தொடர்பாக, உப ஜனாதிபதியிடம் பொய் கூறினார் என்பதை வெளிப்படுத்தி, ஃபிளினின் பதவி பறிபோவதற்கு, ஊடகங்களே காரணமாக அமைந்தன; ஜனாதிபதி ட்ரம்ப்புடன், தான் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் குறிப்புப் புத்தகங்களை, பதவி நீக்கப்பட்ட புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி கொண்டுள்ளார் எனத் தெரிவித்து, அதன் உள்ளடக்கங்களை வெளியிட்டு, அது தொடர்பான செனட் விசாரணையை நடத்த வழிவகுத்தவை, ஊடகங்களே.
இந்த நிலையில்தான், ஊடகங்கள் மீதான தனது தாக்குதலை, ஜனாதிபதி ட்ரம்ப், தீவிரப்படுத்தியிருக்கிறார்.

பிரசாரக் காலத்தில், பெண் ஊடகவியலாளர் ஒருவர், கடினமான கேள்விகளைக் கேட்டார் என்பதற்காக, அவருக்கு மாதவிடாய்க் காலம் என்றவாறான விமர்சனத்தை முன்வைத்திருந்த ட்ரம்ப், விசேட தேவைகளுடைய ஊடகவியலாளர் ஒருவரின் அங்கவீனத்தைக் கேலி செய்தும், சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அப்போது, வெறுமனே வேட்பாளராக இருந்த அவர், தற்போது ஜனாதிபதியாக, பொறுப்புள்ள ஒருவராக மாறியிருக்கின்ற நிலையில், பொறுப்பான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றமையைத் தவறு என்று கூற முடியாது.

ஆரம்பத்திலிருந்தே, ஊடகங்களை, “போலிச் செய்தி” என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்ட அவர், தற்போது நேரடியான விமர்சனத்தை அதிகரித்துள்ளார். தன் மீது விமர்சனங்களை முன்வைத்த, எம்.எஸ்.என்.பி.சி தொலைக்காட்சியின் இரண்டு ஊடகவியலாளர்களை, “பைத்தியம்”, “குறைந்த நுண்ணறிவு கொண்டவர்கள்” என்று விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், அதில் பெண் ஊடகவியலாளர் மீது, தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

இந்த விமர்சனம்தான், ஊடகங்கள் மீதான அவரது உச்சபட்ச விமர்சனம் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தனது டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்ட காணொளி, அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி ஆகுவதற்கு முன்பாக, தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்த ட்ரம்ப், மல்யுத்தப் போட்டிகளையும் ஏற்பாடு செய்பவராகவும் இருந்தார். அவ்வாறான ஒரு மல்யுத்தத் தொடரொன்றுக்காக முன்னோட்டக் காட்சியில், அந்த அமைப்பின் தலைவரை, ட்ரம்ப் அடித்து வீழ்த்தும் காட்சியையே, அவர் டுவிட்டரில் பகிர்ந்தார். அதன்போது, அடித்து வீழ்த்தப்படுபவரின் முகத்துக்குப் பதிலாக, சி.என்.என் தொலைக்காட்சியின் இலட்சினை காணப்பட்டது.

இது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான நேரடியான அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது. அத்தோடு, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு, நேரடியாக ஊக்குவித்தமையைப் போன்று காணப்பட்டது. இதனால், கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவற்றைக் கண்டுகொள்பவரைப் போல, ஜனாதிபதி ட்ரம்ப் காணப்படவில்லை.

தனது இந்த நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனங்களை, சமூக ஊடக இணையத்தளங்களிலிருந்து தன்னை வெளியேற்றும் ஒரு முயற்சியாகவே, ஜனாதிபதி ட்ரம்ப் காண்கிறார். தனது நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களாக, அவர் பார்க்கவில்லை. எனவே தான், இவ்விடயத்தில் சதி நடப்பதாக அவர் கூறி வருகிறார்.

ஆனால், இவ்விடயங்கள் அனைத்துமே, திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களே ஆகும். ஊடகங்கள் மீதான விமர்சனமென்பது, வெள்ளை மாளிகையின் உத்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சர்வாதிகாரத் தன்மை கொண்ட நாடுகளில், முதலில் பாதிக்கப்படுவது, சுயாதீனமான ஊடகங்களே ஆகும். அவை அடக்கப்படும்/ஒடுக்கப்படும் பின்னணியில் தான், ஏனைய தவறான விடயங்கள் நடந்து செல்லும்.

இங்கும், தனக்கும் ஊடகங்களுக்குமிடையில், நேரடியான மோதலை ஏற்படுத்த, ஜனாதிபதி ட்ரம்ப் முயல்கிறார். அதன் மூலம், தனது ஆதரவாளர்கள் மத்தியில், ஒன்றில் ஜனாதிபதி ட்ரம்ப், இல்லாவிட்டால் ஊடகங்கள், இரண்டில் ஒருவரைத் தான் நம்ப முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கு அவர் முயல்கிறார். அவரது ஆதரவாளர்கள், ஊடகங்களை விடுத்து, தன்னை நம்புவார்கள் என, அவர் கணிப்பீடுகளை மேற்கொள்கிறார்.

தன்னை, கண்மூடித்தனமாக நம்பும் ஆதரவாளர்களைப் பெற்றுவிட்டால், தன் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் எதையும் அவர்கள் நம்பப் போவதில்லை என்பதை அவர் அறிந்துள்ளார். அதனால்தான், இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார்.

அவரது முயற்சி, வெற்றிபெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதி ட்ரம்ப்பையா அல்லது சி.என்.என் தொலைக்காட்சியையா நம்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதில், 43 சதவீதமான அமெரிக்கர்கள், ஜனாதிபதி ட்ரம்ப்பையும், 50 சதவீதமான அமெரிக்கர்கள், சி.என்.என் தொலைக்காட்சியையும் குறிப்பிட்டனர்.

இதே கேள்வி, குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் கேட்கப்பட்டபோது, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஆதரவாக 89 சதவீதமானோர் காணப்படும் நிலையில், வெறுமனே 9 சதவீதமானோரே, சி.என்.என் தொலைக்காட்சியை நம்புகின்றனர்.

ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில், ஜனாதிபதி ட்ரம்ப்பை 5 சதவீதத்தினரும் சி.என்.என் தொலைக்காட்சியை 91 சதவீதத்தினரும் நம்புகின்றனர்.

இதில், சி.என்.என் தொலைக்காட்சியை விட ஜனாதிபதி ட்ரம்ப்பை, அதிக நம்பிக்கைக்குரியவர் என்று 43 சதவீதமான அமெரிக்கர்கள் கூறியிருப்பது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பணியை அங்கிகரிக்கும்/ஆதரிக்கும் 39 சதவீதமான அமெரிக்கர்களை விட அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், ஊடகங்கள் மீதான பார்வையும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் விடும் சிறிய தவறுகளும் ஊதிப் பெருப்பிக்கப்படும் சூழலைக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு முன்னைய ஜனாதிபதிகள், ஊடகங்களை எவ்வளவு தூரம் வெறுத்திருந்தாலும், ஊடகங்களை அச்சுறுத்துவதற்கு முயன்றதில்லை. மாறாக, தெளிவான தொடர்பாடல் மூலம், தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளவே முயன்றார்கள்.

ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப், ஊடங்களை ஒதுக்குவதன் மூலமாக, ஒரு கட்டத்தில் ஊடகங்கள், தங்களின் பார்வையாளர்களுக்காக, தங்களின் வளர்ச்சிக்காக, தன்னுடைய பக்கமாகத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார். இது, ஆபத்தான ஒரு நிலையாகும்.

ஏனைய நாடுகளில் இது நடைபெற்றாலும், அது சாதாரணமாக அமையும். ஆனால், ஐ.அமெரிக்காவில் இது நடைபெறுகின்ற நிலையில், உலகிலுள்ள ஏனைய தலைவர்களும், இதே முறையைப் பின்பற்றுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. அதுதான், மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனவே, மக்களும் ஊடகங்களும், முன்னரைவிட அதிகமான அளவில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ளது என்பது தான் கூறவேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam