வடக்கு கிழக்கு இணைப்பு: நிலைமாற கூடாத நிலைப்பாடுகள்..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 59 Second

image_04ec66c34bஇனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இழுபறியாகிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசியல் பின்புலத்தில், அதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முயற்சியும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது.

ஆகையால், அதனோடு தொடர்புடைய மற்றைய விடயமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இன்னும் சாத்திமற்றதாகத் தெரிகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் உத்தேச முஸ்லிம் கூட்டணியின் முக்கியஸ்தருமான
எம்.ரி.ஹசன் அலி, இணைந்த வடகிழக்கே முஸ்லிம் கூட்டணியின் இலக்கு எனக் குறிப்பிட்டதாக வெளியான செய்தியும் அவரது மறுப்பறிக்கையும் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு ஆகிய விடயங்களில், முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாடுகள் மீள வலியுறுத்தப்பட வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் மாகாண சபைகள் முறைமை உருவாவதற்கு அடிப்படையாக அமைந்த இலங்கை – இந்திய ஒப்பந்தமே, தனித்தனியாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கு வித்திட்டது.

அரசியல், இராஜதந்திர நகர்வுகளில் வெளிப்படையான காரணங்களும் மறைமுக நோக்கங்களும் இருப்பது சர்வ சாதாரணமானதும் கூட என்ற அடிப்படையில், இந்தியாவின் பிராந்திய நலன், தமிழ் மக்கள் மீதான அக்கறை அல்லது அக்கறையிருப்பதாகக் காட்டிக் கொள்ள முனைகின்றமை, உள்ளடங்கலாக வேறு பல விடயங்கள், இவ்விணைப்புக்கு மறைமுக காரணங்களாக அமைந்திருந்தன எனலாம்.

ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகர்ந்து கொடுக்கப்படுவதை ஒரு முக்கிய நோக்காகக் கொண்டு, மாகாண சபைகள் முறைமைக்கு இந்தியா வலியுறுத்தியிருக்கலாம். என்றாலும், இதனால் வடக்கு, கிழக்குக்கு வெளியிலான மாகாணங்களிலுள்ள மக்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளின் அளவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம்கள் அனுகூலங்களை பெற முடியவில்லை என்பதே நம்முடைய அனுபவமாக இருக்கின்றது.

ஜே.ஆர்.ஜயவர்தனவும் ராஜீவ் காந்தியும் ஒப்பமிட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பிறகு, இணைந்த வட-கிழக்கின் முதலாவது முதலமைச்சராக ஆர். வரதராஜப்பெருமாள் பதவி வகித்தார்.

துரதிர்ஷ்டவசமாகக் கடைசி முதலமைச்சராகவும் அவரே இருந்தார். ஏனெனில், இவ்விரு மாகாணங்களும் ‘வடகிழக்கு’ என 19 வருடங்களாக இணைந்திருந்த போதும், ஒரு சில வருடங்கள் மாத்திரமே அங்கு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்ட மாகாண சபையின் ஆட்சி நடந்தேறியது என்றால் மிகையில்லை. யுத்தசூழல் போன்ற காரணங்களால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதிருந்த சூழலில், வடக்கு, கிழக்கு என்ற பிரமாண்டமான நிலப்பரப்பில் அரசியல் அதிகாரம் இன்றி, சிவில் நிர்வாகச் செயற்பாடுகள் மட்டுமே இடம்பெற்றன.

எனவேதான், ஒரு மாகாண சபை அடையவேண்டிய நன்மையை, இந்த இருதசாப்தங்களிலும் முழுமையாக வடகிழக்கு மாகாணம் அனுபவிக்கவில்லை என்று கூறலாம்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட வேளையில், அது ஒரு தற்காலிகமான இணைப்பாகவே இருந்தது. நிரந்தரமாக இணைப்பது என்றால், பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. ஆனால், மாகாணங்கள் பிரிக்கப்படவும் இல்லை; வாக்கெடுப்பு கடைசி மட்டும் இடம்பெறவும் இல்லை.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தொடுத்த வழக்குக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக, சட்ட ரீதியான முறையில், இம்மாகாணம், வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாணங்களாகப் பழையபடி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு தேர்தல்கள் நடைபெற்றன. முதலமைச்சர்களும் அமைச்சர்களும் பதவி வகித்தனர்.

இந்தநேரத்தில் நல்லாட்சி நிறுவப்பட்ட பிறகு, தமிழர் தரப்பு, தம்முடைய மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ளக் கடுமையான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பது குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அது நீண்ட வரலாற்றைக் கொண்டது. தமது சுயத்தை நிர்ணயிப்பதற்காகத் தமிழ்ச் சமூகம், ஐம்பது வருடங்களுக்கும் மேலாகப் போராடியிருக்கின்றது. இதில 30 வருட

ஆயுதப் போராட்டமும் உள்ளடங்கும். ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உயிர்கள், சொத்துகள் பலியெடுக்கப்பட்டமை உள்ளடங்கலாக, ஆயுத இயக்கங்கள் மேற்கொண்ட பல செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையும் நியாயத்துக்கு அப்பாற்பட்டவையும் என்பதில் மறுபேச்சில்லை.

ஆனால், அந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் நோக்கம் தமிழர்களுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதற்காகத் தமிழர்கள் இழந்தவைகளும் அனுபவித்தவைகளும் சொல்லிமாளாதவை. வெறுமனே, தலைமைத்துவ பதவிகளுக்குள் ஒளிந்து கொண்டு, அறிக்கை விட்டுக் கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல, மேற்கொள்ளப்பட்ட ஒரு போராட்டமல்ல இது; எனவேதான், தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுப் பொதி வழங்கப்படுவது அவசியமானது.

அந்தவகையிலேயே நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்ட பிற்பாடு, இனப்பிரச்சினைக்கான தீர்வை எவ்வழியிலேனும் பெற்றுக் கொள்வதில், தமிழ் அரசியல்வாதிகள் குறியாய் இருக்கின்றனர்.

சிறுபான்மை மக்கள் மீது, குறிப்பாக இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், நல்லெண்ணத்தை வெளிப்படுத்திவரும் இன்றைய ஆட்சிச்சூழலில், கிடைக்கப் பெறுகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வதில், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மிகக் கவனமாகச் செயற்படுகின்றது.

இது அவர்கள் மீதுள்ள தார்மீகக் கடமை மட்டுமல்ல; முஸ்லிம் அரசியலில் இல்லாத ஒரு முன்மாதிரியும் எனலாம். அதன்படி அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஒன்றை மேற்கொண்டு, தீர்வுக்கான சில ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி, இப்போது பாரிய தடங்கல்களை எதிர்கொண்டுள்ளது.

முற்போக்கு சக்திகள் தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துகின்ற போதிலும், எதிரணி மட்டுமன்றி பௌத்த பீடங்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன என்பது வேறுகதை.

எவ்வாறிருப்பினும், தீர்வுத்திட்டம் பற்றி பேசத் தொடங்கியதுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தி விட்டது. புலிகள், பலமாக இருந்த காலத்தில், அவர்கள் இவ்விரு மாகாணங்களையுமே ‘தமிழீழம்’ என்று அழைத்தனர். அப்போது இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்தன. ஆனால், இப்போது மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, பல களநிலை மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இருப்பினும்,வடக்கையும் கிழக்கையும் இணைத்த நிலப்பரப்பில், தமிழ்த் தரப்புத் தமக்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

ஆரம்பத்தில் இருந்தே, வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு கிழக்கில் பிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கில் உள்ள பிரதான முஸ்லிம் அரசியல் தலைமையும் இதை எதிர்த்தது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாத்திரம் வழக்கம்போல, பிடிகொடுக்காமல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். அவரது செயற்பாடுகள், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில், பலமான சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தன.

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு, ஹக்கீம் இரகசியமாக சம்மதித்துவிட்டார் என்று மக்கள் விமர்சிக்குமளவுக்கு நிலைமைகள் சென்றிருந்தன. இவ்விவகாரம் சூடுபிடித்த பிறகு மு.காவின் கிழக்கு அரசியலில் ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக றவூப் ஹக்கீமும் தனது கருத்துகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்பட்டது எனலாம்.

இரு மாகாணங்கள் இணைப்புப் பற்றி கிழக்கில் ஏற்பட்ட இந்த எதிர்ப்பலை, மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உண்டுபண்ணியது. அதாவது, வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்றால் கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதையும், கிழக்கில் உள்ள முஸ்லிம் தலைமைகள் சம்மதிக்காத பட்சத்தில் வேறுயாருடைய இணக்கத்தையும் பெற்றுக் கொண்டு, அதைச் செய்வது சாத்தியமில்லை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொண்டுள்ளது எனலாம்.

பிற்பாடு, அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கிழக்கு முஸ்லிம்களை நோக்கி வெளியிட்ட கோரிக்கைகள், கருத்துகள் அதை ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தன.

இவ்வாறான பின்னணியோடு அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத்திட்டம், வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் இன்னும் பேச்சளவிலேயே இருக்கின்றன.

ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுபற்றிப் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே எம்.ரி. ஹசன் அலி,“இணைந்த வடகிழக்கு மாகாணமே முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று கூறியதாக, அவரது பெயரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தி, முஸ்லிம் அரசியல் அரங்கில் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளது.

உண்மையிலேயே ஹசன் அலி இவ்வாறு சொல்லியிருப்பாரானால், இணைந்த வடக்கு , கிழக்கு மாகாணத்துக்குச் சாதகமாகப் பேசிய, கிழக்கின் முதலாவது மூத்த அரசியல்வாதியாக இருப்பார் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவரது மறுப்பறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டிய நிலைவந்தால், தமிழ்த் தேசியத்துக்கும் முஸ்லிம் தேசியத்துக்கும் அதில் தனித்தனி ஆட்சி அலகுகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தம்முடைய நிலைப்பாடு என்றும் ஹசன் அலி, உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இவ்வகையான முஸ்லிம்களின் அபிலாஷைகள், மறுசீரமைக்கப்பட்ட அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இடத்தில், ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வருகின்றபோது, முஸ்லிம்கள் (முஸ்லிம் அரசியல்வாதிகள்) தமக்கு என்ன தேவை என்ற நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வு என்றால், முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும்? வடக்கும் கிழக்கும் இணையாமல் ஒரு தீர்வு முன்வைக்கப்படின் அப்போது முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை முஸ்லிம்கள் ஐயுற விளங்கிக் கொண்டிருந்தால், அரசியல்வாதிகள் ஒருமித்ததாக முன்வைத்திருந்தால்… குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

வடக்குடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பதற்கு தமிழ்த் தரப்பு விரும்புகின்றது என்றால் அதனால், பல நன்மைகள் தமிழருக்கு கிடைக்கும். இதில் முதலாவது நன்மை, அகன்ற நிலப்பரப்பும் அதிலுள்ள எல்லா வகையான வளங்களும் என்ற மிகப் பெரும் பலமாகும்.

இதற்கப்பால் அரசியல், ஆளுகை, உரிமை ரீதியான பல அனுகூலங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.

ஆனால், கிழக்கு முஸ்லிம்களுக்கு அவ்வாறான பெரிய நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. இழப்புகளும் விட்டுக்கொடுப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதே தவிர, தமிழர்களின் அளவுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு இவ்விணைப்பு அனுகூலம் அளிக்கும் என்று கூறுவது கடினமாகும்.

வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தபோது நடைபெற்ற சம்பவங்களையும் கிழக்குப் பிரிந்து தனிமாகாணமாக மாறிய பின் கிடைக்கும் வரப்பிரசாதங்களையும் நிறுத்துப் பார்க்கும்போது, இவ்விரு மாகாணங்களும் இணையவே தேவையில்லை என்ற முடிவுக்கே முஸ்லிம்கள் வருகின்றனர்.

ஆனால், இதற்கு இன்னுமொரு பக்கம் இருக்கின்றது. தமிழர்கள் செறிவாகவுள்ள வடக்குடன் தமது மாகாணமும் இணைக்கப்பட வேண்டும் என்று கிழக்குத் தமிழர்கள் நினைப்பார்களானால் அதை முஸ்லிம்கள் தவறு என்று சொல்ல முடியாது. எனவே, எந்த அடிப்படையிலேனும் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டால் தமக்குரிய பங்கு எது என்பது பற்றியும், இணைக்காமல் இருந்தால் ஒரு தீர்வும் தேவையில்லையா என்பது பற்றியும் முஸ்லிம்கள் நிலைமாறாத நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

கிழக்கு முஸ்லிம்களின் முதலாவது நிலைப்பாடு வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவே கூடாது என்பதாகும். தமிழர்கள் இணைக்கச் சொல்லி கேட்பார்கள் என்றால் இணைக்கக் கூடாது என்று சொல்ல முஸ்லிம்களுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால், அதையும் மீறி இணைக்கப்பட்டால் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் தேசியங்களுக்காக தனித்தனி மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும். இணைந்த வடகிழக்கில் இரு இனங்களுக்கும் இரு மாகாணங்கள் ஸ்தாபிக்கப்பட்டால் அவை இரண்டுமே நிலத் தொடர்பற்றவையாக இருக்கும்.

இணைந்த வடகிழக்கில் இப்போதிருப்பது போலவே, நில அடிப்படையில் இரு (உப) மாகாணங்கள் உருவாக்கப்படின் அதில் ஒன்று தமிழர்களுக்கானதாகவும் மற்றைய முஸ்லிம்களுக்கான தீர்வாகவும் இருக்கும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இருப்பர் என்றாலும் அது முஸ்லிம்களுக்கான தீர்வாக அமையலாம்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல் ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்படுமாயின், அல்லது மாகாணங்கள் இணைக்கப்பட்டும் கிழக்கு முஸ்லிம்களோடு இணைய வடபுல முஸ்லிம்கள் விரும்பவில்லையாயின் இப்போதிருக்கின்ற கிழக்கு மாகாண எல்லைக்குள் தனியொரு முஸ்லிம் மாகாணம் அமைய வேண்டும்.

இதைத்தான் தென்கிழக்கு அலகு என்று சொல்கின்றோம். அதாவது தென்கிழக்கை மையமாகக் கொண்டதாகவும் பொத்துவில் தொடக்கம் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமம் வரை நீள்வதாகவும் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை் பரிபாலிக்கும் ஓர் அதிகாரபீடமாகவும் இந்த ஆட்சி அலகு செயற்பட வேண்டும்.

மாறாக, இப்போதிருக்கின்ற கிழக்கு மாகாணம் ஆரம்பத்தில் இருந்த உண்மையான கிழக்கு அல்ல. அதில் நிலமும் வளமும் நிறைய சுரண்டப்பட்டிருக்கின்றன என்பதை இவ்விடத்தில் மறந்துவிடக் கூடாது.

இவையெல்லாம் சாத்தியப்படுமா என்பது இரண்டாவது பிரச்சினை. ஆனால், நிலைப்பாடுகள் தெளிவான கண்ணோட்டத்துடன் நிலைமாறாதவையாக இருப்பது அதைவிட முன்னுரிமைக்குரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பலமான பிக்பாஸின் நாடகம்!… வைரலாகி வரும் காட்சி..!! (வீடியோ)
Next post விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்..!!