By 14 July 2017 0 Comments

லீ குவானும் மதசார்பின்மையும் அபிவிருத்தியும்..!! (கட்டுரை)

image_4653f03f2cநாட்டின் முக்கியமான அரசியல் விடயங்களில், மதங்களினதும் மதத் தலைவர்களினதும் தலையீடு என்பது, இலங்கையைப் பொறுத்தவரை வழக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கு மத்தியிலும், அண்மையில் இந்தத் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைக்கு, புதிய அரசமைப்புத் தேவையில்லை என, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிக்க, அதன் பின்னர் மறுநாள் ஒன்றுகூடிய அனைத்து மகாநாயக்கர்களும் ஏனைய முக்கிய பௌத்த மதத் தலைவர்களும், புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புத் திருத்தமோ இலங்கைக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த முடிவு, சிறுபான்மை இனத்தவர்களைப் பொறுத்தவரை, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்பு விடயத்தில், பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை தேவைதானா என்ற அடிப்படையில், கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருந்த நிலையில், திடீரென அவர்கள் விடுத்த இந்த அறிவிப்பு, அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்களை, பின்னால் போகச் செய்துள்ளன என்றே கருதப்படுகிறது.

இலங்கை அரசியல் சூழலில், ஏனைய மதத் தலைவர்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. கிறிஸ்தவ மதத் தலைவர்கள், இன்னமும் அதிகளவு மதிக்கப்படும் குரல்களாக உள்ளனர். வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் முக்கியமானவர்களில், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.

ஒப்பீட்டளவில் இந்து மதத் தலைவர்களின் தலையீடு, தற்போது குறைவானது என்ற போதிலும், அண்மையில் ஏற்பட்ட வடமாகாண சபைக் குழப்பங்களில், இந்து மதத் தலைவர்களும் தங்களது தலையீட்டை மேற்கொண்டு, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவியிருந்தனர்.

முஸ்லிம்களின் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், இஸ்லாமிய அமைப்புகளினதும் இஸ்லாமியத் தலைவர்களினதும் பேச்சைத் தட்டுவதில்லை. இஸ்லாமியத் தலைவர்களின் வார்த்தைகள், அதிகளவில் மதிக்கப்படுகின்றனவாக உள்ளன. இவ்வாறு, எல்லா மதங்களின் தலைவர்களும், அரசியல் சூழலில் தமது தாக்கங்களைச் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், இலங்கையின் தேசிய அரசியல் சூழலில், முடிவுகளை மாற்றக்கூடிய பலத்தை, பௌத்த பீடாதிபதிகளும் பிக்குகளுமே கொண்டிருக்கின்றனர் என்பது, தனியாகக் குறிப்பிடப்படவோ அல்லது பெரிதளவுக்கு விளங்கப்படுத்தவோ தேவைப்படாத ஒன்று.

இந்நிலையில்தான், சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிய தலைவரான லீ குவான் யூ தெரிவித்த கருத்து, சமூக ஊடக வலையமைப்புகளில் அதிகளவில் பகரப்படுகிறது. நாட்டின் தேசிய தின நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், மத அறிஞர்கள், மதபோதகர்கள், பிக்குகள், முஸ்லிம் இறைமையியல் வல்லுநர், இறைநிலை கிடைத்திருப்பதாகவோ அல்லது தெய்வீக உள்ளார்ந்த கருத்துகள் கிடைத்திருப்பதாகவோ கூறுவோர், பொருளாதார அல்லது அரசியல் சம்பந்தமாக ஏதாவதொன்றைப் பேசும் முன்னர், உங்கள் மத ஆடையைக் கழற்றிவிட்டு வாருங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பகுதியே அதிகளவில் பகரப்படுகிறது. இதற்குப் பின்னர் அவர் தொடர்ந்து, “அதை (மத ஆடையை) அகற்றுங்கள். பிரஜையாக வாருங்கள் அல்லது அரசியல் கட்சியொன்றில் சேருங்கள்.

உங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், தேவாலயத்தையோ அல்லது சமயத்தையோ அல்லது போதனை செய்யும் இடத்தையோ இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தினால், பாரதூரமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றும் எச்சரித்திருந்தார்.

சமயங்களும் அவற்றின் தாக்கங்களும், நாகரிக உலகில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட, “தேவாலயத்தையும் அரசையும் வேறுபடுத்துதல்” என்ற கருத்துப்பாடு, இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில நாடுகளைத் தவிர, அனேகமான நாடுகளில், மதங்களின் தாக்கம் என்பது காணப்பட்டே வந்திருக்கிறது என்பதுதான் உண்மையானது.

ஆனால், லீ குவான் யூவின் கருத்துகள், மிக முக்கியமானவை. அதிலும் குறிப்பாக, மிகக்குறுகிய காலத்தில், மிகப்பாரியளவு வளர்ச்சியை ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், அவரது கருத்துகளைக் கவனமாக அவதானிக்க வேண்டிய பொறுப்புக் காணப்படுகிறது.

இலங்கையின் அண்மைய காலத்தைப் பார்த்தால், மதத் தலைவர்களால், அரசாங்கம் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரித்தமைக்கு, பொது பல சேனாவின் நடவடிக்கைகள், முக்கியமானதாக அமைந்தன. பொது பல சேனாவின் ஞானசார தேரரைக் கைது செய்வது தொடர்பாக, அரசாங்கத்துக்குத் தயக்கம் காணப்பட்டது. அரசின் மீது, பௌத்த மதம் செலுத்தும் தாக்கம் தான், அந்தத் தயக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில்தான், அடுத்த அரசமைப்பை, மதசார்பற்ற ஒன்றாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்திருந்தன. ஆனால், அரசமைப்பில் என்ன காணப்படும் என்பதை அறிய முன்னரேயே, அரசமைப்பே வேண்டாம் என்று கூறுமளவுக்கு, பௌத்த மத பீடங்கள், அதிகாரத்தையும் பலத்தையும் கொண்டிருக்கின்றன.

அவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் என்ன செய்வதென்றாலும், பௌத்த மத பீடங்களின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படுவதாக உறுதியளித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட, அரசமைப்புத் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கரைச் சந்தித்திருக்கிறது.

எனவேதான், மதசார்பற்ற நிலைமையைக் கொண்டுவருவதென்பது, கடினமானதொன்றாக மாறியிருக்கிறது.

மதசார்பின்மை எதற்காக அவசியமென்றால், இலங்கை போன்ற பல்வகைமையுள்ள ஒரு நாட்டில், ஏதாவதொரு மதத்தை முன்னிறுத்த முயன்றால், ஏனைய மதங்கள் பாதிக்கப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. இலங்கை அரசமைப்பின்படி, அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது ஓர் உறுப்புரையாக இருந்தால், அதற்கு முன்னர், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது.

மாறாக, அரசமைப்பின் மதங்களைப் பற்றியே குறிப்பிடாமல் விடும்போது, இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க முடியும்.

ஆனால், இலங்கை போன்றதொரு பழைமைவாதச் சமூகத்தில், இவ்வாறான அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்துவதென்பது கடினமானது. இந்த நிலையில்தான், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லீ குவான் யூ பக்கமாகத் திரும்ப முடியும்.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியவர் என்ற பெயரும் புகழும் அவருக்குக் காணப்பட்டாலும், அவர் மீதான விமர்சனங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது, தனிப்பட்ட சுதந்திரங்களை அவர் தடுத்தார் என்பதுதான். அவரை, கடும்போக்கு ஆட்சியாளர் என்று ஒரு தரப்பினரும் மென்மையான சர்வாதிகாரி என இன்னொரு தரப்பினரும் அழைக்கின்றனர்.

ஆசியாவின் முக்கியமான பொருளாதாரங்களாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள சிங்கப்பூர், தாய்வான், தென்கொரியா, சீனா ஆகியன, இவ்வாறான மென்மையான சர்வாதிகாரத்தின் கீழ் கட்டியெழுப்பப்பட்டவை தான். இந்த நாடுகளில், இன்னமும் முழுமையான ஜனநாயகம் காணப்படுகிறதா என்பது கேள்விக்குரியது தான்.

மறுபுறமாக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இன்னமும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. ஆகவே, முழுமையான ஜனநாயகப் பண்புகள், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாக உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையைத் தான், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களும் பயன்படுத்தினர். லீ குவான் யூ மீது, குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளும் காணப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுவர். ஆனால், லீ குவான் யூ அளவுக்கு, நாட்டைக் கட்டியெழுப்பும் திறனும் அர்ப்பணிப்பும் அவரிடம் காணப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை, தனியாக ஆராய வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் தான், நாட்டில் தற்போது காணப்படுவதாகக் கூறப்படுகின்ற ஜனநாயகப் பண்புகளால் தான், அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுகின்றனவா என்ற கேள்வி எழுவது யதார்த்தமானது. ஆனால் மறுபக்கமாக, நாட்டின் அபிவிருத்திக்காக, எமது உரிமைகளைச் சற்று விட்டுக் கொடுத்துச் செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பது, அடுத்து முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, லீ குவான் யூ அளவுக்கு, நாடு மீது பற்றுள்ள, நாட்டை உண்மையிலேயே முன்னுக்குக் கொண்டுவரும் ஆர்வமுள்ள, தூரநோக்குடைய தலைவர்கள், இலங்கையில் உள்ளனரா என்பது, கேள்விக்குரியது. நாட்டைக் கொள்ளையிடும் நோக்கைக் கொண்டவர்கள், லீ குவான் யூவின் விமர்சிக்கப்பட்ட பக்கத்தை உதாரணமாகக் காட்டி, நாட்டைக் கொள்ளையிட முயல்வதை அனுமதிக்க முடியாது என்பது முக்கியமானது.Post a Comment

Protected by WP Anti Spam