By 16 July 2017 0 Comments

அபிவிருத்தியின் அரசியலை புரிந்து கொள்ளல்..!! (கட்டுரை)

image_bcff5a09d2இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலம் யுத்தமும் அதனுடன் இணைந்த விடயங்களுடனும் கடந்து போய்விட்டது. இரத்தத்துடன் ஊறியிருக்கிற சந்தேகம், வெப்புசாரம், கோபம் போன்ற பலவற்றையும் வெளியேற்றுவது என்பது சாதாரணமாக நடைபெறக்கூடிய விடயமல்ல.

இந்த இடத்தில்தான், அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதன் பயன்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குமான மனோநிலை நம்மவர்கள் மத்தியில் உருவாகவில்லை.

அதுவும் வடக்குக் கிழக்கில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் அதன் முன்னேற்றமுமே தேவை என்கிற வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன.
அபிவிருத்தி என்றால் ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் போதிய அளவில் வருமானம் கிடைகின்ற, குடும்பத்தில் உழைக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஜீவனோபாய மார்க்கம், தொழில் இருத்தல், குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயன்முறையில் பொதுமக்கள் பங்கேற்று, முடிவுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளித்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

ஒரு தேசம் என்ற வகையில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான ஆற்றலைக் கொண்டிருந்தால் அந்நிலையை அபிவிருத்தி என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவ்வாறான அபிவிருத்தி உண்மையான அபிவிருத்தியா? என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது.

அதிகரித்து வருகின்ற சனத்தொகை வளர்ச்சியுடன், அதிகரித்த வளப்பயன்பாடு இன்றியமையாததாகிவிட்ட இன்றைய காலத்தில், எதிர்கால சந்ததியைக் கருத்தில் கொண்டே எப்போதும் அபிவிருத்திகள் திட்டமிடப்படவேண்டும் என்ற கருத்துகளும் உருவாகின்றன. எனவே இவற்றினால் ஏற்படும் விளைவுகள் ஏன் மட்டுப்பாடுகளுக்குட்படக்கூடாது என்ற கருத்து நிலையும் இல்லாமலில்லை.

அபிவிருத்தியடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் நிதி வளத்தைக் கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளில் கடன்கள், நிதியுதவிகளைப் பெற்றுக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் கடன்காரர்களாகவே காலம் கடத்துக்கின்றனர் என்பதே உண்மை.

வேகமான வளங்களின் தேய்வு, சூழல் மாசடைதல் போன்ற இரண்டு காரணங்களும் அபிவிருத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதேபோன்று அனர்த்தம், மற்றும் சனத்தொகை வளர்ச்சி வளங்களின் தேவைப்பாடு என்பவைகளும் மாற்றீடுகளை முன்வைப்பது போன்ற விடயப்பரப்புகளும் உள்ளேதான் இருக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம் பெறுகின்ற இலங்கையில் நாடாளுமன்றமும் தேர்தல்களும், அதன்மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் அறிவு ரீதியான சிந்தனாவாதிகளாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் அபிவிருத்தியை அடைந்து கொள்வதில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பொருளாதார அபிவிருத்தி என்பது மக்களின் சமூக பொருளாதார நலன்களுக்காக எடுக்கப்படும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளாகும். அது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியாகும். அதன் நோக்கானது ஒரு நாட்டினுடைய மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கை வகுத்தலையும் செயல்முறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

அதிகரித்த சனத்தொகையுடன் இணைந்து அதிகரித்த வளப்பயன்பாடு இடம்பெறும் போது வேகமான வளங்களின் தேய்வு, சூழல் மாசடைதல் ஆகியன இடம்பெறுகின்றன. அந்தப் பின்னணியில் இயற்கை வளங்களின் தரமும் அளவும் பாதிக்கப்படுகிற நிலை உருவாகிறது.

இன்றைய உலகில் பூமி வெப்பமடைதல், ஓசோன் படை அழிவு மற்றும் உயிரின பன்முகத் தன்மையின் சீர்குலைவு போன்ற சூழலியற் பிரச்சினைகள் மிக முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி மீது அதிக அவா கொண்டதன் காரணமாகவும், முறையற்ற வளப் பயன்பாடுகளும், நவீன தொழில்நுட்பங்களும் அந்தப் பாரிய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

ஆதலால் சுற்றுச் சூழலில் முக்கிய அங்கங்களாகிய நிலம், நீர், காற்று ஆகியவை அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சமநிலை சீர்குலைவதனால் ஏற்படும் மாசுபடுதல், அழிவடைதல், விகாரப்படல் போன்றவற்றிலிருந்து சூழலைப் பேணுவதே சூழற் பாதுகாப்பு எனப்படும்.

பூமியில் வாழும் மானிடர்களாகிய நாம், சூழலைப் பாதுகாப்பதுடன் அபிவிருத்தியில் பயனாளிகளாக மாத்திரம் அல்லாமல் பங்காளர்களாகவும் மாற வேண்டும். இந்நிலையில் அபிவிருத்தியை நீடித்து நிலைத்து நிற்கச் செய்யத் தோற்றம் பெற்ற சிந்தனையாக நிலைபேண் அபிவிருத்தி அல்லது நிலையான என்ற அபிவிருத்திச் சிந்தனை முன்வைக்கப்படுகிறது.

இந்த இடத்தில்தான் நிலையான அபிவிருத்தி சாத்தியமா என்ற கேள்வி தோன்றுகிறது. எனவே நிலையான அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வளங்களைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்களை முன்வைப்பதும் அதை மேம்படுத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

அவ்வாறுதான் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளையும் அவற்றைத் தடுப்பதற்கான குறுகிய கால முயற்சிகளையும், நீண்ட கால திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பொதுமக்கள், அதிகாரிகள், தொழில்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால், நிலையான அபிவிருத்தி என்பது நிச்சயம் சாத்தியம்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறிப்பாக அபிவிருத்தித்திட்டங்கள், ஆட்சி, ஆட்சியியல், நிருவாகம் போன்ற துறைகளோடு சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக இருக்கும்போது, அதுபற்றி மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருத்தல் அதில் பங்களிப்புச் செய்யக்கூடியதாக. அறிந்து கொள்ளக்கூடியதாக இருத்தல், கேள்வி எழுப்பக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது முக்கியம் பெறுகிறது.

அரசாங்கம் அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்னர் அதுபற்றிய திட்டங்களைத் தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படுத்தல் தன்மையைக் காட்டும்.

சில திட்டங்கள் அறிவிக்காமல் நடைமுறைப்படுத்துவதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன. அதாவது அத்திட்டம், நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை, அதன் பெறுமதி, ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனம், ஆரம்பத் திகதி, முடிவுத்திகதி என்பவற்றை வெளிப்படுத்தி அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்துவர்.

அவ்வாறான திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரிய காலத்தில் நிறைவேற்றப்படுகிறதா என்பது பற்றி மக்கள் கண்காணிக்க முடியும். அது உரிய காலத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் கேள்வி கேட்க முடிகிறது. அதில் தகவல் அறியும் உரிமைச்சட்டமும் ஒரு கருவியாக இருக்கிறது.

இவ்வளவு காலமும் இல்லாமல் இருந்து தற்போது நடைமுறைக்கும் வந்திருக்கிறது. இது அபிவிருத்தியிலும் மக்கள் விளக்கங்களைப் பெற்றுத் தெளிவடைவதற்கும் பல்வேறு வகைகளிலும் பங்களிப்புச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகரிக வளர்ச்சி, பிரமிக்கவைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு, பிரம்மாண்டமான அறிவியல் கண்டுபிடிப்புகள் என மனிதனின் சாதனையை அடுக்கிக்கொண்டே சென்றாலும், இவை அனைத்தும் இயற்கை வளங்களின் பயன்பாட்டால் மட்டுமே சாத்தியம் என்பது எவரும் மறுக்க முடியாததாகும்.

இத்தகைய சூழலில், தொழில்நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகள் இதில் மிக அவசியம். இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகளிலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அதற்கேற்றால் போல் தம்மையும் இயைபாக்கிக் கொள்கின்ற நிலைமை ஒன்று உருவாக வேண்டும்.

அண்மைக்காலங்களாக நாட்டில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பெரும்பாலும் போராட்டங்களையே தோற்றுவித்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களால் மக்கள் தங்களை முன்னேற்றிக் கொள்கின்றார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.
கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இடை நடுவில் புதிய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. பின்னர் அதற்கான நட்ட ஈட்டுடன் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

இப்போது உமா ஓயா அபிவிருத்தித்திட்டம் பல்வேறு போராட்டங்களினூடு நிறுத்தப்படுமா இல்லையா என்ற கேள்வியுடன் நிற்கிறது. வடக்குக்கிழக்கைப் பொறுத்தவரையில் எதை எடுத்தாலும் சந்தேகப்பார்வை. எதிர்ப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதும் அரசியலுடன் போராட்டம் நடத்துவதும் தொடர்ந்த வண்ணமேதான் இருக்கிறன. அதேநேரத்தில் ஊழல் தலைவிரித்தாடும் ஓர் நிலைமையும் இருக்கத்தான் செய்கிறது.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்வில் பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ராஜன் கூல், “செய்த முதலீட்டிலிருந்து அரசியல் வாதிகள் இலாபம் ஈட்டுவதில் பிழையென்ன” என்ற கேள்வியைக் கேட்டார்.

அத்துடன், அதில் அவர் பதிலையும் சொன்னார்; “தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரசு செலவு செய்யவேண்டும்” என்றார்.

இவ்வாறானதொரு ஜனநாயக, நிலைப்பாட்டை ஏற்படுத்துவது அபிவிருத்தியை நிலைத்திருக்கக் கூடியதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் என்பதே யதார்த்தமாகும்.

மக்களிடம் இருக்கின்ற அரசியலை மாற்றுவதும் அதைப் புரிந்து கொள்வதும், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் அரசியலைப் புரிந்து கொள்வதும் ஆய்வு ரீதியான முயற்சியாகவே இருக்கும். இதுவே எதிர்காலத்தின் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திகளுக்கு முதன்மையானதொன்றாகும்.

உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய மேம்பட்ட அபிவிருத்திகளையே நாம் உருவாக்கியாக வேண்டும். மனித வள அபிவிருத்தி இதில் முக்கியமானது. சிறப்பான மனோநிலையுடைய மனிதவளமே தேவையானதாகும். காழ்ப்புணர்ச்சிகளும், பொறாமைகளும் நிறைந்ததான சமூகம் முன்னேற்றத்துக்குச் சிறிதும் பொருத்தமற்றதாகவே இருக்கும். ‘போட்டியிருந்தாலும் பொறாமை இருக்கக் கூடாது’ என்ற நம் முன்னோர்கள் சொல்லிவைத்த வார்த்தை இதற்கு நல்ல உதாரணமாகும்.

“கள்ளத் தோணியில் அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம்” என்ற விளம்பரங்கள் இவ்வாறான தேவைகளையே காட்டிநிற்கின்றன. நாட்டில் யுத்தம் எல்லாவிதமான முன்னேற்றங்களையும் தடுத்தே வைத்திருந்தது. அந்தத் தடுப்பை உடைத்துக் கொண்டு, மேலை நாடுகளுக்குச் சென்றவர்கள் மிகக்குறைவாகும்.

அதையும் தாண்டிச் சென்றவர்கள் அதிகமாக அகதித் தஞ்சம் பெற்றவர்களாகவும் வசதி படைத்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், சட்ட விரோதமாக நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வள்ளங்களில் சென்றவர்கள் தங்களது குடும்பத்தை மிக மிக விரைவாக முன்னேற்ற வேண்டும்; நாங்களும் வசதி படைத்தவர்களாக மாறிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இதற்கான தமது காணிகள் சொத்துகளை விற்பனை செய்தவர்கள்தான் அதிகம். நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் அது நிறுத்தப்பட்டது.

இப்போது அரசாங்கம் நாட்டை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரும் பிரயத்தனத்தில் இருக்கிறது. இந்தப்பிரயத்தனத்துக்கு வைத்திருக்கும் ஒரு துருப்பு வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும். இந்தத் திரும்பலுக்கும் பெரும் அரசியலிருக்கிறது.

நாட்டைவிட்டுச் சென்றவர்கள் இப்போது வெறும் ஆட்களாக இல்லை. அந்த நேரத்தில் அவர்களுடன் வரப்போகும் சொத்து மிகப் பெரியது. இதை நாடு பயன்படுத்த எண்ணுகிறது. அத்துடன் இலங்கையின் அபகீர்த்தியை இல்லாமல் செய்வதுடன் நன்மதிப்பையும் உயர்த்திக் கொள்ள எண்ணுகிறது.

இதுவே இதிலுள்ள உண்மை. இந்த உண்மை வெளிப்படையாகத் தெரியாமலுமில்லை.
உலக நாடுகளை வைத்து இலங்கையில் ஒரு போர்க்குற்ற விசாரணையை நடத்தி முடித்து விடவேண்டும் என்று தமிழர் தரப்பு துடித்துக் கொண்டிருக்கையில், நல்லிணக்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் ஏற்படுத்தியே தீருவோம் என்று அரசு கங்கணம் கட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையில்தான் அபிவிருத்தியும் அரசியலும் போட்டிபோடுகின்றன.Post a Comment

Protected by WP Anti Spam