பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள்..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 55 Second

image_73587cca5fயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம் வடஇலங்கை தொடர்பான வரலாற்றைக் காண்கின்றோம்.

நாகதீபம் என்பது அநுராதபுரத்துக்கு வடக்கில் அமைந்த பிரதேசம் என தமிழ்,பாளி மொழி இலக்கியங்களில் பிரதேச அமைவிடம் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக பாளி மொழி இலக்கியங்களில் இந்நாட்டுக்குரிய மக்களாகவோ மன்னர்களாகவோ கூறாது, அவர்களை அவ்வப்போது தென்இந்தியாவிலிருந்து வர்த்தகர்களாக, படையெடுப்பாளர்களாக வந்துபோன அந்நியர்களாகவே அந்த இலக்கியங்கள் கூறுகின்றன.

காலப்போக்கில் இந்தப் பாளி இலக்கியங்களை முதன்மை மூலாதாரங்களாகக் கொண்டு இலங்கைத்தமிழர் வரலாறு பற்றி ஆராய்ந்த பலரும், இலங்கை மண்ணோடொட்டிய தமிழரின் வரலாறும் தமிழ்மொழியின் வரலாறும் பிற்காலத்தில் தோன்றியது என்று நியாயப்படுத்தினர்.

பருத்தித்துறைக்கு அருகில் அமைந்துள்ள வல்லிபுரம் கோவிலுக்கு அருகாமையில் கிடைக்கப்பெற்ற பொற்சாசனம் ஒன்றில், வடஇலங்கைக்குள் யாழ்ப்பாணம் நாகதீபம் என வழக்கத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது என்று வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு இலங்கையில் இருந்த ஒரு நகரம் நாகநாடு என்ற தொலமியின் குறிப்பு இதற்கு இன்னும் வலுச்சேர்க்கின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுவரை நாகநாடு என்ற பெயரே வழக்கத்தில் இருந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இலங்கை வரலாற்று மூலங்களில் 2600 ஆண்டுகள் காலமாக யாழ்ப்பாணம் தனித்து அடையாளப்படுத்தப்பட்டாலும், யாழ்ப்பாணத்தின் ஆதிகால மற்றும் இடைக்கால மக்களின் மொழி, மதம், வாழ்க்கை முறை,பண்பாடு, நாகரிகம் குறிப்பிட்ட அந்த இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

இதனால், ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல், ஏனைய பிராந்தியங்களைப்போன்று, மக்கள் இங்கு ஆதிகாலம் முதற்கொண்டு வாழவில்லை என்ற கருத்து, சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது; பிரச்சாரப்படுத்தப்பட்டது.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இலங்கை தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட பல கள ஆய்வுகளின் மூலம், இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போல், யாழ்ப்பாணத்திலும் தொன்மையான மக்கள் வாழ்ந்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது.

பாளி இலக்கியங்கள் இலங்கையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் ஏற்பட்ட புலம்பெர்யர்வுடன் இலங்கையில் மனித வரலாறு தொடங்குவதாகக் கூறுகின்றது.

ஆனால், கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்கள், விஜயன் யுகத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனித நாகரிக வரலாறு இலங்கையில் ஆரம்பித்து விட்டதை கோடிட்டுக் காட்டுகின்றன.

இலங்கையில் இதுவரை ஏறத்தாள 80 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் விளைவாக இற்றைக்கு சுமார் 37,000 வருடங்களுக்கு முற்பட்ட நுண்கற்காலப் பண்பாட்டுக்குரிய மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனப் பேராசிரியர் புஷ்பரட்ணம் கூறுகின்றார்.

இதிலும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, இந்த மக்கள் தொல்லியல், மானிடவியல், மொழியியல் அடிப்படையில் தென்இந்தியப் பண்பாட்டு வழக்குக்கு உட்பட்டிருந்தவர்கள் என்பது நிரூபணமாகியது.

கி.மு. 1200 களில் தென்இந்தியாவில் தோன்றிய பெருங்கற்காலப் பண்பாடு, கி.மு. 1000 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்குப் பரவியுள்ளதை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 50 க்கும்மேற்பட்ட, பெருங்கற்கால குடியிருப்பு மற்றும் ஈமச்சின்ன மையங்கள் உறுதிசெய்கின்றன.

கந்தரோடை, ஆனைக்கோட்டை, சாட்டி, பூநகரி, வெற்றிலைக்கேணி, மந்திகை, உடுத்துறை போன்ற இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆதார சான்றுகள் மூலம், யாழ்ப்பாணம் ஒரு பழைமையான பிராந்தியம் என்பதும் இங்கு ஏனைய பிராந்தியங்களுக்கு ஒத்த நிலையில் நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதும் உறுதியாகியது.

பொதுவாக, அரசின் தோற்றம், குளத்துநீர்ப் பாசனம், நிரந்தர இருப்பிடம், சிறுகைத்தொழில், பண்டமாற்று முறைமை போன்ற தென்இந்தியாவை ஒத்த பெரும்கற்கால நாகரிகம் யாழ்ப்பாணத்தில் இருந்தமையும் பெருங்கற்காலப் பண்பாட்டின் பின்னர் சங்ககாலப் பண்பாடு தோன்றிய பின்னர், தென்இந்தியாவோடு மிகநெருங்கிய தொடர்புகளை யாழ்ப்பாணம் பேணியதும் அதன் தொடர்ச்சி இன்றுவரை பேணப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும்.

பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை – தென்இந்தியத் தொடர்பில், யாழ்ப்பாணம் முக்கிய மையப்பகுதியாக இருந்தது. தமிழகத்தில் இருந்து படையெடுக்கும் போர்வீரர்கள், தென்இலங்கை அரசுகளை வெற்றி கொள்வதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பது தற்கால அறிஞர்களின் கருத்தாகும்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்ச்சியாக மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்று யாழ்ப்பாணமும் நகரமயமாக்கத்துக்கு உட்பட்டிருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

குறிப்பாக, தென்இந்தியா, வடஇந்தியா, கிரேக்கம், உரோம், அரேபியா, சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு நாணயங்களும் மட்கலன்களும் அவற்றின் சிதைவுகளான கலஓடுகளும் புராதன கால வரலாற்றுச் சின்னங்கள் என்ற வகையில் முக்கியமானவையாகும். தொல்லியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்தி, ஓர் இடத்தின் மற்றும் அங்கு வாழும் மக்களின் வரலாற்றையும் அந்த மக்களின் தொன்மையையும் வௌிக்கொணர்ந்து உள்ளார்கள்.

இவ்வாறே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்டெடுக்கப்பட்டதும் தமிழ்மக்களின் தொன்மையை வெளிக்கொண்டுவரக்கூடிய சான்றாதாரங்களாக வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல, பொருட்கள், பல்கலைக்கழக தொல்பொருள் நூதனசாலையில் பக்குவமாகப் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

இவையனைத்தும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொன்மையான வரலாற்றை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இங்கு வரலாற்றுக்காலம் முதற்கொண்டு, குடாநாட்டுக்குள் புளக்கத்தில் இருந்த நாணயங்கள், வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட தெய்வ உருவங்கள், மட்பாண்ட விளக்குகள், கல்வெட்டுச் சாசனங்கள், பண்டைக்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பாவனைப் பொருள்கள், அணிகலன்கள் போன்றவை வரலாற்றுத்துறை மாணவர்களின் கற்றல் நோக்கம் கருதியும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் ஆராய்ச்சி நோக்கம் கருதியும் இந்தப் பொருள்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதிகாலத்தில் குடாநாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே, ஐயனார் வழிபாடு,மிகவும் சிறப்புற்றும் ஆழ வேரோடியும் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் இங்குள்ளன. குறிப்பாக,யானை, குதிரை போன்ற விலங்குகளின் உருவங்களை சுடுமண்ணினால் செய்து, அவற்றுக்கு மலர் வைத்தும் விளக்கெரித்தும் வழிபடும் மரபு இன்றும் இந்தியாவில் காணப்படுகிறது.

இதேவழிபாட்டு முறை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே, குடாநாட்டுக்குள்ளும் இருந்துள்ளது என்பது ஐயனார் வழிபாட்டுடன் தொடர்புடைய பொருட்களில் இருந்து நிரூபணமாகிறது.

வயல்வெளிகளை அண்டிய காட்டுப் பிரதேசங்களில் விலங்கு காவல் தெய்வங்களை வைக்கும், காவல்தெய்வ வழிபாட்டு மரபின் ஆதாரங்களாக பல பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐயனார் வழிபாடு வரலாற்றுக் காலம் முதற்கொண்டு கிராமிய வழிபாடாக இருந்து வருகின்றது. இன்றும் குடாநாட்டுக் கிராமங்களில் ஐயனார் கோவில்கள் காணப்பட்டாலும் இவை ஆகம வழிபாட்டு மரபுக்குள் மாற்றம் கண்டுவிட்டன.

பண்டைக்காலத்தில் நாகவழிபாடு இருந்ததற்கான ஆதாரமாக ஐந்துதலை நாகத்தின் சிதைவுகளும் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன்..!!
Next post `கோலி சோடா 2′ படக்குழுவில் இணைந்த தேசிய விருது நடிகர்..!!