விஜயனுக்குமுன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்..!! (கட்டுரை)

Read Time:22 Minute, 33 Second

image_18da661e9fஇலங்கை, ஒரு பல்லினங்கள் வாழும், அவற்றின் பண்பாட்டை வலியுறுத்தும் ஒரு நாடாகும். பல்லினப் பண்பாட்டை வலியுறுத்தும் ஒவ்வொரு நாடும் தமது நாட்டுக்குள் வாழும் பல இனம், பல மொழி, பல மதம் சார்ந்த பண்பாட்டு மரபுரிமைகளை வேறுபாடு காட்டாது, அவற்றின் தனித்துவத்தைப் பாதுகாக்கும்போதே அந்த நாடு பல்லினப் பண்பாடு கொண்ட நாடு என்ற அங்கிகாரத்தைப் பெறுகின்றது. இதனால் இன்று, ஒரு நாட்டுக்குள் வாழும் பல இனங்கள், தமது பாரம்பரிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றன.

பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் அந்தத் துறையில் கற்கும் மாணவர்கள், ஆய்வாளர், அறிஞர், ஆர்வலர்களுக்கு மட்டும் இருந்து விட்டால் போதாது. அதுகுறித்த விழிப்புணர்வு சாதாரண மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு வேலைத்திட்டமாகும்.
பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்கள் எனும்போது, இராசதானிகளின் நினைவுச் சின்னங்கள் (நாணயங்கள், போர்த்தளபாடங்கள், ஆடைகள், அணிகலன்கள், அரண்மனைகள், நீர்நிலைகள், பாவனைப்பொருட்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள்), வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஆலயங்கள், பாரம்பரிய தொழில்கள் (விவசாயம், மீன்பிடி, கைத்தொழில்கள் மற்றும் அவை தொடர்பான கருவிகள்), புராதன குடியிருப்பு மையங்கள், பாரம்பரிய வீடுகள், கோட்டைகள், மரபுரிமைச் சின்னங்கள் காணப்படும் இடங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் முழுமூச்சாக ஒரு பகுதியினர் இயங்கிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பகுதியினர் அவற்றை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் இருவகையானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருபகுதியினர், வெறும் பணத்தை மாத்திரமே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். ஏதாவது, பழைமையான பொருட்கள் அகப்பட்டால் அவற்றை விற்றுப் பணமாக்குவதையே நோக்கமாகக் கொண்டவர்கள். கடந்த காலங்களில் இராசதானிகால ஆலயங்களில் பல திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. அங்குள்ள சாசனங்கள் பொறிக்கப்பட்ட ஐம்பொன்சிலைகள் மற்றும் தெய்வத்திருவுருவங்கள், சாசனம்கள் பொறிக்கப்பட்ட விளக்குகள், பாத்திரங்கள், தட்டங்கள் போன்றவை திருடப்பட்டன.

இன்றும்கூட, வாகனங்களில் ஒலிபெருக்கிமூலம் அறிவித்தல் செய்தபடி, பழைய மரபுரிமைசார் பொருட்களைக் கிராமம் கிராமமாகச் சென்று, பணத்தைச் செலுத்திக் கொள்வனவு செய்கின்றார்கள். மக்களும் வீட்டு மூலையில் பிரயோசனம் இன்றி இந்தப்பொருள் கிடக்கிறதே என்று அதை எடுத்து, அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள்.

ஆனால், அதனுடன் எமது வரலாற்றை, எமது சிறந்த வாழ்வியல் பண்பாடுகளை உறுதிப்படுத்தும் ஒரு சான்றுப்பொருளை இழந்து விடுகின்றோம் என எண்ணுவதில்லை.

உதாரணமாக, வருடக்கணக்கில் வீட்டின் ஒரு மூலையில் ஒரு விளக்கோ அல்லது ஒரு பித்தளைத் தட்டமோ காணப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். அத்தட்டம் அல்லது விளக்கு எமது மூதாதையர்கள் பயன்படுத்தி, வழிவழி வந்ததாக இருக்கும். இதில் இருக்கும் ஏதாவது ஒரு குறியீடு அல்லது எழுத்துகள் குறித்து நாம் அறியாமல் அவற்றை இத்தகைய வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவிடுகின்றோம். இது எமது இனத்துக்கும் அதன் வரலாற்றுச் சிறப்புக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

இன்னொரு பகுதியினர், மரபுரிமைச் சின்னங்கள், வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் திட்டமிட்டு அழித்துவிடுகின்றார்கள். ஓர் இனத்தின் வரலாறு, பாரம்பரியங்கள், பண்பாடு, நிலத்தொடர்ச்சி ஆகியவற்றை அழிப்பதன் ஊடாக, அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கி, அந்த இனத்தைப் பூண்டோடு அழித்துவிடமுடியும். இது உலக வரலாறு எமக்குக் கற்றுத்தந்த பாடம்.

இந்தக் கைங்கரியம் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஆதிகாலத்தில் தமிழர்கள் (நாகர்கள்) வாழ்ந்த பகுதிகள், அவர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் பிரதான நோக்கம், இலங்கையில் தமிழர்கள், வரலாற்றுக் காலம் முதற்கொண்டே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை இல்லாமல் செய்வதேயாகும்.

இருந்தபோதிலும், இலங்கையில் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்றுத்துறை பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் கிருஷ்ணராஜா, பேராசிரியர் சிவசாமி, கலாநிதி இரகுபதி, பேராசிரியர் சி. பத்மநாபன், பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் போன்ற பேராசிரியர்கள் இலங்கை முழுவதிலும் செய்த பல அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சேகரித்த பல்வேறு பொருட்களிலிருந்து அல்லது பொதுமக்கள் வழங்கிய தகவல்களிலிருந்து இலங்கை நாட்டில் தமிழர்களின் வரலாற்றின் அல்லது இருப்பின் தொன்மையை உறுதிப்படுத்தியும் பாதுகாத்தும் வந்துள்ளார்கள். இப்பொழுதும் தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதனும் பேராசிரியர் ப. புஷ்பரட்ணமும் இந்தப் பணியை களஆய்வுகளில் ஈடுபட்டு முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்தவகையில், கொழும்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள தொல்பொருட்காட்சிச் சாலைகளில் வரலாற்றுத்துறை பேராசியரியர்களினால் அகழ்வாய்வு செய்து, எடுக்கப்பட்ட மற்றும் களப்பணிகள் ஊடாகச் சேகரிக்கப்பட்ட பல தொல்லியல் சின்னங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக, வடஇலங்கையின் புராதன வரலாற்றைப் வௌிப்படுத்தும் முகமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பீடத்தில் இயங்கும் தொல்பொருள் காட்சிச் சாலையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மிகமுக்கிய தொல்லியல் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே, வரலாறு ஒரு முக்கிய பாடமாகத் தமிழ் அறிஞர்களால் கருதப்பட்டது. அதற்கேற்றாற்போல், பேராசிரியர் இந்திரபாலா, வரலாற்றுத்துறையின் முதற்தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் பகுதிகளில் அவர்களுடைய வரலாற்றைச் சரிவரக் கண்டறியப்படுவதற்கு யாழ்ப்பாண வரலாற்றுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை அக்காலப் பகுதியில் முன்னெடுத்திருந்தது.

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், வரலாற்றுத்துறை பீடத்தினரால் அகழ்வாய்வு செய்யப்பட்ட தொல்லியல் மற்றும் மரபுரிமைச் சின்னங்கள் பேராசிரியர் இந்திரபாலவினால் கலைப்பீடத்தில் ஒருசிறிய அறையில் பேணிப்பாதுகாக்கப்பட்டு, தொல்லியல் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனைக்கோட்டை, சாட்டி போன்ற இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பல தொல்லியல் சின்னங்கள் 1987 ஆம் ஆண்டு அசம்பாவிதங்களின்போது இங்கிருந்து காணாமல்போய்விட்டன.

1990 ஆம் ஆண்டளவில் பேராசிரியர் சிற்றம்பலம், வரலாற்றுத்துறையின் தலைவராகப் பதவிஏற்றார். வரலாற்றுத்துறையின் தொல்பொருள் அருங்காட்சியகம் மீள்உருவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில், குறிப்பாக, 2008 ஆம் ஆண்டளவில், வரலாற்றுத் துறையின் தலைவராகப் பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் எடுத்த பரந்தளவிலான முயற்சியின் பலனாக, தற்போதைய, புதுப்பொலிவு பெற்ற நவீன அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்திலுள்ள பெருமளவான சின்னங்கள் வடஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் சேகரிக்கப்பட்டவையாகும்.

காட்சிப்படுத்தல் பெட்டிகள், சிலதொல்லியல் சின்னங்கள் போன்றவற்றை மத்திய கலாசார நிதியம், தொல்லியல் திணைக்களம் ஆகியன வழங்கியிருந்தன யாழ்ப்பாண வரலாற்றுத் துறையின் தலைவர் பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்த அருங்காட்சியகம் குறித்தும் அங்குள்ள பல அரிய சேகரிப்புகள் குறித்தும் பேராசிரியர் விளக்கும்போது மேலும் கூறியதாவது:
“2011 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் ‘கலைகேசரி’ சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாண வாழ்வியல்’ கண்காட்சியின் மூலம், நூற்றாண்டு காலம்காலமாக யாழ்ப்பாண மக்களிடையே பாவனையிலிருந்து, தற்போது அவை பாவனையிலிருந்து மறைந்துவிட்ட பாரம்பரிய பாவனைப்பொருள்கள், சின்னங்கள் என்பவற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் குடாநாடெங்கும் சென்று சேகரித்திருந்தார்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல அரிய பொருட்கள், தற்போது பல்கலைக்கழக அரும்பொருள் காட்சிச் சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு, மத்திய கலாசார நிதியத்தின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதன் பணிப்பாளராக நான், (பேராசிரியர் ப. புஸ்பரத்தினம்) பதவி ஏற்ற பின்னர், மத்திய கலாசார நிதியத்தின் உதவியுடன், இந்த அருங்காட்சியகம், ‘கலாநிதி இந்திரபாலா அருங்காட்சியகம்’ எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இலங்கையிலுள்ள ஒருசில, மிகநவீன அருங்காட்சிகங்களுக்கு ஈடானதாக, இப்போது மீள்உருவாக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் செப்டெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருங்காட்சியகத்தின் மீள்உருவாக்கப் பணிகள் நிறைவு செய்யப்படும்.

இந்த அருங்காட்சியகத்தில் கற்கால மக்கள் பயன்படுத்திய சின்னங்கள், பொருள்கள் முதல், ஆங்கிலேயர் காலம் வரை உள்ள தொல்லியல் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பூநகரி, மாதோட்டம், புளியங்குளம், கட்டுக்கரைக்குளம் முதலிய இடங்களில் இடைக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

இடைக்கற்கால மக்கள் கி.மு ஏறத்தாள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தார்கள். ‘குவாட்சேர்’ எனப்படும் மிக நுண்ணிய கற்கருவிகளே இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் கற்கருவிகள் பேராசிரியர் இந்திரபாலா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் வடபகுதியில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான மிகவும் ஆதாரபூர்வமான சான்றாக இதைப்பார்க்க முடியும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்களுடன் இணைந்து கந்தரோடை, பூநகரி, சாட்டி, செட்டிக்குளம், கப்பாச்சி, கட்டுக்கரைகுளம், நாகபடுவான் முதலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிஇரும்புகால அல்லது பெரும்கற்காலப் பண்பாட்டுக்குரிய அதாவது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பலதரப்பட்ட சின்னங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான, வடஇலங்கையில் தமிழ்மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததற்கான சாசனங்களும் அதாவது, கல்வெட்டுகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை சாட்டி, பூநகரி, கந்தரோடை, நெடுந்தீவு போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.

கி.பி 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுகளும் அவற்றின் மைப்பிரதிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை புளியங்குளம், திருமங்களாய் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டவையாகும்.

மேலும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயர் காலம் வரை வட இலங்கையில் புளக்கத்தில் இருந்த தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட, நாணயங்களும் இந்திய, உரோம, அரேபிய, சீன நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வடபகுதியில் புராதன காலத்தில் மக்களால் பின்பற்றப்பட்டுவந்த மதங்களான இந்து, பௌத்த மதங்களுக்குரிய சிற்பங்களும் திருமேனிகளும் வழிபாட்டுக்குரிய பாவனைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைவிட 2000 ஆண்டுகளுக்க முன்னர் பயன்பாட்டில் இருந்ததும் தற்போது படிப்படியாக வழக்கொழிந்துபோன, மரபுரிமைச் சின்னங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பழைமைமிக்க இந்து ஆலயங்கள் பலவற்றின் கலைவடிவங்களும் தேர்ச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், சாசனம் பொறிக்கப்பட்ட கோவில் சமய சின்னங்களும் அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றைவிட, கட்டுக்கரை குளக்கட்டில் மிகப்புராதன ஐயனார் ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்களாக பெருமளவு சமயச்சின்னங்களும் நாகபடுவான் அகழ்வின்போது கிடைத்த நாகவழிபாடுக்குரிய சமயச்சின்னங்களும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து, இஸ்லாமிய சமய வழிபாட்டோடு தொடர்புடைய வழிபாட்டுச் சின்னங்களும் அவற்றுக்குரிய தெளிவான புகைப்படங்களும் விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த அரும்பொருட்காட்சிச் சாலையில், மனித வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்து, தற்காலம் வரையான மனித வரலாற்றின் படிமுறை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் புகைப்படங்களும் அவைபற்றிய விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 90 சதவீதத்துக்கும் அதிகமான சேகரிப்புகள் பேராசிரியர் புஷ்பரத்தினம் அவர்களின் பெருமுயற்சியால் சேகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1970 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் சிற்றம்பலம், யாழ்ப்பாண தொல்லியல் கழகத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து, பேராசிரியர் சிவச்சாமி, பேராசிரியர் சிற்றம்பலம், கலாநிதி ரகுபதி, நூலகர் ஆ. சிவநேசச்செல்வன், பேராசிரியர் கிருஷ்ணராசா, ஆ. தேவராசா, ஆசிரியர் திருவள்ளுவர், நிலஅளவையாளர் சேயோன், பூநகரி உதவி அரசாங்க அதிபர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு, வடபகுதியில் நடைபெற்ற பலதொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்கள் ஆவார்கள்.

இவர்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தமிழர்களின் பல தொல்லியல் ஆதாரங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்களாவர்.

இவர்கள் தேடிக் கண்டெடுத்த பல அரியபொருட்கள், 1987 வன்முறையின் பின்னர், அவை எதுவுமே அருங்காட்சியகத்தில் காணப்படவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறையில் உள்ள இந்த அரும்காட்சியகத்தை நவீனமயப்படுத்தியதன் நோக்கம், வரலாற்றுத்துறை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உதவுவதுடன் அல்லது வரலாற்றுத் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காவும் பொதுமக்கள் தமது வரலாறு, பாரம்பரியம், மரபுரிமைகள், பண்பாடுகளைக் கண்டுணர்ந்து கொள்வதையும் அவை, பாதுகாக்கப்படவேண்டும், என்ற நோக்கத்தையும் கொண்டது என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஜுன்21 முதல் ஜூலை 20 வரையான காலப்பகுதியில் லண்டனில் உள்ள டர்ஹம் பல்கலைக்கழகத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைந்து, உலகப்புகழ்பெற்ற தொல்லியலாளர் பேராசிரியர் ஹொனிஹரின் தலைமையில், யாழ்ப்பாணக் கோட்டையில் ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது, போர்த்துக்கேயரால் யாழ்ப்பாணக் கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர், அந்தப்பிரதேசம் இந்துசமுத்திர கடல்சார் வாணிபத்தின் மையமாக இருந்ததற்கான தௌிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான நவீன விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் பேராசிரியர் ஹொனிஹரினால் லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்த்திகேயன் படம்: சமந்தாவின் புதிய நிபந்தனை..!!
Next post பிரபல இந்தி நடிகர் இந்தர்குமார் மாரடைப்பால் மரணம்..!!