By 31 July 2017 0 Comments

கொக்கெய்ன் மயக்கங்கள்..!! (கட்டுரை)

image_8fb6412149கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது.

‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, 218 கிலோகிராம் கொக்கெய்ன், அரச நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை, கணக்கெடுக்காமல் விடக் கூடிய ஒரு விடயமல்ல.

இது தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை.

ஆனாலும், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அது குறித்து தீரவிசாரிக்காமல், அதைக் குறிப்பிட்ட நிறுவனமோ அல்லது அதற்குப் பொறுப்பான அமைச்சரோதான் இலங்கைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற தொனியில், கருத்துகள் முன்வைக்கப்படுவதானது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல்வாதிகள் மீது, குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் மீது, ஒரு வஞ்சகப் பார்வையைக் கடும்போக்காளர்கள் கொண்டிருப்பதையும் எதிலாவது அவர்களை ‘மாட்டி’விட, நேரம் பார்த்துக் கொண்டிருப்பதையும் இந்தப்போக்கு, குறிப்புணர்த்துவதாகக் கருதமுடிகின்றது.

‘சதொச’ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்காக, இரத்மலானையில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட சீனி மூடைகள் அடங்கிய கொள்கலனில், 218 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருள் இருப்பதை அங்கிருந்த ஊழியர்கள் கண்டுபிடித்து, பொலிஸுக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேற்படி கொக்கெய்ன் இறக்குமதியுடன் ‘சதொச’ நிறுவனத்துக்குத் தொடர்பிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர், கடும்போக்கு செயற்பாட்டாளர்கள், ‘சதொச’வுக்கு பொறுப்பான அமைச்சரான ரிஷாட் பதியுதீனை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே, வில்பத்து விவகாரம் மற்றும் வேறுபல சர்ச்சைகளின் காரணமாக, ரிஷாட் பதியுதீனை இலக்கு வைத்துத் தாக்கும் பெருந்தேசியவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி இருக்கின்றது.

இலங்கையில் நாம் என்னதான் பௌத்தம், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ கொள்கைகளை கடைப்பிடித்தாலும், அந்தந்த மதங்களில் போதைப்பாவனை அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதும், அன்றாடம் நமது நாட்டில், ஏகப்பட்ட போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோன்று, பயணப் பெட்டிகளுக்குள்ளும் அந்தரங்க பகுதிகளிலும் மறைத்துவைத்து, போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவதையும் அறிகின்றோம்.

ஆக, போதைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அந்தத் தடை சிலவற்றுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும், அதற்குமப்பால் பல ட்ரில்லியன் டொலர் வணிகமாக போதைப்பொருள் வணிகம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹெரோயின், கஞ்சா, கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருப்பதும் விற்பதும் பாவிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ள இலங்கைத் திருநாட்டில், சிகரெட், பீடி, சுருட்டு, மதுவகைகள் போன்ற, சில தயாரிப்புகள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து அரசாங்கம் பெருமளவான அரசிறையைப் பெற்றுக் கொள்கின்றது. அதாவது, வன்போதைப்பொருட்களுக்கு தடையும் மென்போதைகளுக்கு முறைப்படி அனுமதியை வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றை தடைசெய்வதற்கு எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.‘புகைத்தல் புற்றுநோயை உண்டுபண்ணும்’ என்று சிகரெட் பெட்டியிலேயே அச்சடிக்கச் சிபாரிசு செய்த சுகாதார அமைச்சோ, புகைத்தலுக்கு எதிராக, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளோ, மென்புகைத்தலை நாட்டில் தடைசெய்ய அல்லது மதுப்பாவனையைக் கட்டுப்படுத்த, சட்ட ரீதியான ஏற்பாட்டைச் செய்வது சாத்தியமில்லை. இதுதான் யதார்த்தமும் கூட.

இந்நிலையிலேயே, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களும் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றன. யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு பணம் வந்தால் சரி என்ற எண்ணம், குறுக்குவழியில் அதிக பணம் உழைக்கும் நோக்கம், இலஞ்சத்துக்காகவும் மேலிட அதிகாரத்துக்காகவும் அடிபணிகின்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பொறுப்பற்ற விதத்திலும் கவனக்குறைவாகவும் சோதனையிடும் அதிகாரிகள், எல்லாச் சட்ட விதிகளிலும் இருக்கின்ற ஓட்டைகள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவையே பெரும்பாலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்குக் காரணமாகின்றன.

இதில், ஏதோ ஓர் அடிப்படையிலேயே, இரத்மலானையில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கெய்னும் இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. அது தவறுதலாக இலங்கைத் துறைமுகத்துக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை.

பொதுவாகவே, போதைப் பொருளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அமைப்புகள் இவ்விடயத்திலும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளமை விமர்சனத்துக்கு உரியதல்ல என்பதுடன், அது உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் உதவும்.

ஆனால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சில கடும்போக்காளர்களும் அவர்களுக்குச் சார்பான ஊடகங்களும் இவ்விடயத்தை ஊதிப் பெருப்பித்துள்ளமையும் கொக்கெய்னை யார் கொண்டு வந்தார்கள் என்பதைத் தெளிவாக ஆராயாமல், எடுத்த எடுப்பில், ‘சதொச’ நிறுவனத்தின் மீதும் வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் மீதும் குற்றம்சுமத்துவது ஆரோக்கியமானதல்ல.

இவ்வாறிருக்க, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, “இந்தச் சம்பவத்துடன் அரசாங்கத் தரப்புக்குச் (அரசியல்வாதிகள்) சம்பந்தமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் என்ன சொன்னாலும், அரசாங்கமோ, சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சுங்கத் தரப்பினர், இது விடயத்தில் தெளிவாக இருக்கின்றனர் என்பதை, இந்த உரை வெளிப்படுத்துகிறது.

‘சதொச’ நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலனில், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இதை அந்நிறுவனமே, இறக்குமதி செய்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்துகளை முன்வைத்தனர்.

வேறு சிலர், அமைச்சர் ரிஷாட், இதை இறக்குமதி செய்திருக்கின்றார் என்ற தோரணையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதற்கு ஒரு படி மேலே சென்று, பிக்கு ஒருவர், “இந்த ஹெரோயின் வில்பத்துவில் இருந்து ரிஷாட்டால் கொண்டு வரப்பட்டுள்ளது” என்ற தொனியில்,சாத்தியமேயில்லாத ஒரு விடயத்தைக் கூறி, பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டார்.

இந்தப் பின்னணியில், அமைச்சர் ரிஷாட், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஒரு சிறு குழுவினரால் முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர், ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீனி இறக்குமதியாளர் சங்க உயரதிகாரிகளும் இணைந்து, ஓர் ஊடகவியலாளர் மாநாட்டை கொழும்பில் நடாத்தி, நிலைமைகளை விளக்கியுள்ளனர்.

இங்கு சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, ‘சதொச’ நிறுவனம் ஒவ்வொரு வாரமும் கேள்விப் பத்திரங்களைக் (டென்டர்) கோரியே விநியோகஸ்தர்களிடமிருந்து சீனியைப் பெற்றுக் கொள்கின்றது. அந்த வகையில், இம்முறை சீனி வழங்குநராகத் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தால், அனுப்பி வைக்கப்பட்ட கொள்கலனைத் திறந்தபோதே, வழக்கத்துக்கு மாறாகப் பொதிகள் இருப்பதை, ‘சதொச’ சார்பான ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதைச் சுங்கப் பிரிவினரோ, பொலிஸாரோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக, ‘சதொச’வினால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களே கண்டுபிடித்து, பொலிஸுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் இதை விநியோகித்த நிறுவனம், வேறொரு இறக்குமதியாளரிடம் இருந்தே, இந்தச் சீனிக் கொள்கலனைப் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

சீனி என்ற பெயரில் வந்த, இந்தக் கொள்கலன், துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கம்போல் சுங்க அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், ‘சதொச’வுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட வேளையிலேயே அங்கிருந்த ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட கொள்கலன் லொறிச் சாரதி உட்பட, மேலும் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, ‘சதொச’வோ அல்லது அமைச்சரோ இதைத் தருவித்திருந்தால், அவர்களால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுப்பார்களா என்ற விடயத்தைக்கூட, சிந்திக்காது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

‘சதொச’ என்பது அரச நிறுவனமாகும். அதனால் பொதுமக்கள், நம்பிக்கை வைத்து பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். அந்நிறுவனத்துக்கு இன்று, கொக்கெய்னை அனுப்பியவர்கள், நாளைக்கு, காலாவதியான சீனியை அனுப்பலாம்; தரம் குறைந்த அரிசியை அனுப்பலாம்; பழுதடைந்த பருப்பை அனுப்பலாம்; மேலும், உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கும் இரசாயனங்கள் கலந்த பொருட்களை விநியோகிக்கலாம். ‘சதொச’வில் மட்டுமன்றி, ஏனைய அரச, தனியார் நிறுவனங்களிலும் இது நடக்கலாம்.

எனவே, இந்தச் சம்பவத்துடன் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தக் கடத்தலுடன் ‘சதொச’ தலைவருக்கோ, பொறுப்பான அமைச்சருக்கோ தொடர்பிருந்தால் சட்டத்தின் உடும்புப் பிடிக்குள், அவர்கள் சிக்கவைக்கப்பட வேண்டும் என்பதிலும் மறுபேச்சுக்கே இடமில்லை.

ஆனால், விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு இடையிலேயே, அமைச்சரை இராஜினாமாச் செய்யச் சொல்வது, அமைச்சருடனான பழைய காழ்ப்புணர்வுடன் தொடர்புபட்டதாகவே தெரிகின்றது.

ஏனெனில், திறைசேரி முறிகளில் மோசடி இடம்பெற்றதற்காகவோ வங்கிக்குள் போலி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்காகவோ நிதியமைச்சர் இராஜினாமாச் செய்ய முடியுமா? ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்காக ஊடக அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தார்களா? வித்யா, வசீம் தாஜூதீன் வழக்குகள் உள்ளடங்கலாக பல வழக்குகளில், ஓரிரு பொலிஸ் அதிகாரிகள் குற்றமிழைத்ததற்காக பொலிஸ் மா அதிபரையோ, பாதுகாப்பு அமைச்சரையோ பதவி விலகச் சொல்வது நியாயமா? குடிநீர் சுத்தமில்லை என்பதற்காக அல்லது வடிகாலில் ஒரு சடலம் கிடந்ததற்காக நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் பதவியை துறந்து விடுவதுதான் தீர்வாகுமா? முன்னைய ஆட்சிக்காலத்தில், வடக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக அல்லது பேருவளை கலவரத்துக்காக அப்போதிருந்த அமைச்சர்களை, யாராவது பதவி விலகுமாறு கோரினார்களா?

இது எதுவும் நடக்கவில்லை. ஏனெனில், இது இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடொன்றில், நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும்.

உண்மையில், இச்சம்பவத்துக்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக, சரியாகப் பரிசோதிக்காமல், கொக்கெய்னை நாட்டுக்குள் விட்டமைக்காக, சுங்கத்துக்குப் பொறுப்பான அமைச்சரும் வேறு சில பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் பதவிவிலகியிருக்க வேண்டும். அதற்காக சமூக நலன்விரும்பிகள் எனச் சொல்வோர், குரல் கொடுத்திருக்க வேண்டும்.

அதேபோன்று, ‘சதொச’வுக்காகக் கொண்டு வரப்பட்ட கொள்கலனுக்கும் அந்நிறுவனத்துக்கும் அல்லது அமைச்சருக்கும் தொடர்பிருந்தால், அதைச் சட்டப்படி நிரூபிக்க வேண்டும். அதைவிடுத்து,பழையவற்றை மனதில் வைத்துக் கொண்டு சொல்வது போல், அமைச்சரை இராஜினாமாச் செய்யக் கோருவது காத்திரமானதல்ல.

அரசியல்வாதிகள் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர்களுமல்லர்; அநேகமான அரசியல்வாதிகள் புனிதர்களுமல்லர். ஊழல் செய்கின்ற, பணம் உழைப்பதற்காக எதையும் செய்யத் துணிந்த, அரசியல்வாதிகள் பலரை நாம் தினமும் கண்டுகொண்டிருக்கின்றோம்.
ஆனால், எந்தவொரு அரசியல்வாதி மீதான குற்றச்சாட்டுகளும் சட்டப்படி நிரூபிக்கப்பட்ட பின்னரே, அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையோ, பதவி விலக்கும் நடவடிக்கைகளோ எடுக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு நடவடிக்கை இலங்கையில் ஆரம்பிக்கப்படுமானால், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியல் மிக நீளமானதாக இருக்கும்.
சிங்கள பெருந்தேசியவாதத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாலும் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்துதல் போன்ற வேறுபல காரணங்களாலும் அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளார் அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு அன்றேல், அதில் மாட்டிக்கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு, அவர் போன்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு, ஒரு விடயம் மிக முக்கியமானது. அது என்னவென்றால், இந்தக் குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டவையாக இருந்தாலும் கூட, ஒரு முஸ்லிம் அமைச்சராகத் தனது பெயர், பெரும்பான்மை சமூகத்தின் நடுவே, மோசமாகச் சித்திரிக்கப்படுகின்றது என்பதை அமைச்சர் ரிஷாட் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவேதான், உண்மையாகவே இதைச் செய்யவில்லை என்றால், இது தனக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என்பதையும் இதனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றிய தப்பபிப்பிராயம் உருவாகலாம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதன்படி, தனது தனிப்பட்ட மதிப்பு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் நற்பெயர், முஸ்லிம் சமூக அரசியலின் சிறப்பான பிம்பம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கு ரிஷாட் பதியுதீன் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, இன்று ‘சதொச’ கொள்கலனுக்குள் கொக்கெய்னை வைத்து அனுப்பியவர்கள்…. நாளையோ நாளை மறுதினமோ பழுதடைந்த பொருட்களை, மனித உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த உணவுகளை அனுப்பமாட்டார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?

அதனால், ‘சதொச’ மீது நம்பிக்கை வைத்து, பொருட்கொள்வனவு செய்யும் பொதுமக்கள் அப்பாவித் தனமாக பாதிக்கப்படமாட்டார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

என்னதான் கேள்விப் பத்திரம் கோரிப் பொருட்களைக் கொள்வனவு செய்தாலும், அதன் தரமும் உள்ளடக்கமும் உன்னதமானவையாக இருப்பதை ரிஷாட் மட்டுமன்றி, பல நிறுவனங்களைத் தமது அமைச்சின் கீழ் வைத்துள்ள ஏனைய அமைச்சர்களும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.

சுருங்கக் கூறின், உண்மையாகவே இது ஒரு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றால், இது ரிஷாட் பதியுதீனுக்கே மட்டுமான பிரச்சினையல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.

நிகழ்கால அரசியலில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும், இவ்வாறான ‘நூதன தாக்குதலுக்கு’ இலக்காகலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam