By 3 August 2017 0 Comments

கடைகளில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைடு ரைஸ் ஆபத்தானதா?..!!

201708021448470966_fried-rice-making-road-side-not-health_SECVPFசிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பன்னீர், முட்டை… என நீள்கிற இந்த வறுத்த உணவு (சாதம்) பலருக்குப் பிடித்த, பலர் அன்றாடம் சாப்பிடுகிற ஒன்று. தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது; கூடுதலாக பன்னீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைடு ரைஸ்!

ஒரு ரோட்டோரக் கடையில் எப்படி ஃப்ரைடு ரைஸ் தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே சிலருக்கு நாக்கில் சுவை ஊற ஆரம்பித்துவிடும். பெரிய கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, குடமிளகாய், பீன்ஸ், கேரட் காய்கறிகளைப் போட்டு லேசாக வதக்குவார்கள். பிறகு மிளகு, மிளகாய், உப்பு, மசாலா எனப் பொடி வகைகள். அத்துடன் சாதம் சேர்த்துக் கிளறும்போது எல்லாம் ஒன்றோடு ஒன்று கலப்பதற்கு ஏற்ப அடுப்பின் தீயை, கூட்டியும் குறைத்தும் ஜாலம் செய்வார் சமைப்பவர். கடைசியாக, கடாயோடு சேர்த்துத் தூக்கி, ஒரு குலுக்குக் குலுக்குவார். `ஃப்ரைடு ரைஸ் தயார்’ என அர்த்தம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெரைட்டி; ஆனால், செய்முறை என்னவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். முக்கியமான சேர்மானம் வேகவைத்த சாதம். சைவப் பிரியர்கள் காய்கறிகளைச் சேர்த்தும், அசைவப் பிரியர்கள் முட்டை தொடங்கி, மட்டன் வரை சேர்த்தும் ஃப்ரைடு ரைஸ் தயாரிக்கிறார்கள்.

“ஃப்ரைடு ரைஸ் எளிதாகச் செய்யக்கூடிய ஓர் சீன வகை உணவு. இது நம் உடல்நலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடியதும்கூட. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதித்து, அதிக ஆசிட் உருவாக வழிவகுக்கும். இது, குடலுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும். இதில் உள்ள எம்.எஸ்.ஜி (MSG-Monosodium glutamate) தலைவலியை வரவழைக்கக்கூடியது. இந்த எண்ணெய் சேர்த்த உணவு வயிற்றைக் காலியாக்காமல் நீண்ட நேரம் தங்கியிருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படும்.

ஃப்ரைடு ரைஸை அதிகம் சாப்பிட்டால், இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உயர் ரத்த அழுத்தம் பல இதய நோய்கள் ஏற்பட வழியமைத்துக் கொடுத்துவிடும். இதய நோய்கள் இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது. அரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிகப் பசியோடு இருக்கும்போது ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும்.

அதோடு சிக்கன், மட்டன் என இறைச்சி சேர்ந்தது என்றால், எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும். அதிலும் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதிலும், உத்தரவாதம் இல்லை. எனவே, ஃப்ரைடு ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.

ஆக, ஹோட்டல்களிலும், இதற்கான பிரத்யேகக் கடைகளிலும் எந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை திரும்பத் திரும்பப் பயன்படுத்திய எண்ணெய் என்றால், அது நம் உடலுக்கு அதிக கொலஸ்ட்ரால் சேர்ப்பது உள்பட, எத்தனையோ உடல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இறைச்சியாகட்டும், காய்கறியாகட்டும்… அவற்றின் சுத்தம் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. முக்கியமாக, நம் ஊரில் இதில் சேர்க்கப்படும் வினிகர், அஜினோமோட்டோ போன்றவை நம் உடலுக்கு ஏற்றவை அல்ல. ஆசைப்படுகிற குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ்கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? கொடுக்கலாம்… வாரத்துக்கு ஒருமுறை… சுகாதாரமான முறையில் வீட்டில் தயாரித்து! நம் ஆரோக்கியம் எல்லாவற்றையும்விட முக்கியம் அல்லவா!Post a Comment

Protected by WP Anti Spam