சமுர்த்தி உதவி சாதாரண விடயமல்ல..!!! (கட்டுரை)

Read Time:17 Minute, 45 Second

image_8ef33b1eecநாடு முழுவதிலும் சமுர்த்திப் பயனாளிகளை மீளாய்வு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேவேளை, ஏற்கெனவே சமுர்த்தி உதவியைப் பெறுகின்றவர்களில் ஒரு தொகுதியினர் அந்த உதவியைத் தொடர்ந்தும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படவுள்ளனர்.

இதனால், அதிகமாகப் பாதிக்கப்படவுள்ளவர்கள் வன்னி மற்றும் வாகரை, படுவான்கரைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகப் போர் நடைபெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களேயாவர்.

அதனால்தான் இந்த மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், தமக்கான சமுர்த்தி உதவியை நிறுத்த வேண்டாம் என்று கோரி இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த வாரங்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டங்கள் இதற்கு ஒரு உதாரணம்.

இவர்கள், தங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்தி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதங்களையும் எழுதியுள்ளனர். ‘சமுர்த்தி மீளாய்வு நடைமுறையானது முழு நாட்டுக்குமுரியது என்றாலும், அதைப் போர் நடைபெற்ற இடங்களுக்கும் சேர்த்துப் பொதுமைப்படுத்துவது பொருத்தமானதல்ல. போரின் தாக்கத்திலிருந்து, இன்னும் இந்த மக்கள் மீள் நிலையடையவில்லை. போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இதுவரையில் இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இழப்புகளை மதிப்பிடும் பணிகள் கூட இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், போரினால் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மீள் நிலைப்படுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்படவில்லை.

இதைவிடக் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவித்திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை. மேலும், போர் நடைபெற்ற பிரதேசங்களில் தொழில்வாய்ப்பைப் பெறக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சமுர்த்தி உதவியைத் திடீரென நிறுத்துவது உதவி பெறும் குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கும். நாட்டின் ஏனைய பகுதிகளைப்போல, போர் நடைபெற்ற பகுதிகளில் சமுர்த்தித்திட்டமானது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரவும் இல்லை. போருக்குப் பிறகே, சமுர்த்தி இந்தப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே, எமக்கு ஒரு கால நீட்சி தேவை. அதேவேளை, மேலதிகமான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்குவது அவசியமாகும்’ என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், அவர்கள் வலியுறுத்தியுள்ள விடயம் முக்கியமானது. மிகப்பிந்தி, அறிமுகப்படுத்தப்பட்ட சமுர்த்தித்திட்டம் மேலும் அதிகளவானோருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மக்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுடைய பிரதேசமும் போரினால் பாதிக்கப்பட்டது.

கிடைக்கின்ற உதவியை, வழங்கப்படும் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டல், ஒதுக்கப்படும் நிதி போன்றவற்றின் மூலமாக சிறப்பான முறையில் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காண்பது இந்தப் பிரேதேசத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சவாலானதே.

காரணம், இவர்களுடைய பிரதேசம் போரினால் சிதைவடைந்திருப்பதாகும். சிதைவடையாத ஒரு பிரதேசத்துக்கும் சிதைவடைந்த பிரதேசத்துக்குமிடையில் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. சிதைவடையாத பிரதேசத்தில் ஒரு வேலையைச் செய்து கொள்வதற்கும் சிதைவடைந்த பிரதேசத்தில் அந்த வேலையைச் செய்வதற்குமிடையிலும் பாரிய சிரம வேறுபாடுகளும் பயன் வேறுபாடுகளும் உண்டு. இதை எவரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த மக்களுடைய கோரிக்கை கவனித்தில் கொள்ளப்படுவது அவசியமாகிறது.

இதைக் கவனத்தில், கொண்டு சம்மந்தப்பட்ட பிரதேசங்களின் உயர் மட்ட அதிகாரிகளும் சமூக பொருளாதார ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் சமூக அமைப்புகளும் இந்த மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

குறைந்த பட்சம் அரசாங்கத்தின் கவனத்துக்கு இவர்களுடைய நிலைமையைத் தார்மீக அடிப்படையில் எடுத்துச் சொல்வது அவசியமாகும். இந்த இடத்தில் அரசியல் பிரதிநிதிகளைக் குறித்து நாம் பேச வேண்டியுள்ளது.

உண்மையில் சமுர்த்தி மீளாய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரும்போதே, குறித்த அரசியல் பிரதிநிதிகள், இந்த மக்களின் நிலைமையைக் குறித்து அரசாங்கத்துடன் பேசி விசேட ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே எவராலும் சீர் செய்யப்படாத நிலையிலேயே இந்த மக்களுடைய வாழ்க்கை நிலைமை உள்ளது. அப்படியிருக்கும்போது, கிடைத்து வருகின்ற உதவியையும் நிறுத்துவது என்றால்….?

சமுர்த்தி உதவித்திட்டத்தின்படி, குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வழங்கப்படும் உதவியும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நிறுத்தப்படும் என்பது நடைமுறை.

அதற்கிடையில், குறித்த குடும்பத்தினர் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மூலமாகவும் சமுர்த்தி திட்டத்தின் வாயிலாகவும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான உதவிகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்படும். இதற்காக சமுர்த்தியின் கீழ் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, விவசாயம், விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில், கைத்தொழில் முயற்சிகள், விற்பனை மற்றும் சேவைப் பிரிவு எனப் பல திட்டங்கள் நடைமுறையில் செயற்படுத்தப்படுகின்றன.

விவசாயத்திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தி விசேட செயற்றிட்ட மேம்பாடு, உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை மேம்பாடு, சிறிய அளவிலான பெருந்தோட்டப் பயிர் உரிமையாளர்களை நிறுவனங்களின் ஊடாக ஒருங்கிணைப்புச் செய்தல், தரிசு நிலங்களில் பயிர் செய்தல், வீட்டுத் தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி செயற்றிட்டம், அறுவடையின் பின்னரான தொழிநுட்பம் மற்றும் சீரிடுதல் செயற்றிட்டம் என வகைப்படுத்தப்பட்டுப் பயனாளிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கான வழிகாட்டலும் பிற உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இதைப்போல, விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டத்தில், பாலுக்காக மாடு வளக்கும் செயற்றிட்டங்கள், மாட்டுப் பண்ணைகளை ஒழுங்கு செய்தல், உயிரியல் வாயு அலகுகளை நிறுவுதல், உயிரியல் வாயு அலகுகளை ஒழுங்கு செய்தல், ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அத்துடன், சிறிய அளவிலான மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தித் தொழிலில் ஈடுபடுதல், அலங்கார மீன் வளர்ப்புக்கான தாங்கிகளைத் தயாரித்தல், பால் தயாரிப்புப் பொருட்கள், கருவாடு, சாடின் மற்றும் மாசிக் கருவாடு போன்றவற்றை உருவாக்குதல், பால் விற்பனை மற்றும் பால் சேகரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்புகளும் உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இதைப்போல, விற்பனை மற்றும் சேவைப் பிரிவில் அரிசி வியாபாரம், சலூன் மேம்பாடு, சிற்றுண்டிச்சாலைகள் , கேடரின் சேவைகள், வாகன சர்விஸ், சிகை அலங்காரப் பணிகள், வீட்டுச் சேவைகள், சிறுவர் பராமரிப்பு நிலையப் பணி என்பவற்றுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறே, கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவின் கீழ் சிறிய அளவிலான கைத்தொழில் முயற்சிகள் உள்பட பலவிதமான செயற்றிட்டங்கள் உண்டு.

இவற்றையெல்லாம் உரிய முறையில் ஊக்கத்துடன் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காண்பவர்களும் உண்டு. இந்தப் பயன்களைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாமல் தவறி, தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டிருப்போரும் உண்டு.

ஆனால், வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் உள்பட,கிராம ரீதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வரையில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தற்போதைய நிர்வாக ஒழுங்கின்படி ஒரு கிராம அலுவர் பிரிவுக்கு குறைந்த பட்சம் மூன்று உத்தியோகத்தர்கள் நேரடியாக மக்கள் பணியில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒன்று கிராம அலுவலர்; இரண்டாவது, சமுர்த்தி உத்தியோகத்தர்.;மூன்றாவது அபிவிருத்தி உத்தியோகத்தர். இவர்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் குடும்பங்களின் வளர்ச்சியையும் கிராமத்தின் முன்னேற்றத்தையும் துரிதமாக எட்ட முடியும்.

அதற்குரிய வழிகாட்டலும் ஒருங்கிணைப்பும் இவர்களின் பொறுப்புக்குரியது. இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களின் பட்டதாரிகளாவர். ஆகவே, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு பட்டதாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி ஒருங்கிணைந்த மூன்று சேவையாளர்களும் பொருளாதார முன்னேற்றம், சமூக ஒருங்கிணைவு, கல்வி வளர்ச்சி, பிரதேச அபிவிருத்தி போன்றவற்றைச் சிறப்படைய வைக்க வேண்டும்.

ஆனால், மிக அபூர்வமாகவே இந்த மூன்று உத்தியோகத்தர்களினதும் கூட்டுச் செயற்பாடுகள் நன்மையளிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அவரவர் தனித்துத் தனித்துத் தங்கள் பணிகளைச் செய்ய முற்படுகின்றனர்.

இதனால், குறிப்பிட்டளவு பயனே கிடைக்கின்றது. கிராமங்களின் வளர்ச்சியும் குடும்பங்களின் முன்னேற்றமும் மந்த கதியிலேயே நிகழ்கின்றன. இதைவிட பிரதேச ரீதியாக, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், பெண்கள் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்வி உத்தியோகத்தர், சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சுகாதாரத் தாதியர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பல அதிகாரிகள் உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பிரதேசமும் துறைசார்ந்து நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதுடன், முன்னேற்றத்தையும் காண முடியும். ஆனால், அப்படி நடக்கிறதா என்பது கேள்வியே!

இவற்றைக் குறித்தும் அரசியல் பிரதிநிதிகள் பல இடங்களிலும் எத்தகைய கேள்விகளையும் எழுப்புவதில்லை. அதிலும் வடக்குக் கிழக்கில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், இப்படியான விடயங்களைக் குறித்துத் தங்களுடைய கவனத்தைச் செலுத்துவதேயில்லை.

இதனாலதான் தமிழ்ப்பிரதேசங்களின் வளர்ச்சி மிகமிகப் பின்தங்கியுள்ளது. தமிழ் மக்களில் பெருந்தொகுதியினர் தங்கள் அடிமட்ட வாழ்க்கையை உயர்த்த முடியாமல் தொடரந்தும் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சமூகம் பொருளாதாரத்திலும் பிற துறைகளிலும் வளர்ச்சியைக் காணும்போதே அது பலமான சமூகமாக, ஆரோக்கியமான சமூகமாக இருக்கும். இல்லையெனில், அது பலவீனப்பட்ட நிலையிலேயே காணப்படும். இந்தப் பலவீனத்தையே ஏனைய சக்திகள் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதுண்டு.

மட்டுமல்ல, பலவீனமான சமூகத்தில் வளர்ச்சி வீதம் எப்போதும் வீழ்ச்சியடைந்தேயிருக்கும். அதனுடைய கலாசாரம், பண்பாடு, கல்வி, அறிவியல், தொழில்துறை என அனைத்தும் சீரழியும்.

இதற்குச் சரியான உதாரணம், தற்போது வடக்கின் கல்வி நிலையும் வடபகுதியில் நிலவும் வன்முறைகளும் கலாசாரச் சீரழிவுமாகும். ஆகவே, சமூக வளர்ச்சியை எந்த நிலையிலும் கீழிறங்க அனுமதிக்க முடியாது. சமூக வளர்ச்சி குறையும்போது, அது அரசியல் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும். அதாவது போராடும் முனைப்பை அரசியல் பிரக்ஞையைச் சிதைத்து விடும்.

எனவே, சமுர்த்தி உதவி என்பதைச் சாதாரணமான விடயமாகக் கொள்ளாமல், அதைப் பிரதான விடயமாகக் கொண்டு, உரியவர்கள் முறையான தீர்வைக் காண முன்வர வேண்டும். சமுர்த்திப் பயன்பெறும் குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரம் அதிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக, அவர்களுடைய அன்றாட உணவுகூட அந்த உதவி மூலமாகவே கிடைக்கிறது. ஒரு குடும்பத்தின் நாளாந்த உணவுக்குப் பிரச்சினை என்பது சாதாரணமான ஒன்றா? பசி என்பது புறக்கணிக்கப்படக்கூடியதா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் பயணிப்பவர்களே இந்த அதிர்ச்சிக் காட்சி உங்களுக்கே…!! (வீடியோ)
Next post படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமாவாய்ப்பு: நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டி..!!