By 16 August 2017 0 Comments

மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா?..!! (கட்டுரை)

image_db622f8804நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, புதிய அரசாங்கத்தின் ஆட்சி தொடங்கிய பிறகு, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானதற்குப் பின்பு, இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதனால், சம்பந்தன் கூறியிருக்கும் இந்தச் செய்தி, இன்று அரசியல் அவதானிகளிடத்திலும் அரசியல் தரப்பிலும் கூடிய கவனத்தையும் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. மஹிந்த ராஜக்ஷவைக் கண்டவுடன் ஏதோ ஓர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மேற்படி கூற்றைச் சம்பந்தன் வெளிப்படுத்தவில்லை.

மிக நிதானமாகவே அவர் இதைத் தெரிவித்திருக்கிறார். கூர்மையாக அவதானிப்போருக்கு, சம்பந்தனின் இந்தக் கூற்று, பல உண்மைகளை, புதிய நிலைகளை உணர்த்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றை வரிசைப்படுத்திப் பார்ப்போம். முதலாவது, சம்பந்தனின் இந்த அறிவிப்பானது, அவர் புதியதொரு, அரசியல் சாணக்கியத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அப்படிப் புதிய முறையில், தன்னுடைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாக இருந்தால், அரசியல் தீர்வு உள்ளடங்கலாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையற்றிருக்கும் அரசாங்கத்தை இனியும் ஆதரிக்க முடியாது. ஆகவே, அதை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிரணிகளுடன் சேர்ந்து, இயங்குவதற்குத் தான், தயாராகி விட்டதாகக் கூறியிருக்கிறார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இதைக் கையாள முற்படுகிறார் எனலாம். இதைத் தவிரத் தனக்கு வேறு வழியில்லை என்பதையும் அவர் கூறாமல் கூறியிருக்கிறார்.

இரண்டாவது, அரசாங்கத்தின் அதிருப்தியாளர்களையும் அதை எதிர்த்துக் கொண்டிருக்கும் மஹிந்தவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மஹிந்தவின் அணியைச் சற்று ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அதாவது, பொது எதிரணிக்கு மேலும், வலுச் சேர்க்கும் வாய்ப்பு இதன் மூலமாக ஏற்பட வாய்ப்புண்டு. நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வலுவான தமிழ்த்தரப்பின் நெருக்கத்துக்கான சமிக்ஞைகள் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று மஹிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

மூன்றாவது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சேர்ந்து இயங்க வேண்டிய அவசியச் சூழல் உருவாகியுள்ளதா என்ற கேள்வியைப் பரவலாக எழுப்பியிருக்கிறது.

ஏனென்றால், நாட்டின் பிரச்சினைகள் அத்தனையும் கொதிநிலையிலேயே உள்ளன. சில பிரச்சினைகள் மேலும் தீவிர நிலையை அடைந்துள்ளன. எந்தப் பிரச்சினைக்கும் நல்லாட்சி அரசாங்கம் தீர்வை எட்டவில்லை. அப்படித் தீர்வுகளைக் காண வேண்டும் என்ற அக்கறையும் இந்த அரசாங்கத்தின் மனதில் இல்லை. எப்படியோ அடுத்த தேர்தல்வரையில் காலத்தை ஓட்டிவிடுவோம் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றதொரு உணர்வு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே, அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். அப்படிச் செயற்படும்போதே பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டுவதற்கான அவசியத்தை வலியுறுத்தலாம் என்பது, அல்லது புதியதொரு அரசாங்கத்தையும் ஆட்சியையும் நோக்கி நகரலாம் என்பது, இதன் மறுபக்கம் அரசாங்கத்தைப் பற்றிய நம்பிக்கையும் நல்லெண்ணமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதாகும்.

நான்காவது, சர்வதேச, பிராந்திய சக்திகளுக்கும் சில செய்திகளைச் சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையும் சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்தியும் அரசாங்கத்தின் முதுகில் இனியும் தடவிக் கொண்டிருக்க முடியாது. இனி,அவை நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால், இதற்கு எதிரான தரப்போடு தாம் இணைந்து நின்று அரசாங்கத்தை எதிர்ப்போம் என்பதாகும். இது ஒரு வகையில் சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளை நெருக்கடிக்குள்ளாக்குவதாக அமையும். இனியும் அவை ஒளித்து விளையாட முடியாது என்ற அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

ஐந்தாவது, முஸ்லிம் மற்றும் மலையக் கட்சிகளுக்கும் ஒருவகையில் சம்மந்தன் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார். இனியும் நீங்கள் அரசாங்கத்தின் நிழலில் கண்மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்க முடியாது. ஒரு மாற்றத்துக்காக ஒத்துழைத்ததைப்போல, மாற்றம் நிகழாதவிடத்து, அதை எதிர்ப்பதற்கும் எதிர்த்து வெளியேறுவதற்கும் ஒருங்கிணைய வேண்டும் என்ற அழுத்தத்தை அவர் நேரடியாக வெளிப்படுத்தாமல், மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆறாவது, அரசாங்கத்தின் மீது, தமிழ் மக்களுக்கு உண்டாகியிருக்கும் அதிருப்தியை பிரதிபலிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தன்மீதும் உள்ள தமிழ் மக்களின் கோபத்தை வடியவைக்கலாம். அத்துடன், புதியதொரு அரசியல் உரையாடலின் பக்கமாகக் கவனத்தைத் திசை திருப்பமுடியும் என்பதாகும்.

இப்படிப் பல விதமான, அனுகூலங்களையும் அடிப்படை விடயங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சம்பந்தனுடைய கூற்றும் அந்தக் கூற்றின் அடிப்படையாக எழக்கூடிய செயற்பாடுகளும் அமைகின்றன. தற்போது எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் சம்பந்தன், இதுவரையிலும் உண்மையான அர்த்தத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

உத்தியோகபூர்வமாகக் கூட்டமைப்பும் சம்பந்தனும் எதிர்த்தரப்பாகக் கருதப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு செயற்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால், இது ஓர் எல்லையுடன், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இனியும், இந்த அணுகுமுறையில், அரசாங்கத்துக்கு இனிப்பாகவும் ஆதரவாகவும் செயற்பட முடியாது எனச் சம்பந்தன் உணர்ந்துள்ளார். இதற்கும் சில காரணங்கள் உள்ளன.
அடுத்து வரும் மாதங்களில் அல்லது ஆண்டுகளில் தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் சம்பந்தனும் அவருடைய அணியினரும் உள்ளனர். உள்ளூராட்சி சபைத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ச்சியாகத் தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கும் சம்பந்தனுக்கும் உள்ளது. எனவே, அதற்கான தயார்படுத்தல்களை அவர் செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில், தமிழ் மக்களிடத்திலே கூட்டமைப்பும் தன்னுடைய அணியும் கடுமையான விமர்சனங்களையும் நம்பிக்கையீனங்களையும் கொண்டிருப்பதை சம்பந்தன் தெளிவாகவே அறிந்திருக்கிறார். தேர்தலின்போது, இவை எப்படிப் பாதகமான வெளிப்பாடுகளை உண்டாக்கும் என்பதை அவர் நன்றாக அறிவார். ஆகவே, அதற்கு ஒரு முன் தடுப்பாக, மக்களிடத்திலே ஏற்பட்டிருக்கும் உணர்ச்சி நிலையை மாற்றியமைப்பதற்காக, அவர் ஒரு புதிய தந்திரோபாயத்தைக் கையாள்வதாகவும் இதைக் கொள்ள முடியும்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, சம்பந்தனும் கூட்டமைப்பும் மஹிந்தவைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்ததே நடந்தது. இப்போது அதிரடியாக, மஹிந்தவை, சம்பந்தன் ஆதரிக்க முற்படுவது அல்லது மஹிந்தவுடன் சேர்ந்தியங்க விருப்பம் கொள்வது என்பது பலருக்கும் குழப்பத்தை உண்டாக்கலாம். குறிப்பாக, மஹிந்தவை இன்னும் தீவிர நிலையில் எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களை இது சீற்றமடைய வைக்கலாம்.

ஆனால், இதற்கு உடனடியாகச் சம்பந்தனும் அவருடைய தரப்பினரும் வைத்திருக்கும் பதில், அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றவும் தீர்வைச் சாத்தியப்படுத்தவும் மஹிந்தவின் ஆதரவு தேவை. அதற்காகவே, தான் அவருடன் சேர்ந்தியங்க முற்படுகிறேன் என்பதாகும்.

சம்பந்தனும் அவருடைய அணியினரும் இப்படிச் சொன்னாலும், மஹிந்த, அதற்கு உடன்பட்டு, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சார்பான நிலையில், இணக்கங்களைச் செய்வாரா என்று யாரும் கேள்வி எழுப்பலாம். அரசியலில் எதுவும் எப்படியும் எப்போதும் நடக்கலாம் என்பதுவும் எல்லாமே சகஜம், சாதாரணம் என்பதுவும் மறுக்க முடியாத உண்மைகள்.

யதார்த்த நிலைமைகளே பலவற்றையும் தீர்மானிப்பதுண்டு. யாருமே எதிர்பார்க்காத ஒரு கூட்டு ஆட்சிக்கான ஒப்புதல் கடந்த தேர்தலின்போது ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் பிற தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளுக்கும் இடையில் எப்படி ஏற்பட்டதோ அவ்வாறானதொரு இணக்கமும் இணைவும் இன்னொரு நிலையில் எதிர்பாராத தரப்புகளுக்கிடையில் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு இன்னுமொரு உதாரணத்தைச் சொல்ல முடியும்.

ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளால் தடை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி போன்றவற்றைப் பிந்நாளில் பிரபாகரனே முன்னின்று தன்னுடன் ஒன்றிணைத்துச் செயற்படுத்தினார். இப்படி நடக்கவே முடியாது என்றிருந்த பல காரியங்கள் நம் கண்முன்னே மிகச் சாதாரணமாகவே நடந்து முடிந்திருக்கின்றன.

ஆகவே, சம்மந்தன் புதியதொரு தொடக்கத்துக்கான முஸ்தீபைத் தொடங்கியுள்ளார். இதை, அவர் எதிர்காலத்தில் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கப்போகிறார்? அதற்குரிய விசுவாசமான உழைப்பை அவரும் அவருடைய அணியும் செய்யத் தயாராக உள்ளனரா? இதற்கெல்லாம் ஏற்றவகையில், மஹிந்த தரப்பு நெகிந்து கொடுக்குமா? இதையெல்லாம் தற்போதைய அரசாங்கமும் பிராந்திய, சர்வதேச சக்திகளும் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன? ஏற்றுக்கொள்ளப்போகின்றன? என்பதே இலங்கையின் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியலாகும்.Post a Comment

Protected by WP Anti Spam