By 26 August 2017 0 Comments

பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும்..!! (கட்டுரை)

image_e3e04b5213இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது.

இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

‘முத்தலாக்’ என்பது, “தலாக், தலாக், தலாக்” என, 3 முறை ஒருவர் கூறிவிட்டால், அவரது மனைவியை அவர் விவாகரத்துச் செய்துவிட்டார் என்று அர்த்தப்படுத்தும் முறையாகும். இஸ்லாத்தில் காணப்படும் விவாகரத்து முறைகளில், மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு முறையாகவும் இது காணப்பட்டது.

இது, ‘ஹனாபி’ இஸ்லாமியச் சட்ட முறையைப் பின்பற்றும் முஸ்லிம்களின் விவாகரத்து முறையாகும். முன்னைய காலங்களிலேயே இது காணப்பட்டாலும், அண்மைக்காலத்தில் அதிகரித்துக் காணப்பட்டது என்பது தான், ‘முத்தலாக்’ தொடர்பில் அதிக கவனம் எழுவதற்குக் காரணமாகும்.

குறுஞ்செய்தி, ‘வட்ஸ்அப்’ செய்தி, ‘ஸ்கைப்’ போன்ற நவீன வழி ஊடகங்கள் மூலமாகவும், இந்த ‘முத்தலாக்’ முறையைப் பயன்படுத்தி விவாகரத்துகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல் பரவிய பின்னர் தான், இதற்கெதிரான எதிர்ப்பு, பரந்தளவில் ஏற்பட்டது.

அதன் பின்னர், இந்திய உச்சநீதிமன்றத்திடம் சென்று, இப்போது தீர்ப்பும் வந்திருக்கிறது. ஆனால் இதில் குறிப்பாக, 5 பேர் கொண்ட இந்திய உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வில், 3-2 என்ற கணக்கில் தான், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட 2 நீதியரசர்களில், இந்தியாவின் தலைமை நீதியரசரும் ஒருவர். “தனிப்பட்ட சட்டங்களை, அரசமைப்பு அமர்வால் அணுக முடியாது” என்பது அவரது கருத்தாக அமைந்தது.

எதற்காக இவ்வாறான கருத்துகள் எழுகின்றன என்றால், பாரம்பரியமாகக் காணப்படுகின்ற விடயங்களை, மாற்றுவதற்கோ அல்லது அவற்றுக்குத் தடை விதிப்பதிலேயோ, ஒரு வகையான தயக்கம் காணப்படுகிறது.

இலங்கையிலும் கூட, முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, “காலாகாலமாக இருக்கும் ஒன்றில் எதற்கு மாற்றம்?”, “ஒரு சமூகத்தின் தனியான சட்டங்களில், நாடாளுமன்றமோ அல்லது நீதியமைச்சோ தலையிடக்கூடாது” போன்ற கருத்துகள் தான் எழுந்திருந்தன.

இதே நிலைமை தான், தற்போது ஐக்கிய அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கிறது. கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த காலப்பகுதியில், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை எடுத்த போது, அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில மாநிலங்கள் பிரிந்து சென்றன. அதன் பின்னர், மிகப்பெரிய போரும் ஏற்பட்டது. அவ்வாறு, அடிமைத்தனத்தை ஒழிப்பதை எதிர்த்த மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியது தான், “அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு”.

குறித்த கூட்டமைப்பு, பின்னர் தோற்கடிக்கப்பட்டதோடு, அம்மாநிலங்கள், மீண்டும் ஐ.அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பும் அதன் கொடியும் அதனோடு சம்பந்தப்பட்ட நினைவுகளும், இனவாதத்தினதும் இன ஒடுக்குமுறையினதும் அடையாளங்களாக இன்னமும் காணப்படுகின்றன.

அண்மைக்காலத்தில், குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் – ஐ.அமெரிக்காவில் அதிகரித்திருக்கும் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனம், முரண்பாடு ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் பற்றிய கவனமும் அதிகரித்திருக்கிறது. அக்கூட்டமைப்பின் கொடியை, வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் பிரிவினர், தமது அடையாளமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து, இக்கூட்டமைப்புக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்துள்ளதோடு, அக்கூட்டமைப்பின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுமாறும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை, வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் நவ நாஸிஸப் பிரிவினர் எதிர்த்து வருகின்றனர்.

இது, மாபெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புச் சம்பந்தமான சிலைகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, “எங்கள் கலாசாரங்களை அழிக்கப் பார்க்கின்றனர்” என்றும் கூறியிருந்தார்.

இந்தச் சிலைகளை அகற்றுவதற்கு, வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்துவோர் மாத்திரமன்றி, பொதுவான சிலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தச் சிலைகள், இனவாதத்தை வெளிக்காட்டுகின்ற போதிலும், அவை வரலாறு என்ற படியால், அவற்றை இல்லாது செய்யக்கூடாது என்பது, அவர்களின் கருத்தாக இருக்கிறது.

இதேபோன்று தான், அண்மைய சில ஆண்டுகளாக, இந்தியாவின் சபரிமலைக்கு, பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. ஐயப்பன் என்ற கடவுளை வணங்குவதற்கு, பெண்களுக்கு அனுமதியுண்டு என்ற போதிலும், இந்தக் கோவிலுக்குச் செல்வதற்கு மாத்திரம், அனுமதி இல்லை. இதற்கெதிரான போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஆனால், அதில் மாற்றங்களைச் செய்வதற்கு, பொறுப்பானவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மையானது. அவர்களும் கூறும் பதில், “காலாகாலமாக இருப்பதை மாற்ற முடியாது” என்பது தான்.

இவ்வாறு, மாற்றங்களைச் செய்ய அல்லது ஏற்படுத்த முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வரலாற்றையும் பாரம்பரியத்தையும் காட்டி, அந்த மாற்றங்களை இடைநிறுத்துவதற்கான முயற்சி இடம்பெற்று வருவதை, நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது.

இவையெல்லாம், ஒரு விடயம், குறித்த ஆண்டுகளுக்கு இருந்துவிட்டால், அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை என்ற விடயத்தையே சொல்லிச் செல்கின்றன.

ஆனால், உலகில் ஏற்படுத்தப்பட்ட எல்லா மாற்றங்களும், பாரம்பரியங்களை மாற்றி அல்லது இல்லாது செய்த பின்னரேயே ஏற்படுத்தப்பட்டன என்ற வரலாற்றை மறந்துவிட முடியாது. பச்சை இறைச்சியை உண்டு வந்த மனிதன், நெருப்பைக் கண்டுபிடித்த பின்னர், நெருப்பில் வாட்டி அவற்றை உண்ணத் தொடங்கியமை தொடக்கம், மனித நாகரிகத்தில் ஏற்படுத்தப்பட்ட அத்தனை முன்னேற்றங்களுமே, இவ்வாறு மாற்றங்களால் தான் விளைந்தவை. ஆனால், இவ்வாறான விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, உலகம் தயாராக இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

இது, பாரிய பிரச்சினை அல்ல போன்று காணப்படலாம். ஆனால், சாதாரண மக்களைப் பாதிக்கின்ற இப்படியான விடயங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதற்குத் தயங்கும் நிலை காணப்படுகிறது. இது தான் பிரச்சினையாக உள்ளது.

ஏனெனில், ‘முத்தலாக்’ முறை மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு, அம்முறைக்கெதிரான சட்டமே பயன் தரும். இலங்கையில் முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, அச்சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டாலேயே பயன் கிடைக்கும்.

ஐ.அமெரிக்காவில், வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்துவோரின் அதிகரிப்பால் பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்கு, குறித்த வெள்ளையின ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியமானது.

இந்தியாவில், ஐயப்பனின் பக்தைகளாக இருக்கிற பெண்களுக்கு, சபரிமலையில் சென்று வழிபடுதல் என்பது, அவர்களுக்கு ஆன்மீக ரீதியில் முக்கியமானது.

மேலே குறிப்பிட்ட அனைத்து விடயங்களிலும், சட்டத்தின் தலையீடு என்பது அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஆனால், பாரம்பரியமான விடயங்களில் தலையிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் தலைவர்களால், இவ்வாறு பாரம்பரியங்கள் என்று சொல்லப்படுகின்ற விடயங்களால் பாதிக்கப்படுவோருக்கான நீதியையும் நியாயத்தையும் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இது, ஆரோக்கியமானதொரு நிலை கிடையாது.
எனவே தான், ஆரோக்கியமானதோர் எதிர்காலம் தேவைப்படுமாயின், பாரம்பரியங்கள் என்று சொல்லப்படும் விடயங்களில், மக்களைப் பாதிக்கும் விடயங்களை ஆராய்ந்து, அவற்றில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். அதுவே, அமைதியான வாழ்வுக்கும் அமைதியான உலகுக்கும் வழிசமைப்பதாக இருக்கும்.

இல்லை, பாரம்பரியங்கள் தான் அவசியமானவை என்ற நிலைப்பாட்டில் எவரும் இருப்பார்களாயின், சமநிலையற்ற, பாகுபாடான சூழலொன்றை உருவாக்கவே, அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam