தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 40 Second

image_3714e63277திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது.
சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கட்சித்தாவல் தடுப்புச் சட்டப்படியான இந்தப் புதிய ஆடுகளம், இப்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.

எதிரும் புதிருமாக இருந்த, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணிகள் இணைந்ததுதான் இந்தப் புதிய ‘ஆடு களத்துக்கான ‘ காரணிகளாக அமைந்திருக்கிறது.

இணைப்பு நடவடிக்கை முடிந்ததும், ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். “சசிகலாவை நீக்காமல் நான் அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வர மாட்டேன்” என்ற ஓ. பன்னீர்செல்வம், கடைசி நேர சமாதானப் பேச்சுவார்த்தைகளின் காரணமாக, அந்தக் கோரிக்கையைக் கைவிட்டு, அ.தி.மு.க தலைமைக் கழகம் சென்று, இரு அணிகளின் இணைப்பில் பங்கேற்றார்.

அதையடுத்து, இவர்களுக்காகவே பிரத்தியேகமாக மும்பையிலிருந்து புறப்பட்டு வந்த, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்ராவ், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர் அணியிலிருந்து சேர்ந்த பாண்டியராஜனுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவர்கள் கோட்டைக்குச் சென்றவுடன் எதிர் நடவடிக்கையில் இறங்கிய
டி.டி.வி. தினகரன், 19 சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுநரிடம் அனுப்பி, ‘எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்’ என்று கடிதம் கொடுத்துள்ளார்கள்.

தனித்தனியாகக் கொடுத்துள்ள இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக ஆளுநர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, உத்தரவிட வேண்டும் என்பதுதான், இப்போது தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க தவிர மற்ற அனைத்து எதிர்கட்சிகளும் எழுப்பும் கேள்வியாகும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர், இதுவரை உத்தரவிடவில்லை. அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இப்போது சபாநாயகர் மூலம், இந்த நோட்டீஸை, அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.

கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இன்னொரு சட்டப் போராட்டம் நடப்பதற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்க முடியும். கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு கட்சியிலிருந்து விலகினால் மட்டுமே, அவர்கள் ‘எம்.எல்.ஏ பதவி நீக்கம்’ என்ற தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.

2003 க்கு முன்பு வரை, இது மூன்றில் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்று இருந்தது. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய் காலத்தில், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ‘மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் விலகினால் தகுதி நீக்கம் இல்லை’ என்ற சரத்து இரத்து செய்யப்பட்டு, ‘மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் விலகினால் மட்டுமே தகுதி நீக்கம் வராது’ என்ற விதி உருவாக்கப்பட்டது. எம்.பிக்களுக்கும் இதே விதிதான் பொருந்தும்.

இந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சி கொறடா விதிக்கும் உத்தரவை மீறி, வாக்களித்தாலோ அல்லது வேறு ஒரு கட்சிக்குத் தாவினாலோ பதவி இழப்புக்கு உள்ளாவார்கள். அந்த பதவி நீக்கத்தைச் செய்யும் அதிகாரம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதியின் கீழ் பார்த்தால், ‘ எடப்பாடி அரசாங்கத்துக்கு எங்கள் ஆதரவு வாபஸ்’ என்று, ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கும் 19 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் ‘தகுதி நீக்கத்தில்’ வரவேண்டும். ஏனென்றால், இவர்கள் அ.தி.மு.கவின் 135 சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அல்ல; ஆனால், காவிரியில் உதவாத கர்நாடகம் இந்தக் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தில் தமிழகத்துக்கு உதவுகிறது.
2010 களில் கர்நாடக மாநிலத்தில், பா.ஜ.க சார்பில் முதல்வராக இருந்தார் எடியூரப்பா. அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அப்போது ஆளுநராக இருந்த பரத்வாஜிடம் 13 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்தார்கள். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அதேதினத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பை பெறுமாறு, கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார் ஆளுநர்.

அப்படிக் கடிதம் கொடுத்ததற்காக அந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களையும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர். இதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ‘ஒரு கட்சிக்குள் மாறுபட்ட கருத்தை சொல்வதோ’ ‘முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநருக்கு கடிதம் கொடுப்பதோ’ தவறல்ல; ஆகவே, 13 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என்று உச்சநீதின்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புதான், இப்போது தமிழக ஆளுநரிடம் எடப்பாடி அரசாங்கத்தின் மீது, நம்பிக்கை இல்லை என்று கொடுத்த 19
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
இன்றைய பலத்தின் அடிப்படையில், தமிழக சட்டமன்றத்தில், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 135. அதில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்கள்.

இன்னொரு சட்டமன்ற உறுப்பினர், தினகரனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி, 20 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிறார்கள். இதன்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, இன்றைக்கு 115 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டமன்றத்தில், ஜெயலலிதா மறைவால் ஓரிடம் காலியாக உள்ளது. மீதியுள்ள 233 இடங்களில் அ.தி.மு.கவுக்கு 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படும்.

அதேநேரத்தில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடம் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தினகரன் அணியின் 20 எம்.எல்.ஏக்களையும் சேர்த்தால், அரசாங்கத்துக்கு எதிராக இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக இருக்கிறது.

ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் இன்றைய அளவில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது என்பதே உண்மை. தமிழக சட்டமன்றத்தில் இப்படியொரு சூழ்நிலை முதன் முதலாக ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலைமையை சமாளிக்கவே, இப்போது சட்டமன்ற சபாநாயகர் தனபால், தினகரன் அணியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, நடவடிக்கை எடுக்கிறார். தினகரன் அணிக்கு ஆதரவாக இருக்கும் அறந்தாங்கி இரத்தினசபாபதி எம்.எல்.ஏவையும் சேர்த்து 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்டமன்றத்தின் பலம் 213 ஆகும். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமையிலான அரசாங்கத்துக்கு 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது 115 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து வராது என்று கருதலாம்.

ஆனால், ஏற்கெனவே கர்நாடக வழக்கில் வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றப்பட்டால் தவிர, ‘எடப்பாடி அரசாங்கத்தின் இந்தக் கணக்கு’ கதைக்கு உதவாது. ஆனால், இந்த கட்சி தாவல் தடுப்புச் சட்ட நடவடிக்கையை காரணம் காட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு பெற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பதில் ஆளுநர் வித்யாசகர் ராவ் தாமதம் செய்யலாம்.

இதுவரை, அவர் தாமதிப்பதே, இந்த விடயத்தில் அவர் அவசரப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. அதனால்தான், அரசியல் சட்டப்படி பெரும்பான்மை இழந்து விட்ட அரசாங்கத்தை, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர, ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் வைத்துள்ளன.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் மீதான சபாநாயகரின் நோட்டீஸ் படி, அடுத்த கட்ட நடவடிக்கையைச் சபாநாயகர் எடுக்க முடியாமல் போனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் பதவியில் நீட்டிப்பது கடினம்.

ஆனால், அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுத்து, 20 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கத்துக்கு உள்ளானால், இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் ‘தற்காலிகமாக’ தப்பிக்கும். ஆனால், அது நிரந்தரமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

ஏனென்றால், அ.தி.மு.கவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், கட்டுக் கோப்புடன் அழைத்துச் செல்ல, அக்கட்சியில் ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாததே காரணம். ஆகவே, தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்து விடும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வழக்கம் போல், கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, சபாநாயகரின் நடவடிக்கையும் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க உத்தரவிடாத தமிழக பொறுப்பு ஆளுநரின் நடவடிக்கையும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பினார் ஓவியா..!!
Next post திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை?: செய்தி வெளியாகியதால் பரபரப்பு..!!