By 3 September 2017 0 Comments

‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது?..!! (கட்டுரை)

image_cd361e0116போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது…” என்று, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.

அண்மையில், புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம் வந்து சென்ற ஒரு நண்பர் கீழ்கண்டவாறு தெரிவித்தார். “….போர்க்காலத்தில் கிராமங்கள் என்கிற வேறுபாடுகள் தாண்டி, பிரதேச தேவைகளுக்காகவும் போராட்டத்துக்காகவும் எதையுமே செய்யத் தயாராக இருந்த இளைஞர்களைக் காண முடிந்தது. ஆனால், இன்றைக்கு பிரதேச ரீதியில், ஏன் கிராம ரீதியில் கூட ஒருங்கிணைந்து வேலை செய்வதற்கான அர்ப்பணிப்பை இளைஞர்கள் வெளிக்காட்டுகிறார்கள் இல்லை. ஊரிலுள்ள ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு குழுவாகத் தனித்து நிற்கிறார்கள். ஒரு குழு மற்றைய குழுவை அச்சுறுத்தலாகவே நோக்குகின்றது. கிராமம் சார்ந்த ஒரு வேலையை இளைஞர்களை ஒருங்கிணைத்து செய்து முடிப்பதென்றாலே பெரிய சிரமமாக இருக்கின்றது…” என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிகளிலும் தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ திரள்விலும், ஏன் சி.வி.விக்னேஸ்வரனைக் காப்பாற்றுவதற்காக வீதிக்கு வந்ததிலும் இளைஞர்களே பிரதான பங்கு வகித்தார்கள். அவர்களைப் பின்பற்றி, மக்களும் நம்பிக்கையளித்தார்கள். நிலைமை அப்படியிருக்க, மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் சொல்லும் செய்திகள் வேறுமாதிரியாக இருக்கின்றதே? ஏன் இவ்வாறான நிலை காணப்படுகின்றது?

போருக்குப் பின்னரான ஒரு சமூகமாக அக-புறக் காரணிகள் சார்ந்து தமிழ் மக்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டும், அதே நேரத்தில் போராட்ட குணத்தைத் தக்க வைத்துக் கொண்டும் முன்னோக்கி நகரவேண்டிய மிகவும் கனதியான காலகட்டம் இது.
கடந்த காலத்தின் கேள்விகளும், எதிர்காலம் குறித்த கேள்விகளும் ஒரே நேரத்தில் சரமாரியாக எழுப்பப்படும். ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான பதில்கள் கிடைக்கலாம். அவற்றைக் கவனமாகவும் அதேநேரத்தில், வேகமாகவும் ஆராய்ந்து கொள்ள வேண்டிய தேவையும் உண்டு.

ஆனால், இங்கு கேள்விகள் எழுப்பப்படும் அளவுக்கு பதில்கள் வழங்கப்படுவதில்லை. பதில்கள் வழங்கப்பட்டாலும் அந்தப் பதில்களை யாரும் உள்வாங்குவதில்லை. அப்படியான நிலையில், கேள்விகளால் மாத்திரமே சூழப்பட்ட ஒரு சமூகம், தளம்பல் நிலையை மாத்திரமே உணரும்.

பதில்கள் கிடைக்காத கேள்விகள் அல்லது விளங்காத பதில்களினால் மக்களைத் தெளிவுபடுத்த முடியாது. தெளிவு நோக்கிப் பயணிக்க முடியாத சமூகம், குழப்பங்களோடு தங்கிவிடும்.

அந்தச் சூழல், நம்பிக்கையீனங்களையும் சந்தேகங்களையும் அச்சுறுத்தல் நிலையையும் மக்களிடம் இலகுவாக உணர வைக்கக் கூடியன. இறுதி மோதல்கள் தொடக்கம் இன்றுவரை வளர்ந்து வரும் சூழல் இதுதான்.

ஆயுதப் போராட்டத்தின் வெற்றிகள், உணரப்பட்ட அளவுக்கு, அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைகள் தொடர்பில் கடந்த காலத்தில் எந்தவொரு தருணத்திலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கான, அவகாசத்தை அப்போதையை காலமும் வழங்கவில்லை.

அதனால், போர் வெற்றிகள் மாத்திரமே போராட்டம் குறித்த படமாக மக்களிடம் தீட்டப்பட்டது. அது, அதீத நம்பிக்கைகள் சார்ந்த நிலையையும் உருவாக்கி விட்டிருந்தது. ஆனால், அவ்வளவு நம்பிக்கைகளோடு பார்க்கப்பட்ட போராட்ட வடிவம், மூர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்ட போது, அதை எதிர்கொள்வதற்கு யாரும் தயாராக இருக்கவில்லை.

இந்த நிலையே, அடுத்தது என்ன? என்று யோசிப்பதிலிருந்தே, தமிழ் மக்களைத் தள்ளி வைத்தது. அந்த இடங்களை, எதிரிகள் மாத்திரமல்ல, சகுனிகளும் கையாண்டு கொண்டார்கள். விளைவு, இன்றைக்கு தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கின்ற இடம், எப்போதும் அச்சுறுத்தலாக உணரும் நிலை.

அது, பாதிக்கப்பட்ட சமூகமாக அவ்வளவு சீக்கிரமாக நீக்கப்பட முடியாது என்கிற போதிலும், அதைக் கடந்து சென்று, இலக்குகளுக்கான பாதைகளை செப்பனிடுவதையும் தள்ளிப்போட வைத்திருக்கின்றது. இந்த விடயங்களை அரசியல் தலைமைகளோ, சிவில் சமூக அமைப்புகளோ, ஊடகங்களோ, ஆய்வாளர்களோ, ஏன் சமூக ஊடகங்களோ அதிகமாகப் பேசுதில்லை. அதிக தருணங்களில், மக்களுக்கிடையிலேயே அதிக சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கி விட்டதில், இந்தத் தரப்புகளில் பங்களிப்பு மிகப்பெரியது.

சமூக ஊடகங்கள், குறிப்பாக ‘பேஸ்புக்கை’ நாம் எவ்வாறு கையாளுகின்றோம் என்பதைப் பார்த்தால், சில கட்டங்களைப் புரிந்து கொள்ள உதவும்.

அண்மையில் ‘பேஸ்புக்’கில் எழுதப்பட்ட அரசியல் கருத்தொன்றின் கீழ் ஒருவர், ‘ஒரே தீர்வு, போட்டுத் தள்ளும் கலாசாரம் மீண்டும் உதயமாக வேண்டும்.’ என்கிறார். அதற்கு மற்றொருவர், ‘சத்தியமாய் உண்மை அண்ணோய்; குளிர் விட்டுப் போச்சு; இரண்டு பேரைத் தட்ட, எல்லாம் வழிக்கு வரும்.’ என்று பதில் எழுதியிருக்கின்றார்.

உண்மையில், இவ்வாறான உரையாடலொன்றைப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களையும் அதன் கனதிகளோடு சந்தித்து வந்திருக்கின்ற சமூகத்தின் இளைஞர்கள் இருவர் நிகழ்த்துவதன் பின்னாலுள்ள மனநிலை என்ன? இது, உண்மையிலேயே அவர்களின் தவறு மாத்திரம்தானா? இதன் ஆரம்பம் எங்கிருக்கின்றது.

இங்கு யாருமே எதையும் காதுகொடுத்துக் கேட்பதற்கு தயாராக இல்லை. மாறாக, கேள்விகளை எழுப்புவதற்கும், கருத்துகளைத் திணிப்பதற்குமே ஆர்வமாக இருக்கின்றார்கள். மாறாக, மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதற்கோ, பதில்களை ஆராய்வதற்கு யாரும் தயாரில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை, தொடர்பில் இரா.சம்பந்தனோடு, விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் சிலர், கடந்த வருடம் உரையாடச் சென்றனர். அந்தச் சந்திப்புக்கான அனுமதி, முறையாகப் பெறப்பட்டிருக்கவில்லை என்கிற போதிலும், அங்கு பேசப்பட்ட விடயம் முக்கியமானது.

விடுதலையான கைதிகள் தங்களது கோரிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தன் பத்திரிகை படித்துக் கொண்டு, வெளிப்படுத்திய தோரணை மிகவும் எரிச்சலூட்டியது. அது, அனுமதியற்று உள்நுழைந்து, கருத்துக் கூறியவர்களின் நிலைக்கு சற்றும் குறையாதது. அது, ஓர் ஆதிக்க மனநிலை. நான் சொல்வது மட்டுமே இறுதியானது என்கிற தோரணை. இதன் அடுத்த கட்டங்கள் அண்மைய நாட்களில் அரங்கேறியிருந்தன.

ஒன்றை நிகழ்த்தியவர் எம்.ஏ.சுமந்திரன்; தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கந்தையா அருந்தவபாலன் தன்னுடைய கருத்துகளை வெளியிட்ட போது, சர்வாதிகாரத் தோரணையில் சுமந்திரன் நடத்து கொண்டார். அது, கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வதிலுள்ள மனச்சிக்கல். தாங்கள் எதிர்பார்க்காத ஒன்றை மற்றவர்கள் சொல்லும்போது, ஏற்படுகின்ற எரிச்சல்.

அதுபோல, யாழ். பல்கலைக்கழக காணிக்குள் சட்டத்தரணியொருவர் கடந்த வாரம் நிகழ்த்திய சாகசமும் ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டது. அந்தச் சட்டத்தரணி வெளிப்படுத்தியது பூராவும் ‘நான் யார் தெரியுமா?’ என்கிற மனநிலை.

அந்த மனநிலைக்கு, அங்கேயே அவருக்கு பதில் வழங்கப்பட்டுவிட்டதுதான். ஆனாலும், ‘நான் சொல்வதே இறுதியானது’ என்கிற தோரணை என்பது, சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் காணப்பட்டதன் நீட்சிதான்.

அதைத்தான் அந்தச் சட்டத்தரணியும் வெளிப்படுத்தி அம்பலப்பட்டார். தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கு, எதிராக அல்லது மாற்றாக ஒரு கருத்தையோ, பதிலையோ இன்னொருவர் முன்வைக்க முடியும் என்கிற அடிப்படைத் தன்மையையே உள்வாங்க மறுக்கும் மனநிலையை சமூகத்தின் முன்னால் இயங்குவதாகக் கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளும் ஒரு சில சட்டத்தரணிகளுமே வெளிப்படுத்தும்போது, அதை முன்மாதிரியாகக் கொண்டு வளரும் இளம் தலைமுறை, ‘போட்டுத்தள்ள வேண்டும்’ என்று உரையாடுவதைக் குற்றஞ்சொல்ல முடியாது. அதைத் திருத்துவது குறித்தே சிந்திக்க வேண்டும்.

இன்னொரு பக்கம், ஆயுதப் போராட்ட காலத்தின் தன்மைகளை, அதாவது இராணுவத்தன்மைகளை மீண்டும் பிரதியிடுவதன் மூலம் விடயங்களை இலகுவாகச் சாதிக்கலாம் அல்லது சமாளிக்கலாம் என்கிற உணர்திறனை இளைஞர்களிடம் விதைப்பதில் சிலர் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

ஆயுதப் போராட்ட காலத்திலேயே நிகழ்த்தப்பட்ட சில விடயங்கள், மன்னிக்க முடியாத தப்பு என்கிறபோது, அதை, ஆயுதப் போராட்ட சூழலும், அதைப் போன்றதொரு அர்ப்பணிப்பும் இல்லாத காலத்தில் பிரதியிட முனைவது எவ்வாறானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அது, உண்மையிலேயே தமிழ்த் தேசிய அரசியலை வளர்க்க உதவுமா என்றும் சிந்திக்க வேண்டும். அடிதடி, ரவுடித்தனத்தின் மூலம் அரசியல் இலக்குகளை அடைய முடியும் என்கிற தோரணையை வளர்ப்பவர்கள், சமூகத்திடம் மீண்டும் மீண்டும் நம்பிக்கையீனங்களையும் சந்தேகங்களையும் வளர்ந்துவிட்டு மக்களை தனித்தனித் தீவுகளாகப் பிரித்து வைக்க முயல்கிறார்கள்.

அதனால், அந்தச் சகுனிக் கும்பல்கள் ஆதாயங்களை அடையலாம். ஆனால், அதற்குள் சிக்கி சீரழியும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் மீட்சியடைய வாய்ப்பே இல்லாமற்போகும்.Post a Comment

Protected by WP Anti Spam