By 4 September 2017 0 Comments

“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும்..!! (கட்டுரை)

image_82e33b95a11983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க உரையொன்றை ஆற்றியிருந்தார்.

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்புக்கு, மார்க்ஸிய – இடதுசாரிக் கட்சிகளே காரணம் என்று கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய மூன்று கட்சிகளையும், ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தடை செய்திருந்த நிலையில், தமது கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டமான பழிக்கெதிராக, சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க பேச்சொன்றை நிகழ்த்தியிருந்தார்.

“தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் அரசுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களே, காடையர்களை ஏற்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நான் இதனை ஒரு கருத்தாகச் சொல்லவில்லை. அந்தப் பிரதேசங்களிலுள்ள உங்களுடைய நண்பர்களிடம் போய்க் கேட்டுப் பார்த்தால், உங்களுக்கு இது தெரியும்.

அகலவத்தைப் பிரதேசத்துக்குக் காடையர்களை அழைத்து வந்தது, மின்சார சபைக்குச் சொந்தமான வாகனங்கள். இதனால் மின்சார சபைத் தலைவரோ, அதற்குரிய அமைச்சரோ இதற்கு ஆணை பிறப்பித்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அது என்னுடைய கருத்தல்ல. ஆனால் அரச இயந்திரம் பயன்படுத்தப்பட்டது” என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பில், அரச இயந்திரத்தின் பயங்களிப்பைச் சுட்டிக் காட்டியதுடன், தணிக்கை அதிகாரி, யாழ்ப்பாணத்தில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை மட்டும், 25ஆம் திகதி காலை பத்திரிகைகளில் பிரசுரிக்க அனுமதித்தது எப்படி?; நாட்டை அதற்கு எந்த வகையிலும் தயார்படுத்தாது, அந்தச் செய்தி எப்படி அனுமதிக்கப்பட்டது?; நாட்டின் இரண்டு இடங்களில் வன்முறை வெடித்த பின்பும், 25ஆம் திகதி காலையிலேயே, ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தாது விட்டது ஏன் என்று, காரசாரமாக அரசாங்கத்தை நோக்கி, நியாயமான கேள்விகளையும் முன்வைத்தார்.

ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த தொண்டமான், பத்திரிகையில் வௌியிட்டிருந்த அறிக்கையில், “காடையர்கள் எந்தவித தடையுமின்றி வலம்வர அனுமதிக்கப்பட்டார்கள்” என்று கவலையுடன் குறிப்பிட்டிருந்ததை, தனது நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டிய சரத் முத்தெட்டுவேகம, “காடையர்களை எந்தவித தடையுமின்றி உலாவர அனுமதித்தது, இடதுசாரிக் கட்சிகளா, அல்லது வேறு நபரோ, அதிகாரமிக்கவரோ அதனைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தாரா? நீங்கள் உங்கள் அறிக்கையில் சொன்னதை அர்த்தத்துடன் சொல்லியிருந்தால், இதனை நீங்கள் விளக்க வேண்டும்” என்று,தொண்டமானை நோக்கி கேட்டுக்கொண்டார்.

சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் நியாயமானதே. 1983 “கறுப்பு ஜூலை” கலவரங்களின் பின்னணியில், அரச இயந்திரத்தின் பங்களிப்பு இருந்தமைக்கான சாட்சியங்களை, ஆதாரங்களை பலரும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

1983 “கறுப்பு ஜூலை” பற்றிய சுயாதீன விசாரணையொன்று நடந்திருக்குமாயின், இதுபற்றி நிறைய உண்மைகள், ஆதாரங்கள், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், “காடையர்கள்தான்” இந்த பெரும் இன அழிப்பைச் செய்தார்கள் என்றால், அதனைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லையா? ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதிலாகட்டும், காடையர்களைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், அரசாங்கம் மெத்தனப் போக்கையும், அலட்சியத்தையும் காட்டியது ஏன்? சரத் முத்தெட்டுவேகமவுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள சரியாகச் சிந்திக்கும் மக்கள் அனைவருக்கும் இருந்த கேள்விகள் இவையும், இதுபோல பலவும்.

இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளும் நிலையில் ஜே.ஆரோ அவரது அரசாங்கமோ இருக்கவில்லை. எந்தச் சட்டத்தையும், அரசமைப்புக்கான எந்தவொரு திருத்தத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றும் தனிப்பெரும் பெரும்பான்மை, ஜே.ஆருக்கு இருந்தது. ஜே.ஆருக்கு இருந்த ஒரே சவால், தன்னுடைய கட்சியினரைத் திருப்திப்படுத்துவது மட்டுமே.

“கறுப்பு ஜூலையும்” அரச இயந்திரமும்

1983 “கறுப்பு ஜூலை”, திட்டமிட்டு நடத்தப்பட்டதொன்று என்று வாதம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஜே.ஆர், பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிராஃப் பத்திரிகைக்கு “கறுப்பு ஜூலை” நடைபெற சில நாட்கள் முன்பு, “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயம் பற்றி நான் கவலைப்படவில்லை- அவர்களது உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப்பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம் பற்றியோ [கவலைப்படவில்லை- வடக்கின் மீது நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தம் வழங்குகிறீர்களோ, இங்கிருக்கும் சிங்கள மக்கள் அவ்வளவுக்கவ்வளவு சந்தோஷப்படுவார்கள்” என்று வழங்கிய செவ்வியாகட்டும், 1983 ஜூலை ஆரம்பப் பகுதியில், நீர்கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் அமைச்சரொருவர் “கொஞ்ச நாள் பொறுங்கள், அவர்களுக்கொரு பாடம் கற்பிக்கப்படும்” என்று சொன்னதாகட்டும், 1983 “கறுப்பு ஜூலை” சிங்கள மக்களின் கோபத்தால் விளைந்ததல்ல, மாறாக இதன் பின் பலமான திட்டமிருந்தது என்பதையே உணர்த்தி நிற்கிறது.

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரும் லேக் ஹவுஸின் டைம்ஸ் ஒஃப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவருமான மேவின் டி சில்வா 1992இல், 1983 “கறுப்பு ஜூலை” பற்றி எழுதிய கட்டுரையொன்றில், “காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப்பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி-” என்று குறிப்பிட்டிருந்தார். 1983 “கறுப்பு ஜூலை” பற்றி சர்வதேச நீதித்துறை வல்லுநர்களை ஆணையத்தின் அறிக்கையில் போல் சீகார்ட், “இது திடீரென்று சிங்கள மக்களிடையே எழுந்த இனவெறுப்பு எழுச்சியோ, அல்லது சிலர் குறிப்பிடுவது போல, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கான எதிர்வினையோ இல்லை என்பது தௌிவாகத் தெரிகிறது- இது முன்னரே தௌிவாகத் திட்டமிடப்பட்டு, அந்தத் தௌிவான திட்டத்தின் படி தொடர் செயற்பாடுகளால் அறிந்தே நடத்தி முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பில் அரச இயந்திரத்தின் பங்கை எல். பியதாஸ “இலங்கை: மாபெரும் இன அழிப்பும் அதற்குப் பிறகும் (ஆங்கிலம்)” என்ற தனது நூலில் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “களனியில் கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்யுவின் காடையர் கூட்டமே செயலில் இறங்கியிருந்தது என்று அடையாளங்காணப்பட்டது.

அரசாங்கத்தின் தொழிற்சங்கமான (ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கம்) ஜாதிக சேவக சங்கமயவின் பொதுச் செயலாளரே, கொழும்பில் நடைபெற்ற அழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும், குறிப்பாக வௌ்ளவத்தையில் ஒரே வீதியிலிருந்த பத்து வீடுகள் அழிக்கப்படக் காரணம் என அடையாளங் காணப்பட்டார்.

தெஹிவளை-கல்கிஸை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரே, கல்கிஸைப் பகுதியில் காடையர்களைத் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார். புறக்கோட்டைப் பகுதியில் (442 கடைகள் அழிக்கப்பட்டு, பல கொலைகள் நடத்தப்பட்ட இடம்) பிரதமரின் வலது கரமாக இருந்த அலோசியஸ் முதலாளியின் மகனே, கட்டளையிடுபவராக இருந்திருந்தார்.

இதுபோலவே நடந்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்கும், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும், கட்சித் தலைமையகத்துக்கும் வேலை செய்த காடையர்களும், சில இடங்களில் சீருடையிலிருந்த படையினரும், பொலிஸாருமே தாக்குதலை முன்னின்று நடத்தியிருந்தார்கள்.

அவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (பொறுப்பான அமைச்சர், எம்.எச்.மொஹமட்) சொந்தமான வாகனங்களையும், ஏனைய அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான வாகனங்களையுமே பயன்படுத்தியிருந்தார்கள். வௌ்ளவத்தையின் பல பகுதிகளை அழித்த பலரும், பல மைல்களுக்கப்பாலிருந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்துக்கு சொந்தமான ட்ரக் வண்டிகளில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதுபோன்ற நிறைய சாட்சியங்கள் இருக்கின்றன.”

“கறுப்பு ஜூலையின்” நோக்கம்

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்யு, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி என, அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை பல வகைகளில் நியாயப்படுத்த முயன்றனரே அன்றி, அதற்காக வருத்தப்படவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தரவோ முயலக்கூட இல்லை என்பதுதான் உண்மை. பின்பு, தன்னை தமிழ் மக்கள் தொடர்பிலான ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து அந்நியப்படுத்திக்கொண்ட அமைச்சர் ரொனி டி மெல் கூட, இது நடந்த வேளையில் கள்ள மெளனம்தான் சாதித்தார்.

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பின் பின்னால் ஒரு திட்டமிருந்தது உண்மையானால், அதன் முதல் இலக்கு, தமிழ் மக்களின் பொருளாதாரப் பலத்தை சிதைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் “கறுப்பு ஜூலை” ஏற்படுத்திய பெரும்தாக்கம், தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் சிதைத்தழித்துதான், அதிலிருந்து இன்றுவரை தமிழ் மக்கள் மீளவேயில்லை. அடுத்தது, தமிழ் மக்கள் பலரும் நாட்டை விட்டு வௌியேறியமை. இதற்கு அடுத்ததாக, தமிழ் மக்களின் அரசியலுக்கும் தடை போட்டுவிடவே அரசமைப்புக்கான 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

நிச்சயமாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் தனிநாட்டுக்காக வழங்கிய மக்களாணையை மீறி 6ஆவது திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்து நாடாளுமன்றத்தில் தொடர மாட்டார்கள் என்று ஜே.ஆர் அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும், அல்லது அப்படி 6ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டால், பிரிவினைக்கான கோரிக்கையை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கைவிட வேண்டி வரும், இதில் எது நடந்தாலும் ஜே.ஆர் அரசாங்கம் அதை தனக்குச் சாதகமானதாகவே பார்த்தது.

ரணிலின் தர்க்கத்தவறு

இதற்கு மத்தியில் ஜே.ஆர் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த இளைஞரான ரணில் விக்கிரமசிங்க, 1983 “கறுப்பு ஜூலை” தொடர்பில் இன்னொரு பார்வையை முன்வைத்தார்.

அவரது குறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சாடுவதாக இருந்தது. தமிழ்க் கைதிகள் சிலரை ஏனைய கைதிகள் கொலை செய்தமை வருத்தத்துக்குரியது என்று சொன்ன ரணில் விக்கிரமசிங்க, 1971இல் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது ஏறத்தாழ 10,000 இளைஞர்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொன்றொழித்ததைச் சுட்டிக் காட்டினார்.

மேலும் சிங்களவர் அல்லாத வணிகர்கள், தமது வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டதால் சந்தித்த இழப்பும் துன்பமும், 1956 முதல் பண்டாரநாயக்கர்களின் ஆட்சிகளில் சிங்கள வணிகர்கள் அடைந்த இழப்போடும், துன்பத்தோடும் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஒப்பீடு, தர்க்க ரீதியில் தவறானதாகும். சம்பந்தமில்லாத இரண்டு விடயங்களை சம்பந்தப்படுத்தி நியாயம் கற்பிக்க எடுக்கும் முயற்சி இது.

ஆனால் இதில் அவரது தனிப்பட்ட ஆதங்கம் ஒன்று, உள்ளூர இருக்கிறது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்ட பெரும் வணிகக் குடும்பங்களில், ரணில் விக்கிரமசிங்கவினது விஜேவர்தன-விக்ரமசிங்க குடும்பம் ஒன்று. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் பண்டாரநாயக்கர்கள், சிங்கள வணிகர்களின் வணிகத்தைச் சிதைத்தமை, 1983 “கறுப்பு ஜூலையில்” தமிழ் வணிகர்களின் வணிகத்தைச் சிதைத்தமையை எப்படித் தொடர்புபடுத்தி நியாயப்படுத்த முடியும்?

இந்தியத் தலையீட்டின் ஆரம்பம்

அரசமைப்புக்கான 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலாகவே அமைந்தது. வேறு வழியின்றி இந்தியாவிடமும் மேற்கிடமும் சென்று முறையிட, உதவிகோர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை அரசாங்கமே, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தள்ளியிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தமிழ் நாட்டுக்கு விரைந்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் “கறுப்பு ஜூலை” இன அழிப்பும், 6ஆவது திருத்தமும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தையும் இலங்கைப் பக்கம் திருப்பியிருந்தது. 6ஆவது திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஜே.ஆர் அமைச்சரவையில் வௌிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ்.ஹமீட், 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசியலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஓரங்கட்டப்பட்டால், அது இலங்கையில் இந்தியத் தலையீட்டை உருவாக்கலாம் என எச்சரித்திருந்தார், அந்த எச்சரிக்கை உருப்பெறத் தொடங்கியது.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்…)Post a Comment

Protected by WP Anti Spam