நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 41 Second

image_1b447f315aஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன.

ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது.

இலங்கையில், 2009 மே மாதத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட சமூகம் உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்திருக்கும் பரிதாப நிலையே தொடர்கின்றது.

இவ்வாறிருக்கையில், நம் நாட்டிலும் ‘நிலைமாறு கால நீதி’ என்ற எண்ணக்கருவினூடாக யுத்த பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறைகள் வலியுறுத்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு நீல் ஜே க்ரிட்ஸ் எனும் ஆய்வாளர் எழுதிய ‘ஐனநாயங்கள் முன்னாள் ஆட்சிகளை எவ்வாறு கணிக்கின்றன’ (How Democracies Reckon w ith Former Regimes) என்ற தொகுப்பு நூலுக்கு ‘நிலைமாறு கால நீதி’ (Transitional Justice) என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஆகவே, ‘நிலைமாறு கால நீதி’ என்பது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வகையான நீதிப் பொறி முறை அல்ல; மாறாக, கடந்த காலத்தில் நடைபெற்ற மனித குலத்துக்கு எதிரான, மனித உரிமை மீறல்களைக் கண்டறியும் செல் நெறி ஆகும்.

அதாவது, நாட்டில் மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாகாது இருக்கும் முகமாக, யுத்தத்தின்போது, மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானோருக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தல்; பாதிப்புக்கு உள்ளானோருக்கு இழப்பீடு வழங்குதல்; யுத்தக் குற்றம் புரிந்தோருக்கு தண்டனை வழங்கல் மற்றும் நாட்டின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரல் என்பனவாகும். முக்கியமாக மீண்டும் ஒரு மோதல் நிலை ஏற்படாதவாறு நல்லிணக்கம் பரஸ்பரம் நம்பிக்கையை கட்டி எழுப்புதல் போன்றவாறான முயற்சிகளைக் குறிப்பதாக அமையும்.

அத்துடன், நல்லிணக்கம் நீதியை நிலைநிறுத்தல் பொறுப்புக் கூறல் போன்ற அம்சங்களைத் தாங்கியும் அமைகின்றது. இதனை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், உண்மைகளைக் கண்டறிதல், வழக்குத் தொடுத்தல், இழப்பீடு வழங்கல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் எனும் நான்கு விடயங்களின் அடிப்படையில் நிலைமாறு கால நீதி முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே மனித உரிமைகளைப் பேணி நீடித்த நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப கூடியதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

ஒரு நாட்டினுடைய பிரதான நீதி நூலாக, அந்த நாட்டினுடைய அரசமைப்புச் சாசனம் அமையப் பெற்றுள்ளது. அதன் பிரகாரம், அந்த நாட்டில் வதியும் அனைவரும், இனம், மதம், சாதி, கலாசாரம் போன்ற பண்புகளுக்கு அப்பால், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என விதந்துரை செய்திருக்கும்.

ஆனாலும், நடைமுறையில் சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக அல்லாது, ஒருதலைப்பட்சமாகப் பிரயோகிக்கும் போது, பாரபட்சம் காட்டும்போது, கருத்து முரண்பாடுகள், வன்முறைகள் தோற்றம் பெறுகின்றன. காலப்போக்கில் அது ஆயுத மோதலாகப் பரிணமிக்கின்றது.

இவ்வாறாக ஆரம்பித்த போர், பல வருடங்கள் நீடித்து, இரு தரப்பும் போர் மூலம், தீர்வு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவர்; அல்லது ஒரு தரப்பினரால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட விடயமே நம் நாட்டில் நடைபெற்றது.

இதுபோன்ற ஆயுத மோதல்கள் நடைபெற்று, ஆயுதப் போர் மௌனம் கண்ட நம் தேசத்தில் இந்த நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள்; கொடும் போரால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு, எவ்வாறான அறுவடைகளை இதுவரை வழங்கின என ஆராய வேண்டி உள்ளது.

படையினருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரனை செய்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வழமையான இலங்கைத்தீவின் சிங்கள ஆட்சியாளர்கள் கையாளும் காலம் கடத்தும் உத்தியோ என எண்ணத் தோன்றுகின்றது. உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையற்ற தமிழ் மக்களுக்கு விசாரணைக்கான காலமே இன்னும் கனியவில்லை என்பது பெருத்த ஏமாற்றமே.

‘நிலைமாறு கால நீதி’ தத்துவத்தில் யுத்தக் குற்றம் புரிந்தோருக்கு தண்டனை வழங்கல் என்பது, ஒரு பிரதான நடவடிக்கையாகும். இவ்விடயத்தில் விசாரனைக்கே காலம் கனியவில்லை என்பது இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படவும் இன்னமும் காலம் கனியவில்லை என்பது போன்றதாகும். இவ்வாறான கூற்றுகள் வளர்ந்து வரும் நல்லுறவைக் கணிசமாகச் சிதைக்கும். ஆகவே, இது உண்மையைக் கண்டறிதல் அல்ல; மாறாக உண்மையைப் பொய்யாக்கல் மட்டுமே.

“தமிழ் மக்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியிருந்தால், ஆறடி நிலத்துக்குள் சென்றிருப்பேன்” என தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனவே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக உதவி செய்தவர்கள் தமிழ் மக்கள் ஆவர். அவர்கள் தங்கள் உறவுகளைத் தொலைத்து விட்டுத் தவிக்கின்றனர். ஆகவே, தமிழ் மக்களுக்கு, ஐனாதிபதி ஆற்ற வேண்டிய பெரும் கைமாறு, இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பாணியில் மெதுவாகப் பொறுப்புகூறல் நிறைவேற்றப்படும் என ஐனாதிபதியின் கருத்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல மாதங்களாக, வீதியில் வாழ்வைக் கழிக்கின்றனர். கடந்த, ஓகஸ்ட் 30 ஆம் திகதி, அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஆகவே, விரைவில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் ஊடாக, நியாயமான நம்பிக்கையான விசாரணை, நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். நத்தை வேகத்தில் நகரும், இதன் செயற்பாடுகள் குறித்து, தமிழ் மக்கள் மிகுந்த வேதனையில் துவளுகின்றனர்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு. அத்துடன், அவர்கள் அனைவருமே அதை விரும்புகின்றனர். ஆகவே, அவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்; அவர்களது காயங்கள் ஆற்றுப்படுத்த வேண்டும். இது ‘நிலைமாறு கால நீதி’யின் எண்ணக்கருவாக விளங்குகின்றது.

அடுத்து, நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்தியதில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு அளப்பரிய பங்களிப்பு உண்டு. அவர் ஆளும் கட்சி அரசியல்வாதி போலவே வலம் வந்தார். பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு என்பவற்றுக்கு சிகரம் வைத்தது போலச் செயற்பட்டார். ஆனாலும், கோப்பாப்பிலவு காணி விவகாரத்தில் அவரால் இதுவரை எதையும் சாதிக்க முடியாமல் போய் விட்டது என்றே கூறலாம்.

இந்த நிலையில் கோப்பாப்பிபுலவு காணி விவகாரத்தில் தமக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்தேறிய அனைத்துக் கடிதப் பரிமாற்றங்களையும் தொகுத்து, தூதரங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் என முக்கிய தரப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர்.

அத்துடன் இக்காணி விடுவிப்பு, நல்லிணக்கத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதால், அரசாங்கத்துக்கான அழுத்தத்தை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிக அண்மையில், சம்பந்தன் அவர்களை, அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் சந்தித்து உள்ளனர். அப்போது, இலங்கையில் யுத்தத்தால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, சர்வதேச சமூகத்தின் ஊடாக நியாயமான நீதி கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அது நிறைவேறாமல் உள்ளது எனத் தனது மிகப் பெரிய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். ஆகவே, இவ்வாறான கருத்துகள் அரசாங்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழ்த் தலைவரின், நம்பிக்கை இழந்த போக்கையே நிதர்சனமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ஆகவே இவை, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கான ஓர் ஆரோக்கியமான களச்சூழல் அல்ல.

மேலும், பன்னாட்டுச் சமூகம், இலங்கை அரசியலுக்குள் புகுந்தபடியால், அரசாங்கம் – புலிகள் ஆகிய இரு தரப்புக்கும் இடையில், புலிகளின் படை வலு மூலமான, பேரம் பேசும் சக்தி நிர்மூலமாக்கப்பட்டது.

ஆகவே, அதே பன்னாட்டு சமூகம் தற்போதும் மீளப் புகுந்து இலங்கை அரசாங்கத்துக்கு, அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, நம்பிக்கை ஒளிக் கீற்றுகள் மீளத் தென்படும்.

இவ்வாறாகவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் பன்னாட்டு நெருக்குவாரமே, இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருமென, வடக்கு முதலமைச்சரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நகராமல் அடம் பிடிக்கும் நல்லிணக்கம், நல்ல திசை நோக்கி, விரைவாக நகர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் பாரிய பொறுப்புகளை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களோ, கட்சி அரசியலுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். மக்களின் மனங்களைப் புரியாதவர்களாக, வேண்டாத அரசியல் குத்தாட்டம் போடுகின்றனர்.

சஞ்சலத்தோடும் சந்தேகத்துடனும் சலசலப்போடும் வாழும் மக்களுக்கு விடிவு தேவை. இந்நிலையில், ஐனாதிபதி மீது மட்டுமே நல்ல இணக்கத்துடன் இருக்கும் பாவப்பட்ட மக்களுக்கு பரிகாரம் விரைவாகத் தேவை.

ஆகவே, நீடித்த அமைதி, நிலையான சமாதானத்தை உருவாக்குக்குவதே போரின் முடிவாக இருக்க வேண்டும். அதையே பெரும் விலை கொடுத்துத் தமிழ் சமூகம் எதிர்பார்க்கின்றது.

ஆனால், இதுவரை இலங்கைத் தீவில் நிலையான நீடித்த அமைதி ஏற்படத் தவறிய காரணத்தினாலேயே மீண்டும் மக்கள் போராட்டங்கள் (வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம், நில மீட்புப் போராட்டம் எனப் பல்வேறான போராட்டங்கள்) தொடர்ந்த வண்ணமுள்ளது.

அமைதியும் சுதந்திரமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இது குறிப்பது யாதெனில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெறாமையினால், அவர்களால் அமைதியாக வாழ முடியாமல் உள்ளது என்பதேயாகும்.

கடந்த காலங்களில், தம் இனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி வேண்டி, வருடக்கணக்கில் காத்துக் கிடந்தனர்; கிடக்கின்றனர். போரில் வென்ற சிங்களம், சமாதானத்தில் தோற்று விட்டதாக, போரிலும் சமாதானத்திலும் தோற்ற தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இந்தநிலை, மாற்றப்பட வேண்டும்; மாற்றமடையத் தவறின், தற்போதைய அரசாங்கத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் சர்வதேசத்தின் பார்வை மாற்றமடையும். அதன் ஊடாக அவர்களின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் மாற்றமடையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியுடன் செல்பி எடுத்த 8 வயது சிறுவன்.! எதிர்பாராமல் சிறுவனுக்கு நடந்த விபரீதம்..!!
Next post விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி : தான்யா..!!