அது எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள்ள நாள், கிழமைலாம் தெரியுது…!!

Read Time:16 Minute, 36 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90 (6)கடந்த நாள்களைப் போல மனித வதை சவால்கள் ஏதுமில்லாமல் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் ஜாலியாக சீண்டிக் கொள்ளும் உற்சாகமான நாளாக இன்று இருந்தது. புயலுக்குப் பின் அமைதி.

‘டார்லிங் டம்பக்கு’ என்கிற பாடலுடன் பிக்பாஸ் வீட்டில் பொழுது விடிந்தது. அம்மா தந்திருந்த டிப்ஸ் காரணத்தினாலோ என்னமோ, ஹரீஷ் வெளியே வந்து முன்னே நின்று உற்சாகமாக நடனமாடினார். பாட்டு முடிந்ததும் ஆரத்தி மட்டும் ‘குட்மார்னிங் பிக்பாஸ்’ என்கிறார். விசுவாசமான போட்டியாளர்.

சிநேகனின் திருமணத்தைப் பற்றி ஆரத்தி உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் கிண்டலடித்தனர். ஸ்டோர் ரூமில் மணியடித்தது. ஆரவ் சென்று ஒரு தாளை எடுத்து வாசித்தபடியே வந்தார்.

‘இன்று எவிக்ஷன் பிராசஸ் இருக்கிறது. எல்லோரும் உடனடியாக லிவ்விங் ஏரியாவிற்கு வரவும்’ என்றவுடன் சுற்றியிருந்தோர் சற்று ஜெர்க் ஆனார்கள். பிறகுதான் அது ஆரவ்வின் குறும்பு என்று தெரிந்தது. பிக்பாஸின் தம்பியாக இருப்பார் போலிருக்கிறது.

சிகையலங்காரத்தில் இருந்த ஜூலி, ‘என்னவாம்’ என்று விசாரிக்க, ‘எவிக்ஷன் பிராசஸஸாம்’ எல்லோரையும் லிவ்விங் ஏரியாவிற்கு வரச்சொல்றாங்க’ என்று பிந்து சொன்னார்.

‘இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணி கொஞ்ச நேரத்திற்கு ஜூலியை ஓட்டலாம்’ என்ற டெரரான ஐடியாவை சொன்னார் சிநேகன். “கொஞ்ச நேரம்.. என்ன.. மத்தியானம் வரைக்கும் இதைக் கொண்டாடிடுவோம்’ என்று உற்சாகமானார் சக்தி. அதிக வேலை வெட்டியில்லாமல் இப்படி எதையாவது செய்துதான் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைமை போட்டியாளர்களுக்கு.

கழிவறையில் இந்த விஷயத்தை மறுபடியும் சிநேகனிடம் விசாரித்தார் ஜூலி. ‘ஆமாம். நாளான்னிக்கு வரப் போறது வேற. இது ஸ்பெஷலாம்” என்று சஸ்பென்ஸை தக்க வைக்க முயன்றார் சிநேகன். ’75 நாள்ல இப்படிச் சொல்லிட்டாங்களே’ என்று ஆதங்கப்பட்டார் ஜூலி.

நமக்கு கூட இன்றைக்கு என்ன கிழமை என்பது சட்டென்று மறந்து போகிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள், அது எத்தனையாவது நாள் என்பது முதற்கொண்டு அப்போதைய மணி, கிழமை என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக எழும் பல்வேறு சந்தேகங்களில் இதுவும் ஒன்று. வருடக்கணக்காக தண்டனை பெற்று சிறைக்குச் செல்பவர்களில் சிலர், தாம் உள்ளே வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளையும் அடையாளங்களால் குறித்து வைத்துக் கொள்வார்களாம். அது போல் செய்கிறார்களோ, என்னமோ.

சிகையலங்காரம் முடிந்து முக அலங்காரத்திற்கு வந்தார் ஜூலி. அவர் வாயைப் பிடுங்கும் நோக்கத்துடன் கேள்விகளை ஆரம்பித்தார் சுஜா. “பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மேக்கப் போட கத்துக்கிட்ட. வேற என்னெல்லாம் கத்துக்கிட்ட” என்று நேர்காணல் எடுக்கத் துவங்கினார்.

‘பொய் சொல்லக்கூடாது’, ‘எங்கே கலாட்டா செய்யறாங்க, கலாட்டா செய்யலைன்னு தெரிஞ்சக்கற’து, ‘எல்லோரையும் நம்பக்கூடாது’, ‘நான் நானாக இருக்கணும்’, ‘மத்தவங்க முடிவை ஏத்துக்கக்கூடாது. அந்த முடிவு என்னுடையதா இருக்கணும்’ என்பது போன்று பல முக்கிய பாடங்களை கற்றதாக சொன்ன ஜூலி, “சில விஷயங்களை திருத்திக்கல. தப்பு செஞ்சா அதுக்கான தண்டனை இருக்கும். அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். ஆனால் இதுக்காக எங்க அம்மா – அப்பா, ஃபீல் செஞ்சதுதான் கஷ்டமா இருக்கு” என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார்.

‘பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு மக்கள் எப்படி பார்த்தாங்க.. செலிபிரிட்டி மாதிரியா?’ என்ற தூண்டிலைப் போட்டார் சுஜா.

‘பொய் சொல்லக் கூடாது’ ன்னு கத்துக்கிட்டேன்’ என்று சற்று நேரத்திற்கு முன் சொன்ன ஜூலி அதை உண்மையிலேயே கற்றுக் கொண்டாரோ, இல்லையோ என்கிற சந்தேகம் நமக்குத் தோன்ற, மக்கள் தனக்கு தந்த வரவேற்பை உற்சாகமாக சொல்லத் துவங்கினார்.

“பெசன்ட் நகர் மாதா கோயில்ல கும்பிட்டுட்டு என் ஃப்ரெண்டு வீட்டிற்குப் போயிட்டு பக்கத்துல இருந்த அடகுக்கடைல மோதிரம் எப்படி இருக்குதுன்னு பார்க்கறதுக்காக போனேன்.

ஒரு பையன் வந்து ‘நீங்க ஜூலிதானே’ன்னு கேட்டான். (அப்ப மேக்கப் போடலையோ?) ‘ஆமாம்’ னு சொன்னவுடனே சுமார் முந்நூறு, நானூறு பேர் கூடிட்டாங்க. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் என்னென்னமோ கொடுத்தாங்க’ என்று ஆனந்தப்பட்டார். ‘சரியா மறுநாள் பிக்பாஸ் வீட்ல இருந்து கூப்பிட்டாங்க.. வந்துட்டேன்’

“பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியேத்தினப்புறம் எங்கே போனீங்க?” என்று சுஜா கேட்டதற்கு ‘எங்கேயும் போகலை. ஆனால் மறுநாள் பரணியோட நம்பர் தேடி அன்னிக்கு முழுக்க சுத்தி, அவர் சேப்பாக்கம் ஸ்டேடியம்ல இருக்கறாரு -ன்னு தெரிஞ்சவுடனே அங்க போயி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்” என்றார் ஜூலி.

“அப்ப நீங்கதானா அது?’ என்று உறுதிப்படுத்திக் கொண்டார் சுஜா. ஆம், இது சார்ந்த வீடியோ ஒன்று அப்போது வைரலானது. முகத்தை மூடிக் கொண்டிருந்ததால் அது ஜூலி அல்ல, வேறொரு நபர் என்றும் சிலர் சொன்னார்கள். ஜூலியின் மீதான மக்களின் கோபம் போய்விடக்கூடாது என்கிற அக்கறை அந்த வதந்தியில் இருந்தது.

“ஏன் அப்படி தோணுச்சு” என்றார் சுஜா. “பரணி உண்மையாத்தான் இருந்தாரு. என்னை உண்மையாகவே தங்கச்சியா ஏத்துக்கிட்டாரு. ஆனால் அவர் போனறப்புறம்தான் எனக்கு உறுத்துச்சு.

அவர் வெளியே போனப்ப, ஏன் சும்மா இருந்தேன்னா, ‘என் கிட்ட சேராதம்மா.. உன்னையும் ஒதுக்கி வெச்சிடுவாங்க”ன்னு சொன்னாரு’ என்றார் ஜூலி.

தன் மீதுள்ள தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ள வைக்காமல் மனம் விதம் விதமான காரணங்களை உற்பத்தி செய்யும். ஓர் ஆழமான தவறுக்காக, எவ்வித நிபந்தனையும் காரணங்களும் இல்லாமல் நேரடியான மன்னிப்பை கேட்டு விடுவதே சிறந்தது.

பிந்து ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டை மீட்பதற்காக ஒரு பெரும் படையே களத்தில் இறங்கியது. ‘பிந்துவே ஒரு பெரிய சைஸ் சாக்லேட்தானே, பின்பு ஏன் வேறெங்கோ தேடுகிறார்கள்?” என்று பிந்து ஆர்மியில் உள்ளவர்கள் நினைக்கக்கூடும்.

‘என்கிட்ட கிரிஸ்டல் இருக்கு. அதை வெச்சு கண்டுபிடிச்சுடுவேன்’ என்று ஆரவ் பிலிம் காட்டினார். அந்தச் சமயம் பார்த்து பிந்து ‘ப்ரீஸ்’ ஆக மற்றவர்களுக்கு இன்னமும் உற்சாகமானது. “முட்டை வெச்சா தெரிஞ்சுடும்” என்று எவரோ ஐடியா தர, முட்டை எடுத்து வர உற்சாகமாக ஓடினார் ஆரத்தி.

யாருக்காவது சூனியம் வைக்க வேண்டும் என்றால் ஆரத்தி படுஉற்சாகமாகி விடுகிறார். முட்டையை அருகில் பிடித்தபடியான போஸில் சிநேகன் உள்ளிட்ட அனைவரும் ‘ப்ரீஸ்’ ஆனார்கள்.

மெயின் டோர் திறக்கப்பட, உள்ளே வந்தவர்கள் யாரென்று தெரியிவில்லை. பிறகுதான் தெரிந்தது ஆரவ்வின் சகோதரர், சகோதரரின் மகன், நண்பன். உள்ளே வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிரெயினிங் தருகிறார்கள் போலிருக்கிறது.

“உன்னைத் தேடி அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்கேன், பார்க்கவே மாட்டேன்றியே” என்று ஆரம்பிக்கிறார்கள். “கண்டிப்பா ஒருநாள் லஞ்ச்சுக்கு வீட்டுக்கு வாங்க” என்கிற வசனத்துடன் முடித்து கிளம்புகிறார்கள். (ஏன் டின்னருக்கு வந்தா சோறு போட மாட்டாங்களா)

ஆரவ்வின் சுற்றத்தாரும் அவ்வாறேதான் நடந்து கொண்டனர். எல்லோருக்கும் ‘freeze’ என்பதை அறியாத சுஜா வெளியே இயல்பாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

‘உங்களுக்கு ‘freeze’ இல்லையா?” என்று கேட்டபிறகுதான் அவருக்கு விஷயம் தெரிந்தது. பிக்பாஸ் இப்போதெல்லாம் நல்ல பிள்ளையாகி விட்டார் போலிருக்கிறது. தண்டனை விஷயத்தில் கடுமையாக இருப்பதில்லை.

சகோதரரையும் நண்பனையும் பார்த்தவுடன் ஆரவ்விற்கு சிரிப்பு பொங்கியது. ‘மச்சான்’ என்று நண்பர்களுக்குள் அழைத்துக் கொள்வது, அந்த உறவின் பொருளை நேரடியாக குறிக்காத, ஆனால் அது சார்ந்த அன்பை நெருக்கமாக குறிக்கும் உபத்திரவமில்லாத வார்த்தை.

நகரங்களில் ‘மச்சான்’ என்றிருப்பது, கிராமங்களில் ‘மாப்ளே’ என்றாகி விடுகிறது. முன்பு ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த முறை சார்ந்த உறவு அடையாளங்கள், உறவு சாராத நண்பர்களுக்கும் விரிவடைந்திருப்பது ஒரு கலாசார பரிணாமம்.

தன் விரதத்தைக் கலைத்து உடனடியாக வந்தவர்களை கட்டிப்பிடித்தார் ஆரவ். சகோதரரை விடவும் அதிக நெருக்கத்தைக் காட்டியது ஆரவ்வின் நண்பன் ரஞ்சித்தான்.

வெவ்வேறு சமூகங்களை, மதங்களைச் சார்ந்தவர்கள் நட்பு என்கிற உணர்வில் உறவுகளை விடவும் அதிகமாக பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். எந்த மத அரசியலாலும் இந்த அடிப்படையான ஒற்றுமையைக் கலைக்க முடியாது.

‘வெளியே இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன பேசிக்கறாங்க’ என்று அறிய முயன்றார் ஆரவ். ‘அடிச்சுக்கூட கேப்பாங்க.. சொல்லிடாதீங்க’ என்று ஒவ்வொருவருக்கும் சொல்லியனுப்பிருப்பாங்க.போல’ ஆரவ்வின் சகோதரர் மெளனச்சிரிப்புடன் அதற்கு தலையசைத்தார்.

ஆரவ்வின் இளமைப்பருவம் குறித்த நினைவுகளை அவரது சகோதரர் பகிர்ந்து கொண்டார். ‘எல்கேஜி வயசுலே இருந்தே பாடிட்டே இருப்பான். பாத்ரூம்ல பாட ஆரம்பிச்சான்னா. பக்கத்து வீட்ல சொல்வாங்க’ என்ற அவரை இடைமறித்து ‘பையன் பாத்ரூம் போயிட்டானா.” என்று மொக்கை ஜோக் அடித்தார் வையாபுரி.

என்றாலும் அப்போது அது தேவையாகத்தான் இருந்தது. ‘எல்லோரும் freeze’ என்றவுடன் தாம் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டதை உணர்ந்த ஆரவ்வின் நண்பர், ‘உன்னை நீச்சல் குளத்துல தள்ள முடியலையே” என்று ஆதங்கப்பட்டார். நண்பேண்டா.

வந்த விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்டனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே இடத்தில் அடைந்து சலிப்புற்றிருப்பதால், எந்தவொரு புதிய நபர் வீட்டிற்குள் வந்தாலும் உற்சாகமாகி விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடுதல் உற்சாகம்.

பிந்துவை சேரில் கட்டிப்போட்டு சாக்லேட்டை மீட்கும் போராட்டம் நடந்தது. ஆரவ்விற்கு சரியாக கட்டத்தெரியாததால் பிந்து எளிதில் தப்பினார்.

அந்த வீட்டில் உள்ளவர்களின் அடையாளங்களை வேறொருவருக்கு மாற்றி அவரை நேர்காணல் செய்வது போல விளையாடினர். போகிற போக்கில் பிக்பாஸிற்கே ஐடியா தருவார்கள் போலிருக்கிறது. ஆரவ்வாகவும் சிநேகனாகவும் ஜூலியாகவும் மாறி மாறி பேசிய வையாபுரி காமெடியில் வெளுத்துக் கட்டினார்.

நகைச்சுவை அன்னியன். ஜூலியாக செய்ததுதான் அதிக சிறப்பு. மசாஜ் விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.

இதற்கிடையில் ஒளித்து வைக்கப்பட்ட சாக்லேட்டை சுஜா கண்டுபிடித்து விட்டார். இதற்காக வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தேடியிருப்பார் போலிருக்கிறது. அதை ரகசியமாக எடுத்து வந்து சக்தியிடம் கொடுத்தார்.

‘அண்டாவைக் காணோம்’ திரைப்பட டைட்டில் மாதிரி ‘சாக்லேட் காணோம்’ என்று பதறினார் பிந்து. ஒருவழியாக எல்லோருக்கும் பங்கு போட்டுத்தரலாம் என்று அவர் முடிவு செய்திருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம். எப்படியோ அவர் கண்டுபிடித்த சாக்லெட்டை பிடுங்கிய ஆரவ் அதை ஹரிஷீடம் தூக்கிப் போட (பழைய) பில்லா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ரகசிய விவரங்கள் அடங்கிய டைரியை தூக்கிப்போட்டு சாகசம் நடத்துவது போல அந்த விளையாட்டு அமைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா…!!
Next post பூஜை அறையில் வலம்புரி சங்கு… வற்றாத அதிர்ஷ்டம் நிச்சயம்…!!