By 2 October 2017 0 Comments

குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்- 2: திருப்பெருந்துறையின் பூர்வீகம்…!! (கட்டுரை)

image_cf1df16d981814 ஆம் ஆண்டில் கொள்ளை நோய் திருப்பெருந்துறை கிராமத்தைத் தாக்கியதையடுத்து, மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் கிராமம் காடாகிப்போனது. கோவில்குளம் என்ற குறிச்சியில் மட்டும் மக்கள் வாழ்ந்தார்கள்.

1933 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு நகர சபையாக இருந்தபோது, அப்போதிருந்த வலையிறவு கிராமசபையின் திருப்பெருந்துறை பகுதி கிரவல் அகழ்வதற்கும்,கழிவுகளை கொட்டுவதற்கும் பிரித்தானியரால் மட்டக்களப்பு நகரசபைக்கு கையளிப்பு செய்யப்பட்டது. பின்னர் 1967 இது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டது.

1988 இல் வலையிரவு கிராம சபையும் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு வன்செயலினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த 34 குடும்பங்கள் இக்குப்பைமடுவத்துக்கு முன்பாகக் குடியமர்த்தப்பட்டனர். அப்போது மேயராக இருந்த செழியன் ஜே.பேரின்பநாயகம் அவர்களால் இக்குடியேற்றத்தை எதிர்த்து சபைத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீதி அமைப்பதற்காக கிறவல் மண் எடுத்த பெரும் பள்ளமும் முன்னர் குப்பை கொட்டிய இடத்துக்கு அருகில் காணப்பட்டது. பள்ளத்தை குப்பை கொட்டி நிரப்பியவாறு, குப்பை​மேடு மக்கள் குடியிருப்பை நோக்கி நகர்ந்த அதே வேளையில் மக்களும் அப்பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குப்பை மேட்டை அகற்றும்படி திருப்பெருந்துறை மக்கள் போராடி வருகின்றார்கள். அவர்கள் சொல்கிறார்கள்.

“சனங்கள் கேக்கேக்க இவங்கள் சொல்லிக்கொண்டிருந்தது, கூட்டுப்பசளை தயாரிக்கப்போறோம் என்று. ஆனால், அவங்கள் சரியான மாதிரி நடைமுறைப்படுத்திக் கொள்ளேல்ல. வந்த குப்பைகளை அப்படியே தேங்கவிட்டுக் கொண்டே வந்தது”.
“25 வருஷத்துக்கு மேலாக இந்தப் பிரச்சினை இருக்கு. நாங்க இது சம்பந்தமா பல பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறம். தாழ்மையா கேட்டுக் கேட்டு, கடைசியில ‘உதயன்சேர்’ இருக்கேக்குள்ள சொன்னார், ‘இதற்கான ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆய்வைப் பரிசீலனை செய்து, நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இரண்டு வருட அவகாசம் தாங்கோ’ என்று கேட்டார்கள்”.

“சரி, மிஷினறிகளை வேற இடத்துக்கு, கொண்டு போறது சிக்கலாக இருக்கும். சரி இரண்டு வருடம்தாறம் என்று, நாங்கள் பொறுமையாக இருந்தம். அந்த ரெண்டு வருஷமும் முடிந்து, அதுக்கு மேல ஒன்றரை வருஷமும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில குதித்தனாங்கள். குப்பையை எடுங்கோ என்றுதான் நாங்கள் கேட்கிறோம்”.

“இந்தக் கிராமத்திலுள்ள 446 குடும்பங்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கு. அதோட சேர்த்து ஊறணியில இருக்கிற ஆக்களும் கொம்பிளைன் பண்றாங்கள். 93, 94 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில பஸ்ராண்டுக்குப் பின்னுக்கு பூம்புகாரில் மாடறுக்கிற கழிவுகள் எல்லாம் கொட்டினவங்கள். இங்க நோமலா இலைகுழையைத்தான் கொட்டினாங்கள். இப்படியே கொட்டிக்கொட்டி குடிமனைவரையும் வந்துவிட்டாங்கள்”.

“குடியேறும்போது அஷ்ரப் சொன்னார், ‘இந்தப் பள்ளம் இருக்கிறதால, உங்களுக்கு பிரச்சினை வரும். அந்த மட்டத்துக்கு குப்பையை போட்டு நிறவிப்போட்டு, அதுக்கு மேல மண்போட்டு, நிறப்பித் தருவாங்கள்’ என்று. அந்த வார்த்தைக்கு இணங்க, இங்க வர ஓம் பட்டனாங்கள். ஆனால், அவங்கள் என்ன செய்தாங்கள் என்றால், மட்டமாக்கி மண்மூடுறது என்று சொல்லப்பட்ட மட்டத்துக்கு மேலாக குப்பையைப் போடேக்க நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனாங்கள். எதிர்ப்புத் தெரிவித்த உடனேயே எங்களுக்கு குப்பை கொட்டுவதற்கு வேற இடமில்லை; கொஞ்சம் பொறுங்கள் என்றார்கள்”.

“இவ்வளவு காலமும் மாடுவெட்டின கழிவுகள் பஸ்ராண்டுக்குப் பின்னாலதான் கொட்டினது. மக்கள் குடியேறிட்டாங்கள். அப்ப மக்களின் தேவை கருதி அகற்றினாங்கள்தானே. ‘கக்கூஸ்வாளி’ எல்லாம் அங்கதான் கழுவினாங்கள். மக்களின் தேவை கருதி அதை வேற இடத்துக்கு எடுத்தாங்கள்தானே. அதுபோல இங்க இருந்து, குப்பை மேட்டை அப்புறப்படுத்துறதுதான் மக்களின் தேவையாக இருக்கிறது”என்கிறது திருப்பெருந்துறை கிராமம். அவர்களின் வார்த்தைகளில் பொறுமையின் விளிம்பில் நிற்கும் ஆக்ரோசம் தெரிந்தது. திருப்பெருந்துறை மக்கள் தமது தீர்மானத்தில் ஆணித்தரமான இருக்கின்றார்கள் என்பதையும் உணரமுடிந்தது.

ஆனால், திருப்பெருந்துறை குப்பை மேட்டை வேறொரு இடத்துக்கு இடம்மாற்றுவதென்பது உடனடியாகச் செயற்படுத்த முடியாது. சரியான திட்டமிடலுடன் நீண்டகால செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு வேலைத்திட்டமாகும். பல திணைக்களங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாகும். எனவே திருப்பெருந்துறை மக்களை நிம்மதியாக வாழவைப்பது யார்?

இதேவேளை திருப்பெருந்துறை திண்ம முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கும்போது…

“மூடுற அளவில இருந்தது. இப்ப ரெண்டு வருசத்தில மூடியிருப்போம். தரம்பிரிப்பு வந்துதென்றால் குப்பையின் அளவு குறைந்துவிடும். பொதுமக்கள் சரியாகத் தரம்பிரித்து, குப்பைகளை அகற்றுவார்களாக இருந்தால், இங்கவாற குப்பைகளின் அளவுகுறையும். 100 கிலோ வாற இடத்தில 15 கிலோதான் வரும். ஓவ்வொரு வூட்டுக்கும் சிவப்பு, பச்சை, ஒரேஞ்ச், வெள்ளை, கறுப்பு என ஐந்து கலரில் ‘பாக்’ கொடுத்தனாங்கள். தரம்பிரித்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மக்களைப் பழக்கப்படுத்திவிடுவோம். இந்த நடைமுறையைப் பலப்படுத்திக் கொண்டு வரும்போதுதான் நெருப்புப் பிரச்சினை வந்திட்டுது”.

“இதுசம்பந்தமான தகவல்களை எல்லாம் பொதுமக்களுடன் ஆணையாளர் கதைச்சவர். நாங்கள் படிப்படியாக சீரமைத்துவாறம். பழைய காலத்தைவிட, இப்ப வந்து எவ்வளவோ, மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நெப்டெப் நிறுனத்தால், 100 மில்லியன் செலவு கொண்ட திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தரம்பிரித்தலில் மீள்சுழற்சிதான் முக்கியம். சூழல் மாசடையப் போவதில்லை. பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து 50 கிலோ கிராம் நிறைகொண்ட பொதிகளாக்கும் மிஷின், கடின பிளாஸ்ரிக்கை துகள்களாக்கும் மிஷின் என நவம்பர் முதலாம் திகதிதான் ஆரம்பித்தது. பிள்ளைகளின் ‘பம்பேஸை’யும் பிளாஸ்ரிக் போத்தலுக்குள் போட்டு சனம் தந்துவிடுவார்கள். சனம் சரியாகத் தரம்பிரித்தால் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்”

“தினசரி 35,36 லொறிகளில் குப்பைகள் வந்து சேருகின்றன. தினமும் சேரும் 20 தொடக்கம் 24 தொன் உக்கக்கூடியகழிவுகள் உரம் தயாரித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. குவியலாக்கல்,ஈரலிப்பைப் பேணுதல், புரட்டுதல், அரித்தல் மற்றும் பொதிசெய்தல் போன்ற செயன்முறைகள் இடம்பெற்று சேதனப்பசளை தனியார் கடைகள் மூலமும் பொதுச்சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. 2016 இல் 10 சதவீதமே தரம்பிரித்தல் இடம்பெற்றாலும் 2017 இல் இது 33 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.உரம் தயாரித்தல் செயன்முறை மூலம் ஒப்பீட்டளவில் துர்நாற்றம் வீசுவதில்லை. குவியலாக்கி மூன்று மாதத்துக்கு அப்படியே விட்டுவிடுவோம். பிறகு ஒருமாதத்துக்கு ஒருக்கா புரட்டுவோம். இது நல்ல பசளை; பூக்காத மரங்களும் பூக்கும். பாடசாலை மாணவர்கள் இங்க வந்து சருகுக் குப்பையிலிருந்து எவ்வாறு சேதனப் பசளை தயாரிக்கின்றோம் என்பதைப் பார்த்துக்கொண்டுபோவார்கள்”. என்கிறது திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ வட்டாரங்கள்.

திருப்பெருந்துறை குப்பைமேட்டுக்கு அருகிலுள்ள கோவில்குளம் குறிச்சியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்துமாரியம்மன் கோவில் உண்டு. இந்தக் கோவிலில் பண்டைக் காலத்தில் நாகரிகத்தில் சிறந்து விளங்கிய மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான கட்டட இடிபாடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பாத்திரங்கள் போன்றவை காணப்படுகின்றன. அழிபாடடைந்த நிலையில் காணப்படும் கேணி, கோவிலின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட கல்லின் சிதைவுகள் போன்றவை இந்த இடத்தின் புராதனத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த வரலாற்றுப் பிரசித்திபெற்ற கோவிலின் நிர்வாக சபை வட்டாரங்கள் கருத்துக் கூறும் போது,
“காத்துமாறி அடிக்கும்போது, கோவில் பக்கம் எல்லாம் மணம் வரும். அதோட இலையான் தொல்லை. இதே மாதிரியான இலையான் தொல்லை சூழ உள்ள கிராமங்களிலும் இருக்கிறது. ஐ.பி.கே.எப் ( இந்திய இராணுவம்) போனத்துக்குப் பிறகுதான் சனம் வந்தது. அதுக்கு முதல் ‘பிறிசன்பாம்’ க்குச் சொந்தமாகத்தான் இருந்தது”.

“நாங்கள் அங்கால வயல் செய்கிறனாங்கள். அந்த டைமில காடாத்தான் கிடந்தது. இதெல்லாம் நாங்களறிய 50 வருஷத்துக்குட்பட்ட வரலாறுதான். அந்தநேரம் ‘வாளிக்கக்கூசு’தான் பயன்பாட்டில் இருந்து. ‘எம்சி’ ஆக்கள் (மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள்) வாளியில் எடுப்பதைக் கொண்டுவந்து, சும்மா, மடுவை வெட்டிப்போட்டு, அதில கொட்டி மூடிவிடுகிறது. எங்கட மாடுகளும் அதுக்குள்ள போய் விழுந்துவிடும். பிறகு அந்த ஆத்தில்போட்டு கழுவுவோம். அப்படி எல்லாம் பிரச்சினை இருந்தது முதல். இப்ப வாளி சிஸ்டம் இல்ல! இப்ப, சக்கையை எடுத்துவிட்டு, பௌசரில் தண்ணியைத்தான் இங்க கொண்டுவந்து அடிப்பாங்கள்”.

“மொத்தம் 40 ஏக்கரில் கொஞ்சத்தை ‘பிறிசன்பாம்’ க்கு கொடுத்துவிட்டு, பின்னுக்குக் கொஞ்சத்தை இவங்களுக்கு கொடுத்தது. அந்த நேரத்திலயே கழிவுக் குப்பைகள் போட்டுக்கொண்டு இருந்தவங்கள். அந்த இடத்துக்குப் பெயரே ‘பீக்காட்டு ஏத்தம்’ என்றுதான் சொல்வார்கள். முந்தி, மாரியம்மன் கோவிலுக்கு அங்கால குடியேற்றமே குறைவு. தூரத்தில தூரத்திலதான் வீடுகள் இருந்தன. பிறகு பாதர் ஆக்கள்வந்து காணியை வாங்கித்தான் குடியேறினவை. பிறகு அதில கொஞ்சம் அமெரிக்கன் மிஷன்காரர் வாங்கினாங்கள். வலையிறவு எயார்போர்ட் விஸ்தரிப்பு வந்தபிறகு, காணியை இழந்த ஆக்களுக்கு இதில காணி குடுத்தவங்கள்”. “முருகன் கோவிலுக்குப் பின்னுக்கு மூன்று கிராம ஆக்கள் இருக்கிறார்கள். வலையிறவு, வீரமுனை ஆக்கள்தான் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் முன்னுக்கு இருக்கிறார்கள்.

ஆகமுதல், முகிலிகைத் தோட்டம் செய்வதற்கு குருக்கள் மாருக்கு காணி கொடுத்தவை. கொத்துக்குளம் கோவிலில் கடமை செய்த பஞ்சாட்சரக் குருக்களின் அண்ணைக்கும் அங்க உறுதி ஒன்று இருந்தது. நாட்டு வைத்தியம் செய்வதற்காக மூலிகை வளர்ப்பதற்கு அனுமதியும் கொடுத்து, காணியும் கொடுத்தவங்கள். நவநீதம் ஆணையாளராக இருந்தபோது, அந்தக் காணிகளையெல்லாம் ‘கிளைம்’ பண்ண வெளிக்கிட்டு, பிரச்சினை ஒன்று போனது. அப்படிப் போகேக்கதான் இங்கால வீரமுனை ஆக்கள் வந்து குடியேறினவை” என்கிறது கோவில்குளம் முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகசபை வட்டாரங்கள். ஐந்து குறிச்சிகளைக் கொண்ட திருப்பெருந்துறை கிராமத்தின் நுழைவாயிலாக இருப்பது கோவில்குளம் குறிச்சியாகும்.

(தொடரும்)Post a Comment

Protected by WP Anti Spam