By 8 October 2017 0 Comments

கோடீஸ்வர ஆளுகையில் ஆபத்தற்ற முதலாளித்துவம்…!!(கட்டுரை)

image_07d8768fa9இலங்கையின் நிறுவனரீதியான கட்டமைப்பில், இந்தியாவின் பொருளாதார வெற்றிகள் தொடர்பான கதைகள், ஏராளமாகக் காணப்படுகின்றன. மேலதிகமாக, வர்த்தக தாராளமயமாக்கல் மூலமாக – குறிப்பாக பொருளாதாரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான கூட்டுறவு ஒப்பந்தம் (எட்கா) – இலங்கையின் பொருளாதாரத்தையும் அவ்வாறான “ஒளிரும் இந்தியா”உடன் இணைத்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளும் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தை, நாங்கள் எவ்வாறு மதிப்பிட முடியும்?

இந்தியாவின் ஊடகங்களும் அறிவியலாளர்களும், இலங்கையைப் பற்றிய தவறான ஒரு புரிதலைக் கொண்டிருக்கின்றனர் என, பல காலமாக, நான் குறிப்பிட்டு வருகிறேன்.

1980களில் இலங்கையில் தலையிட்டுப் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி; பின்னர் அண்மைக்காலத்தில், பிராந்திய புவியியலோடு நெருக்கமான அரசியலுக்கான நலன்களுக்கான இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான போட்டி ஆகியன, இலங்கை மீதான இந்தியாவின் பெரும்பாலான ஆய்வுகளுக்குப் பங்களித்திருக்கின்றன – இவை, ஆய்வுகளை, பாதுகாப்பு விடயங்களுக்கு மட்டுப்படுத்தியிருக்கின்றன. உண்மையிலேயே, இலங்கையின் அரசியல் பொருளாதாரம் பற்றிய இந்திய ஆய்வுகளிலும் விமர்சனங்களிலும், ஆழமான நிலை இல்லாத நிலை காணப்படுகிறது.

இந்நிலைமை, எப்போதும் இவ்வாறு இருந்தது கிடையாது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விமானான ஊர்மிலா பட்னிஸ் போன்றவர்கள், இலங்கையின் மதத்தையும் அரசியலையும் புரிந்துகொள்ள முயன்றனர். அதன் காரணமாக, 1970களிலும் 1980களிலும், இந்தியா – இலங்கை உறவுகளைப் பற்றிய, முக்கியமான ஆய்வுகளை முன்வைத்தனர். ஆனால் அண்மைக்காலத்தில், இந்தியப் பார்வையானது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நெருக்கம், அதேபோன்று சீனாவுடனும் மேற்குலகுடனும் காணப்படும் நெருக்கம் ஆகியவற்றைப் பற்றி மாத்திரமே, கரிசனை கொள்வதாகக் காணப்படுகிறது.

மறுபக்கமாக, போரால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கிலுள்ள இக்கட்டான சூழ்நிலை, சந்தர்ப்பவாத அரசியல் பிரசாரங்களுக்காக தமிழ்நாட்டில் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போர்க்கால வருந்துதல் பற்றிய, உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய எழுத்துகளுக்கும் வழிவகுத்துள்ளன. போரால் மிகவும் பாதிக்கப்பட்ட சனத்தொகை சந்திக்கும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்கள் பற்றிய முழுமையான பார்வை, அவ்வாறான விமர்சனங்களில் இடம்பெறுவதில்லை.

அவ்வாறான இந்தியாவின் கலந்துரையாடல்கள் பற்றி நான் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும், பாக்குநீரிணையின் இந்தப் பக்கத்தில், இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி, நாங்கள் அரிதாகவே அலசுகிறோம் என்பதையும் நான் அறிவேன்.

காஷ்மிராக இருக்கலாம், சத்திஸ்கராக இருக்கலாம், வடக்கு-கிழக்காக இருக்கலாம், இந்தியாவின் இந்து மதத்தின் மேலாண்மையை வலியுறுத்தும் “இந்துத்வா”இன் வெளிப்படையான எழுச்சியாக இருக்கலாம், இவற்றின் அரசியல் முரண்பாடுகள் தொடர்பாகவும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவும், நாங்கள் அரிதாகவே கலந்துரையாடுகிறோம். கடந்த 3 தசாப்தாங்களில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரியளவிலான பொருளாதார மாற்றங்கள் குறித்து, நாங்கள் இன்னும் குறைவாகவே அறிந்துள்ளோம்.

முக்கியமான ஆராய்ச்சி

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் தொடர்பாக, அண்மைய சில மாதங்களில் வெளியான, முக்கியமான இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை நான், இந்தப் பத்தியில் வெளிப்படுத்த விரும்புகிறேன். முதலாவது: அஸாட், போஸ், தாஸ்குப்தா ஆகியோரால் எழுதப்பட்டு, பொருளாதார மற்றும் அரசியல் வாராந்த ஆய்விதழால் இவ்வாண்டு ஓகஸ்ட் 2இல் வெளியிடப்பட்ட, “இந்தியாவில் ஆபத்தற்ற முதலாளித்துவம்: வங்கிக் கடனும் பொருளாதாரச் செயற்பாடும்” என்ற ஆய்வு.

இது, இந்தியப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படக்கூடிய தற்போதைய இயங்கியல் பற்றி ஆராய்கிறது. இரண்டாவது: சான்செல், பிக்கெட்டி ஆகியோரால் எழுதப்பட்டு, இவ்வாண்டு ஜூலையில், செல்வமும் வருமானமும் தரவுத்தள ஆய்வுப் பத்திரிகையாக வெளியிடப்பட்ட, “இந்திய வருமான சமத்துவமின்மை, 1922-2014: பிரித்தானிய ஆளுகையிலிருந்து கோடீஸ்வர ஆளுகைக்கு?” என்ற ஆய்வு. இது, இந்தியாவில் தாராளவாதம் அறிமுகப்படுப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மிகப்பெரியளவில் எழுந்துள்ள வருமான ஏற்றத்தாழ்வைப் பற்றிக் கவனஞ்செலுத்துகிறது.

ஆழமான ஆய்வைக் கொண்டு பெறப்பட்ட ஆதாரங்களை, இரண்டு ஆய்வுப் பத்திரிகைகளும் பயன்படுத்துகின்றன. முதலாவதுஆய்வு, நவீன இந்தியப் பொருளாதாரத்தின் இயங்கியல் பற்றியும், அதன் உயர்வான வளர்ச்சியின் பின்னால் மறைந்து காணப்படும் குணவியல்பு தொடர்பாகவும் ஆராய்கிறது. மற்றைய ஆய்வு, சுமார் 100 ஆண்டுகளுக்கு அண்மையான காலத்தில், வருமானங்கள் தொடர்பாகவும் செல்வப் பரம்பல் தொடர்பாகவும் காணப்படும் வரலாற்றுரீதியான தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாறான ஆய்வுகள், தற்போதைய அரச கொள்கைகளின் தவறுகள் தொடர்பாக, சிறியதாக, ஆனால் பலமுள்ளதான தர்க்கங்களாக முன்வைக்கின்றன.

இந்தியாவில் பொருளாதார மாற்றத்தை வேண்டுவோருக்கு உதவுகின்றனவாக இவ்வாய்வுகள் அமைகின்ற அதேநேரத்தில், உலகம் முழுவதிலும் காணப்படும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, முக்கியமான பாடங்களாகவும் அமைகின்றன. அத்தோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்த முயலும் மக்களின் இயக்கங்களுக்கும், இவற்றின் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை.

நிதியியல் குமிழிகள்

“ஆபத்தற்ற முதலாளித்துவம்” என்ற கோட்பாடு, இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய றிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனால், 2014ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.

இது, அரசதுறை வங்கிகள், அதிகமான துணிகரமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதோடு, நல்ல நிலைமைகளில் எதுவிதத் திரும்புகைகளைப் பெறாமலிருப்பதோடு, மோசமான தருணங்களில் ஏற்படும் அநேகமான இழப்புகளைச் சந்திப்பதைக் குறிக்கிறது. இந்தியா, இந்த மாதிரியை ஊக்குவித்தது. இதன்மூலம், தனியார் வங்கிகளும் கூட்டாண்மைப் பிரிவும், அரசின் இழப்புகள் மூலம், “ஆபத்தற்ற முதலாளித்துவத்தை” அனுபவித்தன.

தாராளமயமாக்கலை 1980களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து, 1991களின் பின்னர் துரிதப்படுத்திய பின்னர், இந்தியப் பொருளாதாரத்தை ஆராய்ந்து, அஸாட்டும் ஏனையவர்களும், இந்த வாதத்தை முன்கொண்டு சென்றனர். இந்தியாவின் அண்மைக்கால பொருளாதார எழுச்சி தொடர்பான அவர்களது விமர்சனம், முக்கியமானது:

“வர்த்தகத்தையும் நிதியியலையும் திறந்துவிடுதல், சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர், வேகமான வளர்ச்சியைத் தூண்டியிருக்கலாம் என்பதோடு, 2000களில் முதலாவது விரை வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் அரசு ஆற்றிய முக்கியமான பங்கும், அதேபோன்று, 2007-08 பூகோள பொருளாதார நெருக்கடியில் அந்த விரை வளர்ச்சியை நீடித்தமையிலும் காணப்பட்டது என, எமது ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அரசதுறை வங்கிகள் மூலமாக, வரவுக் குமிழி ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு, வௌிப்புற நிதியியல் கடனும் – குறிப்பாக உட்கட்டமைப்புத் துறையில் – துணைபுரிந்தது. இந்தக் குமிழி, 2011-12இல் இறுதியாக உடைந்தது. இதன் காரணமாக, வங்கிக் கட்டமைப்பைப் பாதித்த பாரிய கடன் நெருக்கடியும் ஏற்பட்டது”.

நிலைமைகள், இலங்கையிலும் பெரியளவுக்கு வேறானவையாக இல்லை. உண்மையில், ராஜபக்‌ஷ அரசாங்கமும், அவ்வாறான பொருளாதார எழுச்சியையே கொண்டுசென்றது. குறிப்பாக, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி போன்ற அரச வங்கிகளை, 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலான, டொலரில் அமைந்த முறிகளாக வழங்க, அவ்வரசாங்கம் ஊக்குவித்தது. \

அவை, 2018ஆம் ஆண்டில், மிக அதிகமான வட்டி வீதத்துடன், திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவை, வங்கித் துறையில் மிகப்பெரிய நெருக்கடியாக அமைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச நிதியியல் மையத்துக்கான உந்தலைக் கொண்ட தற்போதைய அரசாங்கமும், முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளிலிருந்து, மாறியதாகக் கூற முடியாது. மாறாக அவர்கள், பெருத்த நம்பிக்கையுடன், அரச – தனியார் கூட்டிணைவே, எமது பொருளாதாரத்தின் பிரச்சினைகள் அனைத்துக்குமான மருந்து எனக் காட்ட முனைகின்றனர்.

அஸாட்டினதும் ஏனையவர்களினதும் கருத்துப்படி, அரச – தனியார் கூட்டிணைவை, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குப் பயன்படுத்தும் யுத்தி, இந்தியாவில் 2000களிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில், பெரும்பாலான வரவும் அதன் மூலமாக வரக்கூடிய பெருமளவு ஆபத்தும், அரசதுறை வங்கிகளாலேயே ஏற்கப்பட்டன.

உண்மையில், ஓர் ஆய்வின்படி, 68 சதவீதமான அரச – தனியார் கூட்டிணைவுகள், கடனால் நிதியளிக்கப்பட்டன. அவற்றின் 82 சதவீதமான நிதியளிப்பு, அரசதுறை வங்கிகளாலேயே வழங்கப்பட்டன. ஆகவே, பெரும்பான்மையான அரச – தனியார் கூட்டிணைவுகள், இறுதியில் அரசாலேயே நிதியளிக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியாளர்கள், “அரசு, இவ்வாறான முதலீடுகளைத் தாமே மேற்கொள்ளாமல், கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ஏன் தள்ளுபடிகளை வழங்குகிறது?” என்ற கேள்வியுடன், தமது ஆய்வுப் பத்திரிகையை நிறைவுசெய்கின்றனர்.

சமத்துவமின்மை

பிக்கெட்டின் மிகப்பிரபலம் வாய்ந்த “இருபத்து ஓராம் நூற்றாண்டில் மூலதனம்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, சான்செலும் பிக்கெட்டியும், இந்தியாவில் காணப்படும் சமத்துவமின்மை குறித்த தமது அண்மைய ஆய்வு மூலம், அண்மைய வாரங்களில், பலமான இன்னொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவில் காணப்படும் சமத்துமின்மையின் ஏற்றத்தாழ்வுகளை, அவர்களது ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

இது, 1922ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வருமான வரித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் காணப்படும் அநேகமான பொது விவாதங்கள், பருப்பொருளியலின் தாக்கங்களும் வறுமையும் பற்றிக் காணப்படுவதால், சமத்துவமின்மை என்ற விடயத்துக்கு, முக்கியமான கவனத்தை, இந்த ஆய்வு வழங்கியுள்ளது.

அவர்களது கண்டுபிடிப்புகள், கவலையை ஏற்படுத்துகின்றன. பெரும் பொருளாதாரத் தேக்கம், உலகப் போர் ஆகியவற்றுடன் இணைந்ததாக, கொலனித்துவக் காலத்தின் இறுதிப் பகுதியில், வருமான சமத்துவமின்மை என்பது குறைவடைந்திருந்ததோடு, இந்திய சுதந்திரத்தின் பல தசாப்தங்களின் பின்னர், அது மேலும் குறைவடைந்திருந்தது.

ஆனால், தாராளவாதத்தில் பின்னர், அண்மைய தசாப்தங்களில், வருமான சமத்துவமின்மை, அதிகளவில் அதிகரித்து, உயர்மட்டத்தில் காணப்படுகிறது.
தேசிய வருமானத்தில் மத்திய வகுப்புகளின் – குறிப்பாக சனத்தொகையின் மத்திய 40 சதவீதம் – அத்தோடு அடிநிலை 50 சதவீதத்தின் பங்களிப்பும் குறைவடைந்துள்ளது.

தாராளமயமாக்கலின் பின்னர், இது மிகப்பெரியளவில் குறைவடைந்துள்ளது.
அவர்களுடைய ஆய்விலிருந்து, 1982-83களில் தாராளமயமாக்கலுக்குச் சற்று முன்னரும், 2013-14 காலப்பகுதியில் காணப்படுகின்ற அண்மைய தரவுகளும், பின்வருவனவற்றைக் காண்பிக்கின்றன: செல்வத்தில் உயர்மட்டத்திலுள்ள 0.01 சதவீத சனத்தொகையின் தேசிய வருமானத்துக்கான பங்கு, 0.4 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது; உயர் 0.1 சதவீத சனத்தொகையின பங்கு, 1.7 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகவும்; உயர் 1 சதவீதத்தின் பங்கு 6.2 சதவீதத்திலிருந்து 21.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

மறுபக்கமாக, மத்திய 40 சதவீதத்தின் பங்கு, 46 சதவீதத்திலிருந்து 29.6 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. அடிமட்ட 50 சதவீத சனத்தொகையின், தேசிய வருமானத்தின் பங்கு, 23.6 சதவீதத்திலிருந்து 14.9 சதவீதமாகவும் மாறியுள்ளது. அண்மைய காலப்பகுதியில் – இதை சிலர் “ஒளிரும் இந்தியா” என்கின்றனர் – தேசிய செல்வம், உயர்குடிகளிடம் சென்று குவிவதையே நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்.

இலங்கைக்கான படிப்பினைகள்

பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்திகளான இந்தியாவுடனும் சீனாவுடனும், எமது பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதற்கான நவதாராளவாதக் கலந்துரையாடல்கள், இலங்கையில் காணப்படுகின்றன. எனது முன்னைய பத்திகளில் நான், அவ்வாறான வர்த்தக தாராளமயமாக்கல் என்பது, எமது பொருளாதாரத்துக்கும் எமது தொழிலாளர்களுக்கும் – அவர்களது பேரம்பேசும் சக்தி குறைவடையும் – ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கலந்துரையாடியிருக்கிறேன்.

முக்கியமான கேள்வி என்னவென்றால், இவ்வாறான சிறிய பொருளாதாரத்துடன் அவ்வாறான பெரிய பொருளாதாரங்களை இணைப்பதென்பது, பொருளாதாரக் குமிழிகளும், அதிகரிக்கும் சமத்துவமின்மையும் கொண்ட அவ்வாறான இயங்கியலை உருவாக்குமா என்பது தான்.

குறைந்தது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் அண்மைக்கால உதாரணமென்பது, நிதியியல்படுத்தலையும் தாரளமயமாக்கலையும் மத்தியில் கொண்ட பொருளாதாரமல்லாது, வேறு வகையிலான பாதையில் செல்வதை வலியுறுத்துகிறது.

மாறாக, முன்னேற்றகரமான வரி அறவிடல் மூலமாகவும் உட்கட்டமைப்பிலும் உற்பத்தியிலும் பயன்தரக்கூடிய அரச பங்கு மூலமாகவும், செல்வத்தை அதிகளவில் பகிரும் முறையே தேவையானது.

தாக்கங்களைப் பொதுமக்களிடத்தில் கொண்டுசெல்லும் இவ்வாறான நெருக்கடிகளின் பாதிப்புகளை நாங்கள் தவிர்க்க வேண்டுமாயின், அதுவே ஒரேயொரு வழியாக இருக்கும்.

இல்லாதுவிடின், எமது சமூகத்தில் காணப்படும் சமத்துவமின்மை, மேலும் அதிகளவில் அதிகரிக்கக்கூடும். அத்தோடு, 1977களின் திறந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பின்னர், பொருளாதார இயங்கியல் மூலமாக சமத்துவமின்மை அதிகரிக்கும் நிலைமை உட்பட, இலங்கையில் உள்ள சமத்துவமற்ற நிலைமை குறித்துக் கவனஞ்செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அது, இலங்கையில் ஏன் பொதுமக்களிடையே அதிருப்தியும் போராட்டங்கள் அதிகரிக்கின்ற நிலைமையும் தொழிற்சங்கப் போராட்டங்களும் காணப்படுகின்றன என்பதற்கான காரணத்தை, அரசாங்கத்துக்கும் அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்கும்.`Post a Comment

Protected by WP Anti Spam