By 23 October 2017 0 Comments

உமா ஓயாவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் குழப்ப நிலையில்..!! ( கட்டுரை)

பதுளை மாவட்ட செயலக அதிகாரிகள், உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை, முன்னரெப்போதையும் விட மோசமான நிலைமைக்கு மாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளைப் பெற்றுக் கொடுக்க, தற்போதைய ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்பட்டமைக்கு மத்தியிலும், பதுளை மாவட்ட செயலாளர் தொடக்கியுள்ள கொடூரமான நடவடிக்கை, உதவிகளற்ற இந்த மக்களை, சட்டியிலிருந்து அடுப்புக்குள் வீழ்ந்த நிலைமைக்கு மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு என முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை முழுமையாக அமுலாக்காது விட, மாவட்ட செயலாளர் எடுத்த அசாதாரண நடவடிக்கையே, இதற்குக் காரணம் ஆகும். பருவகால மழை பெய்யவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாதிப்பான செய்தியாகவே இது அமைந்துள்ளது.

புதிதாக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டிய மக்களுக்கு, அமைச்சரவை அங்கிகரித்துள்ள மாதாந்த வீட்டு வாடகையான 25,000 ரூபாயை வழங்க, மாவட்ட செயலாளர் தவறியமையே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த மக்களுக்கு, தற்காலிக மனைகளை அமைக்க, இவர் தவறியுள்ளாரெனவும், இவர் மீது குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. அனர்த்தம் ஏற்படும்போது, இந்த மக்களைத் தங்க வைக்கவெனத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் இவர் செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வரும் மகாவலி அபிவிருத்தி அமைச்சிடமிருந்து, செப்டெம்பரிலும் ஒக்டோபரிலும், 200 மில்லியன் ரூபாய் வரையில், மாவட்ட செயலாளர் நிமல் அபயசிறி, மேலதிகமாகப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர், நிதிப் பற்றாக்குறை காரணமாகவே, நட்டஈட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் முடங்கியுள்ளன எனக்கூறி, இந்தளவு பணத்தையும் பெற்றுள்ளார்.

“100 மில்லியன் ரூபாயிலும் கூடுதலான நிதி, மாவட்ட செயலகத்தின் நிதிக் கையிருப்பில் இருந்த போதும், செப்டெம்பர் 11ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம், இந்நிதியைக் கோரிப் பெற்றுள்ளார். இக்கடிதத்தின் விளைவாக, அமைச்சின் செயலாளர், செப்டெம்பர் 13ஆம் திகதியில், 100 மில்லியன் ரூபாயை அனுப்பிவைத்தார். இதன் பின்னரும் ஒக்டோபர் 9இல் அனுப்பிய தொலைநகல் மூலமும் மேலதிக நிதி கோரப்பட்ட நிலையில், அமைச்சின் செயலாளர், மேலும் 100 மில்லியன் ரூபாயை, மறுநாள் அனுப்பியதாகவும், பதுளை மாவட்ட செயலக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

பதுளை மாவட்ட செயலாளர் அபேசிறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவென, 600 மில்லியன் ரூபாய் தனக்குக் கிடைத்ததாகவும், அதில் ஒக்டோபர் 16 வரையில், 55.5 மில்லியன் ரூபாய் செலவளிந்துள்ளது எனவும், இப்பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு, 3 பேர் கொண்ட அமைச்சு உபகுழுவொன்றின் பரிந்துரையின்படி, அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்ட போதிலும், மக்களுக்குச் சரியான முறையில் நிவாரணங்களை வழங்காது, அப்பணத்தை வைத்துக் கொள்ள, மாவட்ட செயலாளர் முயன்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு, மகாவலி அபிவிருத்தி அமைச்சின், புருவங்களை உயர்த்தியுள்ளது என்று கூறப்படுகிறது

மாவட்ட செயலாளர் ஒரு வேண்டுகோள் விடுக்குமிடத்து, நிதியை விடுவிக்கும்படி, தேசிய திறைசேரிக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுமென, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இப்பத்திரிகைக்குக் கூறினார். “எனது அறிவுக்கு எட்டிய வரையில், நட்டஈடு வழங்கவெனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் என, 600 மில்லியன் ரூபாயை நாம் கொடுத்துள்ளோம்” என, திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பணிப்புரைகளைச் செயற்படுத்தவில்லையென, மாவட்ட செயலாளர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது என மாவட்ட செயலாளரிடம் கூறியபோது, தனக்கு அதுபற்றித் தெரியாது எனவும், உமா ஓயா நிவாரண மையத்தின் பிரதிப் பணிப்பாளரிடம், இதுபற்றிய தகவலைத் தான் கோரவுள்ளாரெனவும் கூறினார்.
ஜூலை 20 முதல் ஒக்டோபர் 15 வரையிலான காலப்பகுதியில், 2,467 வீடுகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டியிருப்பினும், 106 வீடுகளுக்கு மட்டுமே நட்டஈடு வழங்கப்பட்டதென அறியப்படுகிறது.

பண்டாரவளையில் பாதிக்கப்பட்ட 1,175 வீடுகளில் 45 வீடுகளுக்கு, மாத வாடகை அதிகபட்சமாக 15,000 ரூபாய் வழங்கப்பட்டது. அத்தோடு, ஹப்புத்தளையில் 59 குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டது. இப்பகுதிகளில் வீடுகளுக்கான கேள்வி அதிகரித்ததால், வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் ஆபத்தான பகுதிகளில் வசித்தவர்கள், வாடகைக்கு வீடு எடுத்துச் சென்றுவிட்டனர். இங்கு வீட்டு வாடகை, 15,000 தொடக்கம் 25,000 ரூபாய் வரையில் காணப்படுகிறது.

சேதமடைந்த 2,400 வீடுகள் இருப்பினும், திருத்த வேலைகளுக்காக, 23 சதவீதமான வீடுகளுக்கே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்ட நட்டஈடாக, 10,000 ரூபாய்க்கும் குறைவான அளவே காணப்படுகிறது.

“565 வீடுகளுக்கு, 10,000 ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது. 1,120 வீடுகளுக்கு, 10,000 தொடக்கம் 50,000 ரூபாய்க்கு இடையிலான தொகை வழங்கப்பட்டது. 416 வீடுகளுக்கு, 50,000 தொடக்கம் 100,000 ரூபாய் வரையிலான தொகை வழங்கப்பட்டது. சராசரியாக, சேதடைந்த வீடுகளில் 85 சதவீதமானவற்றுக்கு, 100,000க்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 250 குடும்பங்களுக்கு, 100,000 தொடக்கம் 500,000 ரூபாய் வரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குடும்பங்கள், வாடகை வீட்டிலேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றன. ஏனெனில், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம், திருத்தத்தை மேற்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை என்பதே, அதற்கான காரணமாகும்” என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (இலங்கை) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனும், உமா ஓயா பாதிப்புக்கு உள்ளானவர்களின் துன்பத்தை நிவர்த்திக்க, மாவட்ட செயலாளர் தவறியமையைக் கண்டித்தார். வடகீழ் பருவக்காற்றுக் காலத்தில், சில கிராம அதிகாரி பிரிவுகளில், கடும் மழை காரணமாக, நிலைமை மோசமாக ஆகக்கூடும் என அவர் விமர்சித்தார். “அமைச்சரவை அங்கிகரித்த வீட்டு வாடகை, இந்த மக்களுக்குத் தாமதமின்றி வழங்கப்படாவிட்டால், மீதொட்டமுல்ல அனர்த்தத்தை விட மோசமான நிலை ஏற்படும். ஜனாதிபதியின் பணிப்புரையை, மாவட்ட செயலாளர், கிலேசமின்றி ஏன் அலட்சியமாக உள்ளார் என்பது, கேள்வியாகவே உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட செயலகத்தின் நிதி முன்னேற்ற அறிக்கையின்படி, 399.98 மில்லியன் ரூபாய், பண்டாரவளை, எல்ல, ஹப்புத்தளை, வெலிமட, ஹாலி எல, ஊவா பரணகம பிரதேச சபைகளுக்கு, நட்டஈடு வழங்கவும் தண்ணீர்த்தாங்கி வாங்கவும் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண நிகழ்ச்சித்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, தனக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்தது என, மாவட்ட செயலாளர் கூறுகிறார். ஆனால், நிதி முன்னேற்ற அறிக்கையின்படி, ஒக்டோபர் 9வரை, 400 மில்லியன் ரூபாயையே இவர் பெற்றுள்ளார்.

இது, மாவட்ட செயலாளர் இப்பத்திரிகைக்குக் கொடுத்த அறிக்கைக்கு மாறாக உள்ளது. வழங்கப்பட்ட 500 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து, ஒக்டோபர் 9க்கு முன்னர் 399.987 மில்லியன் ரூபாயைச் செலவளித்த பின்னர், மகாவலி அபிவிருத்தி அமைச்சிலிருந்து 100 மில்லியன் ரூபாயை ஏன் கோரினார் என, விமர்சகர்கள் கேட்கின்றனர்.

நிதி அறிக்கைப்படி, ஜூலை 20இலிருந்து செப்டெம்பர் 6வரை, பண்டாரவளைக்கு 180.882 மில்லியன் ரூபாயும்; ஜூலை 18 முதல் செப்டெம்பர் 13 வரை, எல்லவுக்கு 172.542 மில்லியன் ரூபாயும்; ஓகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் 6 வரை, ஹப்புத்தளைக்கு 5.081 மில்லியன் ரூபாயும்; ஓகஸ்ட் 22 முதல் செப்டெம்பர் 13 வரை, வெலிமடைக்கு 18.631 மில்லியன் ரூபாயும்; ஓகஸ்ட் 25 முதல் செப்டெம்பர் 13 வரை, ஹாலி எலவுக்கு 2.397 மில்லியன் ரூபாயும்; ஓகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் 6வரை ஊவா பரணகமவுக்கு 513,5000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நட்டஈடாக, 380.048 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, தண்ணீர்த் தாங்கிகள் கொள்வனவு செய்வதற்காக 19.939 மில்லியன் ரூபாய் செலவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் 9, 2017 வரை ஏற்பட்டுள்ள மொத்தச் செலவாக, 399,987 மில்லியன் ரூபாய் அமைகிறது.

பண்டாரகம – கினிகம வாசியான ஜனக நிலன்பிரிய, கடந்த சில மாதங்களாக, பண்டாரவளை பிரதேச செயலாளர், தனக்குரிய வீட்டு வாடகையை எவ்வாறு மறுத்தார் என, இப்பத்திரிகைக்குக் கூறினார். வீட்டைவிட்டு வெறியேறும் அறிவித்தல் விடுத்தபின், இது நடந்தது என, அவர் கூறினார்.

“உமா ஓய நிவாரண நிறுவனத்தின் பிரதம பொறியியலாளரின் சிபாரிசின் பேரில், நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பி.பி. அமரசேகர, எனது குடும்பத்தை உடனே வெளியேறுமாறு, பண்டாரவளை பிரதேச செயலாளருக்கு, கடிதம் அனுப்பினார். ஆறு மாத வீட்டு வாடகையாக 90,000 ரூபாய் கொடுக்கும்படி, அவர், பதுளை மாவட்ட செயலாளருக்குப் பரிந்துரை செய்தார்.

“ஆனால் இன்றுவரை, எனக்குப் பணம் கிடைக்கவில்லை. நிதி இல்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். எமது வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் முறையிலும், எமக்கு நம்பிக்கை இல்லை. எனது வீட்டுக்கு வந்த மதிப்பீட்டு அணியினர், சேதங்களைச் சரியாகக் கணிக்கவில்லை. 34 ஆழமான வெடிப்புகளில் 22 வெடிப்புகளையே அவர்கள் கணக்கெடுத்தனர். எனது வீட்டுக்கு நட்டஈடாக, 150,000 ரூபாய் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் அது பின்னர், 75,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

“நான், அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ததால் தான், நட்டஈடு குறைக்கப்பட்டது. எனக்கு, வீட்டு வாடகைப் பணம் கொடுக்கப்படவில்லை. எனவே பிரதேச செயலாளர், எனக்குத் தற்காலி உறைவிடம் வழங்க வேண்டும். அப்போது தான், இவ்விடத்தை விட்டு நான் வெளியேற முடியும். ஆனால், எனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது” என்று, நிலன்பிரிய குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, பண்டாரவளை பிரதேச செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலகம், நிதி ஒதுக்கீடு செய்யும் என, தான் பார்த்திருக்கிறார் என்று கூறினார். “நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும், நாம் அதனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான முறையில் வழங்குவோம்” என, அவர் குறிப்பிட்டார்.

பாரிய அளவிலான 6 குழாய்க் கிணறுகளை அமைப்பதற்கும், நிலத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கான நீரக புவியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், 89 மில்லியன் ரூபாயை, அரசாங்கம் வழங்கியிருந்தது என, நீர் வளங்கள் சபையின் தலைவர் ஏ.சி.எம். சுல்பிஹார் தெரிவித்தார். “ஆனால் பின்னர், பல்வேறு காரணங்களால் குழாய்க் கிணறுத் திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது, தெமோதரவிலிருந்து நீர் வழங்கும் திட்டம் உள்ளது. தண்ணீர் பவுஸர்கள், சாரதிகள் ஆகியோரின் தட்டுப்பாடு, தண்ணீர் வழங்கலைப் பாதிக்கின்றன” என, அவர் கூறினார்.

மாவட்டத்தைச் சேர்ந்த, அரசாங்கத்திலிருக்கும் உயர்நிலை அதிகாரியொருவரே, குழாய்க் கிணறுத் திட்டத்தை நிறுத்துவதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஏனெனில், பொதுமக்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கும் தனியார் தண்ணீர் பவுஸர் முதலாளிகளிடமிருந்து, தரகுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, அவர் இவ்வாறு செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இக்குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையானது எனக் கேட்கப்பட்ட போது, சில தனியார் பவுஸர் முதலாளிகளால் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிவார் எனத் தெரிவித்த நீர் வளங்கள் சபையின் தலைவர், ஆனால், நீர் விற்பனையில் அரச அதிகாரிகளின் தலையீடு குறித்து அறியவில்லை என்று குறிப்பிட்டார்.Post a Comment

Protected by WP Anti Spam