பிராந்தியத்துக்கு ஒரு மத முன்னுரிமை சிந்தனை ஆபத்தானது..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 27 Second

யுத்தம் முடிந்து மீள்குடியேற்றத்துக்காக 2010 ஜனவரியில் ஊருக்கு (கிளிநொச்சிக்கு) வந்தபோது, எங்களுடைய தெருவில் இரண்டு சிறிய கோவில்களும் இரண்டு சிறிய மாதா சொரூபங்களுமே இருந்தன. ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் அதிகமாக ஒன்றுமில்லை. மீனாட்சி அம்மன் கோவிலொன்று, முத்துமாரி அம்மன் கோவிலொன்று, பிள்ளையார் கோவிலொன்று என மூன்று கோவில்களே இருந்தன. நடுவில் ஓர் அந்தோனியார் தேவாலயம்.

நகரத்தில் முருகன் கோவில் ஒன்று, ‘சிற்றி’ப் பிள்ளையார் அல்லது சித்திவிநாயகர் என்று சொல்லப்படுகிற பிள்ளையார் கோவிலொன்று, புனித திரேசம்மாள் தேவாலயம், கருணா இல்லத்தில் இருந்த சிறிய தேவாலாயம், இவற்றோடு படையினரால் புதுப்பிக்கப்பட்டிருந்த விகாரை ஒன்று என, இவ்வளவு மதவழிபாட்டிடங்களே இருந்தன.

மீள்குடியேற்றத்துக்குப் பிறகு இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. அவையும் 1990 இல் விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன்பு இருந்தவையே. இடையில் யுத்தத்தால் அழிந்திருந்த அவற்றை, மீள்குடியேற்றத்தில் ஊருக்குத்திரும்பி வந்த, முஸ்லிம்கள் மீளக்கட்டினார்கள்.

அப்போது எந்த வழிபாட்டிடங்களில் இருந்தும் எந்தச் சத்தமும் வெளியே கேட்காது. அவ்வப்போது மணியோசை மட்டும் கேட்கும். ஏதாவது விசேட நாட்கள் என்றால் மட்டும்தான் ஒலிபெருக்கி ஒலிக்கும். தேவாலயங்களிலும் விகாரையிலும் கூட அப்படித்தான். பள்ளிவாசல்களிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் பாங்கொலி எழும். மற்றப்படி, ‘அவரவர் பாடு அவர்களோடு’ என்ற மாதிரியே எல்லாம் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருந்தன.

இப்போது (2017 இல்) நிலைமை முற்றாகவே மாறி விட்டது. திரும்பும் இடமெல்லாம் ஏதோவொரு மத நிகழ்வு. வெளியே சொல்லாது விட்டாலும், பல நிகழ்வுகள் ‘ஏட்டிக்குப் போட்டி’ என்றமாதிரியே நடக்கின்றன. இந்த நிகழ்வுகளின் சத்தத்தைச் சகிக்கவே முடியாது. அதிகாலையிலேயே ஒலிபெருக்கிகள் கத்தத் தொடங்கி விடுகின்றன. பல நாட்களிலும் இரவு பத்து மணிக்கு மேலாகியும் அவை ஓய்வதில்லை.

படிக்கின்ற மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள், பகலெல்லாம் உழைத்துக் களைத்தவர்கள் இரவில் சற்று ஓய்வாக, அமைதியாகத் தூங்கலாம் என்று விரும்புகின்றவர்கள் யாரைப் பற்றியும் பொருட்படுத்தாமலே இந்த ஒலிபெருக்கிகள் கத்திக் கொண்டிருக்கும். இதற்கெல்லாம் முறைப்படி சட்ட அனுமதி தேவை. ஆனால், இதைப் பற்றி யாருடன் பேசுவது?

‘இதைப்பற்றிப் பொலிஸில் அல்லது நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யலாமே!’ என்று நீங்கள் சொல்லலாம். அப்படிச் செய்தால் நாம் சமூக விரோதியாக்கப்பட்டு விடுவோம்.
“சட்டத்தில் இடமிருக்கும்போது, சமூகத்துக்குப் பொருத்தமில்லாத ஒன்றை எதிர்ப்பதில் தவறில்லையே. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையோ, வசையையோ பற்றிப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் உதவியை நாடுங்கள்” என்று நீங்கள் நம்பிக்கையூட்டி, ஊக்கப்படுத்தலாம்.

ஆனால், பொலிஸிடம் முறையிடப் போனவர்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன? ‘உங்களுடைய கோவிலில் இருந்துதானே பாட்டு வருது. உங்களுடைய கடவுளின் பாட்டைக் கேட்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா?’ என்று அங்கே கேட்கிறார்கள்.

இந்த நிலையில் விகாரையிலிருந்து வருகின்ற சத்தத்தைப்பற்றி யார்தான் வாய்திறக்கப்போகிறார்கள்? இதை மீறப் பேச முற்பட்டால், அது மதவிவகாரமாகி, இனவிவகாரமாகி, ஒரு கட்டத்தில் இதே பொலிஸும் சட்டமும் நீதியும் நம்முடைய கழுத்தில் கயிற்றைப் போட்டுச் சுருக்கி விடும். அப்போது சமூக விரோதி என்ற நிலையைக் கடந்து, நாம் தேசத்துரோகி என்ற அளவுக்கே ஆக்கப்பட்டு விடுவோம்.

இந்த நிலைமை தனியே கிளிநொச்சியில் மட்டும்தான் என்றில்லை. இன்று இலங்கை முழுவதிலும் இப்படியான ஒரு மதப்பெருக்க நிலை – மத ஆதிக்க நிலை – வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு மதப்பிரிவினரும் தங்களுடைய மதத்தை முன்னிலைப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர். இதனால் இது ஒரு பெரிய போட்டியாகவே மாறி விட்டது. விளைவு, நாடு மத மயப்பட்டு, மதங்களின் கூடாரமாகி விட்டது.

தொழிற்சாலைகளும் கல்விக்கூடங்களும் ஆராய்ச்சி மையங்களும் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக கோவில்களையும் பள்ளிவாசல்களையும் விகாரைகளையும் தேவாலயங்களையும் கட்டிக் கொண்டிருக்கின்ற நாட்டில் பஞ்சமும் பட்டினியும் பிரச்சினையும் துயரமுமே விளையும்.

இதற்குக் கடவுளை நினைத்துக் கையேந்துவதால் தீர்வு கிடையாது. பதிலாக உருவாகும் மதப் பிரிவினை, போட்டி போன்றவற்றால் இரத்தக் களரியே உருவாகும். இத்தகைய தவறான சமூகப்போக்குக்கு முதற் காரணம் அரசாங்கமே. ‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்று சொல்வதில்லையா? அரசாங்கமே அரசமைப்புச் சாசனத்தில் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று ஆக்கி வைத்திருக்கும்போது பிற மதச்சமூகங்கள் வேறு என்ன செய்யும்?

சிங்கள மக்களோ பௌத்தர்களோ இல்லாத தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்கில், படையினர் விகாரைகளைக் கட்டுகிறார்கள். இதற்கு மாறாகவோ அல்லது போட்டியாகவோ அங்குள்ள மக்களால் கோவில்களும் மசூதிகளும் தேவாலயங்களும் கட்டப்படுகின்றன. இது தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகும் என்பது அவர்களுடைய எண்ணம். தங்களுடைய அடையாளத்தை நிறுவத் துடிக்கும் மனநிலையின் வெளிப்பாடு.

அதிகாரத் தரப்பின் செயற்பாடுகள் மேலாதிக்க நிலையில் இருந்தால், அதற்கு எதிரான எண்ணவோட்டம் எப்போதும் பிற சமூகங்களிடம் இருந்தே தீரும். இத்தகைய ஓர் எதிர்ப்பெழுச்சி ஐரோப்பியர்களின் காலத்தில் கிறிஸ்தவ மயமாக்கத்துக்கு எதிராகப் பௌத்தர்களிடத்திலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமும் முன்னர் ஏற்பட்டிருந்தது. அநாகரிக தர்மபால, ஆறுமுகநாவலர் போன்றவர்கள் இந்த எழுச்சியில் முக்கியமான பங்களிப்பைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான வெளிப்பாடே பௌத்த விகாரைகளுக்குப் பதிலாகக் கோவில்கள். அல்லது மசூதிகள் கட்டப்படுகின்றன. தமிழ், சிங்கள மேலாதிக்கத்தரப்புகளுக்கு இணையாக முஸ்லிம் அடையாளத்தை வலுப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த மாதிரியான முயற்சிகள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரபு நாடுகளின் உதவிகளைப் பெறுகிறது முஸ்லிம் தரப்பு.

இதனால், அரபுலகத்தின் உதவிகளைப் பெற்று இஸ்லாமிய அடையாளத்தை வலுப்படுத்துவதில் முஸ்லிம்கள் தீவிரமாகச் செயற்படுகின்றனர் என்று தமிழர்களும் சிங்களவர்களும் எண்ணுகிறார்கள். இதற்கு ஒரு வகையில் தாமே தூண்டற்காரணமாக இருந்தனர் என்ற எண்ணம் தமிழர்களிடத்திலும் சிங்களவர்களிடத்திலும் இல்லை.

இதேவேளை, இவ்வாறான தீவிர இஸ்லாமிய மயப்பாட்டின் மூலம் முஸ்லிம்களின் வளர்ச்சியும் அடையாளமும் பல பரிமாணங்களில் விரிவடைவதற்குப் பதிலாக ஒற்றைப்படைத்தன்மையாக ஒடுங்கிப்போகிறது.

இவ்வாறு ஒற்றைக் கலாசார அடையாளங்களைக் கட்டமைப்பதன் பின்னாலுள்ள அரசியல் அபாயம் மிகப் பயங்கரமானதாகவே இருக்கும். இன்றைய உலகம் ஒற்றைப்படையான கலாசாரத்துக்கும் அடையாளத்துக்கும் எதிரானது. அதைச் சாட்டாக வைத்தே அந்தச் சமூகத்தை அது ஒடுக்கி நசுக்கி விடும்.

மக்களுக்குத் தேவையான தொழில் மையங்களையும் தொழில் துறைகளையும் உருவாக்க வேண்டிய அரசாங்கம், அதையெல்லாம் செய்யாமல், விகாரைகளைக் கட்டுவதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வியில் நியாயமுண்டு.

ஒரு தவறை இன்னொரு தவறின் மூலமாகச் சீர் செய்ய முடியாது. ஒட்டுமொத்தத் தவறாகவே அது மாறும். இதுவே இன்றைய இலங்கை நிலைவரம். ஒவ்வொரு சமூகங்களும் பன்முகத் தன்மையை இழந்து, ஒற்றைப்படைத்தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன. ஒற்றைப்படைத்தன்மையின் அபாயம் மிகப் பயங்கரமானது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டில் ஒற்றைப்படைக் கலாசாரத்துக்கான கூறுகளை ஊக்குவிக்க முடியாது. அப்படி நிகழுமாக இருந்தால், அதன் விளைவுகள் நாட்டை அழிவுக்கே கொண்டு செல்லும்.

இலங்கைப் பொருளாதாரத்தில் பெருந்தொகைப் பணமும் வளங்களும் மனித உழைப்பும் மதவிவகாரங்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றன. ஒரு காலம் படைத்துறைக்கும் போருக்கும் ஒதுக்கப்பட்டதை, செலவு செய்யப்பட்டதைப்போன்றது இது. இரண்டுமே அழிவுக்கானவை. என்னதான் நியாயங்களைச் சொன்னாலும் இதுதான் உண்மை.

இதேவேளை இப்பொழுது நாட்டின் பிரதான உரையாடலாகக் காட்டப்படுவது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் புரிந்துணர்வுமாகும். இதன் மூலமாக நிரந்தர ஐக்கியத்தை உருவாக்கலாம். அதன் வழியாகச் சமாதானத்தை எட்டி, அதை வலுப்படுத்த முடியும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதற்கென அரசாங்கம் ‘நல்லிணக்கச் செயலணி’ என்று ஒரு செயலணியையும் உருவாக்கியுள்ளது. ஆனால், சமூக நடைமுறை என்பது இதற்கு மாறானதாகவே இருக்கிறது. இந்த இரண்டக நிலையின் மூலம் நாட்டில் எத்தகைய நன்மைகளையும் உருவாக்க முடியாது.

அரசமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்க்கின்ற பிற சமூகத்தினர், தாங்களும் மதமயப்படுவதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். அண்மையில் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. ‘வடக்கு, கிழக்கில் இந்து மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்பதே அந்தச் செய்தி. இது மிகத் தவறான சிந்தனை.

வடக்கு, கிழக்கு என்பது பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு பிராந்தியம். இவ்வாறான ஒரு பிராந்தியத்தில் தனியே ஒரு மதத்துக்கு முன்னுரிமை அளிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இப்படியான சிந்தனையை வைத்துக் கொண்டு, அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பது தவறென்று கூற முடியாது. அவ்வாறான தார்மீக அடிப்படையை நாம் இழந்து விடுகிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வையாகப் பெருக்கெடுக்கும் ‘இரத்தம்’! அதிர வைக்கும் இளம் பெண்..!!
Next post மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: விஜய்..!!