கமால் குணரத்னவின் எச்சரிக்கை – புதிய சவால்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 38 Second

புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், அவருக்கு முன்பாகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

“தேசத்துரோகிகளுக்கு 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. அவர்களின் சடலங்களுக்குக் கூட, மரியாதை செய்யப்பட முடியாது. சடலங்களைத் தூக்கிச் செல்லவே முடியாது; இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபோலவே, புதிய அரசமைப்பு மூலம், நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவர்களின் மரணமோ, இறுதிச்சடங்குகளோ கௌரவமாக நிகழக்கூடாது” என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் இந்தக் கருத்துக்குப் பின்னால் உள்ள அரசியல், இராணுவ, மனித உரிமை சார் விடயங்கள், முக்கியத்துவம் மிக்கவை.

புதிய அரசமைப்பைத் தோற்கடிப்பதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, ‘எலிய’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அந்த அமைப்பினால், ‘வியத்மக’ என்ற பெயரில், அதாவது ‘சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள்’ என்ற தொனிப்பொருளில், கூட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. கம்பஹாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில், கோட்டாபய ராஜபக்ஷ, கலாநிதி வசந்த பண்டார உள்ளிட்டோருடன் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கலந்து கொண்டார்.

இதுபோன்ற கூட்டங்களில், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, முன்னாள் கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகர போன்றவர்களும் பங்கேற்று, புதிய அரசமைப்புக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒன்றாக இல்லை என்ற கருத்து தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் காணப்படுகின்றபோது, இதுவே நாட்டைப் பிரிக்கப் போகிறது, பிளவுபடுத்தப் போகிறது என்று தெற்கில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரசமைப்பு மூலம், நாட்டைத் துண்டாடுவதற்கு முயற்சி நடப்பதாகவும் இது நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் பிரசாரங்களை மேற்கொள்ளும், கோட்டாபய ராஜபக்ஷவும் சரி, ஒன்றிணைந்த எதிரணியினரும் சரி, அப்படியோர் அரசமைப்பை, இலங்கை நாடாளுமன்றம் உருவாக்குமா, அதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரிவினைக்குத் துணைபோகமாட்டோம் என்று, ஆறாவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ், உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். அவர்களால், நாட்டைப் பிளவுபடுத்தும் ஓர் அரசமைப்பை உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க முனைந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை யாராவது நாடி, அதற்குத் தடையை ஏற்படுத்த முடியும்.

அப்படி யாரும், புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தப் போகிறது, அதற்கான வரைவே தயாரிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றத்தை இதுவரை நாடவில்லை.

அதேவேளை, சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்பது பிரிவினை அல்ல என்பதை, அண்மையில் தான் உயர்நீதிமன்றம், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை, உருவாக்கும் அரசமைப்பு ஒன்றை, உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி ஒருபோதும், சட்டமாக நிறைவேற்ற முடியாது.
அதுபோலவே, புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் ஒன்றாக இருக்குமானால், அதைச் சட்டமாக்கும் வகையில், கையெழுத்திட மாட்டேன் என்று சபாநாயகர் கூட கூறியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினரோ, ஒன்றிணைந்த எதிரணியினரோ கூறுவதுபோல, நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய அரசமைப்பை, இலங்கை நாடாளுமன்றம் ஒருபோதும் நிறைவேற்றப் போவதுமில்லை; அதற்கான வாய்ப்புக் கிடைக்கப் போவதுமில்லை. இது அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

அரசாங்கத்தைத் தோற்கடிப்பது, அதிகாரப் பகிர்வைத் தடுப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். அதற்காகவே புதிய அரசமைப்பு, நாட்டுக்கு விரோதமானது என்று ‘தேசபக்தி’யை ஏற்படுத்த முனைகிறார்கள்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கம்பஹாவில் உரையாற்றிய போது, “வடக்கில் உள்ள மக்கள் தனிநாட்டையோ, அதிகாரங்களையோ கேட்கவில்லை என்றும், அவர்கள் அடிப்படை வசதிகளையே எதிர்பார்க்கிறார்கள்” என்றும் கூறியிருந்தார்.

அத்துடன், சம்பந்தனும் அமிர்தலிங்கமும் எதிர்கட்சித் தலைவராக முடிகிறது; ஸ்ரீபவன் உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக முடிகிறது; சிவா பசுபதி சட்டமா அதிபராக முடிகிறது; ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாக முடிகிறது; பிறகென்ன தமிழர்களுக்கு இங்கு பிரச்சினை? சிங்களவர்களுக்குள்ள என்ன உரிமை, அவர்களுக்கு இல்லை” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை என்பது, வெறும் பதவிகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்ற புரிதல், இவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.

இத்தகைய பதவிகளைக் கொண்டு, தமிழர்களின் வாயை அடைக்கலாம் என்பதால் தான், கோட்டாபய ராஜபக்ஷவின் ‘எலிய’ அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான, வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர், “தமிழர் ஒருவர், ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரலாம்; அது பிரச்சினையில்லை. ஆனால், அதிகாரங்களை மட்டும் பகிர்ந்து கொடுக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.

புதிய அரசமைப்பு எந்த வகையில் நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற கேள்விக்கான பதில் தெரியாமல்தான், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போன்றவர்கள், அதை ஆதரிப்பவர்களைத் துரோகிகள் என்று அடையாளப்படுத்தி, அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, ஓர் அரசியல்வாதியல்லர்; ஓர் இராணுவ அதிகாரி. அவரிடம் இருந்து அரசியல் – இராஜதந்திரப் பக்குவத்தை, எதிர்பார்க்க முடியாது.

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறும் அவர், இன்னமும் இராணுவ அதிகார மிடுக்கை, மேடைகளில் வெளிப்படுத்த முனைகிறார். அரசமைப்பு உருவாக்கத்தில் பெருமளவானோர் ஈடுபட்டுள்ளனர். அதை ஆதரிப்பவர்கள், இலட்சக்கணக்கானவர்கள்.

அவர்களையெல்லாம் துரோகிகளாகவும், கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கௌரவமான இறுதிச்சடங்குக்கு அருகதையற்றவர்கள் என்றும் மிரட்டுவது, ஜனநாயகத்துக்கு எழுந்திருக்கிற மிகப்பெரிய சவால்.

அரசியல் மேடைகளில் கோபம் கொப்பளிப்பது வழக்கம். துரோகிகள் என்று சாடுவதும் வழக்கம். ஆனால் கொல்லப்பட வேண்டியவர்கள், கௌரவமான இறுதிச்சடங்குக்கு அருகதையற்றவர்கள் என்றெல்லாம் பொது அரங்கில் எச்சரிப்பது, மிகப்பெரிய ஆபத்து. அவர்களுக்குள் ஒளிந்திருக்கின்ற பூதத்தையே அது வெளிப்படுத்துகிறது.

அதுமாத்திரமன்றி, மூத்த இராணுவ அதிகாரியாக இருந்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இராணுவத்தினரால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சியின் போது, ஜே.வி.பியினர் கையாண்ட மரணதண்டனைகளை நியாயப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே, தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜே.வி.பி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், மரணதண்டனை விதிக்கப்பட்ட முறைகளை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி முன்னுதாரணமாகக் காட்டுவது, எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்வி எழுகிறது.

நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு ஜே.வி.பியினரைப் போன்று, மரணத்தையே தண்டனையாக வழங்க வேண்டும் என்று ஓர் இராணுவ அதிகாரியே நியாயப்படுத்துகின்ற அளவுக்கு நிலைமை உள்ளது. இதையே, விடுதலைப் புலிகள் செய்திருந்தால் அதைப் படுகொலை என்றிருப்பார்கள்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் இந்த மனோநிலையை வைத்துப் பார்க்கும் போது, அவர் இராணுவத்தில் எத்தகைய மனோநிலையில் இருந்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சூழலையும், அவரது இந்தக் கருத்தே நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

சாதாரணமாக, அரசியல் கருத்துகளை முறியடிப்பதற்கே மரணத்தையே தண்டனையாக அளிக்க வேண்டும் என்ற கருத்துகளைப் பரப்பும் அவர் போன்றவர்கள், போர்முனையில் எப்படிச் செயற்பட்டிருப்பார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது. இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது. ஜனநாயகச் சூழலில், எத்தகைய கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியாகவே எல்லா கருத்துகளும் அமைய வேண்டும்.

ஆனால், மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் கருத்து, ஜனநாயகத்தையும் ஜனநாயக வழிமுறைமைகளையும் அச்சுறுத்தும் வகையிலாகவும் மனித உரிமைகளுக்குச் சவால் விடுவதாகவும் உள்ளது.

பகிரங்கமானதொரு மேடையில், புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று எச்சரிக்கிறார் அவர்.

இதுவே கூட, ஒரு வன்முறைக்கான தூண்டல் தான். ஜனநாயக வழியில் செல்பவர்களை அச்சுறுத்தும் முறைதான். மனிதர்களின் வாழும் உரிமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால். இதுதான் நாட்டுப்பற்றா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனைவரும் வெறுத்த ஜுலி செய்த மற்றொரு நல்ல செயல்… வைரலாகிவரும் காட்சி..!! (வீடியோ)
Next post பெற்ற மகளை சீரழித்து 8 குழந்தைக்கு தந்தையான கேடுகெட்ட தகப்பன்..!!