2-வது இன்னிங்சை தொடங்கிய நஸ்ரியா..!!
மலையாள நடிகை நஸ்ரியா தமிழில், ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘திருமணம் எனும் நிஹ்கா’ போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவுக்கு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் பழைய நஸ்ரியாவாக திரும்பினார். அவருக்கு நடிப்பதற்கான சரியான தருணமாக அதுவே அமைந்தது.
இந்நிலையில் அவர் மறுபடியும் நடிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தது முதலே ‘உங்க அடுத்த படம் எது?’ என எல்லோரும் கேட்பார்கள். அதற்கான பதில் இதோ. மீண்டும் நடிக்க வருகிறேன். பிரிதிவிராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன். அந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்குகிறார். அவருக்கு என் அன்பு” என பதிவிட்டிருக்கிறார்.
நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் தமிழில் ‘வேலைக்காரன்’ படம் மூலம் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.