தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 50 Second

கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்த விவாதத்தைத் தமிழ்த் தரப்பு அவ்வளவு கரிசனையோடு நோக்குவதாகத் தெரியவில்லை. தமிழ் ஊடகங்களிலும் செய்திகள் என்கிற அளவைத் தாண்டி, இந்த விவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒருவகையில், பெரும் சோர்வு மனநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.

இடைக்கால அறிக்கையில், என்னென்ன அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றன என்கிற விடயங்கள், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியிலேயே பருமட்டாக வெளிவந்துவிட்டன.

அந்தத் தருணத்தில், தமிழ்த் தரப்பு வெளிப்படுத்திய சற்று ஆர்வமான கட்டங்களைக்கூட, இன்றைக்குக் காண முடியவில்லை. இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில், வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களினாலேயே அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வந்தது.

அந்தத் தருணங்களிலெல்லாம், அது தொடர்பில் சற்று வெம்மையாகவே உரையாட முயற்சிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு, அந்தத் தருணங்களையெல்லாம் திரும்பிப் பார்க்கின்ற போது, இடைக்கால அறிக்கை முழுவதுமாக வெளிவரும் போது, முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக, அவ்வப்போது விடயங்களை வெளிப்படுத்தி, அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் புத்திஜீவிகளையும் தயார்ப்படுத்தி வந்தது மாதிரியான தோற்றமே மிஞ்சுகின்றது.

புதிய அரசமைப்புத் தொடர்பிலான உரையாடல்களைத் தெற்கு மூர்க்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், வடக்கு, கிழக்கில் ‘தொடை நடுங்கித் துரோகிகள்’ என்கிற வசைபாடல் அரசியலும், ‘வேள்வித் தடை வழக்கில் எந்தச் சட்டத்தரணி இலவசமாக வாதாடினார்’ என்கிற விடயமுமே முதன்மை பெற்றிருக்கின்றது. (தமிழ்த் தேசியம் பன்மைத்துவத்தோடு இருப்பது உறுதிப்படுத்தப்படும் போதுதான், அது நீடித்து நிலைக்க முடியும்.

அதன்போக்கில், வேள்விக்கான அங்கிகாரம், சட்டத்திருத்தங்கள், ஒழுங்குபடுத்தல்களோடு வழங்கப்படுவதும் (கூட) தமிழின உரிமையாக கொள்ளப்பட வேண்டியது. அதை நோக்கிப் போராடுவதும், ஒருங்கிணைவதும் அத்தியாவசியம்.

அப்படியான நிலையில், அது தொடர்பிலான உரையாடல்களும் தவறில்லை. ஆனால், இலவசமாக வாதாடிய சட்டத்தரணியை முன்னிறுத்திக் கொண்டு, முக்கியமான தருணமொன்றில், அதாவது புதிய அரசமைப்பு மீதான கரிசனை செலுத்தப்பட வேண்டிய காலத்தில், இளைஞர்கள் திசை திருப்பப்படுவது அவ்வளவுக்கு ஆரோக்கியமானதல்ல. அது, ஒரு வகையில் பொறுப்பின்மையின் வழி வருவது.

அவ்வாறான உரையாடலுக்காக, அதிக காலம் செலவளிக்கப்படுகின்றது என்கிற நிலையில், பொறுப்பானவர்கள், அல்லது சம்பந்தப்பட்ட கட்சியினர், தம்முடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியமான ஒன்று.

“…நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இருப்பினும் பெரும்பான்மையான பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போதுள்ளமையைப்போன்றே புதிய அரசமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதை நாம் எதிர்க்கப்போவதில்லை. அதனால் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால், ஏனைய மதங்களுக்கான உரிய அங்கிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்” இடைக்கால அறிக்கை மீதான முதல்நாள் விவாதத்தில் எம்.ஏ. சுமந்திரன் தன்னுடைய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பௌத்த மதத்துக்கு முதலிடம்’ என்கிற விடயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்று கடந்த வருடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியபோது, இதே சுமந்திரன், அதை மறுத்துரைத்திருந்தார். எந்தவொரு மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட முடியாது என்றும் கூறினார். ஆனால், இன்றைக்கு அதே சுமந்திரன், மேற்கண்டவாறு பேசும் நிலை வந்திருக்கின்றது. இவ்வாறான நிலையை, தமிழ்த் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது?

பேச்சுவார்த்தைகள் மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, ஒரு தரப்பு, தான் முன்வைக்கும் 100 சதவீதமான விடயங்களுக்கும் சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அங்கு விட்டுக்கொடுப்புகள் இருப்பது வழமை. அதுதான், பேச்சுவார்த்தையின் அடிப்படைத்தன்மை.

ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பொன்று பேச்சுவார்த்தையில் அமரும் போது, தன்னுடைய பிரச்சினைகளை எவ்வளவு விட்டுக்கொடுப்பின்றி பேசுகின்றதோ அங்குதான் வெற்றி தங்கியிருக்கின்றது. அந்தவகையில், வழிநடத்தல் குழுக் கூட்டங்களிலேயே
இரா.சம்பந்தனும், சுமந்திரனும் போதிய ஆற்றுகையை செய்யவில்லை என்பது தொடரும் குற்றச்சாட்டு.

வழிநடத்தல் குழுவில் இருந்த, டக்ளஸ் தேவானந்தா, மற்றும் “என்னை ஐக்கிய தேசியக் கட்சிக்காரனாக அல்ல; முதலில் தமிழனாகவே முன்னிறுத்துவேன்” என்று கூறும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில், எதுவும் கூறவில்லை என்பது பலத்த குற்றச்சாட்டு. அவர்களும் அதை மறுப்பதாகத் தெரியவில்லை.

அவர்கள் பற்றித் தமிழ் மக்களும் அவ்வளவு அக்கறையும் கொள்ள முடியாது. ஏனெனில், தம்முடைய வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்துவிட்டு, மற்றவர்களிடம் கோரிக்கையை வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது என்று கருதுகின்றார்கள்.

ஆக, பௌத்தத்துக்கான முதலிடம் என்கிற விடயத்தை வழிநடத்தல் குழுவுக்குள்ளும் தற்போது நாடாளுமன்ற விவாத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்ட கூட்டமைப்பு, அதற்கான முன்வைப்பை, முன்னணி சட்டத்தரணியென்கிற நிலையில், சுமந்திரனின் கவர்ச்சிகரமான வார்த்தைகளினூடு செய்திருக்கின்றது. இப்படி, புதிய அரசமைப்பில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவும் கட்டங்களை, பெருந்தன்மை என்கிற பெயரில் கூட்டமைப்பு வழங்கும் நிலை தொடர்ந்தும் உருவாகுமானால், அது உண்மையிலேயே தமிழ்த் தரப்பில் பெரும் தோல்வியாக அமையும்.

அதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பு மாத்திரமல்ல, கூட்டமைப்புக்கு அழுத்தம் வழங்கத் தவறிய பங்காளிக் கட்சிகளும், செயற்பாட்டு இயக்கங்களும், ஊடகங்களும், அரசியல் பத்தியாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏனெனில், ஒரு வகையில், மக்களை நைய்ந்து போன ஓர் அரசமைப்பை நோக்கி, மறைமுகமாகத் தயார்ப்படுத்தி வந்த பெருமையை கூட்டமைப்போடு, இந்தத் தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இடைக்கால அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் சுமார், 40 நிமிடங்கள் நீண்ட சுமந்திரனின் உரையை, கொழும்பு ‘லிபரல்’கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியான தரவுகளோடும், சட்டத்தரணிக்கேயுரிய வாதத்திறமையோடும் ஆற்றப்பட்ட உரையென்கிறார்கள்.

புதிய அரசமைப்புத் தொடர்பிலான மக்கள் சந்திப்புகளில் “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் புதிய அரசமைப்பினூடு இணைந்து, ஆட்சியமைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் முன்வைக்கட்டும். அவர்களின் முன்வைப்புகள் என்ன, அது உண்மையிலேயே பிரச்சினைகளுக்கான தீர்வைக் கொண்டிருக்கின்றதா? என்பதை நாம் மட்டுமல்ல, சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்று சுமந்திரன் அடிக்கடி கூறுவார். இப்போதும் அவர் அதே நிலைப்பாட்டில் இருப்பதைப் போன்றதொரு தோரணையையே வெளிப்படுத்துகின்றார்.

ஆனால், சுமந்திரன் ஒரு விடயத்தை மறந்துவிட்டார். அதாவது, தந்தை செல்வா காலத்திலிருந்து, தமிழ்த் தரப்பு வெளிப்படுத்தி வந்த பெருந்தன்மையைச் சிங்களத் தரப்பு மோசமாக மலினப்படுத்தி வந்த வரலாறு இங்குண்டு.

அப்படியான நிலையொன்றை நோக்கியே தற்போதுள்ள கூட்டு அரசாங்கத்தின் பங்காளிகளும் விகாரைகளை நோக்கியும், பௌத்த பீடங்களை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதன்போக்கில், அவர்கள் இறுதி செய்யும் அரசியலமைப்பைத் தமிழ் மக்களிடம் விற்கும் வேலையை மாத்திரம் சுமந்திரனோ, கூட்டமைப்போ செய்யப் போகின்றது என்றால், அது படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏனெனில், கடந்த காலத்தில் அறிமுகமான அரசமைப்புகளில் தமிழ்த் தரப்புகள் எந்தப் பங்களிப்பையும் செய்து கொண்டதில்லை. ஆனால், அதே ஏதேச்சதிகார அரசமைப்புகளை ஒத்த புதிய அரசமைப்பைத் தமிழ் மக்களின் அங்கிகாரத்தோடும் நிறைவேற்றும் நிலை உருவாகினால் அது வரலாற்றுக் கறையாக இருக்கும்.

ஆகா, புதிய அரசமைப்பு என்பது தமிழ் மக்களின் பெருந்தன்மையோடு மாத்திரம் நிகழ்ந்துவிடாமல், சிங்கள, பௌத்த தரப்புகள், நாட்டிலுள்ள ஏனைய மக்களையும் தமக்குச் சமமானவர்கள் என்று கருதும் தருணத்திலேயே சாத்தியமாக முடியும்.

அங்கு, சிங்கள பௌத்த தரப்புகள் வெளிப்படுத்த வேண்டியது பெருந்தன்மையை அல்ல. மாறாக, மனிதத்தன்மையே ஆகும். அந்த மனிதத்தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் போது, புதிய அரசமைப்பு முன்னோக்கிய படிகளைக் கொண்டதாக அமைய முடியும். அதைச், சம்பந்தனும் சுமந்திரனும் நிகழ்த்திக் காட்டினால், வரலாற்றில் முக்கியமான நபர்களாக மாறுவார்கள்.

“இந்த நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை (இனத்தையோ/ மதத்தையோ) மையப்படுத்தியதாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நாடு ஒன்றாக இருக்கும் அதேநேரத்தில், ஆட்சி அதிகாரத்தில் எமது மக்களும் பங்காளர்களாக வேண்டும். முக்கியமாக அதிகாரங்களை ஒரு தரப்பினரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலையில், மற்றைய தரப்பினர் எவ்வாறு அவர்களுக்கு தாங்களும் சமமானவர்கள் என்ற மனநிலை ஏற்படும். ஆகவே, அதிகாரங்கள் பகிரப்பட்டு அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டியுள்ளது” என்கிற தனது உரையின் பகுதியை சுமந்திரன் இறுதி வரையில் கவனத்தில் கொண்டால், அதன்வழி புதிய அரசியலமைப்பு அமைந்தால், அதைத் தமிழ் மக்கள் ஆதரிப்பதில் பிரச்சினை இருக்காது. இல்லையென்றால், அது, தோல்விகரமான ஓர் ஆவணமாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு ஆபாச நடிகை..!
Next post ஆரவ் பிறந்த நாள் பார்டியில் கலந்துக்கொண்ட ஓவியா – புகைப்படம் உள்ளே..!!