By 4 November 2017 0 Comments

பெண்களை அதிகம் தாக்கும் ரத்தசோகை..!!

இளவட்ட பசங்க ரத்த முறுக்குல துள்ளிகிட்டு திரிவாங்க, ரத்தம் சுண்டுச்சுன்னா, அப்புறம் ஆடி அடங்கிடுவாங்க‘ என்று கிராம புறங்களில் கூறுவதுண்டு. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரத்தசோகை நோய் என்றால் வியப்பில்லை. உடலில் ரத்தம் சுண்டினால் அத்தனையும் அடங்கி விடும். அதனால் உடலுக்கு ரத்தம் எவ்வளவு முக்கியம், அந்த ரத்தம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் காண்போம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், உடலின் அனைத்து திசுக்களுக்கும் பிராண வாயுவை எடுத்து செல்லும் அற்புத மற்றும் இன்றியமையாத பணியை செய்கின்றன. அந்த சிவப்பு அணுக்கள் சக்தி குறைந்த, நலிந்த நிலையில் இருந்தால், தேவையான அளவு பிராணவாயுவை உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாது. அதுவே ரத்தசோகை எனவும், ஆங்கிலத்தில் ‘அனீமியா‘ எனவும் அழைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவலாக ரத்தசோகை நோய் காணப்படுகிறது. ஊட்டச்சத்துகளில் ஒன்றான இரும்புச்சத்து குறைபாட்டால், ரத்தசோகை நோய் தாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் நிஷா கூறியதாவது:-

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 7 கிராமுக்கு கீழும் இருக்க கூடாது. குழந்தைகளுக்கு 11 முதல் 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு 11 முதல் 15 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. ரத்தசோகை நோய் தாக்கினால் பசி எடுக்காது. உடலில் சோர்வு, கண்களின் கீழ்பகுதி, நாக்கு, நகங்களில் வெளிர்தன்மை ஏற்படும்.

மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, தலைச்சுற்றல், கை, கால் ஜில்லிட்டு போகுதல், உணவின் சுவையை நாக்கு அறியாமல் போகுதல், முடி உதிர்தல், உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஒரு சிலர் இதன் தாக்கத்தால் களிமண், காகிதம், உணவு அல்லாத மற்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். இவ்வாறு அறிகுறிகள் தோன்றினால் உடனே ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.

அவ்வாறு பரிசோதனை செய்து பார்த்தால், இவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், எண்ணிக்கையில் குறைவாக, அளவில் சிறியதாக, நிறத்தில் வெளிறியும் இருக்கும். அதனுடன் சேர்த்து வைட்டமின் பி-12 எந்த அளவுக்கு உடலில் இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்ப்பது நல்லது.

பொதுவாக ரத்தசோகை நோய் தாக்குவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பரம்பரை சார்ந்து, கிருமி தொற்றுகளால் மற்றும் சில வகை மருந்து, மாத்திரைகளை உண்பதாலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குறிப்பாக 18 முதல் 45 வயதிற்குள் உள்ள பெண்கள், மற்றும் தாய்ப்பால் கொடுப்பதாலும் இந்நோய் தாக்கக்கூடும். இதுதவிர வயிற்றுப்புண், மலக்குடல் புற்றுநோய், எலும்பு முடக்கு நோய், காசநோய் ஆகிய காரணங்களால் உடலில் நாள்பட்ட ரத்த இழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்நோய் தாக்க வழி வகுக்கும்.

உடலில் உள்ள சிறுகுடல், இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது. செரிமானம் ஆகவில்லை என்றாலும், சிலவகை மரபணுக்கள் உடலில் இரும்புச்சத்தை தீர்மானிப்பதாலும் இந்நோய் தாக்கலாம். சரியான நேரத்திற்கு, சத்தான உணவை உண்ணாமல் இருந்தாலும் வரலாம். இந்நோயினால் பெரியவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும்.

பெண்களுக்கு வளர் இளம் பருவம் என்பது மிகவும் முக்கியம். அதனால் வளர் இளம் பெண்கள் சத்தான உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

ரத்தசோகையால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை குறையும். குறைமாத பிரசவம் ஏற்பட வழிவகுக்கும். அதனால் டாக்டரின் அறிவுரைப்படி ரத்தம் ஏற்றிக்கொள்ளுதல், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஆண்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு குறைவுதான்.

ரத்தசோகை நோய் தாக்காமல் இருக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் இறைச்சி, கோழிக்கறி மற்றும் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை இலை போன்ற கீரை வகைகள், பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், சிறு மற்றும் முழு அளவிலான தானியங்கள், இலந்தைபழம், கொடி முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீட்சை, அத்திப்பழம், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை போதிய அளவு உண்ண வேண்டும்.

இதுதவிர முருங்கை இலை, மிளகு, பூண்டு இவற்றை அவித்தும் சாப்பிடலாம். கேரட் சாறில் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. கருப்பு எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. அதனை எள் உருண்டையாக்கி உண்ணலாம். உடனடி நிவாரணம் கிடைக்க இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.Post a Comment

Protected by WP Anti Spam