கட்டாயத் திருமணம் வாழ்க்கைக்கு வழி(லி)வகுக்குமா?..!! (கட்டுரை)

Read Time:17 Minute, 10 Second

உலகில் எத்தனை உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனித குலத்தில் மாத்திரமே, ஆணும் பெண்ணும் இணைந்து, திருமணம் செய்து, இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் முக்கியமான சடங்காகக் காணப்படும் திருமணம், தனி மனித சுதந்திரம் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றது.

வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட பெண், காதலன் வீட்டில் தற்கொலை; திருமணமான நான்கு நாட்களில், காதலியுடன் தீக்குளித்த இளைஞன்; 50 வயது ஆணுக்கும் 26 வயது பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம்; துப்பாக்கி முனையில் ஆணை மணந்த பெண் போன்ற செய்தி அறிக்கைகள், தினமும் வந்துகொண்டே இருக்கின்றன.

திருமண பந்தத்தில் ஈடுபடுத்தப்படும் ஆணும் பெண்ணும், தங்களது சுதந்திரமான சம்மதமின்றி, கட்டாயமாக பந்தத்தில் இணைக்கப்படுவதையே, கட்டாயத் திருமணம் என்கிறோம். உணர்வுபூர்வமாக அச்சுறுத்தியும் உடல் ரீதியாக அச்சுறுத்தியும், இவ்வாறு “தவறான” திருமணங்கள், உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இந்தக் கட்டாயத் திருமணம் என்பது, காதல் திருமணம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்ற இரண்டு வகைகளில் இருந்தும் வேறுபடுகின்றது. பெற்றோர், நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம், ஆனால், தம்பதிகளின் மனம் ஒத்துப்போகாத திருமணமே, இந்தக் கட்டாயத் திருமணம் எனலாம். சில நேரங்களில், திருமணத்தில் இணைக்கப்படவுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் தெரியாமலேயே, திடீரென மேற்கொள்ளப்படும் திருமணங்களாகவும் இவை நடத்தப்படுவதுண்டு.
இவ்வாறான திருமணங்களால், பந்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் அல்லது இணைக்கப்பட்டவர் – அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் – மனச் சோர்வடைந்தவர்களாகவும் பயந்தவர்களாகவும், மன உறுதியற்றவர்களாகவும், உடல்நலப் பிரச்சினைக்கு உட்பட்டவர்களாகவும் ஆளாக்கப்படுகின்றனர் என்பது, புரிந்துகொள்ளக்கூடிய விடயமே.

தான், கட்டாயத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்பதற்காக, அதிலிருந்து, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்பதற்காக, தன்னை அறியாமல் கொலை கூடச் செய்ய முன்வந்தவர்கள், தற்போது, பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு முன்னால், ஒரு குற்றவாளியாக நிறுத்தப்படுகின்றனர். அத்தோடு, தனதுயிரைத் தானே பறித்துக் கொண்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். ஆனால், உண்மையில், இங்கு யார் குற்றவாளி என்பது, சற்றும் சிந்திக்கக்கூடியதே. உலகில், எந்தவொரு சட்டத்திலும், கட்டாயத் திருமணம் என்ற ஒன்றுக்கு, இதுவரைக்கும் அங்கிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால், பல மத அடிப்படையில், சிலர் அதை நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.

நடைமுறையில், கலாசாரம் மற்றும் வர்க்க எல்லைகள் போன்றவற்றைக் கடந்தே, உலகளவில், இந்தக் கட்டாயத் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், குறிப்பாக, இது ஆசிய நாடுகளிலேயே அதிகமாக இடம்பெற்று வருகிறது என்று பேசப்படுகிறது. “திருமணம் செய்த பின்னர், ஒரு குழந்தை பெற்றால் எல்லாம் சரி ஆகிவிடும்” என்பதே, முன்னோர்கள் அல்லர், தற்போதுள்ள பெரியவர்களதும் கருத்தாகும். பல கட்டாயத் திருமணங்களை நியாயப்படுத்துவதற்காகவும், இக்கருத்தே கூறப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, சட்டபூர்வ திருமண வயது 18 என்று இருந்தாலும், அதை அனைவரும் கடைப்பிடிக்கின்றனரா என்பது, சிறிதல்ல, முற்றிலும் சந்தேகமே. திருமணம் என்பது கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில், ஒரு சமயச் சடங்காகவே இருந்தாலும், இதன் காரணமாகவே, இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வந்து ஆசியா பீபி என்ற 21 வயதுப் பெண்ணுக்கு, சில நாட்களுக்கு முன்பு அஜ்மத் அக்ரம் என்ற 25 வயது ஆணை, கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தத் திருமணம் முடிந்த நாளிலிருந்து, இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. அஜ்மல் அந்தப் பெண்ணை, தினமும் ஏதாவது காரணம் சொல்லி அடித்திருக்கிறார். மேலும், அவளது முன்னாள் காதலன் குறித்தும் கேள்விகள் கேட்டுக் கொடுமைப்படுத்தியும் உள்ளார். இதையடுத்து, அந்தப் பெண், அந்த வீட்டை விட்டு, தனது சொந்த வீட்டுக்கு ஓடி விடலாம் என்று கூட முடிவு செய்திருக்கிறார். ஆனால் எந்த விடயத்துக்கும், இருவர் வீட்டிலும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, கணவனைக் கொன்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார்.

தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொல்ல, நிறையத் திட்டங்களை தீட்டியுள்ளார். இறுதியில், பாலில் விஷம் கலந்து கொன்றுவிடலாம் என முடிவு செய்து விஷம் கலந்த பாலை, கணவருக்காக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், ஆசியா விஷம் கலந்து கொடுத்த பாலை அவரின் மாமியார் எடுத்து, அதனுடன் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து, ஒரு வகை பானத்தைத் தயாரித்து, வீட்டிலிருந்த 27 பேருக்கும் கொடுத்துள்ளார். இதை குடித்த 27 பேரும் மயங்கி விழுந்த பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே, தன்னுடைய காதலுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னுடைய கணவனுக்கு விஷம் வைத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய காதலுடன் சேர்ந்து வாழ்வதற்காக, “என்னவேண்டும் என்றாலும் செய்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆசியா பீபி போன்று, கட்டாயத் திருமணத்துக்கான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை, மிகக்குறைவானது. அநேகமான பெண்கள், தங்களுடைய வாழ்வை எண்ணி நொந்த வண்ணம், வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். எல்லோரும் ஆசியா பீபி போன்று செயற்பட ஆரம்பித்தால், ஏராளமானோரின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமென்பது தான், யதார்த்தமாக இருக்கிறது.

ஆசியா பீபி சம்பந்தப்பட்ட சம்பவத்தை, ஆசிய நாடுகளிலேயே, கட்டாயத் திருமணம் செய்து வைத்தமைக்காக நடைபெற்ற மிகவும் கொடூரமான நிகழ்வாக எடுத்துக்கொள்ளலாம். ​தன்னுடைய மகளை, கட்டாயத் திருமணம் செய்து வைத்தமைக்காக, யாரோ ஒருவரது குடும்பமே, இன்று முற்றாகச் சிதைந்துவிட்ட இந்தச் சம்பவம், உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது.

வளரும் நாடுகளைச் சேர்ந்த மூன்றில் ஒரு பெண், 18 வயதை எட்டும் முன்னரே, கட்டாயத் திருமணத்துக்குள் இணைக்கப்பட்டு விடுகிறார். இலங்கையில், 2 சதவீதமானவர்கள், 15 வயதை எட்டுவதற்கு முன்னரும், 12 சதவீதமானர்கள் 18 வயதை எட்டும் முன்னரும், கட்டாயத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உலக மட்டத்தில், 6 நாடுகள் தவிர்ந்த ஏனையவை, குறைந்தபட்ச திருமண வயதுக்கான எல்லையைக் கொண்டிருக்கின்றன.

ஆனால், பல நாடுகள், மத மற்றும் ஏனைய சில அடிப்படையில், விதிவிலக்குகளை வைத்திருக்கின்றன. சில நாடுகளில், சட்டங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை.

கட்டாயத் திருமணம், சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமைத் தரங்களின் மீறலாகும். சுதந்திரமான, முழுமையான சம்மதத்துடன், திருமணம் செய்துகொள்வதற்கு மனைவியை அல்லது கணவனைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும், ஒரு தனி நபருக்கு உண்டு என்று, ​பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நற்பெயரைப் பாதுகாத்தல், மற்றும் செல்வந்தர்கள் போன்ற சமூக அந்தஸ்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, சமூகத்தில், இன்னும் இவ்வாறான தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கவ்வியறிவுடைய மற்றும் அபிவிருத்தி அடைந்த நகரங்களில் வாழும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் உணர்ச்சியைப் புரிந்து நடந்துகொள்கின்றனர் என்பது மறுபுறமிருக்க, அபிவிருத்தி அடையாத, தூரப்பிரதேசங்களில், இன்னும், இவ்வாறான, வெளிவராத சம்பவங்கள் அரங்கேறியவண்ணமே உள்ளன.

குடும்பத்துக்குப் பொருத்தமற்ற காதலி அல்லது காதலன்; தவறான நடத்தைகளில் இருந்து, பிள்ளைகளைப் பாதுகாத்தல்; குடும்பக் கலாசாரத்தையும் மதப்பற்றையும் தக்கவைத்துக் கொள்ள; இரண்டு குடும்பங்களுக்கு இடையில் காணப்படும் நீண்டகாலப் புரிந்துணர்வுக்கு மதிப்பளிக்கும் முகமாக; நண்பர்களின் அழுத்தம் காரணமாக; காணி அல்லது பெறுமதியான சொத்து, அதன் நன்மதிப்பு, குடும்பத்துக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பதற்காக; குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள; பிற நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள என்று, எண்ணிலடங்காத காரணங்களுக்காக, இத்திருமணங்கள் நடைபெறுகின்றன.

18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்துவைப்பதே கட்டாயத் திருமணம் என்று பரவலான கருத்துகள் இருந்தாலும், ஆணோ, பெண்ணோ 25 வயதிலும் கூட, கட்டாயப் பந்தத்துக்குள் இணைக்கப்படுகின்றனர். இவ்வாறு திருமணத்துக்குள் நுழைக்கப்படுகின்றவர்கள், அடிமைகள் என்ற வர்க்கத்துக்குள் உள்ளடங்குவர் என்று, அடிமை முறையை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகள் அல்லது மகனின் வாழ்க்கையையும் மாற்றி, வாழப்போகும் குடும்பத்தையும் சேர்த்து தன்னையும் அழித்துக்கொள்ளும் ஒரு நடைமுறையாகவே இது கருதப்படுகிறது.

இவற்றைத் தடுப்பதற்காக, உலகளாவிய ரீதியில் பரிந்துரைகள் வழங்கப்படாத பட்சத்தில், ஆசியா பீபி போன்ற பெண்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் தேவையா என்பதுதான், திருமணத்துக்கான நிர்ணயமாக இருக்க வேண்டும் என்று, ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். சிலர், 18 வயதுக்கு பின்னரும் திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டார்கள். ஒருவர், எப்போது திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதை, அவரவரே முடிவு செய்யவேண்டும் என்றும் ஒரு சிலர் கூறியுள்ளனர். மேலும், கட்டாயத் திருமணம், ஒரு சட்டரீதியான வன்புணர்வுக்குச் சமனானது என்றும் சில கருத்துகள் உண்டு எனலாம்.

திருமணம் என்பது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவு என்பார்கள். ஆனால், அது அனைவருக்கும் சொர்க்கமாக அமைகிறதா, அல்லது சொற்பமான நபர்களால் சீரழிந்து போகிறதா என்பது தான், வாழ்க்கையின் பெரும் திருப்பமே. காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும், ஒருவரைக் கட்டாயப்படுத்தி திருமண பந்தத்துக்குள் ஈடுபடுத்துவது, மனிதத்தன்மையற்ற செயலாவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

சில இனத்தினர், சில மதத்தினர், காதலை எதிர்க்கிறோம் என, சொந்தப் பிள்ளையைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துக் கொன்றுவிட்டு, வாழ்நாள் முழுவதும், தாம் தவறு செய்துவிட்டதாகக் கூறுவதில் என்ன பயன்? கொடுமையின் உச்சமாகத் திகழும் கட்டாயத் திருமணங்களில் சிக்கி, பெண் அல்லது ஆண்கள் முகங்​கொடுக்கும் கொடுமைகள், எண்ணிலடங்காதவை.

பிடிக்காத உணவை எடுத்து, ஒரு பிடி வாயில் போட்டால், அது எந்த அளவுக்கு தொண்டையில் சிக்கும் என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஒரு நொடியில் தொண்டையில் இறங்கிடும். இதற்கு இப்படி என்றால், வாழ்நாள் முழுக்க, பிடிக்காத நபருடன் வாழ்ந்து, உணர்வுகளை, தொண்டைக்குள் புதைத்து மனதால் அழும் நிலை எவ்வாறிருக்கும்? இந்தச் சமூகம், கட்டாயத் திருமணம் என்ற பெயரில், ஓர் ஆணையும் பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைக்காது, அவர்களைச் சுற்றி, ஒரு மாயச் சங்கிலியைக் கட்டி வைக்கின்றனர்.

ஒருவரின் செல்வத்தையும் பொருட்களையும் அழிப்பதைக் காட்டிலும், கனவையும் வாழ்க்கையையும் அழிப்பது பெரும் பாவச் செயல்தானே? இன்றளவிலும் திருமண அடிமைகள், இன்றும் உலகில் தோற்றுவிக்கப்படுகின்றனர் என்பதோடு, அவர்களது வாழ்க்கை, வலியோடு இணைந்த வழியாகவே காணப்படுகின்றது என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `தானா சேர்ந்த கூட்டம்’ – அடுத்த கட்டத்திற்கு தயாரான சூர்யா..!!
Next post பொங்கல் ரேசில் பிரபுதேவா..!!